(முதல் பகுதியை வாசிக்க)
காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்கு
1947ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவடைந்து, இந்திய துணைக் கண்டம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளாக பிரிந்த போது, துணைக் கண்டத்தில் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின் கீழ் 584 மாநிலங்கள் சிற்றரசர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தன. அதில் காஷ்மீர் மாநிலமும் ஒன்றாகும். இந்த சிற்றரசுகள் இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இணைந்து கொள்ள விருப்பம் அளிக்கப்பட்டது. முஸ்லிம் பெரும்பான்மையை கொண்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் பாகிஸ்தானுடன் சேர வாய்ப்பு இருப்பதாகவே அதிகம் நம்பப்பட்டது. ஏனெனில் பாகிஸ்தான் எனும் வார்த்தையில் உள்ள ‘K’ என்பது காஷ்மீரை குறிக்கக் கூடியது.
இந்நிலையில் காஷ்மீரை ஆட்சி செய்த டோக்ரா இந்து மன்னர் மகாராஜா ஹரி சிங் தனது மாநிலத்தை சுதந்திரமான மாநிலமாக ஆக்க விரும்பினார். ஆனால், 1945இல் அவருக்கு எதிராக வெடித்த கிளர்ச்சியில் ஜம்முவின் தெற்கே மகாராஜா ஹரி சிங்கின் படைகள், மற்ற குறுநில மன்னர்களின் படைகள் உதவியுடன் முஸ்லிம் மக்களை கொன்று குவித்தனர். அந்நகரின் தெருக்களிலும் அதன் அண்டை மாவட்டங்களிலும் ஏறக்குறைய 70,000 முதல் 200,000க்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என வரலாற்றாசிரியர்களும், செய்தி அறிக்கைகளும் குறிப்பிடுகின்றன.
ஜம்முவில் நடத்தப்பட்ட படுகொலைச் செய்தியால் கொதிப்படைந்த பாகிஸ்தானிய ஒழுங்கற்ற பழங்குடியின மக்கள் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் மலைகளில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் சர்வ நாசங்கள் செய்து கொள்ளையடித்தனர். ஹரி சிங் காஷ்மீரில் இருந்து ஜம்முவிற்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம் உதவி கோரினார். இது இந்திய இராணுவம் காஷ்மீருக்குள் நுழைவதற்கான சட்டப்பூர்வமான அங்கீகாரமாக இருந்தது. மகாராஜா ஹரி சிங் அவசர அவசரமாக ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த நேரத்தில், மன்னருக்கு எதிராக பெரிய அளவிலான போராட்டங்கள் காஷ்மீரில் நடந்து கொண்டிருந்தது.
திடீரென காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததும், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, காஷ்மீர் மற்றும் அதன் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க அந்த பிராந்தியத்தில் வாக்கெடுப்பு நடத்துவதாக வாக்கு கொடுத்தார். அதன்படி மக்களின் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை மக்களின் ஆதரவின் அடிப்படையில் காஷ்மீர் இந்தியாவுடன் சேர வேண்டுமா அல்லது பாகிஸ்தானுடனா என்று முடிவு செய்யப்படும். ஆனால் அவ்வகையான வாக்கெடுப்பு இன்று வரை நடத்தப்படவே இல்லை. அதன்பின் தொடர்ந்து வந்த இந்திய அரசாங்கங்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிவிட்டது மட்டுமல்லாமல், ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் மற்றும் சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவான நபர்கள் உள்ள தொகுதிகளில் இருந்து யாரும் ஆட்சிக்கு வராமல் பார்த்துக்கொண்டும் உள்ளது.
பொறுமையுடன் காத்திருந்த காஷ்மீர் மக்களின் எதிர்பார்ப்புகள் சுக்குநூறாக உடைந்து போகவே விரக்தி அடைந்தனர். 1980களின் பிற்பகுதியில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் இளைஞர்கள் சேர்ந்து இந்திய ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தொடங்கினர். இந்தக் கிளர்ச்சியை நசுக்கி அம்மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்கு வசதியாகத்தான் 1990ல் இந்திய அரசு AFSPA சட்டத்தை காஷ்மீரில் அறிமுகப்படுத்தியது. இந்த சட்டத்தின் மூலமாக காஷ்மீர் மக்கள் சந்தித்த துன்பங்களும் துயரங்களும் எண்ணில் அடங்காதவை.
