“எங்க கிடக்குற கழிசடையெல்லாம் ஏன்டா இங்க வந்து என் உசுர வாங்குறீங்க..?” என்கிற ரீதியில் ஒரு தலித் மாணவன் வகுப்பறையில் சந்திக்கும் அவமானத்தை ஒருநாளும் ஒரு உயர்சாதி மாணவன் எதிர்கொள்ளும் வாய்ப்பில்லை. அவனை எந்த ஆசிரியரும் நீயெல்லாம் மாடு மேய்க்கத் தான் லாயக்கு என்று தப்பித் தவறி கூட கேவலமாகப் பேசப் போவதில்லை. ஒருவேளை அவன் ஏதாவது ஒரு பாடத்தில் சோடை போயிருந்தால் கூட “ஏன்டா உனக்கென்னடா ஆச்சு.. கண்ட கண்ட கழுதைங்க கூட சேர்ந்து உருப்படாம போயிடாதேடா” என அதிகபட்சமாக சமுதாயத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்ட மாணவனை ஒப்பிட்டுத்தான் கண்டிக்கப்பார்கள்.. பக்கத்தில் இருக்கும் “குப்பத்து பொறுக்கிப் பசங்க” பெண்களை வன்கேலி செய்து வம்பிழுப்பதாகத்தான் ஷங்கரால் வசனம் எழுத முடியும். அதேபோல் கிரிக்கெட்டின் நேர்முக வர்ணனையில் மெத்தப் படித்த மேதாவியான டீன் ஜோன்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ஆட்டக்காரர் ஹாஷிம் ஆம்லாவை “தீவிரவாதி” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு நடையைக் கட்ட முடியும். இதற்கு ஆம்லாவின் தாடியைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரிந்திருக்கத் தேவையில்லை. “என்ன பாய்… மடி கனமா இருக்கு? குண்டு கிண்டு ஏதும் வச்சுருக்கீங்களா?” என்று கிண்டலாக சீண்டிப்பார்க்கும் உரிமை இத்தேசத்தின் பெருஞ்சமூகத்திற்கு வழங்கப்பட்டு விட்டதாக பொதுபுத்தி நினைக்கிறது. காவல்துறை கூட மீனவர் குடியிருப்பான நடுகுப்பத்தில் நுழைந்து தான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியும். ஐஸ்ஹவுஸ் பகுதியில் வாகனங்களைக் கொளுத்தினால் தான் பதட்டமான சூழலை உருவாக்க முடியும். பக்கத்தில் இருக்கும் அக்ரஹாரத்தில் தகராறு என்றால் யாரும் நம்பமாட்டார்கள். இந்த மாறா வார்ப்புருவின் (Stereotype) படியே இந்தியாவின் பொது மனச்சான்று தாராளவாத வசவாளர்கள் பலர் சுகமாக வாழவும், நிந்தனைக்கும், இழிவுக்கும் நேர்ந்து விடப்பட்ட மனிதர்கள் வாடி வதங்கவும் உண்டான ஏற்பை வழங்கிக் கொண்டிருக்கிறது.
இதற்கு மத்தியில் தான் கட்டற்ற கருத்து சுதந்திரம் குறித்து இங்கே மல்லு கட்டுகிறார்கள். கட்டற்ற கருத்து சுதந்திரம் என்று சொல்லியே தங்களுக்கு சாதகமான சூழலை மட்டும் உருவாக்கி உரிமை மறுக்கப்பட்ட மனிதர்களை மேலும் ஒடுக்குகிறார்கள். இந்த அநியாயத்தை சரிகாண “கருத்து சுதந்திரம் என்பதில் இழிவுபடுத்தும் – அவமதிக்கும் கருத்துக்களுக்கான உரிமையும் இருக்கிறது” எனும் சல்மான் ரஷ்டியின் மேற்கோளையும் சுட்டிக் காட்டுகிறார்கள். உலகில் எல்லோரும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். இனவெறியில் ஊறித்திளைத்த ஹிட்லர் கருத்துச் சொல்லியிருக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் நிறவாத பிரிட்டோரியா ஆட்சியாளர்கள் கருப்பின மக்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கியிருக்கிறார்கள். அவற்றையெல்லாம் மேற்கோள்களாகக் காட்டி கருத்து சுதந்திரத்துக்கு வாதிட முடியுமா? அப்படி வாதிட முடியும் என்று