2022 செப்டம்பர் 7ஆம் நாள் `மிலே கதம்; ஜூடே வத்தன்’ என்ற முழக்கத்துடன் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் என 3,560 கிலோ மீட்டர் கடந்து காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீ நகரில் 2023 ஜனவரி 30ஆம் நாள் முடிவடைந்துள்ளது. இந்த யாத்திரையில் கலந்துகொள்ள 50,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில் ராகுல் காந்தி உள்ளிட்ட 119 பேர்தான் `பாரத் யாத்திரிகள்’ எனப்படும் முழுநேரப் பயணிகளாக தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒரு நாளைக்கு 22இலிருந்து 23 கிலோமீட்டர் வரை நடந்துள்ளனர். மற்றவர்களெல்லாம் அந்தந்த மாநிலங்களில் கலந்து கொண்டவர்கள்தான்.
150 நாள்களாகப் பல்வேறு தடைகள், இயற்கை இடர்கள், பா.ஜ.கவின் விமர்சனங்களைக் கடந்து, மக்கள் கடலில் சங்கமம் நடத்திவிட்டார் ராகுல் காந்தி. அவருடைய இந்த நெடும் பரப்புரைப் பயணம் நாட்டின் அனைத்து மட்டங்களிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தின் தாக்கம் வருகிற 2024 தேர்தலில் எந்தளவு பிரதிபலிக்கும் என்பது குறித்த விவாதங்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
காந்தி தொடங்கிய யாத்திரை
மாபெரும் கவன ஈர்ப்பைப் பெற்ற இந்த பாரத் ஜோடோ யாத்திரையின் முன்னோடி மகாத்மா காந்திதான் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம்! இந்தியா ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தபோது மகாத்மா காந்தி தேசிய ஒற்றுமையை மேம்படுத்த வேண்டும், நாட்டின் பல்வேறு சமுதாயங்களாகப் பிரிந்து கிடக்கும் மக்கள் மத்தியில் பொதுவான அடையாள உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இது போன்ற பல ஒற்றுமை யாத்திரைகளை நடத்தியுள்ளார். இது போன்ற பயணங்களின் மூலம் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அகிம்சை, அமைதி, ஒற்றுமை மூலம் இந்தியராக அனைவரையும் ஒன்றிணைக்க முடியும் என்று நம்பினார்.
இந்தப் பயணங்களின்போது காந்தி, அவர் செல்கின்ற வழியில் உள்ள உள்ளூர் தலைவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவார். ஆங்காங்கே பொதுக்கூட்டங்களையும் நடத்துவார். அவற்றின் மூலம் விடுதலை வேட்கையையும், அகிம்சை தத்துவத்தையும் மக்களிடம் எடுத்துரைப்பார்.
காந்தியின் ஒற்றுமை நடைப்பயணங்களில் மிகவும் பிரபலமானது 1930இல் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக யாத்திரைதான். ஆங்கிலேய அரசு உப்பின் மீது விதித்த வரிக்கு எதிராக 24 நாள்கள் நடந்த இந்தப் பயணம் அகமதாபாத்தில் தொடங்கி தண்டி வரை ஏறத்தாழ 390 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. வரலாற்று ஆய்வாளர்கள் இந்த யாத்திரையே இந்திய விடுதலை இயக்கத்தின் திருப்புமுனையாக அமைந்ததாகவும் பல இலட்சக்கணக்கான இந்தியர்களை விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளத் தூண்டியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
யாத்திரைக்கான தேவை என்ன?
இரண்டாவது முறை மத்தியில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து மக்களுக்குக் காங்கிரசின் மீதான நம்பிக்கை பெருமளவில் அடி வாங்கியது, மட்டுமல்லாமல் கட்சியில் அடுத்தடுத்த பல உட்கட்சி பூசல்கள், மன்மோகன் சிங்கிற்குப் பிறகு நாட்டை ஆளும் அளவிற்குப் பெரும் ஆளுமைகள் யாரும் வெளிப்படாதது உட்பட பல பிரச்னைகளுடன் காங்கிரஸ்தான் நாட்டின் எதிர்க்கட்சியா? என்றே யோசிக்கும் அளவிற்குப் பெருமளவில் பலவீனப்பட்டது.
இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, நரேந்திர மோடியால் வருகிற 2024 தேர்தலுக்கான முன்னோட்டம் என்றெல்லாம் சிலாகிக்கப்பட்ட கடந்த ஆண்டு நடைபெற்ற ஐந்து மாநிலத் தேர்தலில் நான்கு மாநிலங்களில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வி இதற்கு மாபெரும் சான்றாய் அமைந்தது. அத்தகைய இக்கட்டான காலகட்டத்தில்தான் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டது.
