முஸ்லிம்களின் மீதான அநீதிக்குச் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைத்து நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இந்துத்துவவாதிகளின் பல நாள் கனவு தற்போது நினைவாகியிருக்கிறது. ஆம் அவர்கள் இவ்வளவு நாள் இந்து மக்களைக் கிளர்ச்சியூட்டி அரசியல் செய்து வந்த இராமர் கோயில் வரும் ஜனவரி 22ஆம் நாள் திறக்கப்படுகிறது. 2.7 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள இராமர் கோயில் 2019 பாபரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து அதன் கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டது. கொரானாவின் காரணமாகப் பணிகளில் மந்தநிலை ஏற்பட்டாலும், இதனைக் கட்டி முடிப்பதற்கு ஏறக்குறைய 5 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது.
இக்கோயிலைக் கட்டுவதற்கு முதலில் 1800 கோடி தேவைப்படும் என்று கணித்த நிலையில் கட்டி முடிப்பதற்குள் 3000 கோடி ஆகியிருக்கிறது. ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்களே இதற்கான நன்கொடையைத் திரட்டுவதற்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்தக் கோயிலைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குப் பல சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன! அதிலும் குறிப்பாக இந்தக் கோயில் அமைக்கப்பட்ட அயோத்தி பகுதியில் புதிதாக இரயில் நிலையமும், விமான நிலையமும் கட்டி முடிக்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
அயோத்தியைச் சுற்றிக் கட்டப்படும் அனைத்து விஷயங்களும் ‘புராணக் குறியீடுகளை’ மையமாகக் கொண்டுதான் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகப் புதிதாகத் திறக்கப்பட்ட இரயில் நிலையம் ‘அயோத்தியா இரயில் நிலையம்’ என்று இருந்த நிலையில், அதற்கு ‘அயோத்தியா தம்’ என்று புதிய பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இராமனும் சீதையும் வாழ்ந்த இடமே அயோத்தியா தம் என அழைக்கப்படுவது. இதுபோக விமான நிலையத்திற்கு இராமாயணத்தை எழுதிய வால்மீகியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது (மகரிஷி வால்மீகி விமான நிலையம்).
இந்தக் கோயில் திறப்பு நிகழ்ச்சியான ‘பிராண பிரதிஷ்டை’ நிகழ்வுக்குக் கிட்டத்தட்ட 7000க்கும் அதிகமான முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், கோடீஸ்வர தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோரும் இன்னும் சில பிரபலங்களும் அழைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் இவ்விழாவிற்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது ஒருபுறம் இருக்க, இவ்விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தை இராமர் சிலையைக் கருவறைக்குள் பிரதமர் நரேந்திர மோடி தான் தூக்கிச் சென்று வைக்க உள்ளார். இதன் மூலம் நம் நாட்டில் மதச்சார்பின்மை என்ற வாக்கியம் குப்பையில் போடப்பட்டு விடும் என்பது சொல்லாமல் சொல்லப்பட உள்ளது. அரசே தலைமை தாங்கி நடத்தும் இந்நிகழ்வினால் ஆதாயம் பெறக் கூடியவர்கள் இந்துத்துவவாதிகளும் கரசேவகர்களும் மட்டும் தான்.
இராமர் கோயிலின் (பாபரி மஸ்ஜிதின்) அரசியல், விடுதலை இந்தியாவிற்கு முற்பட்டது. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னும், வந்த பின்னும் அறிவித்த தேர்தல் அறிக்கைகள் அனைத்திலும் இடம்பெற்ற ஒரு தேர்தல் வாக்குறுதி ‘இராமர் கோயில் கட்டப்படும்’ என்பது தான். அதற்காக அவர்கள் செய்த சூழ்ச்சிகளும், குழப்பங்களும் நாடும், நாமும் அறிந்ததுதான் என்றாலும், இப்போது அது கட்டி முடிக்கப்பட்டு விட்டது.
இராமர் கோயில் திறப்பு என்பதை வெறும் செய்தியாக நம்மால் கடந்து போய் விடமுடியாது. ஏனென்றால் இதற்காக இரத்தம் சிந்தியவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களும் அப்பாவி மக்களும் தான்.
