வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப், மாலிக்காபூர், மருதநாயகம் கான் சாகிப், திப்பு சுல்தான் – அவதூறுகளும் பதில்களும், விடுதலைப் போரில் இந்தியர்கள், ஆழ்வாரின் வழியில் கம்பன், திருக்குறளில் எண்கள், பெரிய புராணத்தில் வாழ்க்கை நெறி உள்ளிட்ட 150 நூல்களை எழுதியுள்ள நம் காலத்தின் மிக முக்கியமான வரலாற்றாய்வாளர் செ.திவான். வரலாற்று நூல்கள் மட்டுமின்றி, ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு உலை, சேது சமுத்திரத் திட்டம், கச்சத்தீவு உள்ளிட்ட சமகாலப் பிரச்சினைகள் குறித்த நூல்களையும் எழுதியுள்ளார். இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட மிகப் பெரும் நூலகத்தை இவர் வீட்டிலேயே வைத்துள்ளார். வரலாற்றாய்வாளர் தொ.பரமசிவம் அவர்களால் ‘வரலாற்றியல் அறிஞர்’ என்றும், தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் அவர்களால் ‘வரலாற்றுப் பேரறிஞர்’ என்றும் புகழப்பட்ட செ.திவான் சதக்கத்துல்லா அப்பா விருது, உமறுப்புலவர் விருது, தமிழ் மாமணி விருது, பெரியார் விருது, காயிதே மில்லத் பிறை விருது. கவிக்கோ விருது, எம்.ஏ.ஜமீல் அஹ்மத் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஏராளமான வரலாற்றை எழுதியுள்ள உங்கள் வரலாற்றைச் சொல்லுங்களேன்?
நெல்லை மாவட்டம் செங்கோட்டை இரயில்வே கேட் அருகே உள்ள விஷ்வநாதபுரம் என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1.9.1954இல் பிறந்தேன். அத்தா செய்யது மசூது அம்மா காசினம்மாள். எங்கள் கிராமத்திலுள்ள எம்.எம். நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தேன். பின்னர் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். பள்ளியில் பத்தாம். வகுப்புவரை படித்தேன், 1971ஆம் ஆண்டு பாளையங் கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தொடங்கப்பட்டபோது அங்கு பியூசி படித்தேன். நான் சுமாராகப் படிக்கும் மாணவன்தான். என்னுடைய மதிப்பெண் குறைவாக இருந்ததால் ஃபோர்த் குரூப் வரலாற்றுப் பாடம் எடுத்தேன். அங்குக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அப்போது செகண்ட் கிளாஸ் எடுத்த ஒரே மாணவன் நான்தான்.
எனது அண்ணனும் அப்போது பியூசி முடித்திருந்தார். எளிய விவசாயக் குடும்பம் என்பதால் எங்கள் இருவரையும் ஒரே நேரத்தில் படிக்க வைக்க அத்தாவால் முடிய வில்லை. அதனால் படிப்பைத் தொடர் முடியாமல் இரண்டாண்டுக் காலம் சும்மா இருந்தேன். அண்ணன் பி.ஏ. படிக்கப் போய்விட்டார்.
அதன்பிறகு பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பி.ஏ. படிப்பைத் தொடர்ந்தேன். திராவிட முன்னேற்றக் கழக அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தேன். பட்டதாரியாக இருந்தால் தேர்தலில் போட்டியிடலாம் என்பதால் மீண்டும் தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ படித்தேன். பத்து ஆண்டுகளுக்கு பிறகு எம்.பில் நுழைவுத்தேர்வு எழுதித் தேர்வாகி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரெகுலரில் படித்தேன். மணியாச்சி கொலை சம்பந்தமாக ஆய்வு செய்தேன். ஆஷ் கொலை தொடர்பாக தமிழ் நாடு முழுதும் அலைந்து தகவல் சேகரித்தேன். அரசியல் ஈடுபாடு கொண்டிருந்ததால் உரிய நேரத்தில் ஆய்வைச் சமர்ப்பிக்க முடிய வில்லை. அப்படிச் சமர்ப்பித்திருந்தால் தங்கப் பதக்கம் எனக்குக் கிடைத்திருக்கும். மூன்று பாடத்திலும், ஆய்வேட்டிலும் நான் தான் அதிக மதிப்பெண் பெற்றிருந்தேன். ஆனால் தாமதமான அறிக்கையினால் அந்த வாய்ப்பை இழந்தேன்.
