மது பானைகள் ஒவ்வொரு வீட்டிலும், இருந்தால்தான் கோத்திரப் பெருமை.விருந்தோம்பலாக இருந்தாலும் சரி, துக்க அனுசரணையாக இருந்தாலும் சரி, மது முக்கியம். இவ்வாறே, அறிவு மழுங்கடிக்கப்பட்டதாக அரேபிய சமூகம் இருந்தது.
அதேப்போலத்தான் இன்றும், மதுபான ஆலைகள் முதல் மதுபான அரசு அலுவலகங்கள் வரை மதுக்கென்று, பொருளாதார கொள்கையே உருவாகும் வரை வியாபித்து இருக்கின்றது.
மதுவின் தாக்கம், கலாச்சாரம், பொருளாதாரம், என அனைத்து அடிப்படை மனித வாழ்விலும், அங்கமாக மாறிவிட்டது.
தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில், பெரியாரின் மூலமாக, 1921 ஆம் ஆண்டு முதலே, மதுவிலக்கு போராட்டம் சூடுபிடிக்கத் துவங்கிவிட்டது. தென்னை மரங்கள் மூலமாக மதுவிறக்க கூடாது என்பதற்காக, தன் குடும்பத்திற்கு சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தார் பெரியார். 1930 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி, மதுவிலக்கு போராட்டத்தை நாடுமுழுக்க தீவிரமாக்கினார். என்றாலும், தமிழகத்தில்தான் இப்போராட்டம் வலுப்பெற்றிருந்தது.
என்றாலும், காமராஜர்தான், 1954 முதல் 1963 வரை மதுவிலக்கை எந்த தளர்வுமின்றி நடைமுறைப்படுத்தியவர்.
அடுத்த ஆட்சி பொறுப்பில் இருந்த அண்ணாவும் மதுவிலக்கில் பிடியுள்ளவராக செயல்பட்டார், அவரின் ஆட்சி, காலத்தில், நிதி நெருக்கடியின்போது, மதுக்கடைகள் திறக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. அதற்கவர், அரசின் வருமானத்திற்காக, மதுவிலக்கை ரத்து செய்வது, மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு ஒப்பானது. என்று பதிலளித்தார்.
ஆனாலும், 1971 ஆம் ஆண்டில் கருணாநிதி மீண்டும் மதுக்கடைகளை திறந்துவிட்டார்.
ஆக, தமிழ்நாட்டில், உளவியல், ரீதியாக மதுபானங்களை விட்டும் நீங்கிய மக்களை உருவாக்க முடியவில்லை. மது அருந்துதல் உடல் நலக்கேடு என்றாலும், மதுக்கடை வாசல்கள் திறந்திருந்தன.
காமராஜர் ஆட்சியில் மதுமூல வருவாய் அகற்றப்பட்டு, புது வகையான பொருளாதார சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் கூட, மீண்டும் கலைஞர் மதுபானக்கடைகளை துவங்கியப் பின், மதுமூல வருவாயின் பக்கமே அரசு பொருளாதாரம் திசைதிரும்பியது. காரணம், மதுவின்மூலம் மக்களின் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், அறிவை மழுங்கடித்து, அவர்களின், உடல்நலக்கேடின் மூலமே, பொருளாதார வளர்ச்சியை திட்டமிட ஆரம்பித்தது நவயுக அரசியல் கட்சிகள்.
ஆனால், அதன் மூலம் மக்களின் பாதிப்புகள், கொலை, கற்பழிப்பு, குடும்ப அமைதியின்மை, தனிமனித வருவாய் இழப்பு போன்ற, எண்ணிலடங்காத பிரச்சனைகளைக்குறித்து அரசாங்கம் ஆலோசிக்க மறந்துவிட்டது.
ஆக, மதுவிற்கு பகரமாக எத்தகைய மாற்றுவழி பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவந்தாலும், மக்களிடம் புரையோடிக் கிடக்கும், அறிவை மழுங்கடித்த அந்த மது பிரியம் ஓயவே ஓயாது.
மதுபானங்களை விட்டும் உளவியல் ரீதியாக மக்களை மாற்றாத வரை இந்த மதுவிலக்கு முழுமையாக சாத்தியமற்றதாகவே போய்விடும்.