கருதுபவர் எவராக இருந்தாலும் அவர் ஒடுக்கப்பட்ட இனத்தை பதமாக கைவிடுகிறார். ருஷ்டி ஒரு வன்ம வியாபாரி. வெறுப்புவாத வன்ம வியாபாரிகள் தங்கள் ஆதாயத்திற்காக எதையும் கூவி விற்பார்கள். வணிக விளம்பரத்தில் கூட தன் பொருளை விற்க பொய்யான தகவலைத் தந்து ஏமாற்றி மோசடி செய்வது தண்டனைக்குரிய குற்றம் எனும்போது, ஊனும் உதிரமும் உணர்வும் கொண்ட ஒரு மனிதனை என் இஷ்டத்துக்கு அவமானப்படுத்தி ஆட்டம் போடுவேன் என்பதில் என்ன தார்மீக நியாயம் இருக்க முடியும்? உனக்கு பிடிக்கவில்லை என்றால் பொத்திகிட்டு போ என்பதை எப்படி நாகரீக சமூகத்தின் வளர்ச்சியாகக் கொள்ள முடியும்? அதிகாரக் கூம்பின் அடிமட்டத்தில் உழலும் ஒரு சாராரின் கௌரவமான வாழ்க்கையை உத்திரவாதப் படுத்துவது அரசின் அடிப்படை கடமையல்லவா? ஆனால் இங்கே அரசின் நிறுவனங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் விளிம்பு நிலை மனிதர்களைக் கருத்தியல் போர்வைக்குள் தள்ளி வதைக்கின்றன. தனது ஏவலாளிகளுக்கு எல்லா வாய்ப்பும் வசதியும் செய்து தருகின்றன. இதற்காகவா இத்தனை சனநாயக ஒப்பனைகள்.. பேச்சுரிமை ஒப்பாரிகள். தீயவை என்றாவது நன்மையைக் கொண்டுவர இயலுமா? அந்த தீமைகளை களைவதுதானே அரசாங்கத்தின் வேலை. ஆனால் கருத்துரிமை முகமூடியோடு தனக்கு அநுகூலமான வெறுப்பையும் வன்மத்தையும் காட்சிப்படுத்த அரசாங்கமும் அதன் பல்வேறு அமைவனங்களும் வித்தை காட்டுகின்றன. அதையும் விசிலடித்து வரவேற்று கருத்து சுதந்திர கம்பு சுற்றுகிறார்கள் தாராளவாத போராளிகள். இதன் விளைவுகள் என்ன?
தெலைக்காட்சி விவாதம் என்கிற பெயரால் எந்த தர்க்க நியாயமுமின்றி வாயடித்தே பலரை வெறுப்பேற்றிக் கொண்டிருந்த வலதுசாரி இந்துத்துவர்களை வெற்று ஆரவாரத்திற்காகவும் பரபரப்பிற்காகவும் தொடர்ந்து அனுமதிக்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். அடிப்படை நெறிகளைக் காற்றில் பறக்கவிட்டு வெறுமனே வேடிக்கைப் பார்த்து ரசிக்கின்றனர் நெறியாளர்கள் எனும் ஒரு கூட்டத்தார். இப்படி வெறுப்பை மட்டும் மூலதனமாக்கி தங்கள் காரியத்தைக் கச்சிதமாக நடத்துகிறார்களே, இதை தடுப்பது உங்களின் தார்மீக கடமையல்லவா என்று கேட்டால், ‘அவன் ஒரு மாதிரியான ஆளு.. என்ன வேணும்னாலும் பேசுவான்.. நம்மளுக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல.. நாம தான் கண்ணியமா நடந்துக்கணும்‘ ங்கிற ஆயத்த வசனத்தை நடுநிலை ஆசாமிகளை விட்டு சொல்ல வைத்து, ரொம்ப நாளாக இந்த கதாகாலட்சேபத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்குமல்லவா? அந்த கட்டத்தை எட்டிவிட்ட ஒரு நல்ல நாளில் நடந்ததை நாம் அனைவரும் பார்த்தோம். “உன் அறிவுரை ஈர வெங்காயத்தை நீயே வச்சிக்க.. இங்கிட்டு உன் ஆட்டத்தைப் போட்டே, ஒட்ட நறுக்கிடுவேன்”னு பேராசிரியர் சுந்தரவள்ளி சொன்னதுதான் தாமதம்..! இவ்வளவு நாட்களாக ஒரு தரப்புக்கு மட்டும் அறிவுரை சொல்லியே கண்ணியத்தைக் காப்பாற்றி விடலாம் என்று தெம்பாக இருந்த நடுநிலை நாரதர்கள் கிறுகிறுத்து போய்விட்டார்கள். அவர்கள் படம் ஓட்டிக்கொண்டு இருந்த திரையையே கிழிச்சுக் கந்தரலங்கோலம் ஆக்கிவிட்டார் தோழர்.