ராகுல் காந்தியின் யாத்திரை
வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலை மையப்படுத்தியே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி `யாத்திரையின் நோக்கம் 2024 தேர்தல் அல்ல, இந்தியாவை ஒன்றிணைப்பதுதான். இந்தியா பிளவுபடுவதையும் சமூகங்களுக்கு மத்தியில் வன்முறை பரப்பப்பட்டு நம் நாட்டிற்குப் பாதிப்பு ஏற்படுவதையும் பார்க்கின்றேன்.’ என்று கூறியுள்ளார். யாத்திரையின் இறுதியில் `மே நிப்ரத் கே பஸார் மே; முஹப்பத் கா துக்கான் கோல்னா நிக்கலா ஹூம்’ (நான் வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறக்க வந்தவன்) என்ற ராகுலின் அறைகூவல் வெறுப்பு வணிகர்களுக்கு விழுந்த சாட்டையடி.
அதிகாரத்திற்காக மக்களைப் பிளவுபடுத்தும் வகுப்புவாத தீய சக்திகள் நாட்டைத் துண்டாட நினைக்கும் சூழலில் ராகுலின் நல்லிணக்கம் குறித்த கூற்று நம்பிக்கையளிப்பதாகவும், இலட்சியம் உடையதாகவும் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். இது போன்ற பேச்சுகள், கலந்துரையாடல்களின் மூலமாக இந்த யாத்திரை முழுவதிலும் ராகுல் உருவாக்க முயன்ற நல்லிணக்கச் சித்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த ஒற்றுமைப் பயணம் செல்லும் வழியில் எல்லாம் நாட்டில் நடக்கும் பிரச்னைகளை ஆக்கப்பூர்வமான முறைகளில் அடையாளப்படுத்தியது. அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் மக்களுடன் உரையாடுவது போன்ற விஷயங்கள் இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்று சொல்லலாம்.
செல்லும் வழியிலெல்லாம் ராகுல் காந்தி அப்பகுதியிலுள்ள பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என அனைவரையும் சந்தித்து அவர்களுடன் உரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டு அறிந்து அவர்களுடன் விளையாடியது போன்ற நிகழ்வுகள் ராகுல் காந்திக்கு மக்களின் தலைவர் எனும் பிம்பத்தைக் கட்டமைக்க பெரிதும் உதவியது.
யாத்திரைத் துளிகள்
கேரளாவில் நடந்த படகுப் போட்டியில் ராகுல் கலந்து கொண்டது, எளிய மக்களுடன் வேறுபாடின்றி நெருக்கமாக உரையாடியது, மைசூரில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் `பிரிட்டிசை எதிர்த்து காந்தி போராடியதுபோல, காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடன் போராடி வருகிறோம். எங்களுடைய இந்த ஒற்றுமைப் பயணம் எக்காரணத்தைக் கொண்டும் நிற்காது’ என்று பேசியது, `எங்கள் வேலை எங்கே?’ என்று இளைஞர்களுடன் இணைந்து வேலை வாய்ப்பின்மையைச் சுட்டிக் காட்டியது, பயணத்தின்போது வழியிலேயே காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் வாக்களித்தது, குழந்தைகள் தினத்தன்று ஒரு க்யூட்டான குழந்தையுடன் உரையாடியது, இந்திரா காந்தியின் பிறந்த தினத்தன்று ராகுல் காந்தியுடன் பெண்கள் மட்டுமே முதன்மையாக நடந்தது, காஷ்மீரில் கொட்டும் பனியில் பிரிவு 370இன் தடையைக் குறித்து பேசியது எனப் பல ஆகா தருணங்கள் இந்த ஒற்றுமைப் பயணத்தில் நிறைந்து கிடந்தன.
இந்த ஒற்றுமைப் பயணத்தில் ராகுல் காந்தியுடன் முன்னணி அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, ரிசர்வ் வங்கியின் முன்னாள் இயக்குநர் ரகுராம் ராஜன் போன்ற ஆளுமைகள், முன்னணி எழுத்தாளர்கள், நடிகர், நடிகைகள், ரோகித் வெமூலாவின் தாய் ராதிகா வெமூலா, சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், பல துறை சார்ந்தவர்களும் கலந்துகொண்டு ராகுலின் நடையைப் பலப்படுத்தினர்.