ஆனால், மக்களை உளவியல் ரீதியாக மாற்றி, ஏறத்தாழ 1400 ஆண்டுகளுக்கு முன்பே நிரந்தர முழு மதுவிலக்கை நிலைநாட்டிய நிகழ்வும், வரலாற்றில் உண்டு. அரசாங்கமே மதுக்கடைகளை திறந்து “மது அருந்துங்கள்” என்று சுதந்திரம் கொடுத்தாலும், மதுவின் வாடையைக் கூட நுகர்ந்திடாத சமூகத்தை உருவாக்கியது அந்நிகழ்வு.
அந்நிகழ்வு, வெறுமனே மதுவிலக்கை மட்டுமே நோக்கமானதாக கொண்டிருக்கவில்லை. இவ்வுலகத்திற்கே இறைவனின் சத்திய பாதையின் வெளிச்சத்தை பாய்ச்சி, அனைத்து விதமான இருள் நிரம்பிய பாதைகளை முற்கள் அமைத்து, அடைத்திட வேண்டும் என்ற பெருங்குறிக்கோள் கொண்டுள்ளதாக அந்நிகழ்வு இருந்தது.
ஒரு வளமான விடுதலை நிறைந்த இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்ப முயற்சித்த, ஒரு கனமான இறை வாக்கை சுமந்த கூட்டத்தாரிடம், இந்த மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.
அவர்கள் இறைவனின் பேச்சில் நனைந்திருந்தனர். ஆதலால், இறைவனுக்கும் இறுதி இறைத்தூதருக்கும் முழுமையாக கீழ்ப்படிந்தனர். அத்தகைய இறைவனின் புனித பணியில் இருந்த ஒரே காரணத்திற்காகத்தான், இந்த மதுவிலக்கை அந்த சமூகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எளிதாய் இருந்தது.
இத்தகைய இறைவனுக்காக ஆயத்தமான சமூகத்தைக்குறித்து இறைவனே இவ்வாறு கூறிக்காட்டியுள்ளான் “மேலும் இவ்வாறே உங்களை நாம், சமநிலை சமூகமாக ஆக்கினோம். நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும், இறைத் தூதர் உங்களுக்குச் சான்று வழங்குபவராகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக!” (அல்குர்ஆன்: 2 :143)
சிந்தித்து பாருங்கள்! உலக மக்களுக்கே இறைவனின் பக்கம் அழைக்கும், இறைவனைக்குறித்து மக்களுக்கு சான்று வழங்கும் ஒரு சமூகம், தங்களின் அறிவை தாங்களே மழுங்கடிக்கும் செயலில் எவ்வாறு இறங்கும்? அவர்களை இறைவனை நோக்கி முஹம்மது (ஸல்) அவர்கள் அவ்வளவு நேர்த்தியாக புறப்பட செய்தார்கள்!
அந்த சமநிலை சமூகமும் தங்களை இறைவனுக்கு தகுந்தவாறு தகவமைத்துக் கொண்டது.
வரலாற்றை புரட்டி பார்க்கும்பொழுதுதான், நபியவர்கள் மூலமாக இவ்வளவு அழகாக பண்படுத்தப்பட்ட, சமூகம் ஆரம்பத்தில் எவ்வாறு இருந்தது என்பதை அறியமுடியும்.
அவர்கள், விவசாயமும், வியாபாரமும் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம். மீதமுள்ள நேரங்களில் கேலியும், கூத்தும் குடியும் கும்மாளமும் நிரம்பிய காட்டுமிராண்டி அரேபிய சமூகம்.
ஆம்! நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய அந்த அரேபிய சமூகம் தான்!
இறைவனுக்காக அவர்கள் மாறும்பொழுது எல்லாம் மாறியது. இறைவன் அவர்களை இறைவேதத்தின் மூலம், இறைத்தூதரின் மூலம் அவர்களை கண்ணியப்படுத்தினான்.
அறிந்துக்கொள்ளுங்கள்! இஸ்லாமும், அவர்களுக்கு ஒரே அடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அவர்களை உளவியல் பிரச்சினைகளுக்கு தள்ளிவிடவில்லை. அவர்களிடம் குடிகொண்ட, தீமைகளை படிப்படியாகவே இஸலாம் அகற்றியது. ஹிஜ்ரி ஆறாம் ஆண்டில்தான் முழுமதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பு வரை படிப்படியாக குறைக்கும்படி குர்ஆன் சுட்டிக்காட்டியது. முக்கியமான விஷயம் என்னவென்றால், குர்ஆன் மதுவிலக்கை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தியதைக்குறித்து, இஸ்லாமிய சட்டத்துறையில் தனித்துவம் இருக்கின்றது.