ரொம்ப காலமாக இழிவு, வெறுப்பு, வன்மம், பொய் என்ற எதையுமே கண்டுகொள்ளாமல் விலகி நின்று வேடிக்கை பார்த்து பழகிவிட்டதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டாலே சிலருக்குக் காட்டுமிராண்டித்தனமாக படுகிறது – நாகரீக சமூகம் எந்த கருத்தையும் தடை செய்யக் கூடாது என்று பேசுகிறோம். ஆனால் அது யாருடைய இழப்பில் என்பதை வசதியாக மறந்துவிடுிறோம். இந்த வெறிப் பிரச்சாரத்தின் காரணமாக மறுபுறம் பெருக்கெடுத்து ஓடும் இரத்த வெள்ளத்தை எல்லோரும் எதிர்வினை என்று கடந்து செல்வது குறித்து யாரும் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. பாசிசத்தின் வழக்கமான செயல்முறையே இதுதான் என்ற ஒற்றை அனுதாபத்தோடு கடந்துவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா? இதற்கெல்லாம் மாற்று எந்த புறத்தில் இருந்து வரப்போகிறது? கட்டற்ற கருத்து சுதந்திரத்திற்கு உதாரணமாக காட்டப்படும் ஐரோப்பிய நாடுகளில் கூட வன்மத்தைக் கக்கிவிட்டு “சும்மா பேசிட்டு இருந்தோம் மாமா”ன்னு போய் விட முடியாது. உதாரணத்திற்கு பிரான்ஸில் இனவாத, மதவாத, நிறவெறி பேச்சுக்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு கடுந்தண்டனைக் குட்படுத்தப்படுகின்றன. பெண்ணை இழிவுபடுத்தும் தகாத வார்த்தைகளை குடும்ப சூழலில் பிரயோகித்தாலும் 10 வருட சிறை தண்டனையும் 150,000 யுரோ அபராதமும் விதிக்கப் படுகின்றன. இந்தியாவில் அமில வார்த்தைகள், வாயைவிட்டுத் தெறிக்கும் தோட்டாக்கள் அனைத்தையும் சகித்துக் கொள்கிறோம். அதன் தொடர்ச்சியாக அடித்தே கொன்றுபோடும் lynchingஐயும் சகிக்கிறோம்.. கருவறை கூட்டு வன்புணர்வையும் சகிக்கிறோம்.. திட்டமிட்ட கும்பல் வன்முறையையும் கொலை பாதகங்களையும் சகித்துக் கொள்கிறோம்.. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கேள்விக் கேட்பவர்களை அர்பன் நக்சலாக்கி உள்ளே தள்ளுவதையும் சகித்துக் கொள்கிறோம்.
வாழ்க சகிப்புத்தன்மை.. இங்கே எல்லாமே இப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். வெறுப்பைக் கக்குபவனைப் பிடித்து உள்ளே தள்ளினாலும் கருத்துரிமைக்கு ஆபத்தாகி விடுமே. அதனாலென்ன சகித்துக் கொண்டால் போச்சு. இந்த சகிப்புத்தன்மையின் மீது நம்பிக்கை வைத்துத் தான் கபில் மிஸ்ராக்கள் மூன்று நாள் அவகாசம் எடுத்துக் கொண்டு வேட்டைநாய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இப்படியெல்லாம் நீங்கள் கருத்துரிமைக்கு நிர்வாண ஆதரவை வழங்கினாலும் தமது தரப்பை கேள்வி கேட்கும் – விமர்சிக்கும் உரிமையை அரசும் ஆதிக்க வர்க்கமும் தங்கத்தட்டில் கொண்டு வந்து தந்துவிடுகிறதா? கர்நாடகா பள்ளி ஒன்றில் குடியுரிமை சட்டத்தை விமர்சித்து நடத்தப்பட்ட ஒரு நாடகத்தில் மோடி நையாண்டி செய்யப்பட்டார் என்ற காரணத்திற்காக ஆசிரியரும் பெற்றோர்களும் தேச துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகிறார்கள். காவல்துறையினர் பள்ளி குழந்தைகளை விசாரிக்க முழு சீருடையில் புடைசூழ ஆயுதமேந்தி சென்ற மிரட்டல் பாணி அணுகுமுறை நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்குள்ளானது. ஆனால் தாங்கள் வரம்பு மீறியதாக நீதிபதியின் முன் ஒப்புக்கொண்ட அந்த காவல்துறையினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தங்களுக்கு எதிரானது என்றால் நையாண்டியை அவதூறாகவும் தோதானது என்றால் அப்பட்டமான அவதூறை கருத்தாகவும் மாற்றும் அளவிற்குத் தான் நமது அடிப்படை சுதந்திரம் நொண்டியடிக்கிறது.
