(இரண்டாம் பகுதியை வாசிக்க)
பாதி விதவைகள்
காஷ்மீரி பெண்களின் கணவன்மார்கள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில் இராணுவப் படைகளால் அழைத்துச் செல்லப்படுவர். அப்படி சென்றவர்கள் மறுபடியும் வீடு திரும்பமாட்டார்கள். இப்படிப்பட்ட பெண்களே பாதி விதவைகள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால், அமரன் திரைப்படத்திலோ சில கணவன்மார்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட போய் மறைந்து விடுவதால் தான் மனைவிகளுக்கு பாதி விதவைகள் என்ற பெயர் வந்ததாக திரித்துக் கூறி இருப்பார்கள்.
பாதி விதவை, பாதி மனைவி? என்ற அறிக்கை ஜம்மு மற்றும் காஷ்மீர் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின வன்முறையை எடுத்துக்காட்டுகிறது. காஷ்மீரில் சுமார் 1,500 பெண்கள் பாதி விதவைகளாக உள்ளனர். அவர்களின் கணவர்கள் காணாமல் போயுள்ளனர். ஆனால் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.
பெண்கள் மீதான வன்முறைகள்
இராணுவ படைகளின் அத்துமீறல்கள் இதனோடு நின்று விட்டதா என்றால் அதுதான் இல்லை. காஷ்மீர் ஆண்களுக்கே இந்நிலை என்றால் காஷ்மீர் பெண்களின் நிலை எவ்வாறு இருக்கும்.? அவர்களுடைய கஷ்டங்களையும் துன்பங்களையும் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு தனி புத்தகத்தை எழுதலாம் ஆனால் இங்கு அவர்களுக்கு எதிராக நடந்த பதிவு செய்யப்பட்ட குற்றங்களை பற்றி மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.
கணவன்மார்கள், தந்தைகள், சகோதரர்கள் போன்ற ஆண் மக்கள் தான் காஷ்மீர் பெண்களுக்கு பொருளீட்டும் உதவியை செய்து குடும்பத்தை பாதுகாப்பவர்கள். ஆண்கள் இராணுவ படையினால் காணாமல் போவதாலோ, சிறையில் அடைக்கப்படுவதாலோ ஏற்படும் விளைவுகளால் பெண்களின் வாழக்கை மிக மோசமான நிலைக்கு செல்கிறது.
காஷ்மீரி பெண்கள்தான், ஆயுதமேந்திய இராணுவப்படை என்ற பெயரில் நடித்துக் கொண்டிருக்கும் சில நபர்களுக்கு முதன்மை இலக்குகள். பலாத்காரம், ஆண் குடும்ப உறுப்பினர்கள் காணாமல் போவது, பாதி விதவைகளாக்கப்படுதல், குடும்பத்தின் கவுரவத்திற்காக போராடுவது, சொத்துரிமை பறிக்கப்படுவது என காஷ்மீரி பெண்கள் பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் பற்றிய விரிவான பல அறிக்கைகள் உள்ளன. அவை, மனித உரிமை மீறல்களான ‘காணாமல் போதல், கற்பழிப்பு, குடும்பப் பிரிவினை, மக்கள் இடம்பெயர்தல்’ ஆகியவற்றின் மூலம் காஷ்மீர் பெண்கள் பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டுகின்றன.
பல கற்பழிப்பு வழக்குகள், இராணுவப் படைகளால் பொதுமக்கள் கொல்லப்படுவது போன்ற உடல்ரீதியான குற்றங்கள், மோதல்போக்கு நடக்கும் ஆபத்தான பகுதிகளில் வாழ்வதால் ஏற்படும் மனரீதியான துன்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது (UNHR, 2011). காஷ்மீரில் உள்ள இந்த மோதல் போக்குகள் காஷ்மீர் பெண்களிடையே சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளன.
காஷ்மீரி பெண்கள் பாலியல் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காஷ்மீரில் நடக்கும் அதிகப்படியான பாலியல் குற்றங்கள் குறித்து உலகம் அதிகம் அறிந்திருக்கவில்லை. வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களாகவும், துக்கமடைந்த மனைவிகளாகவும், பாதி விதவைகளாகவும், தியாகிகளின் தாய்களாகவும், கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களாகவும் காஷ்மீர் பெண்கள் உள்ளனர். மேலும், அவர்களின் எதிர்ப்புச் செயல்பாடுகள் உலகளவில் குறைத்து மதிப்பிடப்படுகின்றன.