விமான நிலையம், இரயில் நிலையத் திறப்பு நிகழ்வின் போது பிரதமர் நரேந்திர மோடி ‘இந்த நிகழ்விற்காக (இராமர் கோயில் திறப்பு) நாம் 500 ஆண்டுகள் காத்திருந்தோம்’ என்று குறிப்பிட்டார். இராமர் கோயிலைக் கட்டுவதற்காக 500 ஆண்டுகள் காத்திருந்ததாக மோடி உட்பட இந்துத்துவவாதிகள் கூறினாலும், அதில் கடைசி இரண்டு நூற்றாண்டுகளில் தான் இவர்களின் செயல் வீரியத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. சிறந்த திட்டமிடுதலினாலும், துல்லியமான செயல்பாடுகளினாலும் இதனை இவர்கள் சாத்தியப்படுத்தியிருப்பது நம்மை வியப்பில் ஆழ்த்தாமல் இல்லை. ஏனென்றால், அதனைச் செயல்படுத்துவதற்கென்று வலிமையும், வீரியமும், எதற்கும் உடைந்து விடாத மனமும் வேண்டும்.
இராமர் கோயில் கனவிற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதன் முதற்கட்டமாக, விடுதலை இந்தியாவிற்கு முற்பட்ட காலத்தில் பிராமணிய சித்தாந்தத்தின் அடக்கு முறைகளால் இந்துத்துவவாதிகள், பலன் பெற்றாலும் பாமர இந்து மக்களும், தலித் மக்களும் பல இன்னல்களுக்கு உள்ளாகினர்.
அதனைத்தொடர்ந்து சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளானோர் பலர் இஸ்லாத்தையும், பௌத்த மதத்தையும் தழுவினர். இதைக் கண்டு ரோஷம் கொண்ட இந்துத்துவ காப்பாளர்கள், தாய் மதம் திரும்ப வேண்டும் என்றும் இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கோடு கோதாவில் குதித்தார்கள்.
ஆனால் அடிப்படையிலேயே பிராமணிய சித்தாந்தம் மக்களிடையே பிரிவுகளை ஊக்குவிக்கிறது என்பதை அறிந்த இவர்கள், முஸ்லிம்களும், ஹிந்து பாமர மக்களும் அமைதியாகச் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருவதைப் பார்க்கிறார்கள். ஹிந்து மக்களைச் சாதி பேதமின்றி ஒற்றுமைப்படுத்தி அவர்களை முன்போலச் சுரண்ட வேண்டும் எனில் அவர்களை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்க வேண்டும் என்பதை அறிந்தனர்.
இந்து மதத்திற்கு ஆபத்து என்ற ஒற்றை மந்திரத்தை மட்டுமே வைத்துச் செயல்பட்டு இவர்கள் செய்த முதல் செயலே முஸ்லிம் இந்து மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தியதுதான். மாறாத உலக நியதியான ஒரே சித்தாந்தத்தைப் பின்பற்றும் பெரும்பான்மைவாத மக்களிடம் இனவெறி, தான் பிறந்து வந்த குலத்தின் பெருமைகளைப் பற்றிக் கூர்தீட்டும் போது; அது சிறுபான்மை மக்களின் மீது வரம்பு மீறலை ஏற்படுத்தப் போதுமானது என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தார்கள். சாதிகளால் பிரிவுகளாகச் சிதறிக் கிடக்கும் மக்களை ஒன்றுபடுத்த இவர்கள், பெரும்பான்மைவாதம், மதத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.
முஸ்லிம் இந்து மக்களிடையே கலவரத்தை நிகழ்த்தியவுடன் பிரிவுகளாக இருந்த தாழ்ந்த சமூகத்தினராகக் கருதப்படும் சூத்திரர்களும் கூட ஹிந்து என்ற பொதுவான வார்த்தையினால் பாலிலிருந்து நீர் பிரிவதைப் போல முஸ்லிம் மக்களிடம் இருந்து பிரிந்து கொண்டார்கள்.
உயர் சாதி மக்கள் தங்களைச் சமமாக நடத்த மாட்டார்கள், பிறப்பினால் தங்களைத் தாழ்ந்த சாதியினராகவே கருதுகிறார்கள், தங்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிற அவமானகரமான சூழல் நிலவுகிறது என்பவற்றையெல்லாம் அறிந்தும் ‘தங்களின் தாய் மதத்தில் நீடிப்பதுதான் கௌரவம்’ என்று பெரும்பாலான கீழ்சாதியினரையும் மதவெறி பிடித்தவர்களாக மாற்றினார்கள். ‘பிற மதம் நோக்குதல் அவமானம்! தாய் மதம் திரும்புதல் தன்மானம்!’ என்ற கூற்று, ஹிந்து மக்களிடையே பரவ ஆரம்பித்ததும் இவ்வகை கௌரவத்தின் நீட்சிதான்.
