ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் இந்தியா இருந்த பொழுது 1920லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட சிறைவாசிகள் அடையாள சட்டத்தை திரும்பப் பெற்று, தற்போது குற்றவியல் நடைமுறை (அடையாளம்) மசோதா, 2022 நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை துணை அமைச்சர் அஜய் மிஸ்ராவால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. முறையான காரணம் இருப்பினும் காரணம் இல்லாவிட்டாலும் கைது செய்யப்பட்ட ஒருவரது விரல் அடையாளம், கை அடையாளம், கால் அடையாளம், உயிரியல் மாதிரி உள்ளிட்டவைகளை சேகரிப்பதற்கான அதிகாரத்தை காவல்துறைக்கும் சிறை அதிகாரிகளுக்கும் அளிப்பதுதான் இந்த சட்டம். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட உடன் நடைமுறைக்கு வரும்.
நூற்றாண்டுகளுக்கு முன்பு குற்றத்தை நிரூபிக்க பழமையான முறைமைகள் மட்டுமே நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் காலாவதியாகிவிட்டது என்றும் அதிநவீன உலகில் தொழில்நுட்ப வசதி வாய்ப்புகளை பயன்படுத்தி குற்ற விசாரணையை நடத்தவும் குற்றத்தை நிரூபிக்கவும் வேகமான, அறிவியல்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுப்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம் எனவும் ஒன்றிய அரசு கூறுகிறது. இது சரியான ஒன்றாக இருக்கலாம் என்று நமக்கு தோன்றலாம். ஆனால் விசாரணை செய்வதும், ஆதாரங்களை சேகரிப்பதும் நேர்மையான, முன் தீர்மானங்கள் இல்லாத, நீதியான, பக்கச்சார்பற்ற காவல்துறையும் விசாரணை ஏஜென்சிகளும் சிறை அதிகாரிகளும் நாட்டில் இருந்தால், கைமேற்கொண்டால் மட்டுமே மேலே சொன்ன சரிகள் சரியானதாக இருக்கும்.
காவல்துறை ஏட்டோ சிறையிலுள்ள தலைமை வார்டனோ மாவட்ட நீதிபதியின் அனுமதியுடன் இவற்றை பயன்படுத்தலாம் என்று இச்சட்டம் கூறுகிறது. பணத்தாசை, அரசியல் அழுத்தங்கள் மற்றும் தனிப்பட்ட விரோதங்களின் காரணத்தால் வெறும் சந்தேகத்தின் பெயரில் நிரபராதிகளை கைது செய்து, அவர்கள் மீது தேசத்துரோக குற்றம் சுமத்தி நீண்ட நெடுங்காலமாக பிணையும் வழங்காமல் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருக்கும் நாடுதான் நமது நாடு. பத்து, பன்னிரண்டு வருடங்கள் நீண்ட விசாரணைக்குப் பிறகு, இறுதியில் அவர்கள் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு பலரும் தற்போது வெளியே வந்து கொண்டிருக்கின்றனர். வாழ்வின் இளமைக் காலத்தை சிறையில் கழித்து விட்டு, தங்களுடைய குடும்பத்தை, பொருளாதாரத்தை, கல்வியை, எதிர்காலத்தை எல்லாம் சிறையிலேயே தொலைத்துவிட்டு சிறையில் இருந்து வெளியே வருபவர்கள் மீதமுள்ள காலத்தை உலகமெனும் திறந்தவெளிச் சிறையில் வாழ்ந்து முடிக்க வேண்டிய ஒரு நிலைமைக்குதான் தள்ளப்படுகிறார்கள். அவர்களால் வேறொன்றும் செய்ய இயலாத பரிதாப நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் உயிரியல் மாதிரி முதல் அதிகாரிகளுக்கு சரி என்றும் தேவை என்றும் தோன்றுகின்ற எல்லா அடையாளங்களையும் பதிவு செய்து வைப்பது என்பது மீண்டும் மீண்டும் அவர்களை வேட்டையாடுவதற்குண்டான குறுக்குவழி என்றுதான் எல்லோரும் எண்ணுகின்றார்கள். கைது செய்யப்பட்ட நபர் குற்றப் பின்னணி இல்லாமல் இருந்தாலோ, அவர் குற்றவாளி இல்லை என்று காவல்துறையால் அல்லது நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் எனில், அவரை குறித்து பதிவு செய்யப்பட்ட எல்லா அடையாளங்களையும் அழித்து விடவேண்டும் என்ற ஒரு பிரிவு இச்சட்டத்தில் உள்ளது. ஆனால், விசாரணையும் தீர்ப்பும் நீதி, நேர்மையுடனும் முன் தீர்மானங்களும் இல்லாமலும் செயல்பட்டால் மட்டுமே இந்த அடையாளங்கள் அழிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அடையாளங்கள் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதா இல்லையா என்பதை அறிந்து கொள்வதற்கான எவ்வித அறிவியல்பூர்வமான ஏற்பாடுகளோ, அதையும் கடந்து மனிதநேயமோ இல்லாத சமகால கட்டமைப்பில் சட்டத்தின் ஒரு ஓரத்தில் சடங்கிற்காக எழுதி வைக்கப்பட்ட வார்த்தைகளால் எந்த பயனுமில்லை.