ஆரம்பத்தில், அரபுகள் இந்த மதுபோதையைக் குறித்து தங்கள் கவிவடிவில் இவ்வாறு பாடியுள்ளனர். “நாங்கள் மதுவருந்துவோம், எங்களை அது அரசர்களாகவும் சிங்கங்களாகவும் மாற்றியது, எனவே, மதுவை விட்டும் எந்த சந்திப்பும் எங்களை தடுத்திடாது”
என்று அவர்கள் மதுவின்மூலம் தற்பெருமை பேசிக்கொள்வார்கள்.
அரேபிய சமூகத்தில் ஊடுருவியிருந்த மட்டமான பண்புகளை மாட்சிமைமிக்கதாக மாற்றுவதற்கும், நோயை மருந்தாக மாற்றுவதற்கும் கொஞ்சம் சிரமமாக தான் இருந்தது.
ஏனெனில், அங்கு பெரும்பாலான மக்கள், அச்செயலை, குற்றம் என்றுகூட கருதவில்லை.
அதனால்தான் வேறுவிதமாக தனித்துவமாக அந்த மதுவிலக்கை அவர்கள் மத்தியில் குர்ஆன் அறிமுகம் செய்தது.
ஆரம்பமாக, குர்ஆன், அத்தகைய மக்களுக்கு, போதை என்பது, நல்ல வாழ்வாதாரம் அல்ல என்பதை பிரித்துக்காட்டும்விதமாக சுட்டிக்காட்டுகிறது. “இதே போன்று) பேரீச்சை மற்றும் திராட்சைப் பழங்களிலிருந்தும் உங்களுக்குப் புகட்டுகின்றோம்; அதிலிருந்து நீங்கள் போதைப் பொருளையும் தயாரிக்கின்றீர்கள்; இன்னும் தூய உண்பொருளையும்! திண்ணமாக அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கு இதில் ஒரு சான்று இருக்கிறது”
(அல்குர்ஆன் : 16: 67)
கொஞ்சம் காலம் கழித்து, மதுவைக் குறித்து இவ்வாறு இறைவன் நினைவூட்டுகின்றான்.
“மது மற்றும் சூதாட்டம் (இவற்றுக்குரிய கட்டளைகள்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: அவ்விரண்டிலும் பெருங்கேடு இருக்கிறது. அவற்றில் மக்களுக்கு சிறிது பயன்கள் இருப்பினும், அவற்றினால் ஏற்படும் பாவம் அவற்றின் பயனைவிட அதிகமாக இருக்கின்றது”
(அல்குர்ஆன் : 02: 219) இந்த வசனம், இறைவிசுவாசமுடையவர்களின் உள்ளங்களை மாற்றியது. அவர்கள் ஆரம்பத்தில், மது அருந்துவது சிறப்பானது என்று கருதினர். இந்த வசனத்திற்கு பின்பு, முஸ்லீம்கள் மது பரிமாற்றத்தை குறைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். மது சிறப்பானது இல்லை என்று புரிந்துக்கொண்டனர். அதில் பயனைவிட தீமையே அதிகம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டனர். என்றாலும், சிலர் மதுவை விடமுடியாமல் அருந்துவதை தொடராக்கவும் செய்தனர்.
அதற்கடுத்து, குர்ஆன், மதுபானத்தை, குறிப்பிட்ட நேரங்கள் மட்டும் ஹராமாக்கியது தடையாக்கியது. அதில்,”இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையோடிருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்; நீங்கள் என்ன கூறுகின்றீர்கள் என்பதை அறிகின்ற போதுதான் தொழ வேண்டும்”
(அல்குர்ஆன் : 4: 43)
இன்னும், சில காலம் சென்ற பிறகு தான், மதுவையும், போதை தரக்கூடிய அனைத்து பொருட்களையும் முழுமையாக தடைவிதித்தது இஸ்லாம். அதைக்குறித்து குர்ஆன் இவ்வாறு சொல்கிறது, “இறை நம்பிக்கை கொண்டவர்களே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை அருவருக்கத்தக்க ஷைத்தானியச் செயல்களாகும். அவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறலாம்.”
“மது மற்றும் சூதாட்டத்தின் வாயிலாக உங்களுக்கிடையில் பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தி அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவே ஷைத்தான் விரும்புகிறான். இதற்குப் பிறகாவது நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்வீர்களா?”