இந்த ஒற்றுமைப் பயணத்தின்போது வழியில் சில சில பிரச்னைகள் ஏற்பட்டிருந்தாலும் அவை அனைத்தும் பெருமளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யாத்திரையின் சாதனைகள்
இந்த ஒற்றுமைப் பயணம் ஐயத்திற்கிடமின்றி அசாதாரண வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த ஒற்றுமைப் பயணத்தின் மூலம் தற்போதைய ஆளுங்கட்சி, அதனுடைய ஊடகங்களின் வாயிலாக கடந்த பத்து ஆண்டுகளாக ராகுல் காந்தி குறித்துக் கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கங்கள் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளன. அவர்களின் மூலம் வெற்றிகரமாக `பப்பு’ என்று கேலிச் சித்திரமாக சித்திரிக்கப்பட்ட அவரது பிம்பம் காற்றில் மறக்கடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கட்டமைத்த கேலிச் சித்திரத்தில் மிக முக்கியமான மூன்று கூறுகள்
1. ராகுல் எதிலும் கவனம் செலுத்த மாட்டார் ஒரு பரப்புரையைத் தொடங்குவார் திடீரென வெளிநாட்டிற்குச் சென்று விடுவார்.
2. அவர் யாராலும் எளிதில் அணுக முடியாதவர். அவருக்கு மக்களைக் குறித்த கவலையே இல்லை.
3. அவரிடம் மக்களை ஈர்க்கக்கூடிய தன்மையே இல்லை. அவருக்குச் சரியாக பேசவே தெரியாது. அவர் எப்போது பேசினாலும் அது ட்ரோலாக மாறிவிடும்.
என்றெல்லாம் அவர் மீது வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் இந்த ஒற்றுமைப் பயணத்தின் மூலம் உடைத்தெறியப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியைத் தொடர்ச்சியாக விமர்சித்தவர்கள்கூட அவரின் இந்த விடாமுயற்சி, உறுதிப்பாட்டிற்கான தங்களின் அபிமானத்தை வெறுப்புடன் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்திலிருந்தே காங்கிரஸின் அடிப்படை மதிப்புகளான நாட்டின் வளர்ச்சி, சமூகநீதி, வறுமை ஒழிப்பு, சிறுபான்மையினர், பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள் உள்ளிட்ட மக்களின் பாதுகாப்பு போன்றவை இன்னும் தீவிரமாக மக்களை சென்றடைந்துள்ளது.
இந்த ஒற்றுமைப் பயணத்தின் மூலம் இந்தியாவின் பிரதான அரசியல் கட்சியான காங்கிரஸ், தன்னுடைய ஒற்றுமையின் செய்தியைப் பரப்பியதன் மூலம் அது பன்மைத்துவ இந்தியாவின் அரசியல் உருவகம் என்பதையும், மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கான வலுவான உறுதியான குரல் என்பதையும் மக்கள் மன்றத்தில் உரக்க முழங்கியுள்ளது.
செயலிழந்ததவர்களாகவும் பலமற்றவர்களாகவும் பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அதிலும் குறிப்பாக இந்த ஒற்றுமைப் பயணம் எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் சென்றதோ அந்த இடங்களிலெல்லாம் இருந்த உறுப்பினர்கள் இந்தப் பயணத்தின் மூலம் பெருமளவில் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்த பாரத் ஜோடோ யாத்திரை என்னதான் காங்கிரஸ் கட்சியின் ஒரு நிகழ்வாக இருந்தாலும் அது பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றதற்குக் காரணம் தற்போது மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் ஃபாசிஸ பாஜக அரசை விரட்டியடிக்க காங்கிரஸ் தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்தான்.
குஜராத் தேர்தலில் பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களெல்லாம் பெரும் பரப்புரை மேற்கொண்ட வேளையில் காங்கிரஸின் அடையாளமாகத் திகழும் ராகுல் காந்தி இந்த நடைப்பயணத்தைக் காரணம் காட்டி குஜராத் தேர்தல் பரப்புரையில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தது போன்ற சில குறைகளைக் கடந்து பார்த்தால் இந்த நடைப்பயணம் காங்கிரஸ் வரலாற்றில் மட்டுமல்ல இந்திய வரலாற்றுப் பக்கங்களிலும் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கும். பாரத் ஜோடோ ஒற்றுமைப் பயணம் வரக்கூடிய 2024 தேர்தலில் பயனளிக்கிறதா என்பதை நாம் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.