இவ்வாறு இந்துத்துவாதிகள் பெரும் பான்மைவாத மக்களை ஒன்றுபடுத்திய பிறகு இரண்டாவது கட்டமாக, அந்தப் பெரும்பான்மைவாத மக்களை வைத்து சிறுபான்மையின மக்களின் மீதான வரம்பு மீறலை அதிகப்படுத்தினர்.
‘எந்த ஒரு சாதிப் பிரிவும் அல்லாத பொதுவான கொள்கையைக் கொண்ட முஸ்லிம்கள் எப்பொழுதும் தமது அநீதியான சித்தாந்தத்திற்கு ஆபத்தானவர்கள்’ என்பதைத் தெளிவாக உணர்ந்த இவர்கள் முஸ்லிம்களை அச்சுறுத்தலில் வைத்திருப்பதிலும், அவர்களைச் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்குவதிலும் மிகத் துரிதமாகச் செயல்பட்டார்கள். இதற்காக இவர்கள் இந்த முறை கூடுதலாக எடுத்துக் கொண்ட இரண்டு மந்திர வார்த்தைகளில் ஒன்று தேசப் பாதுகாப்பு மற்றொன்று தேசப்பற்று.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த நாளிலிருந்தே இந்தியாவை ‘இந்து நாடு’ என மனதளவில் பிரகடனம் செய்து கொண்டு இவர்கள் மக்களிடையே பரப்பிய பரப்புரை, ஒரு படி மேலே சென்று இந்து மதத்தை நாட்டின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றாகக் கட்டமைத்து அதைப் பின்பற்றாத முஸ்லிம்களை அந்நியர்களாக நிற்க வைத்தது. மேலும் முஸ்லிம் சமுதாயத்திற்கு உலக அளவில் இருக்கும் செல்வாக்கு இவர்களை வெறுப்பில் ஆழ்த்தி இருக்க வேண்டும். அதன்படி தேசப் பாதுகாப்பையும், தேசப்பற்றையும் ஆயுதமாகப் பயன்படுத்தி தாய் மதம் தாய் நாடு தாய் கலாச்சாரம் என அனைத்தையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்தனர்.
இந்துத்துவாதிகள் பாகிஸ்தான் எனும் அண்டை நாட்டைப் பகை நாடாக மாற்றியது மட்டுமல்லாமல் முஸ்லிம்களையும் பகைவர்களாகச் சித்திரித்துக் காட்டினார்கள். ‘இந்தியாவில் வாழும் முஸ்லிம்களிடம் தேசப்பற்றை எதிர்பார்க்க முடியாது. அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களது மதத்தைப் பின்பற்றி வாழும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு உதவி செய்யும் பொருட்டு, தாய் நாட்டுக்குத் துரோகம் செய்யத் தயாராகிவிடுவார்கள்’ என்ற மாயையை ஏற்படுத்தினர். தேசப்பாதுகாப்பு இந்திய நாட்டிற்குத் தேவையான ஒன்று என்று தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் தங்களுடைய மக்களை எண்ண வைத்தனர்.
ஒரு முஸ்லிமாக இருப்பவன் இந்திய நாட்டில் பிறந்து இருந்தாலும் அவனது தாய்நாடு இந்தியா அல்ல, அவனுக்கு இருக்கும் உரிமை அகதிக்கு இருக்கும் உரிமையைப் போன்றது தான் என்ற ரீதியில் மக்களை நினைக்கத் தூண்டியதன் விளைவு பல கலவரங்கள் இந்து முஸ்லிம்களிடையே ஏற்பட வழி வகுத்தது. பம்பாய் கலவரம், பாபரி மஸ்ஜித் இடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவலாகத் தொடர்ந்த வன்முறை வெறியாட்டங்கள். குஜராத்தில் நடந்த முஸ்லிம்களின் மீதான இனப்படுகொலை என மக்களிடையே பிளவை ஏற்படுத்தி; பெரும்பான்மைவாத மக்களின் ஓட்டுகளை வாக்கு வங்கிகளாக மாற்றியது இந்துத்துவ வாதிகளின் சாமர்த்தியம்.