(அல்குர்ஆன் : 5: 90,91)
எனவே, படிமுறையாகவே மதுவிலக்கை இஸ்லாம் நடைமுறைப்படுத்தியது. முதலில் சத்தியத்தை சுமந்த மக்கள், தங்கள் அறிவை பாதுகாத்திடவே இஸ்லாம் நுணுக்கமான முறையில் இதனை செயல்படுத்தியது. பின் மக்களே இதைக்குறித்து விழிப்படைந்தார்கள்.
உளவியல் மாற்றத்திற்கு பின்புதான், மாற்று பொருளாதார கொள்கையை வகுத்து, மதுவழி பொருளாதாரத்தை ஒழித்தது இஸ்லாம்.
உஹது யுத்தம் முடிந்து மூன்றாம் ஆண்டில்தான் மது, போதைப் பொருட்கள் யாவும் தடைவிதிக்கப்பட்டது. அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நாங்கள் மது தடை விதிக்கப்படுமா என்று காத்திருக்கும்பொழுது, சிறிது காலத்திலேயே, அந்த வசனம் இறங்கிவிட்டது (5 :90,91). இந்த வசனம் இறங்கியப்பின், நபி (ஸல்) இவ்வாறு அறிவித்தார்கள் : நிச்சயமாக மதுவை இறைவன் ஹராமாக்கிவிட்டான். யார் இந்த வசனத்தை பெற்றுக்கொண்டாரோ, அவர் அங்கிருந்து மது அருந்தவும் மாட்டார் அதன் வியாபாரமும் கிடையாது” என்றார்கள். அல் குத்ரீ (ரலி) கூறுகின்றார், மக்கள் தங்களிடத்தில் இருந்த மது பானைகளை மதீனத்து தெருக்களில் ஓட்டிவிட்டார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் : 1578)
உளவியல் ரீதியாகவும் இறையச்சத்தின் மூலமாகவும் நபியவர்களுக்கு கீழ்படியும்விதமாகவும், முழு மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்திய பின்னர்தான் மது வியாபாரமும் தடைசெய்யப்பட்டது. பின்னர் முழு போதை பொருளாதாரத்தையும் ஒழிக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை செய்தார்கள்.. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் : “நிச்சயமாக அல்லாஹ்வால், மதுவின் மீதும், அதை புளிபவன் மீதும், புளியப்பட்ட மது பானத்தை வேண்டியவன் மீதும், அதை அருந்துபவன் மீதும், மதுவை பரிமாறுபவன் மீதும், மதுவை சுமந்து செல்பவன்(ஏற்றுமதி) மீதும், மதுவை இறக்குமதி செய்பவன் மீதும், அதை விற்பவன் மீதும், அதை வாங்குபவன் மீதும், அதன் பலனை உண்பவன் மீதும் சாபம் இடப்பட்டுள்ளது”
(ஸஹீஹ் அல்ஜாமிஃ அல்பானி : 1802)
எந்தவற்றுக்கும் இல்லாத அளவில் மதுவோடு தொடர்புடைய எல்லாவற்றுக்கும் ஏறத்தாழ 10 விஷயங்களின் மீது அல்லாஹ்வால் சாபமிடப்பட்டுள்ளதாக நபியவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். இங்கு மதுவும் மதுசார்ந்த பொருளாதாரமும் முழுமையாக தடைவிதிக்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று இப்பொழுதுதான் படிப்படியாக குறைந்து வரும் சந்தர்ப்பத்தில்,
குடி- மகன்களுக்கு, சோபனம் சொல்லிருக்கிறது தமிழக அரசு, என்று, மதுக்கடைகள் திறப்பிற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர். முழு மதுவிலக்கை சாத்தியமாக்கியவர்கள் என்று, சில வரலாற்று தலைவர்களை, முகநூலில் இனங்காட்டிக் கொண்டிருக்கிறார்கள் சில பொது நல விரும்பிகள்.
நாமும் நம் நாட்டின் மீது உண்டான அக்கறையின் விளைவாக,
முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியவர்களை இனங்காட்டுவது ஒருபக்கம் இருந்தாலும்,
முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி சாத்தியமாக்கியவர்களுல், முதன்மையானவரான, நபி (ஸல்) அவர்களை குறித்து பேசுவது அவசியத்திலும் அவசியமாகியுள்ளது. இங்கே மது குறித்தான உரையாடலுடன் இஸ்லாம் எங்ஙனம் மதுவை படிமுறை விதத்தில் பேசியிருப்பது சிறந்த பங்களிப்பிற்கு இட்டுச்செல்லும் என்ற நம்பிக்கையும் உண்டாகியிருக்கிறது.
🖋முஹம்மது ஃபைஜ் ஸலாமி