ஸகியா ஜாஃபரியின் மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ‘மிகவும் துரதிஷ்டவசமானது’ என்று சொல்வதற்கு கூட தகுதியற்ற ஒன்றாக உள்ளது. 2002இல் குஜராத் இனப்படுகொலையின் போது அகமதாபாத் குல்பர்க் சொசைட்டியில் சங்பரிவார் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பி இஹ்சான் ஜாஃபரி உள்பட 69 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். இப் படுகொலையில் அன்றைக்கு குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி உள்பட அறுபத்தி மூன்று பேருக்கு உள்ள தொடர்பைக் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற மனுவைதான் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக முன்பு உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு விசாரணை குழு (எஸ் ஐ டி) அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, ரவிக்குமார் ஆகிய நீதிபதிகளை கொண்ட இருக்கை தீர்ப்பளித்துள்ளது. (அந்த தீர்ப்பில் அவர்கள் யாரும் கையெழுத்து போடவில்லை என வரும் செய்தி உண்மையாக இருந்தால், அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமான முறையில் இந்த தீர்ப்பை அளித்துள்ளார்கள்). குஜராத் இனப்படுகொலையில் அரசு அலட்சியமாக இருந்ததையும் நிருவாகத் தோல்வியையும் அரசின் சதித் திட்டமாக கருதமுடியாது.
இனப்படுகொலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் சதித் திட்டத்தை குறித்து இனி எந்த விசாரணையும் தேவையில்லை. போதிய விசாரணை நடத்தி எஸ். ஐ. டி அளித்த அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என நீதிமன்றம் கூறியுள்ளது. 20 வருடங்களாக சகியா ஜாஃபரி நடத்தி வரும் சட்டப் போராட்டத்திற்கு நீதிமன்றம் இவ்வாறு முற்றுப்புள்ளி வைக்கின்ற பொழுது, நீதி அம்மணமாய் நிற்கிறது என்ற எண்ணமே எழுகிறது. “நீதிக்கான போராட்டத்தில் எனது தாயாரின் கை ஓய்ந்து விடும் அளவிற்கு மனுக்களில் கையெழுத்து போட்டுள்ளார்” என சகியா ஜாஃபரின் மகன் கூறுகிறார். மிகவும் வலிமை படைத்தவர்களுக்கு எதிராக ஒரு மூதாட்டி நடத்திய போராட்டத்தின் போது நீதித்துறையின் சட்டமுறை முறைமைகளும் நீதி உணர்வுகளும் எல்லோராலும் உற்று நோக்கப்பட்டது. ஆனால் இறுதியாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் ஊடாக இந்த நாட்டுக்கு அளித்துள்ள செய்தி நிம்மதி அளிக்கக்கூடிய ஒன்றாக இல்லை.
மிகவும் முக்கியமான ஒரு வழக்கில் நீதியை காப்பாற்றக்கூடிய விதத்தில் எஸ் ஐ டி யின் விசாரணை நடைபெறவில்லை. இதை சுட்டிக் காட்டித்தான் சகியா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். குல்பர்க் சொசைட்டி கூட்டு படுகொலையை குறித்து முதலமைச்சர் 5 மணி நேரமாக அறியாமல் இருந்தது எப்படி? நிகழ்வு நடந்த இடத்தை பார்வையிட ஐந்து நாட்கள் தாமதித்தது ஏன்? பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் தங்கியிருந்த முகாமிற்கு வருவதற்கு ஒரு மாத காலம் தாமதம் ஆனது ஏன்? கோத்ராவில் எரிக்கப்பட்ட தொடர்வண்டிப் பெட்டியை ஆய்வு செய்ய பாரன்சிக் நிபுணர்களை அழைக்க இரண்டு மாதம் தாமதமானது ஏன்? இனப்படுகொலை நடந்த நாட்களில் நடைபெற்ற தொலைபேசி அழைப்புகளை குறித்த ஆவணங்களை ஆய்வு செய்வதில் காவல்துறை அலட்சியம் காட்டியது ஏன்?… போன்ற கேள்விகளை சிறப்பு விசாரணைக்குழு எழுப்பாமல் இருந்ததை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. ஆனால் அரசின் அலட்சியமும் தோல்வியும் சதித் திட்டத்திற்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் குஜராத் இனப் படுகொலைக்குப் பின்னால் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை என்ற முடிவுக்குத் தானே வர இயலும்?
