இந்தியாவில் மக்களை அதிதீவிர பதட்டத்தில் வைத்திருக்கும் இரண்டு நாட்கள் உள்ளன. ஒன்று தேர்தல் நாட்கள்; மற்றொன்று ஊர்வலத்தைக் கொண்டிருக்கும் இந்துப் பண்டிகை நாட்கள். ராம நவமி, அனுமன் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் அமைதியாகக் கொண்டாடும் சாதாரண இந்து மக்களை விட்டுவிடுங்கள், அவர்கள் எவ்வித நயவஞ்சக எண்ணங்களும் இன்றி வழக்கமான பண்டிகை நாட்களாக அவற்றைக் கடந்து விடுகின்றனர். ஆனால் காவி பயங்கரவாதிகள் நடத்தும் ஊர்வலங்கள் அப்படியல்ல; அதில் கலவரங்கள் ஏற்படாவிட்டால் தான் அது வியப்புக்குரிய ஒன்று.
இந்து பயங்கரவாதிகள் தங்களின் ஊர்வலங்களில் எப்படி பிரச்னை, கலவரங்களை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கு சமீபத்திய ஹரியானா மாநிலத்திலுள்ள மேவாத் மாவட்டத்தின் நூஹ் பகுதியில் நடந்த வன்முறையை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். பிரஜ்மண்டல் யாத்ரா (கிருஷ்ணரை பற்றிய பாதயாத்திரை) என்பது ஆண்டுதோறும் ஜூலை 31ஆம் தேதி ஹரியானாவின் மேவாத் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு. இது VHP நிர்வாகிகளால் 2021 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு இவர்கள் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நூஹ் பகுதியில் ஊர்வலமாகச் சென்றபோது மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. வன்முறை நடக்கையிலே வலதுசாரி ஊடகங்கள் நூஹ் பகுதியில் வசிக்கக்கூடிய முஸ்லிம்களில் சிலர் குழந்தைகள் மற்றும் பெண்கள் சென்று கொண்டிருந்த பாதயாத்திரை மீது கல் எறிந்தனர். அமைதியாகப் பாதயாத்திரை சென்ற இந்துக்கள் பலர் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாகினர் என்று பொய்யைப் பரப்பும் செயலில் ஈடுபடத் தொடங்கினர். இந்த கலவரத்தின் விளைவாக ஐந்து நபர்கள் கொல்லப்பட்டனர்; 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; 180க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பொழுது நாம் கலவரம் நடைபெறக் காரணம் என்ன என்பதை ஆழமாகப் பார்ப்போம். பிரஜ்மண்டல் யாத்திரை ஆண்டு தோறும் நடைபெறக்கூடியது தான் என்றாலும் ஊர்வலம் செல்லக்கூடிய பாதை மட்டும் மாறுதலுக்கு உட்பட்டது. அவ்வகையில் இந்த முறை அவர்கள் செல்லக்கூடிய ஊர்வலம் நூஹ் பகுதியை உள்ளடக்கியிருந்தது.
நூஹ் முஸ்லிம்கள் 79% பெரும்பான்மையாக வசிக்கக் கூடிய பகுதி. இந்தக் கலவரத்திற்கான முக்கிய காரணியாக இருந்ததாகச் சொல்லப்படக்கூடியது மோனு மனேஸர் முஸ்லிம்களின் உணர்வைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ஒரு காணொளி காட்சி. முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை காணொளிகளைப் பகிர்வதில் பெயர்போன இவர், கொலைக் குற்றத்திற்காகத் தேடப்படுபவர். நூஹ் பகுதியில் நடைபெறும் அப்பேரணியில் சேருமாறு தனது ஆதரவாளர்களிடம் ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நசீர், ஜுனைத் என்பவர்களைப் பசுவதை செய்ததாகக் கூறி காருக்குள் வைத்து எறித்து கொலை செய்தது, இந்த மோனு கும்பல் தான். இவர்களின் கொலைக்கு சில நாட்களுக்கு முன்புதான் மானேசர் மெக்கானிக் வாரிஸ் கானின் மரணத்துடன் சந்தேகிக்கப்பட்டார்; வாரிஸ் கானின் குடும்பத்தினர் மானேசர் தான் கொலையைச் செய்தார் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் ஏப்ரல் 2022 இல், ஹரியானாவில் “பசு பாதுகாவலர்” கும்பல்கள் முஸ்லிம்களைத் தாக்கி சித்திரவதை செய்யும் நான்கு விதமான வீடியோக்கள் வைரலானது. அவற்றைச் செய்ததிலும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததிலும் மனேசரின் பங்கு அளப்பரியது. ஏற்கனவே இவனைக் கைது செய்ய வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்தும் போராட்டம் நடத்தியும் வந்த நிலையில் மோனு மனேஸர், தான் நூஹ் வழியாகச் செல்லும் பிரஜ்மண்டல் யாத்திராவில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்த பதிவு முஸ்லிம் மக்களிடையே கடுங்கோபத்தை உள்ளாக்கியது.