இந்தியாவில் தொடர்ந்து நடக்கும் வெறுப்பு வியாபாரத்தின் ஊடாக, மத, சாதிய வன்மத்தைக் கட்டவிழ்த்து இரத்தத்தை ஓட்டும் கொடூரத்தை, (கொரானா முதல் அலையின் போது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஒரு திட்டமிட்ட வன்மப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து உபியில் ஒரு சுகாதார பணியாளருக்கு பலவந்தமாக கிருமிநாசினியைப் புகட்டி சாகடித்தார்கள்) அதன் பலன்களை நேர்த்தியாக அறுவடை செய்யும் அரசியல் செப்படி வித்தையை எதிர்த்து, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை கருத்துரிமைக்கு எதிரான கொடுங்கோன்மையாக சித்தரிப்பது யாருக்கான அரசியல்? அவல கருத்துகளைப் பரப்பவும் ஒருவருக்கு சுதந்திரம் உண்டு என்பதை விட அதிகமான பொறுப்பும் கடமையும் அவற்றைத் தடுக்கும் அரசுக்கும் சனநாயக குடிமகனுக்கும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டாமா? அதிலும் அந்த வன்ம வார்த்தைகள் ஒரு பிரிவினரின் வாழ்க்கையை நிர்மூலமாக்கும் என்ற நிலையிலும் அரசு வாளாவிருந்தால் அது நியாயமல்ல. அது மக்கள் தம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ளவும், கண்காணிக்கவும் – தம்மில் எளியவர்களும் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை பெறுவதையும் உத்திரவாதப்படுத்த தோற்றுவிக்கப்பட்ட அரசமைப்பின் நோக்கத்தையே சிதைத்துவிடும். பொய்யைப் பரப்பும் கோயபல்ஸ் வேலையை தடுப்பது சனநாயக அரசின் குறைந்தபட்ச அடிப்படை கடமையும் பண்பும் ஆகும். சேற்றை வாரி இறைப்பவனை வேடிக்கை பார்ப்பது நவீன சிந்தனையல்ல.. சொல்லப்போனால் அது சிந்தனையே அல்ல. இவை கருத்தியல் தீவிரவாதங்கள்.. தீவிர கருத்துகள் தான் நிறுவனப்படுத்தப்பட்ட குற்றச் செயல்களை ஊக்குவிக்கின்றன. அத்தகைய வெறுப்பும் வன்மமும் கருத்துரிமை போர்வையில் பொதுவெளியில் கூட்டு மனச்சான்றாக அரங்கேறி வெகுமக்கள் மௌனத்திற்கு நியாயம் கற்பிக்கின்றன. சமூக ஊடகங்களில் அவலக் கருத்துகளை வெளியிட்ட மதனுக்கு ஆதரவாக கருத்துரிமையைச் சுட்டிக்காட்டி வாதாடிய வழக்கறிஞரிடம் ‘அவர் பேச்சைக் காது கொடுத்து கேட்க முடியவில்லை.. கேட்டுவிட்டு வந்து வாதாடுங்கள்’ என்று சொன்னார் வழக்கை விசாரித்த நீதிபதி. இந்த பார்வை பொது நியாயமாக வேண்டும். துரதிர்ஷ்டவசமாக நியாய உணர்வைப் புதுப்பித்துக் கொள்ள அதுவும் ஆற்றல் படைத்தவர்களுக்கு ஆதரவாக எப்போதாவது தான் நீதிமன்ற சுவர்களில் எதிரொலிக்கிறது. இந்த ஓரவஞ்சனை பார்வையோடு தான் தப்லீக் ஜமாஅத் பற்றி அவதூறாக மாரிதாஸ் பேசியதை முஸ்லிம் சமூகம் ஒட்டுமொத்த அவமதிப்பாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் அதே பாரதமாதாவை இழிவுபடுத்துவது இந்துக்களை (கவனிக்கவும் இந்தியர்களை அல்ல) அவமானப் படுத்துவதாகவே கருத முடியும் என்றும் ஒரே நீதிபதியால் தீர்ப்பு வாசிக்க முடிகிறது.
வெறுப்பைத் தூண்டும் பேச்சும் சக மனிதர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் அடாவடி செயல்தான். அதை தடுக்க முயற்சிப்பதை அடாத செயலென்றும் இதை அனுமதித்து விட்டால் அரசு எல்லோருடைய பேச்சுரிமையையும் கிள்ளுக்கீரையாக கருதும் வாய்ப்புள்ளது என்றும் சிலர் அங்கலாய்க்கிறார்கள். அரசு தவறு செய்யும் போது கண்டிப்பதும் நன்மை செய்யும்போது ஆதரிப்பதுமே குடியரசின் பிரஜை செய்யக் கூடியது. அரசு ஒரு செயலை அடாவடித்தனத்திற்கு பயன்படுத்தக் கூடும் என்பதற்காக அதை நல்லதுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று குறுக்குசால் ஓட்டுவது படு அபத்தம். அது ஒரு வகையில் ஆதிக்க மையங்களை பொத்தினாற்போல விடுவிப்பதாகும். வரிசைகட்டி வரும் இழிமொழிகளை யெல்லாம் கேட்டும் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தொடர்ந்து மௌனம் அனுஷ்டித்த பிரதமரின் மறைமுக சம்மதம் தான் வெறுப்பு பேச்சுக்கான காரணம் என்பதை சமீபத்தில் ஐஐஎம் மாணவர்கள் சரியாக வெளிக் கொணர்ந்தார்கள். அதன் தொடர்ச்சியே தாக்குதல்கள், வன்முறை, அரசியல் லாபம் உள்ளிட்டவற்றை சாத்தியமாக்குகிறது என்பதை நாம் சரியாக விளங்க வேண்டும்.
