உலகம் இயங்குவது கணித தத்துவங்களில் தான் ஒட்டுமொத்தமாக அனைத்து நாட்டு விஞ்ஞான அறிஞர்களும் , கல்வியாளர்களும் , தத்துவார்த்த மேதைகளும், ஆன்மீக வழிகாட்டாளர்களும் ஏற்றுக்கொண்ட ஒரு பதம். உலகம் இயங்குவதற்கான அத்தனை செயல்பாடுகளும் குறிப்பிட்ட சமன்பாட்டின் கால இடைவெளிக்குள் நடந்தேறுகிறது என்கிற தத்துவத்தை கிமுவில் இருந்தே அனைவரும் ஏற்றுக்கொண்டு வருகின்றனர்.
நம்முடைய இந்த இஸ்லாமிய பாரசீக மேதையும் அதனை குறிக்கோளாக கொண்டே கணித தத்துவங்களை வடிவமைத்துக்கொடுத்துள்ளார். இந்திய கணித மேதை ஆர்யபட்டா, பிரம்மகுப்தா,பாஸ்கரா ஆகியவர்களுக்கு முன்பாக அதாவது வேதகால கணித மேதைகளாக அறியப்படும் யஜுர்வேதசமிதா (1200-900) , பிங்கலர் போன்றோரும் கணித சமன்பாட்டினை உருவாக்கியுள்ளனர். இவை சீனம்,கிரேக்கம், கெமத் (எகிப்து) ஆகிய பிராந்தியங்களுக்கும் பிரயாண வரைவுகள் தயாரிப்போர் வாயிலாக பரவியிருந்தது. ஆனால் இவர்கள் உருவாக்கி வைத்த கணித சமன்பாடுகள் கால அளவீடு மற்றும் எடை அளவீடுகளைக் குறிப்பதாக மட்டும் இருந்தது. ஆனால் நவீனகாலத்திற்கு முந்தைய அதாவது இருண்ட காலம் என கூறப்படும் இஸ்லாமிய பொற்காலத்தில் தோன்றிய அல்குவாரிஸ்மியின் கணித சமன்பாடுகள் கட்டிடக்கலை,விண்ணியல் மற்றும் புவி அளவீடுகள் என சகலத்திற்கும் பொருந்துவதாக அமைந்தது.
விமானங்கள், தானியங்கி பொறிகளின் சமநிலை, இயந்திரங்களின் செயல்பாடு இவற்றிற்கு தேவையான அனைத்து வகை கணித மந்திரங்களை (Formula) வடிவமைத்து தந்த அல்குவாரிஸ்மி தான் அனைத்து கணித அடிப்படைகளின் மந்திரமாக கருதப்படும் அல்ஜிப்ராவை உருவாக்கியவர். நவீன கால புதுமை நிறைந்த கட்டிட கலைக்கு தேவையான வடிவங்கள் (geometric shapes) , அவற்றிற்கு தேவையான தகுந்த நீள,அகல,உயரம் (L+B+H) ஆகிய முப்பரிமான சமன்பாடுகளை Trigonometry யாக வடித்து தந்தவர். இந்த திரிகோணவியல் தான் தற்போதைய விண்ணியலின் தாரக மந்திரம் ஆகும். கிரேக்க கணிதவியலாளர்கள் தாலமி, ஹிப்மாகிரஸ் போன்றோர் திரிகோணமிதியை வடிவமைத்திருந்தாலும் அவை முழுமையாக்கப்படவில்லை. அதற்கான முழுமையான சமன்பாடுகளை எழுதி வைக்கவில்லை. ஆரம்பகட்ட திரிகோணமிதி கட்டிடக்கலையை வடிவமைக்க மட்டுமே பயன்படுவதாக இருந்தது. அல்குவாரிஸ்மி உருவாக்கிய அல்ஜிப்ராவும், திருகோணமிதியும் தான் விண்ணியல் ஆராய்ச்சியை எட்டிப்பிடிக்க வழிவகை செய்தது. திரிகோணமிதியின் முதல்விதியே ராக்கெட்டின் கூம்பு தயாரிப்பதற்கு தான் என்றால் உங்களுக்கு ஆச்சரியம் தோன்றும்.