முஸ்லிம்கள் தங்களது தேசப்பற்றின் மீதான உண்மைத் தன்மையை நிரூபித்தாக வேண்டும் என்ற இந்த இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதால் தான் ‘இந்திய முஸ்லிம்கள்’ என்ற பதமே உருவானது. இந்து வெறியர்களால் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டுக் கொலை செய்யப்படும்போது எழுப்பப்படும் கோஷங்களும், அண்மையில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரருக்கு எதிராக மைதானத்தில் குழுமியிருந்த மக்கள் எழுப்பிய கோஷங்களுமே, அவர்கள் முஸ்லிம்களை எவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணம். தேசப் பாதுகாப்பும் தேசப்பற்றும் முஸ்லிம்களுக்கு ஒவ்வாத வார்த்தைகள் என்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தினர்.
மூன்றாம் கட்டமாக இவர்கள் செய்தது முஸ்லிம்கள் மீது அநீதியைக் கட்டவிழ்த்தது. பாபரி மஸ்ஜித் இடிப்பின் பிறகு நடைபெற்ற கலவரங்களின் போதும், குஜராத் இன அழிப்பு நடவடிக்கையின் போதும் முஸ்லிம்கள் தான் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனரே ஒழிய, அந்தக் கொடூரங்களை நிகழ்த்திக் காட்டிய சிலரைத் தவிர பெரும்பாலானோருக்குத் தண்டனை கிடைக்கவில்லை. போதுமான ஆதாரங்களாலும், பாதிப்புக்கு உள்ளான மக்கள் பலரின் நேரடிச் சாட்சிகளாலும் கூட சங்பரிவர்களுக்குத் தண்டனையைப் பெற்றுத்தர முடியவில்லை. குற்றங்களில் ஈடுபட்ட பல நபர்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றிய அவலம் முஸ்லிம்களிடையே அச்சுறுத்தலைத் தான் அதிகப்படுத்தியது.
பல ஆண்டுகளாக நடைபெற்ற பாபரி மஸ்ஜித் வழக்கிலும் கூட உலக வரலாற்றில் எங்குமே காணக்கிடைக்காத ‘நம்பிக்கையின் அடிப்படையில்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் சங்பரிவார்களுக்குச் சாதகமானத் தீர்ப்பு; முஸ்லிம்களின் இறுதி நம்பிக்கையும் தகர்த்தது. அவர்கள் நீதியின் மேல் நிராசை அடைந்தார்கள். இவ்வளவு தியாகங்களையும், பழிகளையும், தங்கள் பொருள்களையும், மக்களையும் இழந்த முஸ்லிம்கள் கடைசியாக வைத்த நீதியின் மீதான நம்பிக்கையும் உடைக்கப்படும் போது அவர்கள் மௌனத்தையே பதிலாகத் தந்தார்கள்.
இதன் பின்னர் இந்துத்துவவாதிகள் நான்காம் கட்ட நடவடிக்கையாக முஸ்லிம்களின் அடையாளங்களை அழிப்பதோடு, அவர்களின் உரிமைகளையும் பிடுங்கத் தொடங்கினர்.
இதற்கு ஆரம்பமாக இவர்கள் செய்த முதல் காரியம் நகரங்களின் முஸ்லிம் பெயர்களை மாற்றியது. இப்போதுள்ள அயோத்தி நகரின் முந்தைய பெயரான ஃபைசாபாத் எனும் பெயரை மாற்றியது இராமர் கோயில் கட்டுவதன் முதல் அச்சாணி. பின்னர் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள பல பகுதிகளிலும் நகரங்களிலும் இருக்கும் முஸ்லிம் பெயர்கள் மாற்றப்பட்டன. ‘அகதிகளாக வாழ் பவர்களுக்கு அடையாளம் எதற்கு?’ என்று நினைத்தார்கள் போலும்.
இவ்வகைச் செயல்பாடுகளின் இறுதிக் கட்ட நடவடிக்கை தான் முஸ்லிம்களின் மத நம்பிக்கைகளில் தலையிடுவது. முஸ்லிம்களுக்கென்று இருந்த அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்ட பிறகு அவர்களுக்கு இருக்கும் ஒரே உரிமை அவர்களின் மதச் சுதந்திரம் மட்டும் தான். அதில் கை வைப்பதற்குத்தான் பொது சிவில் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டுவரத் துடிக்கிறார்கள்.