இந்த தேசத்தின் சிறுபான்மையினரை நடுத்தெருவில் நிறுத்த அரசுக்கு ஒரு புரளி போதுமானதாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் லிம்பாவல்லி என்ற ஒரு கர்நாடக எம்எல்ஏ, பெங்களுருவின் குடிசைப் பகுதி ஒன்றில் வசிக்கும் முஸ்லிம் தொழிலாளிகள் அனைவரும் பங்களாதேஷ் வந்தேறிகள் என்ற பொய்ச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிய, ஏற்கனவே இவர்களைப் போன்றோரை கரையான்கள் என்று வசை பாடிக் கொண்டிருக்கும் கட்சியின் ஆட்சி, அந்த பொய்ச் செய்தியையே புகாராக ஏற்று நூற்றுக்கணக்கான ஏழைகளின் குடிசைகளை இடித்துத் தரைமட்டமாக்கியது. உதாரணத்திற்கு இன்னொன்றையும் குறிப்பிடுகிறேன். “கொரானா குறிப்பிட்ட சமுதாயத்தைத் தான் முதலில் தாக்கியது. அவர்கள் மூலமாகவே பரவுகிறது” என்று அவர்களைத் தள்ளி வைக்க எல்லா பிரச்சார உத்திகளையும் கடைபிடித்த ஊடகங்களும் அரசும் ஒரு நவீன தீண்டாமையை மக்களிடம் விதைத்தன. தீவிரமாக முயன்று அடிதட்டு மக்களிடம் கொண்டு சென்றன. அப்போது மரணமடைந்த இரண்டு முஸ்லிம்களின் சவ அடக்கத்திற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை, நெருக்கடிகளை அரசே விதித்தது. காவல்துறை தீவிரமாக கண்காணித்தது. பிரேதத்தின் வாயிலாக கொரானா பரவும் என்ற விதியை அரசே அழியாத மை கொண்டு எழுதி ஒரு இனத்தையே சமூக பகிஷ்காரம் செய்வதற்கு துணைகோலியது. இந்த கருத்து ஆழ்மனதில் பதிந்துபோன சிறிது காலத்தில் கொரானாவால் இறந்துபோன ஒரு மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் அலைக்கழிக்கிறார்கள். உடனே கொரானா மரணத்தின் மீது வன்மத்தைப் பரப்பிய மேல்தட்டு மகானுபவர்களே “மனித உடலுக்கு கண்ணியம் தரவேண்டும்.. மரியாதை செலுத்த வேண்டும்” என்றெல்லாம் நரி வேஷம் கட்டி வாலை ஆட்டி நின்றார்கள். ஒரு மருத்துவரின் உடலை அவமதித்த குற்றப் பழி பாமரனைச் சூழ்ந்து நிற்கிறது. ஏறத்தாழ பதினெட்டு மாதங்கள் கழித்து அவுரங்காபாத் உயர்நீதி மன்றம் “தப்லீக் மாநாட்டிற்கும் கொரானா பரவலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஜமாஅத்தினர் பலிகிடாவாக ஆக்கப்பட்டனர்” என்று தீர்ப்புரைத்தப் பிறகும் இன்றைக்கும் தப்லீகர்களைக் குற்றப்படுத்தி ஆயிரக்கணக்கான கட்டுரைகள், செய்திகள் வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. வெறுப்பை விதைக்கக் கூடிய வாய்ப்புள்ள ஏதாவது ஒரு சம்பவம் எங்காவது ஒரு மூலையில் நடந்தாலும் அதை அப்படியே கடத்திக் கொண்டு போய் தலைப்புச் செய்தியாக்கி முடிந்தளவுக்கு பதட்டத்தை உருவாக்கி மக்களை அணிபிரித்து மோதவிடுவது இன்றைய வலதுசாரி தேசபக்த அரசின் அரசியல் தந்திரமாக உள்ளது. இதன் பின்னணியில் தான் கருத்து சுதந்திரத்தை சரியாக பகுத்துணர வேண்டும். சாதி – மத பிணக்குகள் மண்டிக் கிடக்கும் தேசத்தில் மேற்கத்திய நாகரீக சமூகத்தின் பார்வையோடு எல்லாவற்றையும் அனுமதிக்க கோருபவர்கள், அபாண்டமான பொய்ச் செய்திகளைப் பரவச் செய்வதில் ஆளும் வர்க்கம் அடையும் ஆதாயம் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. இத்தகைய கெட்டித் தட்டிப்போன கருத்துரிமை நிலைப்பாடு நிர்வாணப்படுவது இங்குதான்.