இரண்டாவதாக, இந்துத்துவா தலைவர் பிட்டு பஜ்ரங்கி முஸ்லீம்களைத் தூண்டிவிடும் நோக்கில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். வீடியோவில், பஜ்ரங்கி தனது சாசுரலுக்கு (நூஹ் பகுதியை தன் மாமியார் வீடாகக் குறிப்பிட்டு) சென்று வருவதாகவும், மக்கள் அவரை வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்; பின்னணியில், அவரது ஆதரவாளர்கள் ‘ஜிஜாஜி ஆ ரஹே ஹைன்’ (இந்தியில் மருமகன் வருகிறார்) என்று முழக்கம் இடுகின்றனர். ஏற்கனவே பஜ்ரங்கி மீது ‘முஸ்லீம் சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்தல்’, ‘ஆயுதங்களை வைத்து மிரட்டுதல்’ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு ஹரியானாவில் நடந்த ஒரு மகாபஞ்சாயத்தில் அவர், “ஆசிப்பைக் கொன்று அவரை சொர்க்கத்தில் 72 கன்னிப் பெண்களிடம் அனுப்பிய சகோதரர்களுடன் நாங்கள் இருக்கிறோம்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
VHPயின் இணைச் செயலாளரான சுரேந்திர ஜெயின், நூஹ் பகுதியில் வன்முறை வெடிப்பதற்குச் சற்று முன்பு நல்ஹர் மகாதேவ் மந்திர் என்ற நூஹ் பகுதிக்குச் சற்று தொலைவில் உள்ள கோயிலிலிருந்து பேசிய உரை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதில், “மேவாட்- நூஹ் பகுதி கிருஷ்ணர் பிறந்த இடம்” என்றும் முஸ்லீம் சமூகத்தைக் குறிவைத்து, “நாம் மேவாத்தின் (நூஹ்) நிலையை மாற்ற வேண்டும். இது பசுவைக் கொல்பவர்கள், இந்துக்களைக் கொன்றவர்கள், ரோஹிங்கிய வங்கதேச ஊடுருவல் காரர்கள், மதமாற்றங்களில் ஈடுபடுபவர்களின் பூமி அல்ல” என்று நேரடியாகவே முஸ்லிம்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
இன்னும் இவற்றைப் போன்ற முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை உமிழும் எண்ணிலடங்கா வீடியோக்கள் அங்கு வெளிவந்த வண்ணம் இருந்திருக்கின்றன. இவையே நூஹ் பகுதியில் இந்துக்கள் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்தியதற்கு முக்கிய காரணமாகும்.
கலவரத்திற்கு முன் நூஹ் பகுதியில் இரண்டு பக்கமும் பதட்டம் நிலவிய சூழலையும் பாராமல் அரசும் காவல்துறையும் 25 ஆயிரம் இந்துக்கள் செல்லும் ஊர்வலத்திற்கு அனுமதி அளித்தது ஏன்? VHP, பஜ்ரங் தள் போன்ற முக்கிய இந்துத்துவ அமைப்புகள் இந்த ஊர்வலத்தை நடத்த எவ்வித இந்து வழிபாட்டுத்தளங்களும் இல்லாத நூஹ் பகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்?
25 ஆயிரம் என்பது சிறிய தொகை அல்ல, ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் பலர் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றதற்காகக் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்; கும்பல் மோதல்களில் ஈடுபட்டவர்கள். இதில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு, இன சுத்திகரிப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது வேறு. இந்நிலையில் 25 ஆயிரம் பேரை ஊர்வலமாக நூஹ் பகுதிக்குள் அழைத்துச்சென்று அமைதியான முறையில் அப்பேரணியை அவர்கள் நடத்தி இருப்பார்களா?
