கருப்பு முகத்திரையினுல் ஒரு முழக்கம்
காவியின் மதவெறி ஓலங்களை
மண்கவ்விடச் செய்து,
ஆயிரம் ஆண்டுகள் கழித்தும்
மறையாமல் வெல்லும் உயிர்மையானது!
அன்றுமுதல் இன்றுவரை
எழுதப்படும் நீதிப்போராட்டங்களில்
எழுந்திடும் எழுச்சி முழக்கமது!
அமேரிக்காவின் அடிமை எழுச்சியோ!
அரேபியாவின் ஏகத்துவ முதிற்ச்சியோ!
இந்தியாவின் சுதந்திர உணர்ச்சியோ!
பதினைந்து நூற்றாண்டுகளில்
சிந்தப்பட்ட இரத்தத்திலும்
அதனால்,
ஊடுருவப்பட்ட இதயங்களிலும்
வற்றா பேரூற்றின் முழக்கமது!
மண்ணில் மழுங்கிமாயும் மனித
அதிகார வெறுமை,
பாமரர்களின் ஈரற்குலைகளை விழுங்காமல்,
ஆழியின் அடர்த்தி அறிந்தவனின்
வானத்தின் வழியறிந்தவனின்
மகத்தான அதிகாரத்திற்கு முன்
மண்டியிடச் செய்யும் முழக்கமது!
ஒற்றை நீதியை, அநீதத்தின்
பெரும் நிலமொன்றின் வீசினாலும்
அம்மண்முழுதும், ஒற்றை நீதியின்
வேர்களில் சூழந்து,
ஒரு நிலையான பனை மரத்தையே
வளரச்செய்யும்
ஒரு கனமான மழைத்துளியே,
அவ்வீர முழக்கம்!
மதவெறுப்பிற்கு எதிராக!
மத பேதங்களுக்கு எதிராக!
ஒரு பெண்ணின் ஒற்றை விரல்
உயர்வாய் இருக்கட்டும்,
அடிவயிற்றிலிருந்து நெஞ்சுரத்தோடு
எழுப்பப்பட்ட எத்தனையோ ஆஸாதி
முழக்கங்களாக இருக்கட்டும்,
அனைத்தின் பிறப்பிடமாகிவிட்டது அம்முழக்கம்!
உரிமையை உடலில் போர்த்திக்கொண்டதால்
கல்வி மறுக்கப்பட்டவள்,
அவளின் கண்களில் வழிந்தோடும்
ஒரு துளிக்கண்ணீரை,
ஒரு பெரும் கருங்கடலாய் தன் முகத்தில்
அணிந்துக்கொண்டு,
ஒரு கொடுங்கோல் அதிகாரத்திற்கெதிராய்
அவளிலிருந்து எழும் சுனாமியே
அந்த முழக்கமானது..!
“அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப்பெரியவன்)