Fraction, decimal, algorithm and algorism ஆகிய முதன்படி மற்றும் இருபடிநிலை கணித வகைப்பாடுகளை உருவாக்கியதன் மூலம் உலக வரைபடங்கள் தயாரிக்க இவரது கணித சேவைகள் மிகவும் பயன்பட்டன. அல்கோரிதம் இல்லையெனில் இன்றைய கணினி இல்லை என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். கணினியில் வரும் அனைத்து எண்வடிவங்களும் அல்கோரிதம் கோடுகள் என கணினி பயின்றோருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. முதன்முதலில் நைல் நதியின் வரைபடத்தை துல்லியமாக வடிவமைத்தார். ஆனால் இவருக்கு முன்பே பாரசீக புவியியலாளர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் என்பவர் தியாலம் என்கிற பெயரில் நைல் நதியின் வரைபடத்தை உருவாக்கினார். அது தெளிவற்றதாக இருந்தது. டாலமி உருவாக்கிய உலக வரைபடத்திற்கு பதிலாக புதிய அளவீடுகளுடனான புதிய உலக வரைபடத்தை உருவாக்கினார். டாலமியின் புவியியல் எனும் நூலை திருத்தி சூரத்துல் அர்த் எனும் புதிய புத்தகத்தை வடிவமைத்ததன் வாயிலாக அரபுலகில் புவியிலுக்கும் புவிசார் கலைகளுக்கும் வித்திட்டார். சூரத்தல் அர்த் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் ஒரேயொரு புதுப்பிக்கப்பட்ட பிரதி மட்டும் பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் யூனிவர்சிடி நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
1551ல் மெகல்லன், கடல்வழியாக பூமியை சுற்றி வந்ததன் மூலம் புவி கோளவடிவமானது என கூறுவதற்கு , 700 வருடத்திற்கு முன்பாகவே புவி கோள வடிவமுடையது அதன் ஓரங்கள் வளைந்து செல்லக்கூடியது என தமது “சிந்து-இந்து” எனும் நூலில் உலகிற்கு அறிவித்த மேதை அல்குவாரிஸ்மி ஆவார். ஏராளமான புத்தகங்களை இயற்றிய இவருடைய புகழ் ஐரோப்பாவில் மங்காத தனியிடம் ஒன்றை தக்கவைத்துள்ளது. ஆரியபட்டா கண்டறிந்த “0” பூஜ்ஜியத்தை ஸிஃப்ர் என்கிற பெயரில் பயன்பாட்டிற்கு கொண்டவந்தார். அதுவே பிறகு ஸீரோ ஆனது.
இப்னு அல் நதீம் என்கிற வரலாற்றாய்வாளர் கொடுத்த குறிப்புகளின்படி அல்குவாரிஸ்மியின் பெயர் – முஹம்மது இப்னு மூஸா அல்குவாரிஸ்மி அல்மஜீஸி அல்கதர்பலி ஆகும். உஸ்பெகிஸ்தான் நாட்டின் தற்போது கீவா என அழைக்கப்படும் திராட்சை தோட்டங்கள் நிறைந்த குவாரிஸும் எனும் ஊரில் பிறந்தார் . அதனாலேயே அவரது பெயர் அல்குவாரிஸ்மி எனப்படுகிறது. அப்பாஸிய கலிபாக்கள் காலத்தில் , கலிபா மஹ்மூன் என்பவரால் பக்தாதில் உருவான பைத்துல் ஹிக்மா ( House of Wisdom ) எனும் மகா கல்விக்கூடத்தின் ஒரு அங்கமாக இருந்த அல்குவாரிஸ்மி, அங்கு கிரேக்க-சமஸ்கிருத கணித மந்திரங்களை கற்றார். உலக நாடுகள் அனைத்திலிருந்தும் அந்த பைத்துல் ஹிக்மா கலாசாலைக்கு வரும் மேதைகளும் அறிஞர்களும் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது போல அல்குவாரிஸ்மியும் அரபுலகை வலம் வந்தார்.