எந்த சம்பந்தமும் சமகால அவசியமும் இன்றி குறிப்பிட்ட சமயம், கலாச்சாரம், அதன் தலைவர்கள் என அனைத்தின் மீதும் கேவலத்தை, அசிங்கத்தை, வன்மத்தைக் கக்குவதை கருத்தியல் வன்முறையாகத்தான் வகைப்படுத்தி எதிர் கொள்ள முடியும். இன்றைக்கு பெரியாரை பிரபாகரனோடு இணைத்து பெரியார் கையில் துப்பாக்கியைத் திணித்து மே17 இயக்கம் ஒரு பாதகையை வடிவமைத்தால் அது பெரியார் எனும் பிம்பத்தின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் என்று கருதியே அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். ஏனெனில் அது ஒரு பொய்மை தோற்றம். பெரியாரின் சுயமரியாதை இயக்கமே யாரையும் நிந்திக்கும் கேவலப்படுத்தும் அதிகாரத்தை நிர்தாட்சண்யமின்றி எதிர்த்த ஒன்றாகவே இருந்தது. பெருமானார் நபிகள் நாயகம் குறித்த இழிவுகளைக் கற்பிக்கிற மனிதர்களையும் முஸ்லிம்கள் இந்த நிலையில் தான் பாவிக்கிறார்கள். நபிகளை ஆபாசமாக சித்தரிப்பதை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ள இயலாததற்குக் காரணம், நபிகளுக்கு அப்படி ஒரு தன்மை இஸ்லாமிய வரலாற்றுப் பக்கங்களில் இல்லை ஓரு யுக புருஷரின் மீது சுமத்தப்படும் அவதூறுக்கும் இழிவிற்கும் பதில் சொல்லும் அவலச் சூழலில் சாமானிய முஸ்லிம் நிறுத்தப்படுகிறான். அவன் எதிரில் நின்று கொண்டு ‘அடுத்தவன் நபிகளை நக்கல் அடிக்கறானா, அடிச்சிக்கட்டும்; நீங்க அவரைப் புகழ்ந்து பாடிக் கொள்ளுங்கள்’ என்று அறவுரையைக் கேட்கும் பரிதாபகரமான நிலை முஸ்லிம்களோடு தொலையட்டும். இப்படிப்பட்டவர்கள் பார்ப்பான் என்ற விளி ஒரு சாராரை புண்படுத்துகிறது என்றால் அதை தவிர்த்துக் கொள்வதே நாகரீகம் என்ற அறிவுரைக்கவும் தயங்குவதில்லை. இவர்களுக்கு பார்ப்பான், தலித் (சாதி பெயரை இணைத்துக் கொள்ளவும்), துலுக்கன் என அனைத்தும் ஒரே மாதிரியான அடையாளமாகவே தெரிகிறது. அவை ஒரே மாதிரியான ஒடுக்கத்தையும் நெருக்கடியையும் அரசியல் நிர்பந்தத்தையும் ஏற்படுத்துவதாக நிறுவுவது வசதியாக இருக்கிறது.
ஒரு சித்திரம், ஒரு பேச்சு, ஒரு பாட்டு இவை தம்மை புண்படுத்திவிட்டது என்று யாரும் அதிர்ச்சி அடையத் தேவையில்லை என்று சொல்பவர்கள் நடிகையின் மூக்கு குறித்து ஒரு எழுத்தாளர் தாறுமாறாக எழுதியதற்கு மூக்கின் மேல் கோபங்கொண்டு அனத்துகிறார்கள். ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் டாக்டர் தமிழிசையே பெண்ணை இழிவுபடுத்தும் ஈனச் செயலை ஆவேசமாக கண்டித்து பேட்டி தருகிறார். ஆனால் இதே சில நாட்களுக்கு முன் புல்லிபாய் எனும் வலை தளத்தில் ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் முஸ்லிம் பெண் ஆளுமைகளை அசிங்கமாக சித்தரித்து பகிரங்க ஏலம் விட்ட போது கவர்னர் முதல் கவுன்சிலர் வரை வாயடைத்துக் கிடந்தனரே.. அப்போது எங்கே போனது உங்கள் பெண்ணுரிமை முழக்கம்? இதையெல்லாம் விரிவாக பேசாமல் வெறுமனே கட்டற்ற கருத்து சுதந்திரம் எல்லாப் பிரச்சினையையும் தீர்த்து விடும் என்று நம்புவதும் நம்பவைப்பதும் ஒருவகை தந்திரம் மட்டுமே. அப்படியே அவதூறுகளையும் பொய் புரட்டுகளையும் அனுமதித்துவிட்டால் பதிலுக்கு உண்மைக்கு உரிய மதிப்பு இங்கே அளிக்கப்பட்டு விடுமா? உலகத்தின் மிகப்பெரிய போராட்டமே பொய்மைக்கு எதிராக நடப்பதுதான். பொய்யையும் அனுமதிப்பதே சுதந்திரம் என வழக்காடுவது உண்மையை குழி தோண்டிப் புதைக்க மட்டுமே உதவும். அலை அலையாய் வந்து மோதும் பொய்களுக்கு மத்தியில் உண்மை கால் நனைத்துவிட்டதாக குதூகலிப்பது குழந்தைத்தனமாகும். ஓயாத தூஷனைக்கிடையில் உண்மையை நிலை நாட்டுவது சாமான்யமான வேலையல்ல. மலையின் உச்சியில் கூடை நிறைய கோழி இறகுகளைக் கொண்டு போய் கொட்டிவிட்டு, இறங்கி வரும்போது நிதானமாக பொறுக்கி சுத்தப்படுத்திவிடுவேன் என்று சொல்வதற்கு ஒப்பாகும்.
