இந்தியாவில் மத சுதந்திரம் மிகவும் கீழான நிலைமையில்தான் இருக்கிறது என அமெரிக்கா வெளியிட்ட வருடாந்திர அறிக்கை சுட்டிக் காட்டியது. இதை கண்டித்து 30-06-22 வெள்ளிக்கிழமை அன்று ஒன்றிய அரசு அறிக்கை வெளியிட்டது.
2021ல் இந்தியாவில் முஸ்லிம், கிருத்துவ சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக பரவலாக கொலையும் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் நடந்ததுள்ளது என்பதைத்தான் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியது. அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் உட்பட பலரும் வெறுப்புடனும் பாரபட்சத்துடனும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாத வகையில் வெளிப்படையாக பேசுவதை சுட்டிக்காட்டிய அந்த அறிக்கைக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது. பன்முகச் சமூகங்கள் வாழுமிடம் என்ற அடிப்படையில் இந்தியாவில் மத சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் மதிப்பதாகவும், இனப்பாகுபாடு விஷயதில் உங்களுடைய நாடு ஒன்றும் சிறந்தது அல்ல என்ற விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அதிகாரி கூறியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளின், பதில் குற்றச்சாட்டுகளின் சூடு ஆறுவதற்கு முன்பாகவே ஆளும்கட்சியில் உள்ள நபர்களின் மத நிந்தனை பேச்சுக்களால் சர்வதேச அளவில் பெரும் எதிர்ப்பை ஒன்றிய அரசு சந்தித்துள்ளது. வேறு வழியில்லாமல் சில செப்படி வித்தை அறிக்கைகளை வெளியிட்டு தப்பிக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஒன்றிய அரசு.
சென்ற மே மாதம் 26 அன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பாஜகவின் நுபுர் ஷர்மா, அவ்விவாதத்தில் பங்கேற்ற முஸ்லிம் பிரதிநிதியிடம் கடுமையான மொழியில் இறைத்தூதரையும் குர்ஆனையும் இஸ்லாத்தையும் விமர்சித்தார். வாராணசியில் உள்ள கியான்வாபி பள்ளியில் ஒழு செய்யும் இடத்தில் உள்ளது சிவலிங்கமா? நீரூற்றா? என்ற விவாதத்தின் போதுதான் தொடர்பே இல்லாமல் விஷக் கருத்துக்களை அவர் கூறினார். அதைத்தொடர்ந்து அதே கருத்துக்களை ட்வீட் செய்து தனது சங்பரிவார் தனத்தை வெளிக்காட்டினார் டெல்லி பாஜக ஊடகப் பிரிவு தலைவர் நவீன்குமார் ஜிண்டால். ஆனால், இந்திய முஸ்லிம்களை இழிவுபடுத்தும் நோக்கோடு நடத்தப்பட்ட மத நிந்தனை கருத்துக்கள் கைவிட்டு கடல் கடந்து போனது. சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஒமான், எகிப்து போன்ற நாடுகள் இந்தியாவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தார்கள். இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு கத்தாரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்திய தூதரை அழைத்து தங்களது எதிர்ப்பை நேரடியாக தெரிவித்தார் கத்தாரின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர். இவர் அந்நாட்டின் இளவரசியும் கூட. எகிப்திலும் சவுதியிலும் மோடி அரசுக்கு எதிரான டிவிட்டர் ஹேஷ்டாக் பரப்புரைகள் உச்சத்தை எட்டியது. இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஊடகங்களில் பதிவிட தொடங்கினர். இந்துத்துவா உடன் தொடர்புடைய பலரையும் பணிநீக்கம் செய்யவும் செய்தனர். இவ்வாறு சர்வதேச அளவில் இந்தியாவை அவமரியாதை அடையச் செய்த இனவெறுப்பு பேச்சுக்களை நிராகரித்தும் விஷப் பேச்சுக்களை பேசியவர்களை கட்சியிலிருந்து நீக்கியும் தன்னை தற்காத்துக்கொள்ள முனைகிறது ஆளும் பாசிச பாஜக கட்சி.
