நாட்டின் போக்கையும் அதன் தலையெழுத்தையும் தீர்மானிக்கக்கூடிய மாணவர்கள், பொருளாதாரத்திலும், அரசியலிலும், கல்வி அமைப்பை உருவாக்குவதிலும், சமூகவியலிலும், விண்ணியலிலும், தகவல் தொழில்நுட்பவியலிலும் மிகப்பெரும் வல்லுநர்களாக உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் இந்த நாட்டில் உள்ள மக்களின் சமூகப் பிரச்சனைகளையும் சமூகத் தீமைகளையும் அகற்றுவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபட்டு இந்த நாட்டை அமைதிமிக்க மற்றும் நீதிமிக்க சமூகத்தை உருவாக்குபவர்களாக மாற வேண்டும்.
இத்தகைய பொறுப்பு வாய்ந்த மாணவர் சமூகம் தற்போது போதை பொருட்களின் பிடியில் சிக்குண்டு நமது நாட்டின் போக்கை வீழ்ச்சி உர செய்து விடும் என்று என்ன தோன்றுகின்றது. குடியிருப்பு பகுதிகளிலும், பள்ளி கல்லூரிகளுக்கு அருகிலும் போதைப் பொருட்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகி இருப்பது மிகவும் மோசமான சூழல் உருவாகி இருப்பதை காட்டுகின்றது.
எங்களது பிள்ளைகள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருக்கின்றார்கள்; அவர்களை காப்பாற்றுங்கள் என்று கதறும் பெற்றோர்களின் குரல்கள் நம்மை நடுநடுங்கச் செய்கின்றன…! எங்கே நமது பிள்ளைகளும் அவர்களைப் போன்ற சூழல்களில் சிக்கி விடுவார்களோ என்ற அச்சம் எழுகின்றது.
நாட்டை மிகச்சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்றால், மாணவ இளைஞர்களின் சக்தி நாட்டின் வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட வேண்டும்; மாணவர்களை அழிப்பது நாட்டை பாழ் படுத்தி விடும் என்ற அடிப்படையில் போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதை முழுமையாக தடுத்து நிறுத்திட வேண்டும்.
மாணவர்கள் போதைக்கலாச்சாரத்தில் வீழ்ந்துவிடாமல் இருப்பதற்கான புற சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். எவர்கள் போதை பொருட்களை குடியிருப்பு பகுதியிலும், கல்வி நிறுவனங்களிலும் கொண்டுவந்து விற்பனை செய்கின்றார்களோ அவர்களையும், விற்பனையாளர்களுக்கு பின்னால் செயல்படும் அனைத்து முதலாளிகளின் மீதும் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து தண்டனை அளிக்க வேண்டும். இந்த சமூகத்திலிருந்து போதைக் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க அரசுடன் சேர்ந்து அனைத்து மக்களும் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும். போதை இல்லா சமூகத்தை நமது வருங்கால தலைமுறைக்கு நாம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
மது போதை பொருட்கள் மக்களுக்குத் தொந்தரவு தரக்கூடிய இடங்களில் அமைப்பதைக் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது. குறிப்பாக கல்வி வளாகங்களிலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மது, போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை அனுமதிக்கவே கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் நாட்டை சிறப்பான முறையில் உருவாக்க வேண்டும் எனும் சிந்தனை ஆட்சியாளர்களுக்கு இருக்குமேயானால் நாட்டின் உண்மையான வளமாக இருக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களைப் பாதிக்கும்போதே பொருட்களை நாம் வாழும் சமூகத்திலிருந்து முழுமையாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக எடுக்க வேண்டும்.
வலிமையான மாணவ இளைஞர் சமூகம் வளமான தேசத்தை உருவாக்கும்.
முனைவர். சையது அபுதாஹிர் (எழுத்தாளர்)