அவருக்கு கணிதவியல் தவிர புவியியல், விஞ்ஞானம், கிரகநிலை சஞ்சாரம், வானியல் ஆகிய துறைகளிலும் பாண்டித்தியம் உண்டானது. தமது அறிவுகூர்மையின் காரணமாக இந்திய கணித மேதை ஆரியப்பட்டா உருவாக்கிய எண்கணித சாஸ்திரத்தை மேம்படுத்தியதன் மூலம், ஐரோப்பிய பிராந்தியம் அவற்றை இன்றளவும் அல்குவாரிஸ்மி பெயராலேயே பயன்படுத்தி வருகிறது. தமிழ்சித்தர்கள் உருவாக்கி வைத்திருந்த எண்கணித அளவீட்டை சமஸ்கிருதம் தழுவிக்கொண்டது நாம் அறிந்த விஷயமானாலும் அவை அல்குவாரிஸ்மி கைகளால் எளிமைப்படுத்தப்பட்ட சமன்பாடுகளாக மீண்டும் நம்மை வந்தடைந்துள்ளது.
சூரிய மணிக்காட்டி , ஆஸ்ட்ரோலாப்மற்றும் கடல்வழி கூறும் காம்பஸ் ஆகிய சாதனங்களை வடிவமைத்தார். அல்குவாரிஸ்மி தயாரித்த அனைத்து குறிப்புகளும் லத்தீன் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஐரோப்பா முழுவதும் பரவியது, 18ம் நூற்றாண்டின் ஐரோப்பிய கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் அவை வழிகாட்டியாக அமைந்தது. இரானின் டெஹ்ரான் நகரில் உள்ள அமிர்கபிர் பல்கலைக்கழக வாயிலில் அல்குவாரிஸ்மிக்கு வெண்கலத்தாலான சிலை ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
வரலாற்றாய்வாளர் இப்னு அல் நதீம் தமது புத்தகமான கிதாப் அல் ஃபிஹ்ரிஸ்த்தில் அல்குவாரிஸ்மி எழுதிய அனைத்து புத்தக தொகுப்புகளையும் வரிசைப்படுத்தி குறித்து வைத்துள்ளார். அதில் முதன்மையானதாகவும் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலிய நூலகங்களில் அதிகம் காணப்படும் அல்ஜிப்ரா பற்றிய புத்தகமாக இது (The Compendious Book on Calculation by Completion and Balancing) உள்ளது.
அல்ஜப்ர் எனும் அவரது கணித புத்தகம் தான் அல்ஜிப்ரா ( Hisab al-jabr w’al muqabala ) என உருமாறியது. ஹிஸாப் என்றால் கணிதம். அல்குவாரிஸ்மியின் சீடராக பின்னாளில் மற்றொரு கணித மேதையாக உருவெடுத்த அபு காமீல் அல்ஹஸீப் அல்மிஸ்ரி இருந்தார். அல்குவாரிஸ்மியின் அனைத்து கணித சமன்பாட்டு நூல்களையும் தொகுத்து வைத்தவர் இவரே.
Book of the Description of the Earth, Astronomical tables of Siddhanta – என்கிற நூலினை சமஸ்கிருத கிரந்தங்களின் துணையோடு விண்ணியல் சாஸ்திர நூலையும் இயற்றினார். அப்பாஸிய கலிபா காலத்தில் பக்தாத் நகரம் வணிகம் மட்டுமல்லாத உலக மாமேதைகளின் கூட்டிடமாக அமைந்த பைத்துல் ஹிக்மாவை வைத்து அறிவியல் வளர்ச்சி உச்சம்பெற்ற ஒரு தளமாக விளங்கியது அங்கு முதன்மை அறிஞராக அல்குவாரிஸ்மி அறியப்பட்டார். டக்ளஸ் மார்டன் டன்லப் எனும் சரித்திர பதிவாளரின் கூற்றுப்படி அல்குவாரிஸ்மி, பனூ மூஸா என்பவரின் மூத்தமகனாவார் என்றும், அவர்களுடைய குடும்பமே அறிவியல் துணைகொண்டு இயந்திர சாதனங்கள் தயாரிப்புகள் செய்யும் தொழில்கூடத்தை நடத்தி வந்தவர்கள் என கூறுகிறார்.
அல்ஜிப்ரா, திரிகோணமிதி, cartography எனப்படும் புவி வரைபடங்கள் மூலம் புவியியல் துறைக்கு புதிய பரிமாணம் கொடுத்த நவீன விண்ணியல் விஞ்ஞானி அல்குவாரிஸ்மி இஸ்லாமிய உலகிற்கு கிடைத்த ஒரு அருபெரும் பொக்கிஷமாவார்.
ரோஸி நஸ்ரத் – எழுத்தாளர்