வரலாற்றை எப்போதிருந்து வாசிக்கத் தொடங்கினீர்கள்?
இரண்டாண்டுக் காலம் கல்வியைத் தொடரமுடியாமல் இருந்தபோது வாசிக்கத் தொடங்கினேன், செங்கோட்டை ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு நூலகம் இருக்கிறது. இப்போது அங்கே கட்டிடம் மட்டும்தான் இருக்கிறது. நூல்கள் எதுவும் இல்லை. அப்போது இரண்டாயிரம் புத்தகங்களுக்கு மேல் இருந்தது. ரயில்வே ஊழியர்களைப் பழக்கம் பிடித்து அந்த நூலகத்தில் நூல்களை எடுக்கத் தொடங்கினேன். பொதுவாக ஒருவர் ஒரு நூலை எடுத்தால் பதினைந்து நாள்களுக்குப் பிறகுதான் படித்துவிட்டுத் திரும்பக் கொடுப்பார். ஆனால் நான் காலையில் ஒரு நூலை எடுத்துவிட்டு சாயங்காலமே அந்த நூலைத் திரும்பக் கொடுத்துவிடுவேன். அங்குள்ள நூலகப் பொறுப்பாளரே என்னைக் கண்டால் செல்லமாகக் கோபித்துக் கொள்வார். இரண்டாண்டுகளில் அந்த நூலகத்திலுள்ள அனைத்து நூல்களையும் படித்து முடித்தேன். செங்கோட்டையிலிருந்து பாளையங் கோட்டை சென்றதும் என் வாழ்க்கைத் தரம் மாறியது. அப்போது திருநெல்வேலி எஸ்.பி அலுவலகத்துக்கு எதிரில் மதுரை பல்கலைக் கழகத்தின் பெரிய நூலகம் ஒன்று இருந்தது. அந்த நூலகத்துக்குத் தினசரி சாயங்காலம் போய் நூல்களை எடுத்துப் படிப்பேன்.
அப்போதே எழுதத் தொடங்கி விட்டீர்களா?
ஆமாம். வாசிக்கும்போது அதுகுறித்து உடனே வாசகர் கடிதம் எழுதிவிடுவேன். செம்மலர், நம்நாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதிக் கொண்டிருந்த நான் 1972ஆம் ஆண்டில் கட்டுரை எழுதத் தொடங்கினேன். அறமுரசு பத்திரிகையில் ‘அத்தா என்ற தமிழ்ச்சொல்’ என்ற என் முதல் கட்டுரை வெளியானது. அதன்பிறகு தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதினேன். கலைஞரின் நம் நாடு பத்திரிகையில் எனது முழுப்பக்கக் கட்டுரை அப்போது வெளியானது.
வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
அடிப்படையில் நான் ஒரு வரலாற்று மாணவன். வரலாற்றை அழிப்பதன் வாயிலாக ஒரு சமுதாயத்தின் இருப்பையே அழித்துவிடுவார்கள். எனவே வரலாற்றைக் காப்பதில் நான் பேரார்வம் காட்டினேன். மறைக்கப்பட்ட வரலாற்றைத் தேடியெடுத்து வெளிச்சப்படுத்தியிருக்கின்றேன். முஸ்லிம்களின் வரலாறு மட்டுமல்ல வ.உ.சி தொடர் பாக நான் 25 நூல்கள் எழுதியுள்ளேன். வ.உ.சி. வெளியிட்ட வெளியீடுகளை நான் வெளிக்கொணர்ந்துள்ளேன். வ.உ.சியின் அழகும் ஆரோக்கியமும் அச்சில் வராத நூல் என்று நூலகத்தில் எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் நான் அதனை வெளியிட்டு ஐந்து பதிப்புகள் வந்துவிட்டன.
வரலாற்று ஆசிரியராக அல்லாமல் வரலாற்று ஆய்வாளராக நீங்கள் இயங்கு வதன் தொடக்கப் புள்ளி எது?