இரண்டு தசாப்தங்களில் நடந்த காஷ்மீர் மோதல்களில், கிளர்ச்சிக் குழுக்களை விட இந்திய இராணுவ வீரர்களால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளன. (2013, Kashmir’s silent rape victims – Anadolu Agency)
அக்டோபர் 2013ஆம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த உமர் அப்துல்லாவின் அறிக்கையின்படி, “கடந்த 24 ஆண்டுகளில் (1990 முதல்) மாநிலத்தின் நூற்றுக்கணக்கான காவல் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான 5125 கற்பழிப்பு வழக்குகள் மற்றும் 14,953 வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன; காஷ்மீரி பெண்கள், பாதுகாப்பு மற்றும் இராணுவப் படைகளால் உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.
காஷ்மீர் மக்களின் எதிர்ப்பை ஒடுக்குவதற்கும், அவர்களை மனச்சோர்வடையச் செய்வதற்கும் தீவிரவாதிகள் இருக்கும் பகுதிகளில் வன்முறையை எதிர்க்கும் கருவியாக கற்பழிப்பு என்பதை பாதுகாப்புப் படையினர் பயன்படுத்துகின்றனர். கற்பழிப்பு என்பது இராணுவ படையினரால் காஷ்மீர் மக்களை அவமானப்படுத்தவும், மிரட்டவும், இழிவுபடுத்தவும், பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. காஷ்மீரி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது இந்தியப் படையின் உத்தியாகும். சில தனிப்பட்ட செயல்களைக் காட்டிலும், காஷ்மீரிகளின் பெண்களை அவமானப்படுத்துதல் என்பது அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதுடன், பயமுறுத்துவதற்கும் பயன்படுகிறது. ஏனெனில் பாலியல் வன்கொடுமைகள் அப்பெண்களின் கணவர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் கண் முன்னால் நடக்கும் அல்லவா.!
பிப்ரவரி 23, 1991 அன்று மாலை ஒரு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, இந்திய இராணுவத்தின் 4 ராஜ்புதானா ரைபிள்ஸ் உறுப்பினர்கள் வடக்கு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள குனான் மற்றும் போஷ்போரா கிராமங்களில் குறைந்தது 23 பெண்களை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். சில செய்திகளில் இந்த எண்ணிக்கை 40க்கு அருகில் என குறிப்பிடப்பட்டுள்ளது (பிபிசி செய்தி, 2017; தி இந்து, 2013; தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், 2016).
இந்திய நிர்வாகத்தின் கீழ் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள குனன் மற்றும் போஷ்போரா கிராமங்களில் இந்திய இராணுவத்தின் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் அன்றிரவு சோதனை நடத்தினர். அந்த சமயத்தில் ஏறக்குறைய 150 சிறுமிகளும், பெண்களும் பலாத்காரம் செய்யப்பட்டனர்; கிட்டத்தட்ட 200 ஆண்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். கொட்டகைகள் சித்திரவதைக் கூடங்களாக மாறியது. (The Diplomat, 2018) சோபியான் எனும் பகுதியில், ஆசியா மற்றும் நிலோபர் என்ற இரண்டு காஷ்மீரி பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இந்தியாவின் தேசிய குற்றப்பதிவு பணியகம் (NCRB) அறிக்கையின்படி, “ஜம்மு காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகளின் எண்ணிக்கை 2019இல் 3069ஆக இருந்து 2020இல் 3414ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் தேசிய விகிதம் 8.3 சதவீதம் குறைந்துள்ளது. 2020ஆம் ஆண்டில், பெண்களின் கண்ணியத்தை மீறும் நோக்கத்துடன் 1744 தாக்குதல் வழக்குகளும், 243 கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகியுள்ளன. கற்பழிப்புடன் வரும் வன்முறை, அவமானம் மற்றும் சமூக புறக்கணிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களின் உண்மையான எண்ணிக்கை என்பது கணிசமான அளவில் அதிகமாக இருக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இரண்டு தசாப்தங்களாக காஷ்மீரி பெண்களுக்கு எதிராக இந்தியப் பாதுகாப்புப் படையினரால் ஹந்த்வாரா (2004,2016), ஷோபியான் (2009), பிஹோடா (2001), வவூசா (1997), தேனோ புதாபத்ரி கங்கன் (1994), ஹரன் (1992), சக் சைத்போரா (1992), குனன் போஷ்போரா (1991), சன்போரா மற்றும் பஸிபோரா (1990) இன்னும் இது போன்று பல இடங்களில் கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
பாலியல் வன்கொடுமைகள், இராணுவப் படையினரால் காஷ்மீர் மக்கள் காணாமல் போதல், கொலைகள் போன்ற பிற குற்றங்கள் காரணமாக காஷ்மீர் கிளர்ச்சியாளர்களிடமிருந்து எதிர்ப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கற்பழிப்பு சம்பவங்கள் நடந்த பிறகு, காஷ்மீரில் இராணுவ படைகளால் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததாகப் புகாரளிக்கப்பட்டால், இந்திய அரசாங்கம் விசாரணையோ அல்லது சம்பந்தப்பட்ட வீரர்களுக்கு எதிராக வழக்குகளோ தொடராமல் அதிகாரபூர்வ மறுப்புடன் தான் பதிலளிக்கிறது. இது போன்ற பல மனித உரிமை மீறல்களை தினம் தினம் சந்தித்து கொண்டிருப்பவர்கள் தான் அங்கு வாழும் காஷ்மீர் மக்கள்.