இன்றைய இந்தியாவில் கருத்துரிமை என்பது பொய் புரட்டுகளை தங்குதடையின்றி அனுமதிப்பதாகவும் நீதிமன்றங்கள் வரை அதற்கு பக்கபலமாக செயல்படுவதாகவும் உண்மையை, வரலாற்றை எப்படியாவது இருட்டடிப்பு செய்யும் முயற்சிகளை எல்லா இடங்களிலும் நிறுவுவதாகவும் இருக்கிறது. இதில் வன்ம கருத்துகள் அனுமதிக்கப்பட்டால் தான் நல்ல கருத்துகளுக்கும் இடமிருக்கும் என்று கூவுவது ஆரோக்கியமான சனநாயகத்திற்கு உகந்ததல்ல. மோசடி விளம்பரங்களை விட்டுவைத்தால் யோக்கியமான வணிகர்களுக்கு இடமே இல்லாமல் போகும் அபாயம் உண்டு. சுதந்திர போராட்டத்தில் தேசத்தின் பங்களிப்பைக் காட்சிப்படுத்த நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் புராண கதை மாந்தர்களும் சாமியார்களும் இடம் பெறுகின்றனர். காந்தியாரை படுகொலை செய்த கோட்சேவின் பெயர் உச்சரிக்கப்படுவதை ஒரு காவல் ஆய்வாளர் தடுக்கிறார். இது எல்லாமே கருத்தியல் தான். ஆனால் நச்சு கருத்துகள். இவற்றை எப்படி இந்த அரசு அனுமதிக்கலாம் என்று கேட்பது தான் வாழ்க்கை. இந்த வரலாற்று புரட்டுகளும் இருக்கட்டும். நாம் உண்மையை உரக்கச் சொல்வோம் என்பது மரணம். சனநாயகத்தின் மரணம். மக்களாட்சியின் பெயரால் நடக்கும் வல்லாண்மை அரசு திரும்பிய பக்கமெல்லாம் நச்சு கருத்துகளை தனது ஆள்,அம்பு. சேனை மூலம் விதைப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டு, நம்மால் முடிந்தவரை உண்மையைப் பேசலாம் என்பது நடக்கும் அநீதிகளை நானும் கண்டித்தேன் என்று விலகி நிற்கும் மனோபாவம். இது இந்தியாவில் நடைபெறும் மத மற்றும் சாதி கலவரங்களுக்குக் காரணமாக அதில் ஈடுபடும் சமூக விரோதிகளை மட்டும் கண்டிப்பதைப் போன்றதாகும். கலவரத்தின் கர்த்தாக்கள் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இந்த கண்துடைப்பு எதிர்ப்பையும் தங்களுக்கு அநுகூலமாக்கிக் கொள்வர். கலவரம் பண்ணுகிற கபோதிகள் வேலையை முடித்துவிட்டு போனவுடன் நல்லவன் வேஷம் கட்டுறவனை விட்டு நடந்த எந்த விசயத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி கருத்தாக பேசிவிட்டு போவார்கள். தேசியமும் ஆன்மீகமும் எங்கள் இரு கண்கள், சாதி மத பேதங்களை நாங்கள் கடைபிடிப்பதில்லை என்று சொல்வார்கள். சமீபத்தில் அண்ணாமலை அவர்கள் கூட, “நபிகள் (ஸல்) அவர்களைப் பற்றி யார் தவறாகப் பேசியிருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதாகும்” என்று முழங்கினார். நாம் எல்லாவற்றையும் முழுங்கிவிட்டு வேலையைப் பார்க்கலாம்.
