நாட்டிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் குற்றம்சாட்டி, மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த உமர் காலிதை சிறையில் அடைத்து நேற்றுடன் 1000 நாட்கள் நிறைவடைந்துவிட்டன.
முஸ்லிம் சிறுபான்மையினர் மீது பாரபட்சம் காட்டும் சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தியதற்காகவே உமர் காலித், ஆளும் பாஜக அரசாங்கத்தால் குறிவைக்கப்பட்டார். கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் முழு பழியையும் முஸ்லிம் ஆர்வலர்கள், மாணவ தலைவர்களின் மீது சுமத்திய மத்திய அரசு, உமர் காலிதை UAPA என்ற பயங்கரவாதச் சட்டத்தில் கைது செய்தது.
உமர் காலிதை சிறைக்கு அனுப்ப பாஜக அரசாங்கம் செய்த அத்துமீறல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல், நம்பகத்தன்மையற்ற சாட்சிகள் போன்றவற்றை வைத்து, பொய்யான வாதங்களைப் பயன்படுத்தி, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் மூலம் அவரை திகார் சிறைக்கு அனுப்பியது.
ஜனநாயக முறையில் சிஏஏ சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியதன் விளைவாக, உமர் காலித் மீது பல குற்றச்சாட்டுகள் சோடிக்கப்பட்டு, பல வகையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
முதல் தகவல் அறிக்கை எண் 59/2020இன் கீழ், கலவரம் (IPC பிரிவு 147), கொடிய ஆயுதத்தால் கலவரம் செய்தல் (IPC பிரிவு 148), கொலை (IPC பிரிவு 302), கொலை முயற்சி (IPC பிரிவு 307), தேசத் துரோகம் (IPC பிரிவு 124 A), சமூகத்தில் பகைமையை ஊக்குவித்தல், நல்லிணக்கத்தைப் பேணுவதற்குப் பாதகமான செயல்களைச் செய்தல் (IPC பிரிவு 153 A), சட்டவிரோத நடவடிக்கைகள் (UAPA பிரிவு 13) , பயங்கரவாதச் செயல்கள் (UAPA பிரிவு 16), பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டுதல் (UAPA பிரிவு 17), சதி (UAPA பிரிவு 18) ஆகிய பிரிவுகளின் அவர் மீது வழக்குகள் பின்னப்பட்டது.
மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் உமர் காலித் மீது வழக்குப் பதிவு செய்யப்படக் காரணங்கள். அவர் ஒரு முஸ்லிம் மாணவர் என்பதும், ஜனநாயக முறைப்படி இந்துத்துவ அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதும்தான்.
2021 ஏப்ரல் 15 டெல்லி நீதிமன்றம் உமர் காலிதுக்கு ஜாமீன் வழங்கியது. இருப்பினும், உமர் காலித் மீதான கடுமையான பொய்க் குற்றச்சாட்டுகளின் விளைவாக இந்துத்துவ அரசால் உமிழப்பட்ட பாசிச விஷத்தால் சிறையிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.
தற்போது விசாரணைக்காகக் காத்திருக்கும் உமர் காலித், கடந்த 1000 நாட்களில் ஒரே ஒரு வாரத்தைத் தவிர, பெரும்பாலான நாட்களைச் சிறையில்தான் கழித்திருக்கிறார். அதுவும் அவரது சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ளவே அவருக்கு அந்த ஏழு நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை உட்படப் பல சர்வதேச அமைப்புகள் உமர் காலித், பிற முஸ்லிம் ஆர்வலர்களுக்கு எதிரான டெல்லி காவல்துறையின் விசாரணையை “போலியானது” என்றும், இது அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்கக்கூடிய மக்களை ஒடுக்குவதற்கான முயற்சி என்றும் விமர்சித்துள்ளன.
ஒரு பிஎச்டி மாணவர் தனது இளமைப் பருவத்தின் 1000 நாட்களை எவ்வித விசாரணையுமின்றி சிறையில் கழிப்பது எவ்வளவு கொடுமையானது. கலவரங்கள் ஏற்படுத்துவதும் அதன் தொடர்ச்சியாக அடக்குமுறைகளைக் கையாளுவதும் பாசிச அரசிற்கு ஒன்றும் புதிதில்லை. அதன் மூலம் அதிகம் பாதிக்கப்படுவதும், சிறைகளில் தங்கள் வாழ்க்கையைக் கழிப்பதும் முஸ்லிம் மக்களுக்கும் புதிதில்லை என்கிற அநீதியை யதார்த்த நிலையாக மாற்றியதே இந்துத்துவ பாஜகவின் மிகப்பெரிய சாதனை!?