இந்திய பாதுகாப்புத்துறையின் அக்னிபத் திட்டத்திற்கு செவ்வாய்க்கிழமையன்று கூடிய ஒன்றிய அமைச்சரவை கூட்டம் அங்கீகாரம் அளித்துள்ளது. 17.5 வயது சிறுவர் முதல் 21 வயது வரையான இளைஞர்களுக்கு நான்கு வருட கால ராணுவ சேவையை மையமாகக் கொண்டுள்ள திட்டம்தான் இது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவ்வருடம் முதல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இவ்வருடம் 46,000 பேரை இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்ய உள்ளனர். பெண்களும் இத்திட்டத்தில் சேரலாம். அக்னி வீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் அளிக்கப்படும். இதில் நன்கு பயிற்சி பெற்ற 25 சதவீத நபர்களுக்கு ராணுவத்தில் நிரந்தர வேலை அளிக்கப்படும். மீதம் உள்ள நபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். நான்கு வருட பயிற்சியின் இறுதியில் 11.71 இலட்சம் ரூபாய் அவர்களுக்கு கிடைக்கும். திருப்பி அனுப்பப்படும் மீதம் உள்ள 75% நபர்களுக்கு தொழில் செய்ய கடன் உதவி, பிற வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. (2014ல் அளித்த பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் வருடத்திற்கு இரண்டு கோடி பேர்களுக்கு வேலையை வாய்ப்புகளை ஏற்படுத்தி விட்டதால் இந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என நம்புவோமாக). இராணுவத்தை நவீனப்படுத்துவதின் ஒரு பாகமாகத்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனவும், இதன்மூலம் ராணுவம் இளைஞர்மயமாகும் எனவும் ஒன்றிய அரசுடன் தொடர்புடையவர்கள் கூறுகிறார்கள். பல்வேறு வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று இளம் வயதிலேயே ராணுவ பயிற்சி பெறுவதற்குண்டான ஆர்வத்தை இதன்மூலம் இந்தியக் குடிமக்கள் பெறுவார்கள் என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள்.
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்து வட இந்திய இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அக்னிபாத் திட்டம் தொடர்பாக பல்வேறு விவாதங்களும் எழுந்துள்ளது.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக எழுந்து கொண்டிருக்கும் விமர்சனங்கள் பல்வேறு தளத்தில் அமைந்ததாகும். முன்னாள் ராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு துறை நிபுணர்களும் இத்திட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றனர். ராணுவத்தின் தொழில்சார் அணுகுமுறையை, சிறப்புகளை சீர்குலைக்கும் ஏற்பாடுதான் இது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ராணுவ சேவை என்பது ஹாலிவுட் படங்களில் காண்பிக்கப்படுவதைப்போன்ற சாகசத்தின் செயல்கள் அல்ல. சிறப்பான முன்னேற்பாடுகளும் திட்டமிடலும் பயிற்சியும் பொறுமையும் பக்குவமும் தேவைப்படும் துறையாகும். 17.5 வயதுள்ள சிறுவர்களை வேலைக்கு எடுத்து, குறைவான காலகட்ட பயிற்சிகளை அளிப்பதன் மூலம் ராணுவத்தின் சிறப்பு கடுமையாக பாதிக்கப்படும் என அவர்கள் விமர்சிக்கின்றனர். அவர்கள் செய்யும் விமர்சனத்தின் அடிப்படை, இத்திட்டத்தின் மூலம் ராணுவத்தின் தொழில் சார் அணுகுமுறை, சிறப்புகள் பாதிக்கப்படும் என்பது மட்டுமே.