ஒரு குற்றத்தின் பெயரில் பிடிக்கப்படும் எந்த ஒரு நபரிடமும் உயிரியல் மாதிரிகள் தரவேண்டுமென மாஜிஸ்ட்ரேட் ஆணை இடலாம் என இந்தச் சட்டம் கூறுகிறது. கைது செய்யப்பட்ட நபர் அதற்கு மறுத்தால் இந்திய குற்றவியல் சட்டம் 186 ஆவது பிரிவின்படி அது தண்டனைக்குரிய செயலாகும். இவ்வாறான வாள் தலைக்கு மீது தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது யார்தான் மாஜிஸ்ட்ரேட்டின் ஆணைக்கு மறுப்பு தெரிவிப்பார்கள்?. அரசின் செயல்பாடுகளுக்கும் அநியாயமான சட்டங்களுக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக தங்கள் கருத்தை தெரிவிப்பவர்களை கைது செய்வதையும் வேட்டையாடுவதையும் தங்களுடைய வழக்கமான செயல்பாடாக மாற்றிக்கொண்ட அதிகார வர்க்கங்கள் உள்ள இக்காலகட்டத்தில் இவ்வாறான சட்டங்கள் தவறாகவே பயன்படுத்தப்படும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.
இதை புரிந்து கொண்ட காரணத்தினால்தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டம் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்ட பொழுது கடுமையாக எதிர்த்தார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 20, 21 ஆகிய பிரிவுகளுக்கு எதிரான இச்சட்டத்தை இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் இது அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் மனித உரிமை மீறல் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். காவல்துறைக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தை அளிக்கும் இச்சட்டத்தால் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அரசு வரம்பு மீறும் நிலை ஏற்படும் என்றும் காங்கிரஸ் கட்சியின் கொறடா எச்சரித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் இம்மசோதாவை கடுமையாக எதிர்த்த போதிலும் தங்களுக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி ஒன்றிய பாசிச பாஜக அரசு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் ஒன்றிய அரசு ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்துவதற்கு முனைகிறது.
இந்தியச் சிறைகளில் இருப்போரில் தலித்துகளும் முஸ்லிம்களும்தான் மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களது மக்கள் தொகை சராசரியை விட சிறையில் இருப்போரின் சராசரி மிக அதிகம். அவர்களில் பெரும்பான்மையோர் வெறும் விசாரணைக் கைதிகளாகவே சிறைகளில் நீண்ட நெடுங்காலமாக உள்ளனர். விசாரணையை விரைந்து முடிக்கவும் அவர்களுக்கு பிணை வழங்கவும் ஒன்றிய அரசும் காவல்துறையும் நீதிமன்றங்களும் தயாராக இல்லை.
மனிதநேயமும் நீதியும் நேர்மையும் கிஞ்சிற்றும் இல்லாத அரக்கர்களின் ஆட்சியில் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான, மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் இவ்வாறான கருப்பு சட்டங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கும்..
K.S அப்துர் ரஹமான் – எழுத்தாளர்