இந்த நூலை பற்றி எழுதுவதற்கு முன்பு இசுலாமியர்களை வந்தேறி எனச்சொல்லி அரசியல் ஆயுதமாக வைத்துள்ளவர்களும், அவர்களுக்கு பதில் சொல்ல தயங்கும் இசுலாமியர்களும், வரலாற்று ஆர்வலர்களும் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டிய நூல் .
தமிழின் தமிழர் மாண்பைக்கூறும் மணிமேகலை ‘தண்டமிழ் வினைஞர் தம்முடன் கூடிப்பணிபுரிந்த யவண (இசுலாமியன்) தச்ச’, ராமாயணத்தை கேட்டோ அல்லது படித்தோ தமிழில் எழுதிய கம்பன் இசுலாமியர்களைப்பற்றி எழுதியுள்ள ‘சோனக (இசுலாமியன்) மனையிற்றூய …, என்ற கவி வரிகள். ”துருக்கர் தரவந்த வயப்பரிகள் ” என்ற ஒட்டக்கூத்தரின் பாடலில் துவங்கி எட்டாம் நூற்றாண்டில் திருச்சி உறையூரில் கட்டப்பட்ட முகமது ஹஜ்ரின் தொழுகை கூடத்தில் அரபுமொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, பாண்டியர்களின் கடைசி வாரிசுகள் ஆட்சிக்கட்டிலில் ஏற சண்டையிட்டனர். அப்போது தஞ்சை சோழநாடு பாண்டியர் வசமிருந்தது (இந்த காலகட்டத்தோடு பாண்டியர் சோழர் ஆட்சி முடிவுக்கு வந்தது) இவர்களது வாரிசு சண்டையை தஞ்சை திருக்களர் கோயில் கல்வெட்டில் பாண்டியர் படையில் அதிகம் இருந்தவர்கள் இசுலாமியர் என்ற குறிப்புகளோடு இசுலாமியர் இந்தியாவிற்கு வந்த சான்றுகளை பட்டியலிட்டு துவங்குகிறது இந்த நூல்.
இதைப்படிக்கும் போது வெளிநாட்டுப்பயணிகள் தமிழக குறிப்புகள் என்ற நூலில் நீலகண்ட சாஸ்திரி ”நபிகள் பிறப்பதற்கு முன்பே அரபு தேசத்திலிருந்து தமிழகத்திற்கு வாணிபம் செய்திட அம்மக்கள் வந்தனர். இவர்கள் அஞ்சுவர்ணத்தார் என மக்கள் அழைத்தனர். நபிகளின் இசுலாம் மதம் தெற்காசியாவில் பரவியபோது இவர்கள் தங்களை இசுலாமியர் என அறிவித்துக்கொண்டனர்” என குறிப்பிடுவார் அந்தளவுக்கு இசுலாமியர்கள் இந்தியாவின் பிற பகுதியை விட தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்தவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அடுத்து தமிழக கோவில்களில் இசுலாமியர்களுக்கும் சைவ வைணவத்தினருக்கும் எப்படி நெருக்கம் இருந்தது என்பதை திருவரங்க கோயில் ஒழுகு, மதுரை சொக்கநாதர் கோயில் மாணிக்கவாசகர் திருவிழாவும், துலுக்க நாச்சியார் உறவுகள், ராமநாதபுரம் அருகில் துடுப்பூர் தர்காவிற்கு தர்மகர்தா அம்பலகாரர் என்பதையும், பல இசுலாமியர்களுக்கு சேர்வை அம்பலம் என்ற பட்டம் இன்றும் இருப்பதை சுட்டிக்காட்டி இசுலாமியர்கள் தமிழர் பண்பாட்டோடு கலந்தவர்கள் என்பதை ஆழமாக எடுத்து வைக்கிறார் ஆசிரியர்.
பாகம் பாகமாக தமிழகத்தோடு இசுலாமியர் எப்படி உறவோடு இருக்கிறார்கள் என்பதை பட்டியல் போடுகிறது இந்த நூல்.
பாண்டியர் அரசில் துவங்கி நாயக்கர் ஆட்சி வரை அரபு நாட்டு பணத்தை தமிழகத்தில் அச்சிட அனுமதி அளித்த கல்வெட்டு சான்றுகள். இசுலாமியர் அமைச்சர் பாண்டியர் அமைச்சரவையில் பணிபுரிந்த செய்திகளைத் தொகுக்கிறார்.
இலக்கியத்தில் இசுலாமியர் 13ஆம் நூற்றாண்டில் பல்சந்தமாலை என்ற இசுலாமிய சிறப்பு நூல் யார் எழுதியதென தெரியவில்லை அப்போது துவங்கி இசுலாம் இலக்கியம் நாயக்கர் ஆட்சியில் கோலோச்சியது. நாயக்கர்கள் தெலுங்கையும் சமற்கிருதத்தையும் தூக்கிப்பிடித்தார்கள். அந்த காலத்தில் இதில் விதிவிலக்கு பள்ளுப்பாடல் மற்றும் தனிப்பாடல்கள். ஆனால் இசுலாமிய பெருமக்கள் தமிழில் மிஃராஜ்மாலை,சீறாபுரணம், என பல இலக்கியம் அரங்கேற்றம் கண்டனர்.
இப்படி படைவீரர்கள், வியாபாரம், நெசவு தொழில், வேளாண்மை இலக்கியம் என தமிழோடு தமிழ் மண்காத்தவர்கள் பற்றிய அறிய தகவல் பெட்டகமாக இந்த நூலினைப்பார்கலாம்.
- முத்து