பாதுகாப்புத் துறையில் செலவுகளை குறைப்பதற்கான அரசின் குறுக்கு வழிதான் இத்திட்டம் என்ன வேறு சிலர் விமர்சிக்கின்றனர். குறிப்பிட்ட காலகட்டத்திற்கு குறைவான சம்பளத்திற்கு ஆட்களை சேர்த்து, சேவைகளை பெற்று அவர்களை சுரண்டுவதற்குண்டான வேலையைத்தான் அக்னிபத்தின் மூலம் அரசு செய்ய முனைகிறது என அவர் குற்றம் சாட்டுகின்றனர். ராணுவத்திலிருந்து திரும்பி வருகின்ற பொழுது ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து தங்கள் வேலையை முடித்துக் கொள்கிறது ஒன்றிய அரசு. ஓய்வூதியமும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு கிடைக்கக்கூடிய பிற சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்காது. ஒவ்வொரு வருடமும் ராணுவத்திற்கு இப்படிப்பட்ட ‘இடைக்கால சேவைக்காரர்களை’ வேலைக்கு எடுத்து பொருளாதார சிக்கனத்தையும் லாபத்தையும் உருவாக்குவதுதான் ஒன்றிய அரசின் திட்டம் என இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தற்போதைய நிலையில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஒன்றிய அரசு எவ்வித குறைவையும் செய்யவில்லை. ராணுவத்திற்கு ஆட்களை சேர்ப்பதற்கான பணி தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொருளாதார லாபம் அடைதல் என்ற குற்றச்சாட்டில் பெருமளவு உண்மை இல்லை என்றே தெரிகிறது.
நமது நாட்டின் சட்டப்படி 18 வயதுதான் ஒருவர் மேஜர் என்பதற்கு உண்டான அளவீடு ஆகும். 18 வயதிற்கு கீழே இருப்பவர்கள் சிறுவர்கள். அவர்களைத் திருமணம் செய்வது தவறு. அவர்களுடைய ஒப்புதலுடன் உறவு கொள்வதும் தவறு. அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும். அவர்களை வேலைக்கு வைக்கக் கூடாது. இவ்வாறான சட்டம் உள்ள ஒரு நாட்டில், நாட்டின் மிக முக்கியமான ஒரு துறைக்கு 17.5 வயதுள்ள சிறுவர்களை வேலைக்கு எடுப்பது என்பது சட்டபூர்வமான சிக்கலை உருவாக்கும். சிறுவர்களை போர்க்களங்களில் பயன்படுத்துவது தொடர்பான நிகழ்வுகள் சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. அவ்வாறான செயல்பாடுகளுக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது. இவ்வாறான காலகட்டத்தில்தான் பக்குவம் இல்லாத சிறுவர்களை பலமான ராணுவத்திற்கு பணிக்கு எடுப்பது என்பது பெரும் சிக்கலை உருவாக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாடு முழுவதும் எழுந்துள்ள கடுமையான எதிர்ப்பை தொடர்ந்து ஒன்றிய அரசு வயது வரம்பை மறுபரிசீலனை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது என இறுதியாக கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.
நாட்டை ராணுவ மயமாக்குவது என்பதுதான் பாசிசவாதிகளின் இலக்காகும். ஆர் எஸ் எஸ்சும் அந்தக் கனவை சுமந்து கொண்டுள்ள அமைப்புதான். ஆர்எஸ்எஸ் அமைப்பும் தன்னை ஒரு ராணுவ தன்மை கொண்ட அமைப்பாகவே கட்டமைத்துள்ளது. சாகாக்களின் ஊடாக அதைத்தான் அவர்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பகால இந்துத்துவ தலைவரான பாலகிருஷ்ண சதாசிவ மூஞ்சே, 1931இல் முசோலினியின் காலகட்டத்தில் இத்தாலிக்குச் சென்று இருந்தார். முசோலினியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய மூஞ்சே அங்கிருந்த முதன்மையான ராணுவ பள்ளிகளை பார்வையிட்டார். இந்தியாவிற்கு திரும்பி வந்த பிறகு நாசிக்கில் போன்சாலே ராணுவ பள்ளியை உருவாக்கியதும் அவர்தான். இந்துக்களை ராணுவ மயமாக்குவதுதான் அப்பள்ளியின் மைய நோக்கமாகும். அதாவது, சிறுவயது முதலே ராணுவ பயிற்சி என்பது இந்துத்துவ அமைப்புகளின் நீண்டகால திட்டமாகும். அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி என்பதும் அவர்கள் முன்னெடுத்துச் செல்லும் திட்டங்களில் ஒன்றாகும். அந்த இலக்கை நோக்கிய அரசு ரீதியிலான முதல் படியாகத்தான் அக்னிபத் திட்டத்தை நாம் சந்தேகப்பட வேண்டியுள்ளது.