இவ்வாறு தான் இந்துத்துவ பயங்கரவாதிகளால் ஆன்மீக ஊர்வலங்கள் திட்டமிட்டு கலவரமாக மாற்றப்படுகிறது. இவ்வாறே ராம நவமி, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான ஊர்வலங்களைக் கலவரங்களாக மாற்றத் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
சமூகம், மதச்சார்பின்மை பற்றிய ஆய்வு மையத்தின் (The Centre for the Study of Society and Secularism) துணை இயக்குநர் நேஹா தபாதே, வதோதராவில் நடைபெற்ற வன்முறையைக் கடந்த வருடம் நடைபெற்ற வன்முறையின் தொடர்ச்சியாகக் கருதுகிறார்: “இவ்வகைக் கலவரம் குஜராத், பிற மாநிலங்களில் கடந்த ஆண்டு ராம நவமியின் போதும் காணப்பட்டது; முஸ்லிம் சமூகத்தை வேண்டுமென்றே தூண்டுவதற்கும், நிர்வாகத்தால் முஸ்லிம்களை குற்றவியல் வழக்குகளில் சிக்க வைக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கும் இந்து பண்டிகைகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று சொல்கிறார்.
இதன் மூலம் முஸ்லிம்கள் சந்தேகத்தின் பேரில் மக்கள் குற்றவியல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு; வழக்கு விசாரிக்கப்படுவதற்கு முன்பாகவே புல்டோசர் நீதி (Bulldozer Justice) எனப்படும் புல்டோசர் கொண்டு அவர்களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகள் போன்றவை எவ்வித முன்னறிவிப்புமின்றி அரசாங்கத்தால் இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது.
இசையும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும்
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கில் மசூதிகளுக்கு முன் இசையை அதிக சத்தத்துடன் ஒலிக்கவிடுவது கடந்த 150 ஆண்டுகளாகவே இருந்துவரும் பாரம்பரியம். காலனித்துவ காலத்தில், குறிப்பாக 1860களில், வகுப்புவாத வன்முறையின் ஆதாரமாக இசையைப் பயன்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் நிறுவியுள்ளனர். இன்றைய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது அவ்வகை செயல்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்துள்ளது.
ஜூலியன் லிஞ்ச் எனும் இசைக்கலைஞர், இசையமைப்பாளர், இனவியல் வல்லுநர், ஆராய்ச்சியாளர் எனப் பல திறமைகளைக் கொண்டவர் – “இத்தகைய வன்முறைக்கு வித்தே, இந்துத் திருவிழாக்களின் போது, முஸ்லிம் வழிபாட்டுத் தளங்களுக்கு முன் இசை ஊர்வலத்தை வேண்டுமென்றே நடத்துவதன் விளைவுதான்” என்று எழுதுகிறார்.
இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான மோதலுக்கான இந்த காரணத்தைப் பற்றி மகாத்மா காந்தி பேசுகையில் “இசையின் துணை இல்லாமல் ஒரு இந்து மத விழாவை நடத்த முடியாது” என்கிறார். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இசை என்பது ஹராம் என்ற நிலைக்கு உட்பட்டது. முஸ்லிம்கள் தங்களது வழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றும் வேளையில் ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ என்றோ ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றோ ‘பாரத் மாதா கி ஜெய்’ என்றோ முழக்கங்களை இட்டு, இசை இரைச்சல்களை மசூதிக்கு முன் எழுப்பிக் கொண்டு ஊர்வலமாகச் செல்வது எவ்வகையில் நியாயமான ஒன்று எனத் தெரியவில்லை.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இசை இந்துத்துவத்தின் வலிமையைக் காட்டப் பயன்படுத்தப்படுகிறது. சமூகத்தில் “யாருக்கு ஆதிக்கம் அதிகம் உள்ளது என்றும் இது யாருடைய பிராந்தியம்” என்பதை நிறுவுவதற்குமான ஒரு கருவியாக இது இருக்கலாம் என லிஞ்ச் கருதுகிறார்.
