“என் மைத்துனி கவுசர் பானுவுக்கு அவர்கள் செய்தது மிகவும் பயங்கரமானது, மிகவும் வெறுப்பிற்குரியது. அவர் ஒன்பது மாத கர்ப்பிணி. அவரது வயிற்றை வாளால் கிழித்து கருவை வெளியே எடுத்து நெருப்பில் வீசினார்கள். பின் அவரையும் எரித்துவிட்டனர்.”
-சாய்ரா பானு, நரோடா பாட்டியா (2002 மார்ச் 27ல் ஷா-ஏ-ஆலம் முகாமில் பதிவு செய்யப்பட்டது)
“தாக்குதலுக்கு முந்தைய நாளே என்னுடைய மகள் கவுசரை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவள் குழந்தையைப் பெற்றெடுப்பதற்குத் தயாராக இருந்தாள். ஆனால், மருத்துவர் நேரம் இருக்கிறது என்று மறுநாள் காலை மீண்டும் வரச் சொன்னார். ஆனால், அதற்குப் பிறகு விடியலே வரவில்லை. எல்லாம் முடிந்து விட்டது. சோகம் என்னவென்றால், எனது மகளை அறுத்து சிசுவை உடலிலிருந்து வெளியே எடுத்து அவளைக் கொன்றவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்.”
-காலித் நூர் சேக் (கர்ப்பிணியான தன் மகள் கவுசர் பானு (31) உட்பட ஒன்பது குடும்ப உறுப்பினர்களை குஜராத் இனப்படுகொலையில் பறிகொடுத்தவர்)
“பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, பின்பு அவர்களை எரித்தும், துண்டுதுண்டாக வெட்டியும் கொன்றனர். என் மகனை காவல்துறையினரே சுட்டுக்கொன்றனர். நாங்கள் இழப்பீடு கேட்டுச் சென்றபோது, அரசு எங்களிடம் ஆதாரத்தைக் கொண்டு வரச் சொல்கிறது. அவர்கள் என் மகனைச் சுட்டதில் என் வாழ்க்கையே பறிபோய்விட்டது. அனைத்தையும் பறித்துக்கொண்டு, தற்போது அவர்களுக்கு ஆதாரம் வேண்டுமாம், நான் எங்கிருந்து உடலை வாங்குவது? அவனது உடலைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை!”
ஆர். பீபீ (குஜராத் இனப்படுகொலையின்போது இவரின் 36 வயது மகன் காவல்துறையினரால் கொல்லப்பட்டார்)
“அவள் கர்ப்பமாக இருந்தால். அது அவளுக்கு ஒன்பதாவது மாதம். அவளது வீடு பெரும் கலவர கும்பலால் தாக்கப்பட்டது. அவளுடைய வயிற்றைக் கூர்மையான ஆயுதத்தால் கிழித்து, கருவிலிருந்த சிசுவை வெளியே எடுத்து தாயையும் சிசுவையும் எரித்துக் கொன்றனர்.” (18 வயது பெண்ணின் கணவர் ‘தி சிட்டிசன்ஸ் இனிசியடிவ்’ நிறுவனத்திடம் கூறியது.)
“அடக்கம் செய்வதற்கு முன் பெண்களின் உடல்களைக் குளிப்பாட்டினேன். சிலரின் உடல்களில் தலைகள் இல்லை. சில உடல்களில் கைகள் இல்லை. சில உடல்கள் நிலக்கரியைப் போலிருந்தது. நீங்கள் அவற்றைத் தொட்டீர்களென்றால் அவை நொறுங்கும். சில பெண்களின் உடல்கள் நடுவில் பிளக்கப்பட்டிருந்தன. நான் மார்ச் 2 அன்று 17 உடல்களைக் குளிப்பாட்டினேன். அதில் ஒன்று மட்டுமே முழுவதுமாக இருந்தது. அனைவருமே எரிக்கப்பட்டிருந்தனர். பலரின் உடல் இரண்டாகப் பிளக்கப்பட்டிருந்தன. மார்ச் மூன்றில் மேலும் பதினைந்து உடல்கள் வந்தன. அவற்றின் மீது தண்ணீரை மட்டுமே ஊற்றினேன். அவற்றுக்கு அருகில் என்னால் நிற்கக்கூட முடியவில்லை.” (குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட பெண்களின் உடலை அடக்கம் செய்வதற்கு முன் குளிப்பாட்டிய பெண் கூறியது)
“சிறுவனின் வாய்க்குள் தண்ணீருக்குப் பதிலாக பெட்ரோலை ஊற்றி, எரியும் தீக்குச்சியை அவனது வாய்க்குள் போட்டதில் அந்தச் சிறுவன் வெடித்துச் சிதறினான்.” (குடிமக்கள் தீர்ப்பாயத்தில் சிறுவன் இம்ரான் (6) கொல்லப்பட்டதை நேரில் கண்ட சாட்சி விவரித்தது.)