AFSPA என்ற சட்டம் காஷ்மீரில் ஏற்படுத்திய தாக்கம்
Armed Forces (Special Powers) Act – AFSPA என்பது உள்துறை அமைச்சகத்தால் நிறுவப்பட்ட சிறப்பு சட்டமாகும். இந்த சர்வாதிகார சட்டம் காஷ்மீர் மக்களுக்கு எதிராக இந்திய இராணுவத்திற்கு மிகப்பெரிய அதிகாரங்களை வழங்குகிறது.
(i) AFSPAஇன் பிரிவு 3, எந்த ஒரு மாநிலத்தின் கவர்னரோ அல்லது யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியோ, ஒன்றிய அரசாங்கத்தின் ஒரு பகுதியையோ, முழு மாநிலத்தையோ அல்லது யூனியன் பிரதேசத்தையோ “அமைதிக்கு ஊறு விளைவிக்கும் பகுதிகளாக” (Disturbed Areas) அறிவிக்க அதிகாரம் அளிப்பதுடன் அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவது அவசியம் என பரிந்துரைக்கிறது. ஆளுநர் நினைத்தால் காஷ்மீரில் எப்பகுதியை வேண்டுமானாலும் குழப்பம் விளைவிக்கும் பகுதிகளாக அறிவிக்கும் அதிகாரத்தை இது வழங்குகிறது.
(ii) AFSPAஇன் பிரிவு 4, ஆயுதப்படைகளால் எவ்வகை அதிகாரங்களை பயன்படுத்த முடியும் என விவரிக்கிறது. அதாவது பதற்றமான பகுதிகளில், யாரேனும் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருப்பதாக ஆயுதப்படை வீரர்களில் ஒருவர் நினைத்தால், அவரால் அந்த நபரை சுட்டுக் கொள்ள முடியும். ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொதுவெளியில் ஒன்றுகூடுவதோ அல்லது ஆயுதங்கள், துப்பாக்கிகள், வெடிமருந்துகள் அல்லது வெடிபொருளாகப் பயன்படுத்தக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லவோ கூடாது.
(iii) எந்த ஒரு கட்டிட அமைப்பையும் சந்தேகத்திற்கு இடமான வகையில் (ஆயுதக் கிடங்காகவோ, ஆயுதமேந்திய தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாமாகவோ, ஏதேனும் குற்றத்திற்காகத் தேடப்படும் ஆயுதக் கும்பல்கள் மற்றும் தலைமறைவாக உள்ளவர்களின் மறைவிடமாகவோ) பயன்படுத்தப்படலாம் என இராணுவ வீரர் சந்தேகித்தால் அந்த முழு கட்டிட அமைப்பையும் அழிக்கும் அதிகாரமும் ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(iv) குற்றத்தைச் செய்தாலும் அல்லது அவர் செய்ததாக சந்தேகம் இருந்தாலும் எந்தவொரு நபரையும் வாரண்ட் இன்றி கைது செய்யமுடியும். அதற்கு தேவையான பலத்தை ஆயுதப்படைகள் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய பயன்படுத்தலாம்.
(v) ஆயுதப் படைகள் எந்த ஒரு வீட்டிலும், வளாகத்திலும் யாருடைய அனுமதியும் இன்றி நுழைந்து தேடுதல் வேட்டை நடத்த முடியும். திருடப்பட்ட சொத்து, ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது வெடிபொருட்கள் என சட்டவிரோதமாக வைத்திருப்பதாக நம்பப்படும் எந்தவொரு சொத்தையும் அவர்களால் பறிமுதல் செய்ய முடியும்.
(vi) AFSPAஇன் மிகவும் சர்ச்சைக்குரிய அதிகாரங்களில் ஒன்றான பிரிவு 6 குற்றவியல் வழக்குகளுக்கு எதிரான முழுமையான விலக்கை இராணுவ வீரர்களுக்கு வழங்குகிறது. அதாவது எந்த ஒரு இராணுவ வீரரின் மீதும் அவர்கள் செய்யும் குற்றங்களுக்காக வழக்கு தொடர முடியாது (ஒன்றிய அரசு வழக்குத் தொடர அனுமதி வழங்கினால் ஒழிய).