இம்முறை 46 ஆயிரம் நபர்களை இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்ய இருப்பதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. அடுத்தடுத்த வருடங்களில் இந்த எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம். பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் கிடைக்க வேண்டுமெனில் இவ்வாறான பயிற்சி பெற வேண்டியது கட்டாயம் என்ற ஒரு நிலை வரலாம். அல்லது ராணுவச் சேவை பெறும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படலாம். கட்டாய ராணுவச் சேவை என்பதை நேரடியாக கொண்டுவராமல் மறைமுகமாக திணிக்கும் வேலையைத்தான் இதன்மூலம் ஒன்றிய அரசு செய்ய முனைகிறது. குறைந்த காலகட்ட பயிற்சிகளைப் பெறும் சிறுவர்களால் எவ்வாறு ராணுவத்தில் சேர்ந்து நாட்டை காக்க முடியும்? அடுத்த கட்ட தலைமுறை இடத்தில் தீவிர தேசிய வாதத்தையும் இந்துத்துவ சித்தாந்தங்களையும் திணித்து தங்களுடைய அரசியல் திட்டங்களுக்கான ஆயுதங்களாக அவர்களை மாற்றியமைப்பதற்கான மாபெரும் திட்டத்தின் துவக்கமாகத்தான் அக்னிபத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜனநாயக சமூகம் ஐயப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முன்னெடுக்கும் எல்லா திட்டங்களும் இந்த நாட்டை நாசத்தின் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்களாகவே அமைந்து வருவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. நாட்டை முன்னேறச் செய்யும் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதை விட நாட்டை இந்துத்துவமயமாக்கி, இந்து ராஷ்டிராவாக மாற்றியமைப்பதற்கான செயல்பாடுகளில்தான் ஒன்றிய அரசு கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. இப்போது காஷ்மீர் போன்ற இடங்களில் ராணுவத்தின் செயல்பாடு படு மோசமாக இருப்பதை பல்வேறு அறிக்கைகளும் ஊடகச் செய்திகளும் சுட்டிக்காட்டி வருகின்றன. நாட்டின் கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கு செலவழிப்பதை விட ராணுவத்திற்குத்தான் அதிக தொகையை ஒன்றிய அரசு செலவழித்து வருகிறது. அதனூடாக பெரும் ஊழல்களும் அரங்கேறி வருவதை சவப்பெட்டி ஊழலும் பாஜக முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் கையூட்டு போன்ற நிகழ்வுகளும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. வேளாண்மை திருத்த சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசு நேரிட்ட எதிர்ப்பை போன்றதோர் நிகழ்வுகள் அக்னிபத் திட்டத்திற்கு எதிராகவும் எழுந்துள்ளது.
நாட்டை ஆளும் நாசகாரக் கும்பல்தான் இந்துத்துவ சங்பரிவார் பின்னணி கொண்ட பாசிச பாஜக என்பதை நாடு உணர்ந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதைதான் அவ்வாறான எதிர்ப்புகள் அடையாளப்படுத்துகின்றன. ஜனநாயக வழிமுறைகளில் போராடுபவர்களை கலவரக்காரர்கள் என சித்தரித்து, அவர்களது வீடுகளை இடித்து தள்ளும் புல்டோசர் தீவிரவாதிகள், இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறை நிகழ்வுகளுக்கு என்ன நியாயங்களை கற்பிக்க போகிறார்கள் என்பதை நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்