“என் மனைவி, மகன், மருமகள், என் சகோதரனின் மருமகள் உட்பட என் குடும்பத்தில் 19 பேர் கொல்லப்பட்டனர். எங்களுக்கு 14 உடல்கள்தாம் கிடைத்துள்ளன. இன்னும் ஐந்து பேரின் உடல்கள் கிடைக்கவில்லை.” (மன்சூரி அப்துல் பாய்)
“குஜராத் கலவரத்தில் அரசுக்கும் பங்கிருக்கிறது. நான் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு பல கடிதங்கள் அனுப்பினேன். அவருடனும் பேசினேன். ஆனால், அவர் திறம்பட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”. (கே.ஆர்.நாராயணன், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர். தி இந்து, மார்ச் 02, 2005)
“2002ம் ஆண்டு எரிக்கப்பட்ட என் தந்தையின் நூலகத்திலுள்ள புத்தகங்களில் மார்ட்டின் லூதர் கிங்கின் புத்தகமும் இடம்பெற்றிருந்தது. அப்புத்தகத்தில் அவர் கிங்கின் மேற்கோளைப் படித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது: ‘இப்பிரபஞ்சத்தின் தார்மீக (ஒழுக்க ரீதியான) வளைவு நீண்டது. ஆனால், அது நீதியை நோக்கிய பயணத்தில் வளைந்து காணப்படுகிறது.’ 2002 கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை நீதி கைவிடாது என்று நாங்கள் நம்புகிறோம்.” (இஹ்சான் ஜாஃப்ரியின் மகன் ஜுபைர் ஜாஃப்ரி)
“சமீபத்தில் குஜராத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தைப் போல, பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதை வன்முறைக் கருவியாகப் பயன்படுத்திய ஒரு கலவரத்தை நான் அறிந்ததில்லை. எல்லா இடங்களிலும் இளம் பெண்கள் மீதான கூட்டுப் பலாத்காரம் பற்றிய செய்திகள், சிறுமிகளும் பெண்களும் கூட்டு பலாத்காரம் எல்லா இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது, பெரும்பான்மையானவை அவர்களுடைய குடும்பத்தினரின் முன்னிலையிலேயே நடத்தப்பட்டுள்ளது, தொடர்ந்து உயிருடனே அவர்கள் எரித்தும் அல்லது சுத்தியலால் அடித்தும் மற்றும் ஒரு இடத்தில் ஸ்குரூ டிரைவரை வைத்து குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.” (ஹர்ஷ் மந்தர், மார்ச் 13, 2002)
இந்த இனப்படுகொலையில் குடிசையில் வசிக்கக் கூடியவர்கள் முதல் தொழிலதிபர்கள். அலுவலகங்களில் வேலை செய்யக்கூடிய தொழில் வல்லுநர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள் என அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் முஸ்லிம் காவல்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். முஸ்லீம் காவல்துறையினர் தங்களது சீருடைகளில் பெயர் குறிச்சொற்கள் (nametag) இல்லாமல் பணியில் இருக்க சிறப்பு அனுமதிக்காக கோரியிருந்தனர்.
இதில் தாய்மார்கள் குத்திக் கிழிக்கப்பட்டனர். குழந்தைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். தந்தைமார்கள் துண்டுதுண்டாக வெட்டப்பட்டனர். சுமார் 3000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஏறத்தாழ 20,000 முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 360 வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்பட்டன. சுமார் 1,50,000 மக்கள் தம் வசிப்பிடத்திலிருந்து சிதறடிக்கப்பட்டனர்.