இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிராக சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என SIO தமிழ்நாடு கோரிக்கை.
புல்லி பாய் செயலியில் இஸ்லாமிய பெண் பத்திரிக்கையாளர்கள், பெண் போராளிகளின் புகைப்படங்களை பதிவேற்றி போலியாக ஏலம் விடப்பட்டது அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்புணர்வையும், பெண் வெறுப்பையும் காட்டுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதேபோல ‘சுல்லி டீல்ஸ்’ என்ற செயலியின் மூலம் 80க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்களின் சுயவிவரங்கள், புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டு ஏலத்தில் விடப்பட்டபோதே அது தொடர்பாக வழக்கு பதியப்பட்டும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை, காரணமானவர்கள் கைதும் செய்யப்படவில்லை. தொடர்ச்சியாக இப்போது புல்லி பாய் செயலியின் மூலம் இஸ்லாமிய பெண்கள் மீண்டும் குறிவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதும், அதனை அரசு கண்டும் காணாமல் இருப்பதும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை இந்துத்துவா வாதிகள் கட்டமைப்பது தெளிவாகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் முற்போக்குவாதிகள், பெண்ணியவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்கள் இதுகுறித்து வாய்திறக்காமல் கள்ளமௌனம் சாதிப்பது இந்தியாவின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் மிகப்பெரிய ஆபத்தாகும். இது வருத்தப்பட வேண்டியதும், கண்டிக்கப்பட வேண்டியதுமாகும். இந்தியாவில் இணையத்தில் நடக்கும் துன்புறுத்தல் பற்றி 2018ஆம் ஆண்டு அம்னேஸ்ட்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பெண் எவ்வளவு அதிகமாக குரல் கொடுக்கிறாரோ, அந்த அளவிற்கு அவர் குறிவைக்கபடுகிறார். மேலும் இதில் மதச் சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய சமூகத்தை சார்ந்த பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இதனை வெறுமனே பெண்களுக்கு எதிரான குற்றம் என்று மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. மோடியின் இந்துத்வா கொள்கைகளை எதிர்த்த, சமூகத்திற்காக குரல் கொடுத்த இஸ்லாமிய பெண்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டுள்ளனர். உச்சகட்டமாக JNUவில் ABVP குண்டர்களால் தாக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட நஜீப் என்ற ஆராய்ச்சி மாணவரின் தாயாரின் புகைப்படமும் பதிவேற்றப்பட்டு, ஏலம் விடப்பட்டுள்ளது.
ஆறு வருடமாக தனது மகன் எங்கே என ஆளும் அரசிடம் கேள்வி எழுப்பியதற்காக 65 வயதுமிக்க தாய் குறிவைக்கப்பட்டுள்ளார். இது எந்தளவுக்கு இஸ்லாமிய வெறுப்பு அந்த செயலியை உருவாக்கியவர்களிடம் ஊறியிருக்கும் என்பது தெளிவாகிறது.
புல்லி பாய் செயலி உருவானதற்கான காரணம் ‘சுல்லி டீல்ஸ்’ செயலி உருவாக்கப்பட்டபோதே தகுந்த நடவடிக்கைகளும், உருவாக்கியவர்களை தண்டிக்காததுமே காரணம் என மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி தெரிவித்துள்ளார் சுல்லி டீல்ஸ் செயலி மற்றும் புல்லி பாய் செயலி உருவாக்கியவர்களும், அதற்கு காரணமானவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மேலும் இதுபோன்ற இஸ்லாமிய வெறுப்புணர்வை விதைக்கும் குற்றத்தை செய்பவர்களை தண்டிக்க தனியே சட்டம் கொண்டுவர வேண்டும் என இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு- SIO தமிழ்நாடு கேட்டுகொள்கிறது.
இஸ்லாமோஃபோபியாவுக்கு எதிராக சட்டமியற்ற மக்களும், நாட்டிலுள்ள அறிவுஜீவிகளும் குரல் கொடுக்க வேண்டும் எனவும் SIO கேட்டுக்கொள்கிறது