(vii) AFSPAஇன் பிரிவு 4 எந்தவொரு வாகனத்தையும் சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்யவும், பறிமுதல் செய்யவும் ஆயுதமேந்திய அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது.
(viii) AFSPAஇன் பிரிவு 5இல் மேலும் சேர்க்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஏதேனும் தேடலின் போது கதவு, பாதுகாப்பு பெட்டி, அலமாரி, பொட்டலங்கள் அல்லது வேறு எந்தப் பொருளையும் உடைப்பதற்கு அனுமதியளிக்கப்படுகிறது.
இவ்வகை வெளிப்படையான வலிமையான அதிகாரங்களை இராணுவ வீரர்களுக்கு அளிப்பதால் மனித உரிமை மீறல்கள் நடப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிடுகிறது.
AFSPAவைத் தொடர்ந்து, ஜம்மு மற்றும் காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (PSA) 1978இன் படி, ஒரு நபரின் செயல் மாநிலத்தின் பாதுகாப்பிற்கு பாதகமானதாக இருந்தாலோ, இருப்பதாக சந்தேகிக்கப்பட்டாலோ, எந்தக் குற்றச்சாட்டும், விசாரணையும் இல்லாமல் அவரை அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் காவலில் வைக்க காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கிறது.
சர்வாதிகார நாட்டிலும் காணமுடியாத அளவிற்கு இருக்கும் இவ்வகை சட்டங்கள் ஒரு பகுதியிலோ அல்லது மாநிலத்திலோ இயற்றப்பட்டால் அங்கு மனித உரிமை மீறல்களும், அத்துமீறல்களும், சர்வாதிகார அடக்குமுறைகளும் எந்நிலையில் இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.
இராணுவமும் நீதியும்.!
ஜம்மு மற்றும் காஷ்மீர் குடிமையியல் சமூக கூட்டமைப்பு (Jammu & Kashmir Coalition of Civil Society) எனும் அமைப்பு இராணுவப்படைகள் மூலமாகவோ, பல்வேறு உள்ளூர், பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த தீவிரவாதிகளினாலோ பொதுமக்களுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துகிறது. இந்த அமைப்பின் “AFSPA அறிமுகப்படுத்தப்பட்ட 1990 முதல் 2006ஆம் ஆண்டு வரை ஜம்மு மற்றும் காஷ்மீரில் மனித உரிமைகளின் நிலை” என்ற அறிக்கை 1990-2004க்கு இடைப்பட்ட காலத்தில் காஷ்மீர் பொதுமக்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 70,000க்கும் அதிகம் என அம்பலப்படுத்தியது. ஆனால், இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் 1990 முதல் 2005 வரை 47,000 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு இருக்கிறது.! வெறும் 14 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இவ்வளவு மக்கள் இறந்திருப்பது இராணுவ படைகளுக்கு இருக்கும் ஆயுத சுதந்திரத்தின் வெளிப்பாடே ஆகும்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் தண்டனை விலக்கு பற்றிய கதைகள் (Alleged Perpetrators: Stories of Impunity in Jammu and Kashmir) என்ற 2012ஆம் ஆண்டு வெளிவந்த அறிக்கை 500க்கும் மேற்பட்டவர்களை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவர்கள் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்கு பொறுப்பாக்கப்பட்டிருக்கும் இராணுவ வீரர்கள். இது இராணுவப் படைகள் அனுபவிக்கும் தண்டனையில்லா கலாச்சாரத்தின் தீங்கை நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது.
தண்டனையில்லா கலாச்சாரத்தின் விளைவாக 1990ஆம் ஆண்டு முதல் குறைந்தது 8000 பேர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டு உள்ளனர். 70,000 இறப்புகள் மற்றும் 6,000க்கும் மேற்பட்ட அறியப்படாத, அடையாளம் தெரியாத பொதுமக்களின் சமாதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.