முஸ்லீம் இலாக்காக்கள் அல்லது வட்டாரங்கள் வழியாகச் செல்லும்போது முஸ்லிம்களுக்கு அவர்கள் சொல்லும் செய்திகளை, கல்வியாளர் நஜிமா பர்வீன், தனது (Contested Homelands: Politics of Space and Identity) போட்டிக்குள்ளாகப்படும் பிறப்பிடங்கள்: இடைவெளிக்கும், அடையாளத்திற்குமான அரசியல் என்ற தனது புத்தகத்தில் ஆழமான விவரிக்கிறார்.
நூஹ் போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும் ஊர்வலங்களில் இந்துத்துவவாதிகள் இசைக்கும் இசை பக்தியின் அடையாளம் அல்ல. அங்கே தங்களின் ஊர்வலத்தை அணிவகுத்துச் செல்வதாலும்; மசூதிகளுக்கு வெளியே இசையை இசைப்பதன் வாயிலாகவும் தாங்கள்தான் இந்த நாட்டில் சக்தி வாய்ந்தவர்கள்; தங்களது ஆதிக்கம் தான் இந்த பகுதிகளில் முஸ்லிம்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்பதை உணர்த்துவதன் இவர்களது செயல்களின் நோக்கமாகும். இஸ்லாம் இசையைத் தார்மீக ரீதியில் பொருத்தமற்றதாகக் கருதுகிறது; அதன் செயல்திறனைத் தடைசெய்கிறது என்பதை முழு அறிவோடு அறிந்தே தான் இவ்வகை செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதே நோக்கமாக இருந்தது, இப்போதும் அந்த நிலை அப்படியே தான் உள்ளது.1890களில் இருந்தே இவ்வகை கலவர சம்பவங்கள் வளர்ந்து வரும் இந்துத்துவ தேசியவாதிகளின் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வரலாற்றுப் பின்னணி
1893ம் ஆண்டு பம்பாய் கலவரத்திற்கு ஒரு வருடம் கழித்து; பால கங்காதர திலகர் விநாயக சதுர்த்தியை, விநாயகர் கடவுளின் நினைவாகக் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான பக்தித் திருவிழாவிலிருந்து, ‘வலுவான அரசியல் நோக்கங்களை உள்ளடக்கிய பொது பிம்பமாக’ மாற்றினார்.
அந்த மும்பைக் கலவரம் “முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை நடத்தும் போது இந்து சடங்கு இசை இசைக்கப்பட்டதே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் தூண்டப்படக் காரணமாக அமைந்தது. இந்தச் சம்பவம் மராத்தி மொழிப் பத்திரிகையான கேசரியில் தலையங்கமாக எழுத பதிப்பகத்தின் நிறுவனர், பிராமணத் தலைவர் பால கங்காதர திலக்கை தூண்டியது” என்று லிஞ்ச் கூறுகிறார்.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள்; திலகர், பம்பாய் பிரசிடென்சியின் பிற பிராமணத் தலைவர்கள் விநாயக சதுர்த்தியின் இந்த “பிரமாண்டமான மறுதொடக்கத்தை” திட்டமிடத் தொடங்கினர்.
1894ஆம் ஆண்டில், திட்டமிட்ட படி முதன்முதலில் சாதாரண தனிப்பட்ட அனுசரிப்பாக உள்ளூர் அளவில் மட்டும் மக்கள் கூடிக் கொண்டாடி சிலையைக் கரைக்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை; மிகவும் ஆடம்பரமான பொதுவெளி ‘நிகழ்வாக’ மாற்றினர். புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டதால் அக்கொண்டாட்டங்கள் காலப்போக்கில் மிகவும் ஆடம்பரமாகிவிட்டன.
