உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்த போர் மூன்றாவது வாரமாக இன்னமும் தொடர்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட பலதரப்பு மக்களில் இந்திய மாணவர்களும் அடக்கம் என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது.
ஆம் உயர்கல்விக்காக சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் உக்ரேனில் தங்கி பயில்கின்றனர். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இந்த மக்கள் தங்கள் மருத்துவ கனவு எப்படியாவது நிறைவேறி விடாதா என்ற நம்பிக்கையில் அயலகம் தங்கி கற்கின்றனர். துரதிஷ்டவசமாக உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போரால் இவர்கள் சந்தித்த இன்னல்களையும், அரசு இயந்திரம் இதை கையாண்ட விதத்தையும் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது.
போர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே போர்மேகம் மூல்வதை அனைவராலும் உணர முடிந்தது. மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் உள்ள தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேற நிர்பந்தித்து அறிக்கைகள் விட்டனர். தலைநகர் கியிவில் உள்ள இந்தியத் தூதரகம் பிப்ரவரி 15 ஆம் நாள் அன்று மாணவர்கள் தற்காலிகமாக வெளியேறலாம் ( ‘may consider leaving temporarily’) என்ற முதல் அறிக்கையை வெளியிட்டது.
பிப்ரவரி 18ஆம் தேதி தான் இந்திய தூதரகம் கியிவ் – டெல்லி மீட்பு விமான சேவைகளை அறிவித்தது. மாணவர்களும் வெளியேறுவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். ஆனால் அதில் நிறைய சவால்கள் இருந்தன. மொத்தமாக விமான சேவைகளை நோக்கி மக்கள் விரைந்ததால் சாதாரணமாக 25 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் பயணச்சீட்டு 80 ஆயிரம் ரூபாய் வரை விலை உயர்ந்தது. இதை சமாளிக்க முடியாத மாணவர்கள் பிந்தைய தேதிகளில் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய படையினர் உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை வழியாக படையெடுத்தனர். உக்ரைன் மீதான படையெடுப்பை விளாடிமிர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் உக்றைனிய வான்பாதை அனைத்து விமானங்களுக்கும் தடை செய்யப்பட்டது. விமானம் மூலம் வெளியேறுவதற்கான கதவும் மூடப்பட்டது.
ஏமாற்றத்தோடு கியிவ் நகரில் முகாமிட்டிருந்த மாணவர்களுக்கு அடுத்த சவால்கள் வந்து சேர்ந்தது. படையெடுப்பின் ஆரம்ப நாட்களில் செல் மற்றும் ஏவுகணைகளால் நகரங்கள் தாக்கப்பட்டது. பங்கர்களிலும் அடி தளங்களிலும் போய் மாணவர்கள் பதுங்கிய நிலையில், மீட்பு நடவடிக்கைக்காண ஒரு வினோதமான வழிகாட்டல் இந்திய அதிகாரிகள் மாணவர்களுக்கு கொடுத்தனர்.
அது யாதெனில் மாணவர்கள் எப்படியாவது மேற்கே உள்ள போலந்து நாட்டு எல்லையை வந்தடைய வேண்டும். அங்கிருந்து அதிகாரிகள் தக்க விமான சேவைகளை நோக்கி அழைத்துச் செல்வர் என்பதுதான். கியிவிலிருந்து போலந்த் எல்லை சுமார் 750 கிலோ மீட்டர்கள். போர்ச் சூழலால் உக்ரேனிய குடிமக்களே லட்சக்கணக்கில் அந்நாட்டை விட்டு வெளியேறி மற்ற ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைய மேற்கு எல்லையை நோக்கி விரைந்தனர். இதனால் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருதரப்பு தாக்குதல்களில் எதிலும் சிக்கிவிடாமல் தப்பித்து, கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவையும் சமாளித்து எல்லையை இந்திய மாணவர்கள் வந்தடைய வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டனர்.
ஆபரேஷன் கங்கா (Operation Ganga) என்று பெயரிடப்பட்ட இந்த ‘மீட்புத் திட்டம்’ உண்மையில் ஒரு மீட்பு திட்டமா என கேள்வியை கேட்க வைக்கின்றது. இதன் விளைவாக இன்று வரை இரண்டு இந்திய மாணவர்கள் உக்ரைனை விட்டு வெளியேறும் முயற்சியில் பலியாகியுள்ளனர். இன்னமும் உக்ரேனில் வடக்கே உள்ள சுமி (Sumi) நகரத்தில் இன்றளவும் மாணவர்கள் சிக்கிக் கொண்டிருப்பது சமீபமாக நமக்கு கிடைத்த தகவல்.
உக்ரைனில் மாணவர்கள் இந்த அவலத்தை சந்தித்தபோது போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை கையாண்டு இருக்க வேண்டிய இந்திய பிரதமரோ உ.பி.யில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். ‘நாம் வளரும் சக்தியாக ஆகிவிட்டோம் ஆதலால் தான் மாணவர்களை மீட்க முடிந்தது’ என தம்பட்டம் அடித்தார்.