நான் தொலை தூரக்கல்வி மூலம் எம்.ஏ பயின்றபோது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நேர்முக வகுப்பு நடைபெறும். அதில் ஒரு தேர்வில் பத்து கேள்விகள் இருக்கும். அதில் ஐந்திற்குப் பதிலளிக்க வேண்டும். 150க்கு எழுபத்தைந்து மதிப்பெண்கள் பெற வேண்டும். ஐந்திற்கும் விடையளித்தால் தான் தேர்வு பெறமுடியும். அப்போது பாடம் எடுக்க வந்த ஆசிரியர் ‘இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்கு என்ற கேள்வி வரும். அப்படி யாரும் பங்களிப்புச் செய்ய வில்லை. எனவே அந்தக் கேள்வியை சாய்ஸில் விட்டுவிடுங்கள்’ என்பார். இது எனக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
எங்கள் ஊரில் என் பெரியப்பா முறையில் ஒருவர் உண்டு. இங்கிருந்து சில பொருள்களை வாங்கிக் கொண்டு கேரளாவிற்கு சென்று விற்பார். அங்கிருந்து சில பொருள்களை வாங்கிக் கொண்டுவந்து இங்கு விற்பார். அவரிடம் ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும்போது விடுதலைப் போரில் அவருடைய பங்களிப்பைப் பற்றிச் சொன்னார். கள்ளுக்கடை மறியலின்போது சிறையிலடைக்கப்பட்டதாகக் கூறினார். நம் ஊரிலேயே இப்படி ஒருவர் இருக்கும். போது அந்த ஆசிரியர் சொன்ன கருத்து எவ்வளவு பிழையானது என்று உணர்ந்தேன். அப்போதுதான் Who is who Freedom Fighter என்ற புத்தகத்தைத் தேடிப் படித்தேன். மூன்று வால்யூம்களைக் கொண்ட பெரிய புத்தகம் அது. அதில் இவருடைய பெயரும் இடம் பெற்றிருந்தது. நம் வரலாற்றை நாம் எழுத வேண்டுமென்று முடிவெடுத்தேன். பின்னர் தொடர்ந்து எழுதினேன்.
1993 காலத்தில் சீதக்காதி அறக்கட்டளை “விடுதலைப் போரில் தமிழக இஸ்லாமியரின் பங்கு’ என்ற தலைப்பில் ஷேக் சதக்கத்துல்லா அப்பா நினைவு ஆய்வுப் போட்டி ஒன்றை அறிவித்தது. அந்தப் போட்டிக்காக விடுதலைப் போரில் பங்கு பெற்ற தமிழக முஸ்லிம்கள் குறித்து விரிவாக ஆய்வு. செய்து எழுதினேன். காரைக்குடியைச் சார்ந்த சபா அருணாச்சலத்திற்கும் எனக்கும் முதல் பரிசு வழங்கப்பட்டது. அந்தப் புத்தகத்தை என்னுடைய துணைவியாரிடமும், மைத்துனரிடமும் கொடுத்தேன். அவருடைய அப்பாவுடைய அப்பாவின் பெயரும் இடம் பெற்றிருந்ததைச் சுட்டிக் காட்டினார். அவரும் விடுதலைப் போரில் பங்காற்றி சிறை சென்ற விவரமே இந்த நூலைப் பார்த்துத்தான் அவர்களே தெரிந்து கொண்டார்கள். இப்படி எத்தனையோ புதையல்கள் நம்மிடம் இருக்கின்றன.
நீங்கள் அலைப்பேசி, இணையம் பயன் படுத்துவது இல்லை. நவீனங்களைப் புறக்கணித்துவிட்டு எப்படி வரலாற்றை உருவாக்க முடியும்?
