உத்திர பிரதேச தேர்தலில் பாஜகவின் மாபெரும் வெற்றி எவ்வாறு சாத்தியமானது என்ற உரையாடலே கடந்த வாரங்களை நிறைத்திருந்தது. அதில் முக்கிய பேசுபொருளாகக் காவி அரசியல் எப்படிப் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களைக் கவர்ந்தது என்பதாக இருந்தது. குறிப்பாக, இந்துத்துவமும் மக்கள் நல அரசும் இணைந்து சாதியப் பிரிவினைகளைக் கடந்து பாஜகவின் வெற்றியைச் சாத்தியமாக்கியது என்றெல்லாம் கூறப்பட்டது. ஓபிசி மற்றும் தலித்துகளின் கவர்ச்சிகரமான ஆதரவு இருந்தபோதும், பாஜகவின் வலிமையான வெற்றிக்கு அவை முக்கிய காரணமல்ல. அது பலரும் கவனிக்கத் தவறிய பாஜகவின் மரபார்ந்த வாக்கு வங்கியான உயர்சாதியினரின் ஆதரவு.
ஏனென்றால், சில புள்ளிவிவரங்கள் கூறும் ஆதரவு நிலைப்பாடுகள் சத்தமில்லாமல் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. Lokniti-CSDS நிறுவனத்தின் அரசியல் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, வழக்கம்போல் 89% பார்ப்பனர்களின் ஓட்டு பாஜக கூட்டணிக்குச் சென்றுள்ளது. ராஜ்புத், பனியாக்களின் முறையே 87% மற்றும் 83%. Axis என்ற மற்றொரு நிறுவனத்தின் கணக்கீடு சிறிதளவே வேறுபட்டுள்ளது. பாஜகவுக்கு வாக்களித்த பார்ப்பன ஆண், பெண் முறையே 68% மற்றும் 72%. ராஜ்புத்தில் 69% மற்றும் 75%. சில வித்தியாசங்களே இருக்கையில் உயர்சாதியினரின் வலுவான வாக்குவங்கி பாஜகவுக்குக் கிடைத்ததை உறுதிப்படுத்த முடிகிறது.
உத்திர பிரதேசம் போன்ற ஐந்தில் ஒருபங்கு ஆதிக்க சாதியினர் இருக்கும் பகுதிகளில் பாஜக வாங்கும் இத்தகைய வாக்கு விகிதம் அவர்களின் உறுதியான சாதகத்தைக் காட்டுகிறது. இவையெல்லாம் அந்தப் பிரிவினர் ஆதிக்கம் செலுத்தும் ஊடக பரப்புரை, அரசுத்துறை நிறுவனங்கள், கார்ப்பரேட் ஆதரவு போன்றவற்றைக் கருத்தில் கொள்ளாத ஆதரவு என உணர்க. இந்த குறிப்பிட வேண்டிய வெற்றிக்குப் பிறகு பாஜக என்ன செய்கிறது, கடந்த நாற்பதாண்டுகளில் இல்லாத அளவிற்குத் தொழிலாளர் சேமிப்புக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது, பெட்ரோல் விலையை அதிகரிக்கிறது, பங்கு வர்த்தக வருவாய்க்கான வரியை அதிகளவில் உயர்த்தப் போகிறது. இந்தியாவில் வளத்திற்கும் சாதிக்கும் நெருங்கிய உறவுண்டு. அதிகம் சொகுசு வேலைகளிலும் ( White Coller) பங்கு வர்த்தகத்திலும் ஈடுபடுபவர்களாக உயர்சாதியினர் இருக்கிறார்கள். இந்தியாவில் வாக்கு செலுத்தல் ஒரு பரிவர்த்தனையாக உள்ளது. உயர்சாதியினரின் வாக்கில் வென்றபிறகு அவர்களைப் பொருளாதார ரீதியாகக் காயப்படுத்துகிறது பாஜக. இந்த அரசியல் புதிரை எவ்வாறு புரிந்துகொள்வது?
கடந்த ஆறு ஆண்டுகளாகப் பொருளாதார அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது மத்தியத்தர வர்க்கம். அவர்கள் பெரும்பாலும் உயர்சாதியாய் இருக்கிறார்கள். இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிவிப்பின்படி கடந்த பெருந்தொற்றுக்கால இரண்டாண்டில் மட்டும் கல்வித்தகுதியுடன் கூடிய வேலைகள் 12% சரிந்துள்ளது.Pewவின் தகவலின்படி இந்த எதிர்பாராத வீழ்ச்சியுடன் மூன்று கோடி மக்கள் சார்த்திருக்கின்றன. இந்த அழிவை நோக்கி நகர்கையில் மத்தியத்தர வர்க்க நலனை பாஜக கருத்தில் கொண்டிருக்க வேண்டும். ஆனால், போட்டிப்போட்டுக்கொண்டு உயரும் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலையும் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. இதை எதிர்கொள்ளும் ஆதிக்க சாதியினரின் வாக்குவங்கி பாதிப்படையவில்லை என்பதைக் கடந்து மேலும் வலிமை பெற்றிருக்கிறது.
அவர்களின் பாஜகவிற்கான இந்த ஆதரவு ஒன்றும் புதிதல்ல. தகவல் ஊடகவியலாளர் ருக்மணி கூற்றுப்படி, இந்தியாவில் மற்ற எந்த அடையாள இயக்கங்களின் பிணைப்பைவிட பாஜகவுடனான உயர்சாதி ஆதரவே உறவிற்கான சிறந்த உதாரணமாகும்.
இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களை பாஜக அணுகும்போது மிகுந்த எச்சரிக்கையாகக் கையாளும். பெரும்பாலும் ஏழ்மை நிலையிலிருக்கும் அவர்களிடம் மக்கள் நல அரசு என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தும். அவர்கள் பாஜகவை ஆதரிப்பதற்கு பொருள் ரீதியான காரணம் இருக்கவே செய்கிறது. ஆனால், உயர்சாதியினருக்கு இப்படி ஏதும் தேவையில்லை. அவர்களை இயக்குவது கருத்தியலும் அடையாளமும் மட்டுமே. கருத்தியல் என்பது பாஜகவின் இந்து தேசியம் என்ற லட்சியமாகவும் அதில் அவர்களின் அடையாளம் தாம் ஆதிக்க சக்தியாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. அதற்காக அவர்கள் விலை கொடுக்கும் பொருளாதார நெருக்கடியெல்லாம் எதுமற்றதாக உள்ளது.
நன்றி: Scroll.in
தமிழில் – அஜ்மீ