உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி நேற்று உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.
“நேற்று ரஷ்ய அதிபரிடம் தொலைபேசியில் பேசினேன். மௌனம்தான் பதிலாக இருந்தது. அதனால்தான் நான் ரஷ்ய மக்களிடம் உரையாற்றுகிறேன்.
நாம் 2,000 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இரு அண்டை நாடுகள். அதன் எல்லையில் இரண்டு லட்சம் ராணுவ வீரர்களும், ஆயிரம் கவச வாகனங்களும் குவிக்கப்பட்டுள்ளன. உங்கள் ஆட்சியாளரை வேறொரு சுதந்திர இறையாண்மை கொண்ட நாட்டிற்குள் செல்ல அனுமதித்துள்ளீர்கள். இது ஒரு பெரிய போரின் தொடக்கமாக இருக்கும்.
இந்தப் போருக்கு எதுவேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். தூண்டிவிடப்படும் ஒரு தீப்பொறி, அது எல்லாவற்றையும் எரித்து சாம்பலாக்கும். அந்த நெருப்பு உக்ரேனிய மக்களுக்கு சுதந்திரத்தை அளிக்கும் என்று உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம். உக்ரேனிய மக்கள் இப்போதும் சுதந்திரமாகவே உள்ளனர்.
நாங்கள் நாஜிகள் என்று உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம். நாஜிகளுக்கு எதிராக எண்பது இலட்சம் உயிர்களை தியாகம் செய்த ஒரு நாடு எப்படி நாஜிகளை ஆதரிக்க முடியும்? நான் எப்படி நாஜி ஆக முடியும்? நாஜிகளுக்கு எதிரான போரின் போது எனது தாத்தா சோவியத் ராணுவத்தில் இருந்தார். அவர் இறக்கின்ற போது சுதந்திர உக்ரைனில் கர்னலாக இருந்தார் .
போர் என்பது வலியும், இரத்தமும், மண்ணும், தூசியும்தான். இது பல்லாயிரக்கணக்கானவர்களின் மரணமாகும். உக்ரைன் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தல் என்று உங்களிடத்தில் கூறப்பட்டு இருக்கலாம். ஒருபோதும் இல்லை. இப்போது இல்லை, எப்போதும் இருக்காது.
போரை ஒழிப்பதுதான் எல்லாவற்றுக்கும் உத்தரவாதம். போர் நடந்தால் யாருடைய பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? மக்கள். இதை யார் மறுப்பது. மக்கள்தான். யாரால் தடுக்க முடியும்? மக்களால் மட்டுமே. அந்த மக்கள் நீங்கள்தான். உங்களால் முடியும் என்று நான் நம்புகிறேன்.
இந்த அறிக்கை ரஷ்யாவில் தொலைக்காட்சியில் காட்டப்படாது என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அதைக் கேட்க வேண்டும். உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். தாமதமாகும் முன் இதைத் நீங்கள் தடுத்தே ஆக வேண்டும்.
அவர் எங்களுடன் சமாதானப் பேச்சுக்கு உட்கார மாட்டார். ரஷ்ய மக்கள் போரை விரும்புகிறார்களா? நான் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். ரஷ்யாவின் மக்கள்…. ”
தமிழில் – அப்துர் ரஹ்மான்