ஒவ்வொரு தலைமுறையும் நிச்சயமாக முந்தைய தலைமுறையைவிட வித்தியாசமான தன்மைகள், குணநலன்கள், பண்புகள் உடையவர்களாகத்தான் இருப்பார்கள். முந்தைய தலைமுறையுடன் மாறுபட்டு இருப்பதுதான் இயற்கையும்கூட. ஏனெனில் பூலோக ரிதியாக அனைவரும் ஒரே இடத்தில் பிறந்தாலும் கூட, ஒவ்வொரு நபரும் பிறக்கின்ற காலம் அந்த காலத்தின் இயல்பும் பழக்க வழக்கங்களும் தலைமுறைகளுக்கிடையே பெரும் வித்தியாசத்தை உருவாக்குகிறது.
அத்தகைய தலைமுறை மாற்றத்திற்கான எடுத்துக்காட்டாகத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக டி.டி.எஃப் வாசன் எனும் இளைஞரை அவரது பிறந்தநாள் அன்று காண வேண்டி கூடிய கூட்டம் நமக்கு உணர்த்துகிறது. இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று அதனைப் படம் பிடித்து youtube , instagram போன்ற இணையதள பக்கத்தில் பதிவிடும் நபர்தான் இந்த டி.டி.எஃப் வாசன்.
வெறுமனே வாகனத்தில் சென்று அதனைப் பதிவிடும் நபரை இவ்வளவு இளைஞர்கள் பின்தொடர்கிறார்கள். இவ்வளவு இளைஞர்கள் அவரைக் காண உற்சாகமாக ஒன்று கூடுகிறார்கள் என்பது சமூக தலைவர்களிடம் சமூக செயற்பாட்டாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலம் வேறு 2K Kids என அழைக்கப்படும் 1997ஆம் ஆண்டுக்கு பின்பு பிறந்த குழந்தைகள் இளைஞர்கள் வாழ்கின்ற உலகம் வேறு என்பது இந்த கூட்டத்தின் மூலமாக நமக்கு புரிய வைத்துள்ளார் வாசன் அவர்கள்.
1990 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்களை Digital Migrants (இணைய உலகிற்கு புலம் பெயர்ந்தவர்கள்) எனவும் 1997க்கு பிறகு பிறந்தவர்களை Digital Native (இணையதள உலகத்தில் பிறந்தவர்கள்) எனவும் வரலாற்று ஆசிரியர்கள் அழைக்கிறார்கள். இதற்குக் காரணம் 1997ஆம் ஆண்டுக்கு முன்பாக பிறந்தவர்கள் அனைவரும் தகவல் தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து பழகியவர்கள்.
ஆனால் இந்த 2கே கிட்ஸ் என்பவர்கள் Born with silver spoon என்று கூறுவதைப் போன்று Born with electronic instrument உலகத்தில் பிறந்தவர்கள். பிறந்த உடனேயே குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்காக செல்போனைதான் அவர்களுக்கு காட்டுகிறார்கள். தாங்கள் கற்றுக்கொள்கின்ற முதல் விஷயம் தகவல் தொலைத் தொடர்பு சாதனங்களை (Electronic Cadgets) குறித்து தான். பள்ளிவயதை அடைவதற்கு முன்பாகவே அவர்கள் செல்போன், டேப், கணினி போன்றவற்றை உபயோகிக்க பழகிக் கொள்கின்றனர். இன்னும் சொல்வதானால் பலருக்கு அவரின் பள்ளி என்பதே செல்போனாகத்தான் கொரோனா பெருந்தொற்றால் மாறிப்போனது.
இதன் விளைவாக கிரிக்கெட், கபடி, ஓடி விளையாடுதல் போன்ற விளையாட்டுகளை எல்லாம் காணாமலே வளர்கின்றனர். மாறாக பஜ்ஜி ஃப்ரீ பையர் போன்ற இணையதள விளையாட்டுக்கு அடிமையாகி வளர்கின்றனர். இத்தகைய பண்பின் காரணமாக சிறுவயதிலேயே பல்வேறு உடல், மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர் குழந்தைகள். அதன் வெளிப்பாடாகத்தான் டி.டி.எஃப் வாசன், Food Blog செய்யும் இர்ஃபான் போன்ற நபர்களை பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பின் தொடர்வதும் அதனால் அந்த நபர்கள் இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம் பெறுவதும் தற்பொழுது புதிய தொழிலாக மாறி உள்ளது.
வாசிப்பின் பக்கம் துளியும் ஆர்வம் இல்லாமல், சமூகத்தை விட்டு முழுமையாக ஒதுங்கி இணையதளத்தை மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருக்கின்ற சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டிய தேவை சமூகத் தலைவர்களுக்கு உள்ளது. இணையதளத்தை எப்படி ஆக்கப்பூர்வமான வழியில் பயன்படுத்துவது இணையதள மோசடிகளில் இருந்து எப்படி இளைய தலைமுறையை வெளிக்கொண்டு வருவது போன்ற ஒரு கலந்துரையாடல் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டியுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு வழி காட்ட வேண்டுமானால் முதலாவதாக நாம் அவர்களின் உலகத்தினை புரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு சரியான வழியை காட்ட முடியும். “ஒவ்வொரு தூதரும் அவர்கள் வாழ்ந்த காலத்தில் உள்ள பிரச்னையை தீர்த்துக் கொண்டேதான் ஏகத்துவப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்கள் இதனைத்தான் அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். தூதர்கள் அனைவரையும், அவரவரின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாய் நாம் அனுப்பி வைத்தோம் (செய்தியை) அவர்களுக்குத் தெள்ளத் தெளிவாக அவர் எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காக! (திருக்குர்ஆன் : 14:4).
அவரவரின் சமுதாய மொழி என்பது அவர்களின் கலாச்சார பண்பாட்டு விஷயங்களை உள்ளடக்கியது என்பது நமக்கெல்லாம் தெரியும். அதேபோன்று இன்றைய இளம் தலைமுறை உலகத்தினை புரிந்து கொண்டு அவர்களுக்கு வழிகாட்டி ஒரு ஆக்கபூர்வமான தலைமுறையை உருவாக்குவோம்