ஜாலியன் வாலாபாக் குறித்து எழுதினேன். சைபுத் தீன் கிஜ்லுதான் ஹீரோ. அவரை பற்றிய தகவல்களைப் பேரப்பிள்ளைகளின் உதவியோடு இணையத்தில் தேடி அதை நெட் செண்டரில் சென்று பிரிண்ட் அவுட் எடுத்துள்ளேன். எனவே நான் நவீனங்களைப் புறக்கணிப்பவனல்ல. வரலாற்றை எழுதுவதற்கு அது போதுமானதல்ல. அதுபோல அதில் தவறான தகவல்கள் நிறைந்து கிடக்கும். 1848இல் வெளியான பூமி சாஸ்திரம்தான் தமிழில் வெளியான முதல் வரலாற்று நூல். அது இணையத்தில் 120 பக்கம்தான் உள்ளது. ஆனால் மூலநூல் 600 பக்கங்களுக்கும் மேல். இணையத்தை நம்பினால் முக்கால் வாசி வரலாற்றை இழந்துதான் நிற்போம்.
வரலாற்றுக்கான தரவுகளை எங்கிருந்து பெறுகிறீர்கள்?
ஆவணக் காப்பகத்திலிருந்து பல தகவல் களைச் சேகரிப்பேன். தொடர்ந்து நூல்களைத் தேடி வாசிப்பேன். தமிழகம் முழுவதும் பயணித்து கள ஆய்வு மேற்கொண்டுள்ளேன். பல வழிகளிலிருந்தும் நான் செய்தி களைத் திரட்டுவேன். ஆவணக் காப்பகத்தில் கடுக்கா மையினால் எழுதி வைத்திருப்பார்கள். மிகவும் பழைய செய்திகளைப் புரட்டும்போது ஏற்படும் தூசியினால் பெரும் துன்பத்திற்கும் ஆளாகியிருக்கின்றேன்.
ஆவணக் காப்பகங்களில் மட்டுமே போது மான தகவல்கள் கிடைத்துவிடுமா?
ஆவணக் காப்பகங்களில் அரிய பல தகவல்கள் கிடைக்கும். அதுவும் பிரிட்டிஷ் தரப்புச் செய்திகள்தான் இருக்கும். அது மட்டுமே வரலாற்றை எழுதப் போதுமானது அல்ல. நாட்டார் பாடல்களில் வேறு விதமாகப் பதிவு செய்யப் பட்டிருக்கும். கட்டபொம்மனை கெலெக்டர் ஜாக்ஸன் வரச் சொல்கிறான். ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் செல்கின்றார்கள். அப்போது முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சென்றார். களா என்பதை அறிய முற்பட்டேன். அதற்காகத் தனியாகத் தேடத் தொடங்கினேன். கதைப்பாடல்கள் இலக்கியங்களிலிருந்தும் சில தரவுகளைப் பெறமுடியும். தமிழ்நாடு அரசு கட்டப் பொம்மன் கதைப்பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘முஹம்மது தம்பி யூசுப்பு லெப்பையும் மார்க்கமுள்ள குப்பை ராவுத்தரும்” என்ற வரி வருகிறது. நான் உடனே கயத்தாறு கிளம்பிச் சென்றேன். அங்குக் குப்பை ராவுத்தரைப் பற்றி விசாரித்தேன். குப்பை ராவுத்தர் தெரு ஒன்று அங்கு இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புதான் பேரூராட்சி அந்தப் பெயரை மாற்றிவிட்டார்கள் என்றார்கள். கள ஆய்வு மிகவும் முக்கியம். ஆதாரப்பூர்வமான அறிக்கைகள், ஆவணக் காப்பகங்கள், நாட்டுப் புற பாடல்கள், இலக்கியங்கள் இவை அனைத்தும் இருந்தாலும் உண்மையைக் கண்டறியக் கள ஆய்வும் செய்ய வேண்டும். அங்கும் கூட கேட்பதையெல்லாம் நம்பி எழுதிவிடக் கூடாது. அதையும் ஆண்டு, வயதுடன் ஒப் பிட்டு ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும்.
கல்வெட்டுகள் வரலாற்றை அறிவதற்கு உறுதுணை புரியுமல்லவா?