சில புரிதல்கள்
கொடுக்கப்பட்ட வாக்கு காப்பாற்றப்படாமல் போனதும், இராணுவப் படைகளின் அத்துமீறல்களும் காஷ்மீர் மக்களின் குரல்வளையை நெறித்து கொண்டிருந்த சூழ்நிலையில் அடக்கு முறையில் இருந்து எழுவதற்கும், தங்களது உரிமைகளை மீட்டெடுப்பதற்கும் மக்களிடையே ஓங்கி ஒலித்த சுதந்திர முழக்கம் தான் ஆஸாதி. அது காஷ்மீர் மக்களின் அமைதி வழி போர் முழக்கம். எவ்வாறு ராஷ்ட்ரிய ரைபில்ஸ்கு என்று ஒரு பஜ்ரங் பலி கி ஜெய் என்ற போர் முழக்கமோ, ஜாக் ரைபில்ஸ்கு என்று ஒரு துர்கா மாதா கி ஜெய் என்ற போர் முழக்கமோ அது போல.
சொந்த நாட்டிலேயே அகதிகள் போல வாழ்வது தான் காஷ்மீர் மக்களின் வாழ்க்கை. எந்நேரமும் இராணுவத்தின் சந்தேக பார்வையில் உழன்று கொண்டிருக்கும் நிலை அது. எங்கே நமது நண்பர்களோ, உறவினர்களோ போராளிகளுடன் தொடர்பு வைத்து விடுவார்களோ என்று அச்சத்தில் சுழன்று கொண்டிருக்கும் நிலை அது.
பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலால் நடக்கும் அடக்குமுறைகள் போலவோ, சிரியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவினால் நடக்கும் அத்துமீறல்கள் போலவோ வெளிப்படையாக உலகத்திற்கு தெரிவதில்லை காஷ்மீரில் நடக்கும் அடக்குமுறைகள். அப்படி தெரிந்தாலும் காஷ்மீரில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால் பயங்கரவாதிகள் என்ற பொதுவான சொல்லை பயன்படுத்தி கடந்து சென்று விடுவார்கள்.
காஷ்மீர் மக்களுக்கு பேசுவதற்கான வாய்ப்பு கிடைப்பதேயில்லை. ஆகஸ்ட் 5ஆம் தேதி நிகழ்ந்த ஆர்டிகல் 370 மற்றும் 35A சிறப்பு அந்தஸ்து சட்டங்களை அரசு திரும்ப பெறுவதற்கு முன்னால் ஆகஸ்ட் 4ஆம் தேதி நள்ளிரவில் காஷ்மீர் முழுவதையும் மாபெரும் சிறை முகாமாக மாற்றியதும், ஏழு மில்லியன் காஷ்மீர் மக்கள் தங்கள் வீடுகளில் அடைக்கப்பட்டதும், இணைய இணைப்புகள் துண்டிக்கப்பட்டதும், அவர்களின் தொலைபேசிகள் செயலிழந்ததும் இதற்கு ஒரு முக்கிய உதாரணம்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வீர மரணத்தை அடிப்படையாக வைத்து அவரது மனைவிக்கும் அவருக்கும் உண்டான காதல் மற்றும் அன்பு பரிமாற்றங்களின் மூலம் கதை சொல்லப்படுவதால் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைப்பதில் வெற்றி அடைந்திருக்கும் இந்தப் படம், அதே வேளையில் காஷ்மீரில் நிலவும் யதார்த்தமான உண்மைகளை மறைத்து அல்லது திரித்து வலது சார் இந்துத்துவ அமைப்புகள் காஷ்மீரை எவ்வாறு பார்க்கிறார்களோ அவ்வாறே காட்டி அது எடுத்துக்கொண்ட பிரச்சாரத்திலும் வெற்றியடைந்தே உள்ளது.