AFSPAவை எதிர்த்து வழக்குத் தொடர அனுமதி அளிப்பது தொடர்பான ஒரு கோரிக்கை கூட இந்த 22 ஆண்டுகளில் ஒன்றிய அரசிடம் இருந்து வழங்கப்படவில்லை; இராணுவ நீதிமன்றங்கள் வெளிப்படையான தன்மையைக் கொண்டிருக்கவில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட இராணுவ வீரர்களுக்கு ஆதரவாக இருப்பதுடன் நீதியில் மிகவும் பாரபட்சம் காட்டுவதாகவும் அறிக்கை கூறுகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 22 ஆண்டுகளில் நடந்த மனித உரிமை மீறல்களின் முக்கியமான அம்சம் என்னவென்றால், தீவிரவாதிகளை எதிர்கொள்வது என்ற பெயரில் இந்திய அரசு இராணுவப்படைகளுக்கு சட்டங்களை பின்பற்றியோ அல்லது பின்பற்றாமலோ அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரம் அளித்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் மீது தொடுக்கப்படும் பெரும்பாலான வழக்குகளில் அவர்கள் செய்யும் குற்றங்கள் கவனிக்கப்படுவதில்லை அல்லது விசாரிக்கப்படுவதில்லை.
காஷ்மீரின் கல்லறைகள்
இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியில் மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் தரும் புள்ளிவிவரங்கள் காஷ்மீர் மக்கள் இராணுவத்தின் மீது வைத்துள்ள புரிதலை காட்டும். அவர்களின், 2009ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட சான்றுகள்: அறியப்படாத, அடையாளம் தெரியாத கல்லறையில்லாத பெரும் சமாதிகள் (Buried Evidence: Unknown, Unmarked, and Mass Graves in Indian-Administered Kashmir) என்ற அறிக்கை கூறுகிறது, “கல்லறைகள், அவற்றின் உருவாக்கம், அதன் விளைவு ஆகியவை காஷ்மீரின் மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை மற்றும் மனித உரிமை அத்துமீறல்களின் தொடர்ச்சியான வரலாற்றை நமக்கு கூறுபவை. கல்லறைகள் குறித்தான செய்திகள் உள்ளூர் மக்களை பொறுத்தவரை அதிகமாக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால் பொதுவெளியில் அவை அரிதாகவே பேசப்படுகின்றன. இவை ரகசியங்களாக ஆக்கப்பட்டு பேசக்கூடிய சூழ்நிலையில் இருந்து மறைக்கப்படுகின்றன”.
ஒரு கிராமப்புற பகுதியைச் சேர்ந்த கல்லறைகளை தோண்டும் வேலையை செய்யக்கூடிய ஒருவர் இவ்வாறு கூறுகிறார், “அவர்கள் [அதாவது கல்லறைகள்] கவனிக்கப்பட வேண்டும், அதன் மூலமாக அவர்களின் [பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆயுதப்படைகள்] மீது பயம் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகவே அங்கே அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன மாதிரியானவர்கள், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நாங்கள் அனைவரும் அறிவோம். ஆனால், அவற்றைப் பற்றி பேச முடியாது. அவர்களைப் பற்றி பேசுவது தேசத் துரோகம் ஆகிவிடும்” என்கிறார்.
நிலத்திற்கு அடியில் உண்மைகள்: உரி பகுதியில் உள்ள பெயரிடப்படாத கல்லறைகள் மற்றும் பரந்த புதைகுழிகள் பற்றிய உண்மை கண்டறியும் பணி (Facts Under Ground: A fact-finding mission on nameless graves & mass graves in Uri area) என்ற அறிக்கை, தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்ளூர் காஷ்மீர் வாசிகளை பயங்கரவாதிகள் என கைது செய்து, நீண்ட நாட்களுக்கு காவலில் எடுத்து, அவர்களை கொலை செய்து, வெளிநாட்டு போராளிகள் என்று முத்திரை குத்தி இறுதியில் அவர்கள் பெயர்கள் இல்லாமல் கல்லறைகளில் புதைக்கப்பட்ட நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது. 2005ஆம் ஆண்டில், காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் அமைப்பும் (Association of Parents of Disappeared Persons) உரி பகுதியில் இதுமாதிரி பெயர்கள் இல்லாத நபர்களின் கல்லறைகளை ஆய்வுக்கு உட்படுத்தி சில உண்மைகளை வெளிக்கொண்டு வந்தது.
(அடுத்த பகுதியை வாசிக்க)