மீண்டும் ஒரு படுகொலை தமிழகத்தை உலுக்கியுள்ளது. கோவையில் செயல்படும் சின்மயா வித்யாலயா பள்ளியில் பயின்று வந்த மாணவி தாரணி பாலியில் துன்புறுத்தல் காரணமாக பள்ளியிலிருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் கடும் மன உளைச்சலால் தற்கொலை செய்துள்ளார். அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்த மிதுன் சக்கரவர்த்தி என்ற கொடுறனே பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவியின் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் மாணவி கைப்பட எழுதியுள்ள கடிதத்தில் கூடுதலாக இருவரையும் தமது மரணத்திற்கு காரணமாக குறிப்பிட்டுள்ளார்.
மிதுன் சக்கரவர்த்தியை காவல்துறை கைதுசெய்து போக்ஸா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக அறிய முடிகிறது. இருப்பினும், பாலியல் துன்புறுத்தல் குறித்து முன்னதாகவே அறிந்திருந்த பள்ளியின் முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததின் விளைவாகவே “இக்கொலை” நடந்தேறியுள்ளது. நெஞ்சை பிழிறச்செய்யும் இந்த கொலையை குறித்து சுதந்திரமாக விசாரித்து தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் எவ்வித தயவுதாட்சணயமும் இன்றி தண்டிக்கப்பட வேண்டும்.
ஆரம்ப பள்ளிகள் முதல் ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்கள் வரை மீண்டும் மீண்டும் நடந்தேறும் இத்தகைய பாலியல் அத்துமீறல்கள் நமது கல்வி நிறுவனங்களில்- குறிப்பாக பள்ளிகளில்- நிலவும் பாதுகாப்பின்மையை நமக்கு உணர்த்துகின்றன. பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக தொடர்ந்து நடந்தேறும் இத்தகைய சம்பவங்கள் சமூகத்தில் மையம் கொண்டிருக்கும் ஒழுக்கவிழுமிய வீழ்ச்சியையும், ஆணாதிக்க மனபான்மையையும், குற்றவாளிகளை பாதுகாக்கும் சட்ட அமைப்புகளின் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
சமூகத்தில் பலவீனமாக இருக்கும் பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்களான தலித்கள், பழங்குடிகள், முஸ்லிம்கள் உள்ளிட்டோர் கல்வியை தமது மேலெழுச்சியின் ஆயுதமாக கருதிவரும்சூழலில், கற்பிக்கும் அதே கல்வி நிறுவனங்களால் தொடர்ந்து அவர்கள் துன்புறுத்தப்படுவது நமது கல்வி நிறுவனங்கள் எவ்வளவு தூரம் சாதிய/இந்துத்துவ/ஆணாதிக்க/இஸ்லாமிய வெறுப்புணர்வோடு இயங்குகின்றன என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. கல்வி விடுதலைக்கான கருவி; ஆனால் கற்பிக்கும் நிறுவனங்கள் அவ்விடுதலையை சாத்தியப்படுத்துவதற்கு மாற்றமாக நிலவும் சாதிய ஆணாதிக்க சமூக அமைப்பையே தக்க வைக்க முயற்சி செய்கின்றன.
இந்நிலையை மாற்ற உறுதியான சட்ட நடவடிக்கைகள் தேவை என்றாலும் அவைமட்டுமே போதுமானவை அல்ல. கல்வி நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதை மீண்டும் மீண்டும் நாம் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. நிர்வாகக்குழுவில் அனைத்து சமூகப்பிரிவுகளை சார்ந்த பெற்றோர்களும் இடம் பெறும் வகையில் நிர்வாக்குழுவை அமைக்க வேண்டும். அச்சுறுத்தும் அல்லது வெறுப்பூட்டும் சூழலில் கல்வி நிறுவங்களை வைத்திருக்காமல் மாணவர்களுக்கு விருப்பமான சூழல் கொண்ட இடமாக நமது கல்வி நிறுவனங்களை மாற்றுவதும் மிக முக்கியமானது.
அரசு இவற்றை உறுதி செய்வதில் அதீத அக்கறையுடன் நடந்துக் கொள்ள வேண்டும். இது மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிப்பதோடு கல்வி நிறுவனங்களில் பாலியல் துன்புறுத்தல், சாதிய ஒடுக்குமுறை, மத ரீதியான பாகுபாடு ஆகிய குற்றங்கள் நடைப்பெறாமல் தடுக்க உதவும். இவைப்போக பண்பாட்டு ரீதியாக மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த சமூகத்தையே பயிற்றுவிக்க வேண்டிய தேவையிருக்கின்றது. இறைநம்பிக்கை, அடிப்படை மனித உரிமைகள், சமூக நீதி, பாலியில் சமத்துவம் உள்ளிட்ட கருதுகோள்கள் சமூகத்தில் பரவலாக்கப்பட வேண்டும். பல நேரங்களில் சட்டங்கள் கடுமையாக அமைந்திருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அமைப்புகள் அசட்டையாக இருப்பதற்கு காரணம் அவர்களை சிந்தனா ரீதியாக ஆக்கிரமித்திருக்கும் சாதியவாத மதவாத ஆணாதிக்க உணர்வுகளே. அவற்றை களையாமல் எந்தவொரு ஆக்கபூர்வமாக நடவடிக்கையையும் நீண்ட கால அடிப்படையில் எடுக்க முடியாது. மேற்கூறிய வகையில் செயல்பட அரசை நிர்பந்திப்பதும் சமூகத்தில் விழிப்புணர்வை பரவலாக்குவதும் அவசியம். இத்தகைய பலதரப்பட்ட நடவடிக்கைகளே நமது குழந்தைகளுக்கான பாதுகாப்பான கல்விச்சூழலை உருவாக்கும்.
அஸ்லம் – எழுத்தாளர்