நாங்குநேரியில் சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து அனைவரும் அறிந்திருப்போம். சமூக வலைதளங்களில் அதை பற்றியான கருத்துகள் அதிகம் பேசப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலர் இதைகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அறிவியலும் தொழில்நுட்பமும் கொடிகட்டி பறக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டில் வாழும் மக்கள் என்று தங்களை மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும் சாதி என்ற மிக கொடிய விஷச்செடியை அழிக்க இயலவில்லை, அது இன்றோ பெரும் மரமாக வளர்ந்து நிற்கிறது. அதில் சுவைமிக்க கனியும் இல்லை; ஓய்வெடுக்க நிழலும் இல்லை; அதற்கு மாறாக அது விஷத்தையே கனியாகவும், வெறுப்பையே நிழலாகவும் தருகிறது.
பல் இல்லா கிழவியிலிருந்து பள்ளியில் படிக்கும் மாணவன் வரை சாதியின் வேர் ஆழப்படர்ந்துள்ளது, மக்களின் சிந்தனையோடு அது கலந்து இருக்கின்றது.
எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் சக மனிதனை இழிவாக கருதும் அவல நிலை வார்த்தைகளால் சொல்ல இயலாத பெரும் மன வடுவாகவே அதை அனுபவிக்கும் மக்களின் உள்ளத்தில் பொதிந்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மூலையிலும் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட சிறுபான்மையின மக்களுக்கு நடக்கும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வடிவில் ஒவ்வொரு நாளும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.
இதில் மிக வேதனைக்குரியது “தீண்டாமை பெரும் குற்றம்” என்று கற்றுத்தரும் பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் தீண்டாமையும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் சமூகத்தில் சாதியத்தை தூக்கி பிடிப்பதாகவே இருக்கிறது. இப்படியான நிகழ்விற்கு ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல ஒரு சில நேரங்களில் அவர்களே அதற்கு காரணமாகவும் இருக்கின்றனர்.
புத்தரிலிருந்து தொடங்கி சமீபத்தில் பெரியார், அம்பேத்கர் போன்ற பல்வேறு தலைவர்கள் இந்த ஏற்றத்தாழ்வுகளை களைய பாடுபட்டனர். ஆனாலும் அது ஒழிந்ததா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.
பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, 2019ஆம் ஆண்டில் பட்டியலின மக்களுக்கு எதிராக 1144 குற்றங்கள் பதிவாகியுள்ளது. அது 2021ஆம் ஆண்டில் 1376ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் 2019ஆம் ஆண்டில் 45,876ஆக இருந்த குற்றங்களும் தாக்குதலும் 50,202ஆக 2020ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது.
நாங்குநேரியில் சக மாணவர்களால் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு மாணவன் சின்னத்துரை, அவரது சகோதரி விரைவில் குணமடைய வேண்டும். மேலும் இப்படியான சாதிய வெறிச்செயல்களும் மக்கள் சாதியை தூக்கி பிடித்து சக மனிதனை இழிவாக பார்ப்பார்பதும் தொடர்வதாலேயே அம்பேத்கர் “சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” குறிப்பிட்டார் போலும்.