காதல், அன்பு, ஏக்கம், நட்பு போன்ற உணர்வுகளை கலந்து திரைக்கதை அமைக்கப்படுவதால் பார்வையாளர்களின் சிந்திக்கும் திறன் (critical thinking) ஆஃப் செய்யப்படுகிறது; விமர்சனப்பார்வை மழுங்கடிக்கப்படுகிறது. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்ற அழகியலை முன்நிலைப்படுத்தும் வளதுசாரிப் பார்வை திணிக்கப்படுகிறது.
ஆசாதி என்ற வார்த்தை காஷ்மீர் பொது மக்களின் உள்ளத்திலிருந்து வரக்கூடிய முழக்கம், அது ஒவ்வொரு தனிப்பட்ட காஷ்மீரியின் அமைதி திரும்ப வேண்டும் என்ற ஏக்கம். அதை பயங்கரவாதிகள் பயன்படுத்தும் சொல்லாக திரித்து இருக்கிறார்கள். அங்கிருக்கும் மக்கள் மற்றும் குழந்தைகள் தீவிரவாத ஆயுதப் பயிற்சியில் ஈடுபடுவதாக சித்தரித்து இருக்கிறார்கள், பாதி விதவைகள் என்ற காஷ்மீர் பெண்களின் அவல நிலையை வேறொரு பொருள் கொண்டு பார்வையாளர்களுக்கு விளக்க முயன்றிருக்கிறார்கள், பொதுவாக தீவிரவாதிகள் ஒன்றோ அல்லது இரண்டு பேர் தானே இருப்பார்கள்.? இங்கு அவர்கள் பல குழுக்களாக காஷ்மீரில் மக்களோடு மக்களாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்..? தனது இன மக்களையே கொல்வதற்கு துணிகிறார்கள்… என்றெல்லாம் இஷ்டத்திற்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
காஷ்மீரின் உண்மைத்தன்மையோ அல்லது அதன் வரலாறோ தெரியாத சாதாரண பாமர மக்கள் இப்படத்தை பார்ப்பதன் மூலமாக என்ன நினைப்பார்கள்? இராணுவ வீரர்களின் வேலையான தீவிரவாத செயல்களை முறியடிப்பதை இந்த காஷ்மீர் மக்கள் தடுக்கிறார்கள்; நமது ராணுவ வீரர்களின் மீது கல்லெறிகிறார்கள்; தீவிரவாதத்திற்கு துணை போகிறார்கள் என்றல்லவா நினைப்பார்கள். காஷ்மீரில் முஸ்லிம்கள் மட்டும் தான் உள்ளனரா ஏன் சீக்கியர்கள் போன்று பிற மதத்தினர் இல்லையா?
காஷ்மீர் மக்களின் வாழ்வியலை ஹைதர் மற்றும் ஹமீது போன்ற சில படங்கள் நமக்கு எடுத்துக்காட்டும். இவ்வகை படங்கள் பார்வையாளர்களிடையே பெரிதாக சோபிப்பதில்லை என்பதால் வணிக ரீதியான படத்திற்கு ஹீரோயிசத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு குறிப்பிட்ட மக்களை எவ்வளவு நாள் தான் பயங்கரவாதிகளாக காட்டுவது? மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ஒரு அமரன், கேப்டன் விக்ரம் பத்ராவுக்கு ஒரு ஷெர்ஷா போன்று உயர் நிலையில் இருக்கக்கூடிய இராணுவ வீரர்களின் வாழ்வைத்தான் படமாக எடுப்பார்களா.? அவர்களின் வீர மரணம் மூலம் மக்களுக்கு தேசப்பற்றை வலியுறுத்தி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தலாம் என்று இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நினைக்கிறார்களா.?
காஷ்மீர் மக்களின் வாழ்வியலை இவர்கள் எப்பொழுதுதான் புரிந்து கொள்ளப் போகிறார்கள்? அமரன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் ஒரு முறை இராணுவ வீரர்கள் வெற்றி பெற்று பெரும் புகழுடன் சமாதியில் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், பல அடையாளம் தெரியாத காஷ்மீர் மக்களின் சமாதிகளுக்கு நடுவில்…!