முஹம்மது நபியை குறித்த நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் பெருவாரியான மாவட்டங்களில் நுபுர் சர்மாவினை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்ற போராட்டமும் அதனைத் தொடர்ந்து வன்முறையும் வெடித்ததன் விளைவு இதுவரை 109 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மொராதாபாத், ஷஹரான்பூர் மற்றும் ஃபெரோஸாபாத் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகைக்கு பிறகு இஸ்லாமியர்கள் போராட்டங்கள் நடத்தினர். ஷஹரான்பூரில் 38 நபர்களும், அம்பேத்கர் நகரில் 23 நபர்களும், பிரயாக்ரஜ் பகுதியில் 15, ஹத்ராஸில் 24, மொராதாபாத்தில் 7 நபர்களும் மற்றும் ஃபெரோஸாபாத்தில் 2 நபர்களும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் இஸ்லாமியர்களே.
லக்னோவின் தலைமை போலீஸ் அதிகாரி பிரஷாந்த் குமார் கூறுகையில், “கல்லெறிதல் நிகழ்வு இருபுறமும் சிறிது நேரத்திற்கு நடைபெற்றது, ஒரு RAF காவலாளி செங்கல் மூலமாக தாக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் ஷஹரான்பூர், ஃபெரோஷாபாத் மற்றும் மொராதாபாத் ஆகிய பகுதிகளில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மக்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், எந்தவிதமான வன்முறையும் இப்பகுதிகளில் நடைபெறவில்லை” என்றார்.
இருப்பினும், பிரக்யாராஜ் பகுதியில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடத்திய அடிதடி நிகழ்வுகளும், அதனைத் தொடர்ந்து நடந்த கல்லெறிதல் நிகழ்வுகளும், போலிஸாரின் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்களும் பிரக்யாராஜ் பகுதியை வன்முறை களமாக்கிவிட்டன.
உத்தரப்பிரதேசம் மட்டுமின்றி இந்தியாவின் பலவாரியான மாநிலங்களில் குறிப்பாக டெல்லி, ராஞ்சி மற்றும் கொல்கத்தா போன்ற பகுதிகளில் போராட்டங்கள் மிக அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான டெல்லி ஜாமா மசூதியிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழுகைக்கு பிறகு இசுலாமியர்கள் போராட்டம் நடத்தினர்.
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் ஆளும் பாஜக அரசின் செய்தி தொடர்பாளராக கலந்துக்கொண்ட நுபுர் சர்மா முஹம்மது நபி குறித்து வெறுப்பை உண்டாக்கும் விதத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதன் விளைவாகவே இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நுபுர் சர்மாவின் இத்தகைய கருத்துக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர், அதனைத் தொடர்ந்தே நாடு முழுவதும் இத்தகைய போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Source : Maktoob media
தமிழில் – ஹபீப்