அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழு, பிரபல இஸ்லாமிய அறிஞர்களான அபுல் அஃலா மௌதூதி மற்றும் சையது குத்துபு ஆகியோர் எழுதிய புத்தகத்தை தனது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது.
இவர்கள் எழுதிய புத்தகங்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கல்வி ஆய்வு துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்துத்துவா ஆர்வலரும், வெறுப்புணர்வாளருமான மது கிஸ்வர் என்பவரும் இன்னும் வேறு சில இந்துத்துவா கல்வியாளர்களும் சேர்ந்து பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதிய கடிதம் தான் இந்த காரணம் என இந்தியா டுடே பத்திரிக்கை பதிவிட்டுள்ளது.
‘சமூக ஆர்வலர் மற்றும் கல்வியாளருமான மது கிஸ்வர் என்பவரும் இன்னும் சில கல்வியாளர்களும் சேர்ந்து நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதிய கடிதம் தான் இந்த முடிவிற்கு காரணம். இந்தக் கடிதத்தில் இது போன்ற இஸ்லாமிய அறிஞர்களின் புத்தகங்களை மாணவர்களுக்கு கற்பிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது, மேலும் இந்த கடிதத்தில் ஜாமியா மில்லியா மற்றும் ஜாமியா ஹம்தரது ஆகிய மத்திய பல்கலைக்கழகத்தின் பெயர்களையும் குறிப்பிட்டு, இம்மாதிரியான பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தானிய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார்கள் எனவும் சாடியிருந்தனர்.’ என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மூத்த ஆசிரியர் கூறியதாக இந்தியா டுடே பத்திரிக்கை பதிவிட்டுள்ளது.
அபுல் அஃலா மௌதூதி, பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் வாழ்ந்த ஓர் பிரபல இஸ்லாமிய அறிஞர் ஆவார். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இவர் ஜமாத்தே இஸ்லாமி என்னும் இயக்கத்தை நிறுவினார்.
சையது குத்துபு, எகிப்து நாட்டை சேர்ந்த எழுத்தாளர், இஸ்லாமிய அறிஞர் மேலும் ஒரு புரட்சியாளர். இவர் 1950கள் மற்றும் 1960களில் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் – ரிஃபாஸூதீன்