இது இல்லாமல் முத்தலாக் தடைச் சட்டம், கர்நாடகாவில் நிகழ்ந்த ஹிஜாப் தடை, மாட்டிறைச்சித் தடை, தொழுகையின் அழைப்புக்காக ஒலிபெருக்கிகள் உபயோகிக்க எதிர்ப்பு, அண்மையில் உத்திரப் பிரதேசத்தில் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள ஹலால் இறைச்சிக்கான தடை ஆகியவை இந்துத்துவவாதிகளுக்கு உள்ள இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்பாடுதான்.
இவ்வகைத் திட்டங்களைச் செயல்படுத்தியதன் காரணமாகவே அவர்களின் இராமர் கோயில் கனவு சாத்தியமானது. இந்துத்துவாதிகளின் அரசியலில் மிகப்பெரும் தாக்கம் செலுத்திய இராமர் கோயில் கட்டுதல் எனும் கனவு நனவானதுடன் இவர்கள் அடுத்த கட்டமாக, மீண்டும் இதை வைத்தே மூன்றாவது முறை ஆட்சியைப் பிடிக்க முயல்வார்கள்.
நான்கு கட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட பிறகு அடுத்தடுத்த கட்டங்களாக இருப்பது பாபரி மஸ்ஜிதைப் போன்று பிற மஸ்ஜித்களையும் இடித்து அங்கும் கோயில் கட்டுவது தான்! விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அடுத்த இலக்காக போபாலில் உள்ள ஜாமியா மஸ்ஜித், சிவன் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாக உரிமை கோரி வழக்குத் தொடுத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இராமர் கோயில் கட்டப்பட்டுத் திறப்பதற்கு முன்னரே முஸ்லிம்கள் மீது பழி போட ஆயத்தமாகி விட்டார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் போலியாக முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு இராமர் கோயிலை இடிப்பதற்கு மிரட்டல் விடுத்திருக்கிறார்கள், இதன்மூலம் இந்துத்துவவாதிகளின் அடுத்த அரசியல் நகர்வு ‘கட்டிய இராமர் கோயிலைக் காப்பாற்ற வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையிலிருந்து சற்று மேம்பட்டு இந்துக் கடவுள்களைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கூட இவர்கள் அரசியல் செய்யத் தயங்க மாட்டார்கள்!
இவற்றால் பாதிக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளானவர்களும் இனிமேல் உள்ளாகப் போகிறவர்களும் முஸ்லிம்கள்தான். முஸ்லிம்களின் உணர்வுகளை இந்துத்துவவாதிகள் எந்த அளவுக்கு விளையாட்டாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் எனில் ஆர்எஸ்எஸின் முக்கியத் தலைவர் இந்த்ரேஷ் குமார் ‘ராமர் கோயில் திறப்பின் போது பள்ளிவாசல்களிலும், மதரசாக்களிலும், தர்ஹாக்களிலும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்ப வேண்டும்’ என்று மேம்போக்காகக் கூறிவிட்டுச் செல்கிறார்.
தங்களின் கனவு நனவாகப் போகும் முக்கிய நிகழ்வுக்காக இந்துத்துவவாதிகள் ஒவ்வொன்றையும் அங்குலம் அங்குலமாகப் பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டிருக்கும் இந்தப் பிரமாண்ட இராமர் கோயிலின் அஸ்திவாரம், கலவரங்களாலும் சூழ்ச்சிகளாலுமே இவர்களுக்குச் சாத்தியமானது.
இராமர் கோயிலுக்கென தனி வரலாறு எழுதப்படும் எனில் அது திறக்கப்படும் ஜனவரி 22 முதல் எழுதுவதை விடுத்து, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினத்திலிருந்து தான் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதற்காகச் செலவிடப்பட்ட முஸ்லிம்களின் இரத்தம் தோய்ந்த கதைகளும் தியாகங்களும் தான் அதன் வரலாற்றின் முதல் பக்கத்தில் பொறிக்கப்பட வேண்டும். இராமர் பிறந்த பூமி என்றழைக்கப்படும் அந்த நிலத்தில் முதன் முதலாக இராமர் பாபரி மஸ்ஜிதின் பின்வழியாகத்தான் நுழைந்தார் என்றே அதன் முதல் வரி எழுதப்பட வேண்டும்.