மிகவும் முக்கியமான ஆதாரங்கள் பலவற்றை SIT கண்டுகொள்ளாமல் இருந்ததையும் தொலைபேசி அழைப்புகள் உட்பட பல முக்கியமான ஆதாரங்களை கைப்பற்றாமல் இருந்ததையும் வெறுமனே அலட்சியம் என்று கருதிவிட முடியாது என்று மனுதாரர் வாதிட்டார். சாட்சிகளை குறித்த தொடர் விசாரணையும் நடைபெறவில்லை என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது. எஸ். ஐ. டியின் அறிக்கை சரியானதாகவும் முழுமையானதாகவும் இல்லை என்ற அவர்களின் வாதத்திற்கு பதில் கூறும் விதமாக, இதே எஸ் ஐ டி விசாரணை செய்த பிற வழக்குகளில் பிரச்சனை ஒன்றும் இல்லையே என நீதிமன்றம் கூறியது.
மேற்படி மனு தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து பல்வேறு கேள்விகள் உள்ள நிலையில், வழக்கில் சகியாவிற்கு உதவி செய்த டீஸ்டா செடல்வாட்டிற்கும் பிறருக்கும் எதிராக நீதிமன்றம் வெளிப்படுத்திய கருத்துக்கள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. மேல் மட்டத்தில் இருக்கும் அதிகார வர்க்கங்களின் அநீதிகளுக்கும் அநியாயங்களுக்கும் எதிராக இனி நீதிமன்றத்தை அணுக வேண்டியதில்லை என்ற செய்தியைத்தான் உச்சநீதிமன்றம் இதன் மூலம் வெளிப்படுத்தி உள்ளது. அதை உச்ச நீதிமன்றம் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் சரியே. இந்த தீர்ப்பின் மூலம் ஆளும்வர்க்கத்தின் குரலாக நீதிமன்றம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. நீதிமன்றம் தன்னை அப்படி வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் கூட.
நீதிக்காக போராடுபவர்களுக்கு துணையாக இருப்பவர்களை வேட்டையாடுவதற்கு ஆளும் வர்க்கத்திற்கு இந்தத் தீர்ப்பு வழிவகுக்கும் என நீதிமன்றம் எண்ணி இருக்காது. ஆனால், இந்த தீர்ப்பின் துணை கொண்டுதான் டீஸ்டாவையும் குஜராத்தின் முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஶ்ரீகுமாரையும் சஞ்சய் பட்டையும் குறிவைத்து ஒன்றிய ஏஜென்சிகள் வேட்டையாடுகிறது. டீஸ்டாவையும் குஜராத்தின் முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஶ்ரீகுமாரையும் குஜராத் காவல்துறையும் தீவிரவாத எதிர்ப்பு பிரிவும் கைது செய்துள்ளது. சஞ்சய் பட் ஏற்கனவே வருடக்கணக்காக சிரையில்தான் உள்ளார். சிறப்பு விசாரணைக் குழுவை புகழ்ந்து பேசிய நீதிமன்றம், அரசு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராக பேசியவர்களை சதிகாரர்கள் என குற்றம் சாட்டுகிறது. அவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் எனவும் கூறுகிறது. இந்த தீர்ப்பு உருவாக்கும் பாதகங்களை குறித்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட முற்போக்கு சக்திகளும் சட்ட நிபுணர்களும் நீதித்துறையும் விவாதிக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது.
ஆளும் அதிகார வர்க்கத்தின் ஊது ஊழல்களாக நீதிமன்றங்கள் மாறுகின்ற பொழுது, நீதிக்கான போராட்டங்கள் சதித்திட்டங்களாக பார்க்கப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை
அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்