ஆளும் பாஜக அரசு இந்த மாணவர்களில் துயரங்களையும் தங்கள் விளம்பரத்திற்காக பயன்படுத்தினர். போரை நிறுத்தச் சொல்லுமாறு அனைவரும் மோடியிடம் கெஞ்சுகின்றனர் என சமூக வலைதளங்களில் பரப்பினர். மோடி புடின் இடம் பேசி ‘ஆறு மணி நேரம் போரை நிறுத்தி விட்டார்’ என வாய் கூசாமல் பொய் உரைத்தனர்.
‘இந்தியாவில் படிக்காமல் (உக்ரைன் போன்ற) சிறிய நாடுகளில் பொய் படிக்கின்றனர்’ என்று மோடி இந்த மருத்துவ மாணவர்களை கொச்சைப்படுத்தினார். அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களில் பயின்றால்தான் நாட்டிற்கு பெருமை போலும்.
அதோடு நின்றுவிடாமல் உக்ரைனனில் பயின்று திரும்பும் மருத்துவ மாணவர்களில் பெரும்பாலானோர் இங்கே வைக்கப்படும் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி அடைவதில்லை என்று மத்திய அமைச்சர் ஆதாரம் அற்ற கூற்றை பதிவு செய்கிறார். போதிய திட்டமிடல் இல்லாத மீட்பு நடவடிக்கைகளையும் தங்கள் இயலாமையையும் மறைக்க அந்த மாணவர்கள் பலி ஆக்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட மாணவர்களை விமானத்திலேயே வைத்து ‘மோடி வாழ்க’ என்று கோஷம் போடச் சொன்னதையும், அதை விமானப் படை அதிகாரிகளும் வேடிக்கை பார்த்ததையும் காணமுடிந்தது. இறந்த மாணவனின் உடலை மீட்டு கொண்டு வருவதை பற்றி கேட்கப்பட்டபோது ‘பிணம் விமானத்தில் அதிக இடம் பிடிக்கும்’ என்கிறார் கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. மாணவர்கள்/குடிமக்கள் நலன்களில் அக்கறையின்மையும், எல்லா சூழலிலும் விளம்பரம் தேடும் மனநிலையையும் தான் இந்த அரசிடம் காணமுடிந்தது.
‘அவ்வளவு செலவு செய்து வெளிநாடு சென்று படிப்பவர்கள் ஏன் தங்கள் சொந்த செலவில் பயணித்து தாயகம் திரும்பக் கூடாது?’ என்று வலதுசாரிகள் கேட்பதையும் காணமுடிந்தது. இத்தகைய சூழ்நிலையில் மாணவர்களைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தாமல் அவர்களுக்கான மருத்துவம் இருக்கைகளை ஏன் நம் நாட்டிலேயே உருவாக்க முடியவில்லை என்பதை அவர்கள் சிந்திக்க தவறுகிறார்கள். மோடியின் 8 ஆண்டு கால ஆட்சியில் எத்தனை மருத்துவக் கல்லூரிகளை நிறுவி எத்தனை மருத்துவ இருக்கைகளை புதிதாக உருவாக்கினார் என்று அவர்கள் கூற முடியுமா? மாநிலங்கள் உருவாக்கிய காலியிடங்களை நீட் தேர்வு மூலம் அபகரிக்க மட்டுமே தெரிந்த இவர்களிடம் இதைக் கேட்பது வீணானது தான்.
இந்திய மாணவர்கள் சந்தித்த இன்னல்களில் இறுதியாக ஒன்றை நினைவு கூறியே ஆக வேண்டும். போலந்து எல்லை வரை அவர்கள் மேற்கொண்ட பயணத்திலும் எல்லையிலும் நிறத்தாலும் இனத்தாலும் பாகுபாட்டோடு நடத்தப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
எல்லையில் இந்திய மற்றும் ஆப்பிரிக்க மாணவர்களுக்கு ரயிலில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்திய மாணவர்களை எல்லையை கடக்க விடாமல் தடுத்து உக்றைனிய அதிகாரிகள் லத்தியால் தாக்கினர்.
முற்போக்கையும் தாராள வாதத்தையும் தூக்கி புடிப்பவர்களாக தங்களை அடையாளப்படுத்தும் ஐரோப்பியர்கள், தங்கள் மத்தியில் பதிந்து கிடக்கும் இனவெறியை பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.
அசாதாரண சூழல்கள் தான் ஒரு மனிதனின் உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்தும் என்பார்கள். இந்த உக்ரைன்-ரஷ்யா போர் மூலம் பல முகமூடிகள் அம்பலப் படுத்தப்பட்டன என்றுதான் கூறவேண்டும்
சஃஆன் – எழுத்தாளர்