முஸ்லிம்களை உள்நாட்டு எதிரிகளாக, அச்சுறுத்தலாக சொல்லி அவர்களை இன அழிவு செய்வதற்கும், நாட்டிலுள்ள முஸ்லிம் அடையாளங்களை இல்லாமல் ஆக்குவதற்கும் முனைந்து செயல்பட்டு கொண்டிருக்கும் சங்பரிவாரிலிருந்தும் அவர்களது அரசியல் அமைப்பான பாஜகவிலிருந்தும் இதுபோன்ற விஷக் கருத்துக்கள் வெளியாவது புதியதொன்றுமில்லை. மதவெறியையும் வகுப்புவாதத்தையும் நாட்டில் பரப்பிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு எதிரான பொதுக் குரல்கள் முனகல் சத்தங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்துத்துவ வெறுப்பை எதிர்கொள்ள வேண்டியது அதன் இரைகளான முஸ்லிம்களின் பொறுப்பாக மாறிவிட்டது. இந்து மதத்தை தேசிய அடையாளமாகவும் கலாச்சாரமாகவும் எடுத்துக்காட்டி, தங்களுடைய சுய அரசியல் லாபங்களுக்காக இந்துத்துவ பயங்கரவாதிகள் செய்து கொண்டிருக்கும் அழிவு அரசியலுக்கு எதிராக அந்த மதத்திற்கு உள்ளேயிருந்து வலிமையான எதிர் குரல்கள் இன்றுவரை எழவில்லை. பாபரி மசூதியை சட்டவிரோதமான முறையில் இடித்துத் தள்ளி ராமர் கோவில் எழுப்பப்பட்டதற்கு எதிராகவும், முஸ்லிம், கிருத்துவ, தலித், ஆதிவாசி, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் அமைப்புச் சட்ட உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராகவும் ஒருங்கிணைந்த எதிர்ப்புக்கள் பொதுச் சமூகத்தில் உருவாகவில்லை.
அதுமட்டுமல்லாமல், இவ்வாறான சூழல்கள் உருவாகின்ற போதெல்லாம் சிறுபான்மை சமூகத்திடம் அமைப்புச் சட்டத்தின், மதச்சார்பின்மையின் பாடங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். பாபரி மசூதி இடிக்கப் படுவதற்கு முன்னால் அதற்காக வேண்டி பேசியவர்கள், கரசேவையின் மூலம் பாபரி மசூதி இடிக்கப்பட்ட பிறகு அதை அதே இடத்தில் கட்ட வேண்டும் என்று சொல்லியவர்களெல்லாம் உச்ச நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பிற்கு பிறகு வாய்மூடி மௌனிகளாக மாறிவிட்டார்கள். இனி தங்களை தடுத்து நிறுத்துவதற்கு யாரும் இல்லை என்ற தைரியத்தில் பாபர் மசூதிக்கு பிறகு காசியிலும் மதுராவில் உள்ள பள்ளிகளை இடிப்பதற்கும், இந்தியாவின் கலாச்சார அடையாளங்களான குதுப்பினாரையும் தாஜ்மஹாலையும் கர்நாடகாவில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டண மசூதியையும் கைப்பற்றுவதற்குமான திட்டங்களில் ஈடுபட்டு வருகிறது சங்பரிவார்.
முஸ்லிம் அடையாளங்கள் உள்ள பெயர்களை மாற்றி வருகிறார்கள். அவர்களது வருமான வழிமுறைகளை இல்லாமல் ஆக்குகிறார்கள். அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக கட்டமைத்து அவர்களது வாழும் இடங்களில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்குண்டான வேலைகளை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். நாட்டின் மிகப்பெரும் சிறுபான்மை சமூகத்திற்கு நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்து கொண்டிருக்கின்றார்கள். பாஜகவில் இருக்கும் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு கூட நாடாளுமன்றத்தின் வாசல் அடைக்கப்பட்டு விட்டது. முற்றிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சியாக அது மாறிவிட்டது.
இவ்வாறு முஸ்லிம்களை இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சிகளில் இந்துத்துவ வெறியர்களை கட்டுப்பாடில்லாமல் திறந்துவிட்டால் இந்துத்துவ பயங்கரவாத சக்திகளுக்கு நன்மைகள் கிடைக்கும். ஆனால், அது இந்தியா எனும் நாட்டுக்கு பெரும் இழப்பையே அளிக்கும் என்பதைத்தான் நிகழ்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டுகிறது. இந்துத்துவ பயங்கரவாத சக்திகளை தடுத்து நிறுத்தாவிட்டால் அது இந்தியா எனும் நாட்டையும் கருத்தையும் அழிக்கும் என்பதை பொது சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை உணர்ந்து இந்துத்துவ பயங்கரவாத சக்திகளுக்கு எதிரான எதிர்ப்பை ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் கட்டமைக்க வேண்டும். வலிமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
K.S அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்