1893ஆம் ஆண்டு வரை இந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரத்துவத்துடன் பரஸ்பரம் பண்டிகைகளைக் கொண்டாடி வந்தனர். இந்துக்கள் முஹர்ரம் கொண்டாட்டங்களில் சேர்ந்து, தங்களது பங்களிப்பைச் செலுத்தினர். மேலும் அவர்கள் இசைக்கலைஞர்களாக முஸ்லிம்களுடன் இணைந்து தங்களின் சேவைகளை வழங்கினர். ஆனால் திலகர் முஹர்ரம் பண்டிகையை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
திலகர் ஏற்படுத்திய இவ்வகை திட்டங்கள் வெற்றியடைந்தன. விநாயகர் சதுர்த்தியைப் போலவே, வங்காளத்தில் துர்கா பூஜையும் முக்கியமாகச் சாதாரண பண்டிகையிலிருந்து சமூக பொதுவெளிகளில் நடத்தப்படும் பொது பூஜையாக மாற்றப்பட்டது. இவ்வாறே இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரங்கள் மீண்டும் மீண்டும் நிகழத் தொடங்கியது, மேலும் RSSஇன் தலைமையகமான நாக்பூரிலும் இந்நிகழ்வுகள் துவங்கின.
1923ஆம் ஆண்டில், அதன் இறுதி நிறுவனரான கேசவ் பலராம் ஹெட்கேவார், திருவிழாவின் முடிவில் விநாயகர் சிலையைக் கரைக்கும் கணேஷோத்சவ் ஊர்வலத்தின் போது மசூதிகளுக்கு முன்னால் இசையை இசைக்கக்கூடாது என்ற 1914 ஒப்பந்தத்தை மீறப்போவதாகப் பகிரங்கமாக அறிவித்தார். அவரைப் பொறுத்தவரை, இசையை மசூதிக்கு முன்னால் வாசிப்பது ஒரு சிறிய விஷயமல்ல, மாறாக அது ‘இந்து வலிமை’யின் வெளிப்பாடு என்று கருதினார். உள்ளூர் நிர்வாகம் ஊர்வலத்தின் போது இசைக்கப்படும் இசைக்குத் தடை விதித்தபோது, ஹெட்கேவார், உள்ளூர் இந்து தலைவர்களை அழைத்து அந்த ஆண்டு விநாயகர் சிலைகளைக் கரைப்பதையே ஒத்திவைத்தார். இப்படி மசூதிகளுக்கு முன்னால் இசை இசைக்கும் முடிவும் முயற்சியும் நிர்வாகத்தால் தடுக்கப்பட்டது பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்தது. RSS வரலாற்றில், அந்தப் போராட்டம் திண்டி சத்தியாகிரகம் என்று அழைக்கப்படுகிறது. மசூதிக்கு முன் இசைப்பது RSSஇன் முக்கிய செயல்களில் ஒன்றாகும் என்பதற்கு மேற்கூறிய அனைத்தும் உதாரணங்கள்.
காலப்போக்கில், மசூதிகளுக்கு முன் இசையமைப்பது வழக்கமாக மாறியது, 1989ஆம் ஆண்டு பாகல்பூரிலும், அதே ஆண்டு ஷீலா யாத்திரையின் போதும், அயோத்திக்கு விசேஷமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட செங்கற்கள் கொண்டு செல்லப்பட்டபோதும், வழியில் மசூதிகள் தென்பட்டால் அங்கே முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவை மிக மோசமான வகுப்புவாத கலவரங்களுக்கு வித்திட்டது. சங்பரிவார் அமைப்புகள் வகுப்புவாத வன்முறையை அதே யுக்திகளுடன் கையாண்ட நிகழ்வுகளின் பல ஆவணங்களை நம்மால் தொகுக்க முடியும்.
இப்போது நடைபெறக்கூடிய ராமநவமி, அனுமன் ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, துர்கா பூஜையின் போதும் இன்னும் ஏராளமாக ஹிந்துத்துவாதிகளால் முன்னெடுக்கப்படக்கூடிய ஊர்வலங்களின் போது நடைபெறக்கூடிய கலவரங்களானது, கிட்டத்தட்ட 150 ஆண்டுக்கால பழமையான தந்திரங்களால் தான் இன்றும் நடத்தப்படுகிறது. ஊர்வலங்கள் மூலமாக ஏற்படும் கலவரங்கள் தானாக நடப்பவையல்ல; அவை திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்படுகின்றன. இந்துத்துவாதிகள் மசூதிக்கு முன் இசையமைப்பதையோ முழக்கங்கள் இடுவதையோ தங்களது சக்தியை வெளிப்படுத்தும் நிகழ்வாகக் கருதும் வரை கலவரங்கள் நிறுத்தப்படப் போவதுமில்லை, அமைதி நிகழப்படப்போவதும் இல்லை.