ஆமாம். நான் வசிக்கும் பாளையங் கோட்டை ஜாமிஆ கல்பள்ளியில் உள்ள கல்வெட்டில் பார்ஸி எழுத்து உள்ளது. பார்ஸி தெரிந்த ஒருவர் மூலம் அந்தக் கல்வெட்டில் ஷரீஅத் கோர்ட் 1754இல் அங்கு செயல்பட்டதை அறிய முடிந்தது. பள்ளிவாசலைப் புதுப்பித்தபோது அந்தக் கல்லைப் பத்திரப்படுத்தி மீண்டும் பதித்தோம். எட்டயபுரம் சென்றபோது உமறுப்புலவருக்கு யாதவ சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர்தான் மணிமண்டபம் கட்டிய செய்தியை அங்குள்ள கல்வெட்டு எடுத்துரைக்கின்றது. இன்றும் அங்குள்ள யாதவ சமுதாயத்துப் பெண்களுக்கு உமரம்மா என்று பெயர் வைத்திருப்பதைப் பார்க்கலாம்.
உங்களைத் தேடி ஊருக்கு வந்தால் ‘பழைய புத்தகக் கடைகளில்தான் செ.திவான் இருப்பார்’ என்று அடையாளம் காட்டுகிறார்கள். பழைய புத்தகக் கடையில் அப்படி என்ன தேடி அலைகின்றீர்கள்?
நான் ஆய்வு செய்ய வரலாறு தேடி அலைந்த காலத்தில் மதுரை தெற்கு மாசி வீதியில் இரண்டு மூன்று பழைய புத்தகக்கடை இருக்கும். அதுபோல திருச்சி மலைக்கோட்டைப் பகுதியில் பழைய புத்தகக்கடை உள்ளது. அங்கும் நூல்களைத் தேடித்தேடி வாங்குவேன். சென்னை மூர் மார்க்கெட் அருகிலுள்ள புத்தகக் கடையிலும், திருவல்லிக்கேணியிலும் நூல்கள் வாங்குவேன், தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பழைய புத்தகக்கடை உள்ளதோ அங்கெல் லாம் நூல்கள் வாங்கியிருக்கின்றேன். வாங்கி அட்டைப்பெட்டியில் கட்டி ஏபிடி பார்சல் சர்வீஸில் போட்டுவிடுவேன். ஜாலியன் வாலாபாக் குறித்த மூல ஆதாரங்களை நான் வைத்துள்ளேன். 1919இல் உள்ள ஹண்டர் கமிட்டி அறிக்கை ஆவணக் காப்பகத்தில் இருக்கிறதோ இல்லையோ என்னிடம் உள்ளது. நான் பழைய புத்தகக் கடையிலிருந்துதான் அதனைக் கண்டெடுத்தேன். இது போன்ற பல புதையல்களை நான் பழைய புத்தகக் கடைகளிலிருந்துதான் பெற்றிருக்கின்றேன். பாளையங்கோட்டையிலுள்ள பழைய புத்தகக்கடை நண்பர்கள் எனது தேவை அறிந்து அவர்களே புத்தகத்தை எனக்காக எடுத்து வைத்துவிடுவார்கள்.
தவறான தகவல்கள் அடிப்படையில் நீங்களும் வரலாற்றில் தவறிழைத்திருக்கலாம் இல்லையா?
வரலாற்றை எழுதுவதில் நான் மிகவும் கவனமாக இருப்பேன். மதம், சாதி என்ற எந்தச் சார்பும் இல்லாமல் எழுதுவேன். ஆனால் பலர் வரலாற்றை அவர்களின் விருப்பத்திற்குத் தகுந்தவாறு மாற்றுவார்கள், மறைப்பார்கள். நான் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டேன். அதுபோல நான் கூடுதல் தகவல்களுக்காகக் கடுமையாக உழைப்பேன். 1857 குறித்த சாவர்க்கர் எழுதிய நூலில் மூன்று மௌலவிகள் என்று எழுதியுள்ளார். ஆனால் அந்த மூன்று பேர் யார் என்பதை நான் பெயருடன் எழுதியுள்ளேன். சிறு ஐயம் வந்தாலும் தூக்கி ஓரமாக வைத்துவிடுவேன். ஒரே நாளில் நூறு பக்கங்களும் எழுதியுள்ளேன். மூன்று மாதமாகியும் ஒரு பக்கம்கூட எழுதாத நாள்களும் உண்டு. வலுவான ஆதாரமின்றி நான் எந்தச் செய்தியையும் எழுதியதில்லை.
தொடரும்..
நன்றி – சமரசம்