இங்கே அதிகாரம் அதலபாதாளம் வரை பாய்கிற நிலையில் கருத்துரிமை எத்துணை அலங்கோலமாக கிடக்கிறது என்பதை இன்றைய ஒரு சம்பவம் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. லாவண்யா தற்கொலை வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மேற்படி தற்கொலையில் எந்த மதமாற்ற நிர்பந்தமும் இல்லை என்று விசாரித்து தெளிவுபடுத்திய பிறகு அதை அறிவித்த அமைச்சர்களை சகட்டுமேனிக்கு விளாசித் தள்ளியுள்ளார். ஆனால் அவரின் அறச்சீற்றம் இந்த விசயத்தை மத மோதலாக திசைதிருப்ப, மரணப் படுக்கையில் இருந்த குழந்தையைத் தொந்தரவு பண்ணி கானொளியை போலியாக தயாரித்து வெளியிட்ட முத்துவேலின் பக்கம் திரும்பவேயில்லை. அவரை காவல் கண்காணிப்பாளர் மிரட்டியிருக்கிறார் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிடத் தயங்கவில்லை. கிருத்துவ நிறுவனங்களுக்கு எதிரான மத வன்மத்தைக் கக்கிய கயவர்களின் எந்த பேச்சிற்கும் நீதிபதி காது கொடுக்கவில்லை. வெறுப்பு பிரச்சாரத்துக்கு மட்டும் சுதந்திரமும் உரிமையும் கோருவதில் தெளிவாகவே இயங்கும் அமைவனங்கள், தமிழ் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பிரதமரைக் குழந்தைகள் கிண்டல் செய்துவிட்டதற்காக நிறுவனத்திற்கு தாக்கீது அனுப்பியிருக்கிறார்கள். மறுபக்கம் ஐஐடியின் முன்னாள் மாணவர்களான நூற்றுக்கணக்கான ஆளுமைகள், முஸ்லிம்களை கூட்டங் கூட்டமாக அழித்தொழிக்க அறைகூவல் விடுத்த சமீபத்திய தர்மசன்சாத், முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திய புல்லிபாய் செயலி, டெக்ஃபாக் என்ற செயலியில் ஒருங்கு திரட்ப்படும் வன்மம் ஆகியவை குறித்த பிரதமரின் மௌனம் ஆழ்ந்த கவலையளிப்பதாக எழுதியுள்ள கடிதத்திற்கு பதில் சொல்வாரில்லை. இவை கருத்து சுதந்திர வானில் கருமேகங்களாக திரண்டிருப்பதாக அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து சுதந்திரம் என்பது விமர்சனத்திற்கான சனநாயக உரிமை. அது இழிவுபடுத்துவதற்கான, அசிங்கப்படுத்துவதற்கான அனுமதி சீட்டு அல்ல. நேரு ஓவியர் சங்கரை அழைத்து கேலிச் சித்திரம் வரைவதன் வாயிலாக தன்னை தொடர்ந்து நையாண்டி செய்ய கேட்டுக் கொண்டார். நையாண்டி என்பதும் விமர்சனமே. பொய்யும் புரட்டும் விமர்சனமல்ல. பண்டைய ஏதேச்சதிகார மன்னர்கள் கூட தாங்கள் செய்யும் கோமாளித்தனங்கள் உடனுக்குடன் தங்களுக்கு உணர்த்தப்பட வேண்டும் என்பதற்காக விதூஷகர்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டார்கள். ஆனால் கலியுக ராஜாக்களின் தன்முனைப்பும் போலி பிம்பமும் கணநேர சலனத்திற்கே பொடிப்பொடியாக நொறுங்கி விழும் கண்ணாடிப் பாத்திரமாகவே காட்சியளிக்கிறது. நாட்டின் தலைவரை விமர்சிக்க முடியாமல் அரசியல் உரிமையை பரிதாபமாக இழந்து நிற்கும் சமூகம், நபிகளை, யேசு கிருஸ்துவை, கிருஷ்ணரை இழிவுபடுத்தும் உரிமையை வேண்டி நிற்கிறது. இதில் ஒரு அற்ப திருப்தி அடைவதை என்னவென்று சொல்வது? கவைக்குதவாத இந்த உணர்வு சீண்டல்கள் தான் நாகரீக சமூகத்தின் அடையாளம் என்று கதை படிக்கிறீர்கள் என்றால் விலகி நின்று கொள்கிறோம். வசைமாரி பொழியட்டும். அதுதான் வன்முறைகளைத் தோற்றுவிக்காத அமைதி – சுபிட்ச சமூகத்தை உருவாக்கும் என்று அறிவார்ந்து நம்ப யாருக்கும் எந்த தடையும் இல்லை. இங்கே சனநாயக யாகம் வளர்க்க ஒட்டுமொத்தமாக ஒரு சிறுபான்மை சமூகத்தை முதல் பலிகொடுக்க அனைவரும் தயாராகி விட்டார்கள். நமக்கு கருத்து சுதந்திரம் என்னவென்பதில் ஒரு Starting trouble இருக்கிறது. அதற்காக சிலர் சற்றும் யோசிக்காமல் ignition ஐ பெட்ரோல் டாங்கில் வைத்துவிடுகிறார்கள்.
ஒருபக்கம் விமர்சனம், நையாண்டி, கேலி என்கிற வெல்லும் வார்த்ததைகளுக்குத் தடை; மறுபுறம் வன்மம், அவதூறு, விஷமம் போன்ற கொல்லும் சொற்களுக்கு அனுமதி என அவர்கள் வெற்றிக்காக ஒவ்வொரு அடியையும் அடிக்கிறார்கள். நீங்கள் தோற்றுவிடாமல் இருக்க ஒவ்வொரு அடியையும் தடுத்தாடிக் கொண்டிருக்கிறீர்கள்.
எழுத்தாளர் – கோட்டை கலீம்