நீங்கள் ஒரு சமூகத்தின் மீது சுமத்தும் ஒரு குற்றச்சாட்டை கடந்து வர அந்த சமூகத்திற்கு பல ஜென்மங்கள் தேவைப்படும் என்று கூறி இஸ்லாமிய சமூகத்தின் வலியை திரையில் கொண்டுவந்து அதனை வெகுஜன மக்கள் விவாதித்துக்கொண்டிருக்கும் நிலையிலேயே இஸ்லாமிய சமூகத்தின் மீதும் முஸ்லீம்கள் மீதும் அடுத்த பலியை சுமத்தியிருக்கிறது இன்னொரு கூட்டம்.
மாநாடு திரைப்படம் ஒரு சமூகத்தின் மீது எவ்வாறு தீவிரவாத பிம்பம் சுமத்தப்படுகிறது. அந்த அவப்பெயரின் காரணமாக அந்தச் சமூகம் எந்த அளவுக் கொடுமைகளை அனுபவிக்கிறது என்று கூறி ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் வலியை பொதுச் சமூகத்தில் காண்பித்துள்ளது. முஸ்லீம்கள் அனைவரும் தங்களின் வலியை பொதுச் சமூகம் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதே என்று நிம்மதி பெருமூச்சு விடுவதற்கு முன் சமூகத்திற்கான அடுத்த வேதனையாக வந்து நிற்கிறது அடுத்த குற்றச்சாட்டு.
முகநூல் உபயோகிக்கும் பெண்கள் அனைவரும் நரகத்திற்கு செல்வார்கள் என்று ஓர் அறிவற்ற முஸ்லீம் எப்பொழுதோ பேசிய ஒரு வீடியோவை எடுத்துக்கொண்டு இப்பொழுது அதனை பேசுபொருளாக்கி மீண்டும் மீண்டும் முஸ்லீம்களை அடிப்படைவாதிகள் எனும் முத்திரைக் குத்தும் வேலையை மும்மரமாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர் சமூக பாதுகாப்பாளர்கள் எனும் அடிப்படை அறிவற்ற மனிதர்கள்.
அவர் எதையோ உளறிக்கொண்டு இருப்பதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து சமூக ஊடங்கங்களில் வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும் முற்போக்கு சிந்தனைவாதிகள் எனும் பெயரில் சுற்றிக்கொண்டிருக்கும் அடிப்படை அறிவற்ற மனிதர்கள் இந்தச் செய்தியைப் பரப்புவதன் மூலமாக சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள். மீண்டும் மீண்டும் ஒரு சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் குற்றவாளியாக, அடிப்படைவாதியாக நிற்க வைக்க வேண்டும் என்பதை தவிர.
எந்தவொரு மனிதரும் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ செல்ல வேண்டும் எனும் அதிகாரத்தை படைத்த அல்லாஹ்வைத் தவிர எவராலும் முடிவு செய்ய இயலாது. அப்படி முடிவு செய்யும் அதிகாரத்தை எந்தவொரு மனிதருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை என்பதை இஸ்லாமிய புனித நூலான குர்ஆனும் நபிகளார்(ஸல்) பொன்மொழிகளும் எடுத்துக்கூறினாலும் கூட, அதெல்லாம் முடியாது பெண்கள் நரகத்திற்கு போவார்கள் என்று அந்த முட்டாள் மனிதர் கூறியதைத்தான் நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கூறி பரப்புரைச் செய்து அடைய துடிக்கும் இலட்சியம் என்ன?
இந்தளவிற்கு முஸ்லீம் பெண்களின் மீது அக்கறை கொண்டுள்ள நபர்கள் இந்தியா முழுவதும் இஸ்லாமிய சமூகம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான போது எங்கு இருந்தார்கள் என்று தேடினால், அவர்களை காண முடியாது.
தங்களது கணவன்மார்களையும் குழந்தைகளையும் இந்து நாஜிகளுக்கு பலி கொடுத்துவிட்டு தெருவில் நின்று கதறும் பெண்களுக்கக்காகவோ காஷ்மீரில் தங்களின் கணவன்மார்கள் உயிரோடு இருக்கின்றார்களா? இல்லையா? என்பதைக் கூட அறிந்து கொள்ள வழியில்லாமல் பாதி விதவைகளாக இருக்கும் பெண்களைக் குறித்தோ, பல ஆண்டுகளாக குற்றம் நிரூபிக்கப்படாமல் கைதிகளாக இருக்கும் தங்களின் கணவன்களை இழந்து தவிக்கும் பெண்களுக்காகவோ, கோயில் அறையில் அடைத்துவைத்து பாலியில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்துபோன முஸ்லீம் பெண் குழந்தையைக் குறித்தோ வாய் திறக்காத நீங்கள் சம்சுத்தீன் காசிமியின் வீடியோவை எடுத்து பேசுவது முஸ்லீம் பெண்களை அல்ல ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையும் இந்த உலகிலேயே நரகத்தில் வாழ வைக்கும் பாவிகள் ஆவீர்.
- முஹம்மது பஷீர்