அமெரிக்க அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்திய நிகழ்வு செப்டம்பர் தாக்குதல். அதன் பிறகான அச்சுறுத்தலை இன்றும் எதிர்கொண்டு வருகிறது முஸ்லீம் சமூகம். பெயரளவிலான ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ முஸ்லிம்களை இலக்காக்கியதையும் இஸ்லாமிய வெறுப்பை பொது விசயமாக்கியத்தையும் அனைவரும் அறிவர். ஆனால், அமெரிக்க நீதிமன்றங்களில் இதற்கான வழக்குகளில் இன்றுவரை நீதிக்காகப் போராடும் முஸ்லிம்களைப் பற்றி அறிந்திருப்பது சொற்பம்.
Rutgers Center for Security, Race and Rights ஆய்வின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் 2001ம் ஆண்டிலிருந்து போடப்பட்ட 175 முஸ்லீம் சிவில் உரிமை வழக்குகளை எடுத்துக்கொண்டோம். அதில் வெறும் 17% வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. பெரும்பாலானவை விசாரணைக்கு முன்பே நீதிபதிகளால் புறந்தள்ளப்பட்டது. 2001க்கு பிறகு முஸ்லிம்கள் பாகுபாட்டை மட்டும் அடையவில்லை, நீதி நிறுவனங்களில் அர்த்தபூர்வமான விடுதலையையும் பெறவில்லை என்பதை எங்கள் ஆய்வின் ஆரம்பத்திலேயே கண்டோம்.
இத்தகைய பெரும்பாலான மனித உரிமை மீறல் வழக்குகள் வழக்கறிஞர்கள் நியமிக்க நீதிபதிகளால் பரிந்துரைக்கப்படுகிறது. சட்டவிரோத கட்டணம் வசூலித்தாலும் அதில் வெற்றிபெறுவது ஆகாத காரியம். மனித உரிமைச் சட்டம் 1964 மத மற்றும் இனக்குழு ரீதியான பாகுபாட்டைத் தடுக்கிறது. முஸ்லிகளால் தொடுக்கப்படும் பெரும்பாலான வழக்குகளுக்கு இதைக் காரணமாக கூறப்பட்டது. ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான வழக்குகள் வெல்வது கடினமாகவே உள்ளது. காரணம், ஏற்ற தாழ்வுக்கு எதிரான சட்டங்களை நீதிபதிகள் கற்ற விதம் தொழிலாளர்கள், கண்காணிப்பாளர்கள், அதிகார வர்க்கம் போன்ற நிலைகளை வகைப்படுத்த முடியாமல் உள்ளது. ஒருவேளை, இதுபோன்ற வழக்குகளை முஸ்லிம்கள் தொடுத்தால், வழகுக்கு விசாரணைக்கு முன்பே, ‘இதனை நீங்கள் கைவிடுவது சிறந்தது. மாறாக உங்களின் கடினப்போக்கு மோசமாகவே அமையும்’ என நீதிபதிகள் ‘அறிவுரை’ வழங்குவார்கள். செப்டம்பர் தாக்குதலுக்குப் பிறகு, இஸ்லாமியர்கள் தங்கள் வழக்கைச் சமர்ப்பிக்கவே சொல்லமுடியாத சிரமத்திற்கு ஆளானார்கள். இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் அப்பொழுது தீவிரமடைந்தது குறிப்பிடத்தக்கது.
குவிதார் அலி அப்துல் காதர் வழக்கை எடுத்துக்கொள்வோம். ஏழு வருடங்கள் எவ்வித நிபந்தனையுமின்றி தனது வெள்ளிக் கிழமை வழிபாட்டிற்காக விடுப்பு எடுத்து வந்தார். திடீரென 2007ம் ஆண்டு அவரது மேலாளர் வெள்ளியன்று வேலைக்கு வர வற்புறுத்தினார். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் குவிதார் அலி. அதற்கு, உங்களது வெள்ளி வழிபாட்டினை விடுமுறை நாட்களில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அர்த்தமற்ற தீர்ப்பைக் கூறினார் நீதிபதி. சராசரியாக ஒரு அமெரிக்கத் தொழிலாளருக்கு வருடத்திற்கு 10 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு இருக்கும்போது, அதைப் பயன்படுத்த குவிதாரிடம் கோரியதில்லை என்பதையும் நீதிபதி கருத்தில் கொள்ளவில்லை.
முஸ்லிம்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு வழக்குகள் குறிப்பிடுவது, பணியிடங்களில் தீவிர வெறுப்பு கையாளப்படுகிறது. நிறுவனங்கள் இதுபோன்ற நடத்தைகளை அனுமதிப்பதன் மூலம் அது பணியிடம் முழுக்க நிறுவனமாகி பாதிக்கப்படுவபரின் பணியையே கெடுக்கிறது. இதுபோன்ற நடத்தைகளை எத்திரத்து போராடச் சட்டமே சிறந்த கருவியாக இருக்க முடியும். ஆனால், இஸ்லாமிய வெறுப்பு சொற்பிரயோகங்களை அரிதாகவே அவமதிப்பு வழக்காக நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்கின்றன. ‘தாலிபன்கள், அல்கொய்தாக்கள், செப்டம்பர் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் என்று முஸ்லிம்கள் தாக்கப்படுவது கூட நீதிமன்றத்திற்கு போதுமானதாக இல்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் அவ்வப்போதானது, பெரிதும் பணியைப் பாதிக்காதது என்று நீதிமன்றங்கள் புறந்தள்ளியிருக்கின்றன. தங்கள் மீதான அவமதிப்புக்கு முஸ்லீம் ஒருவர் எதிர்வினையாற்றினால் அதை உடனுக்குடன் நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.
முஸ்லிம்கள் வழக்காடும்போது அவர்களின் பிற அடையாளங்களைக் கூறி நீதிமன்றம் எதிர்த்துள்ளது. உதாரணத்திற்கு, எகிப்திய முஸ்லீம் ஒருவர் தன் மீதான பாகுபாட்டிற்கு வழக்குத் தொடுத்த போது, ஏற்ற தாழ்வுக்கு எதிரான சட்டத்தின்படி அவர் எகிப்தியரா அல்லது இஸ்லாமியரா என்ற எந்த இனத்திற்குள் வரையறை செய்வது எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த தனிப்பட்ட கூற்றுச் சமூக கட்டமைப்பின் எதார்த்தத்தை முற்றிலும் ஒதுக்குகிறது. இஸ்லாமோபோபியா அமெரிக்கச் சமூகத்தில் முக்கிய வெறுப்பாக இருக்கும்போது இஸ்லாமிய அடையாளத்தை எவ்வாறு முன்னிறுத்தாமல் இருக்க முடியும். மேலும், முஸ்லிம்கள் நிறவாத ரீதியாக இழிவுபடுத்தப்படும்போதும் அவர்களை வெள்ளையர்கள்- கறுப்பர்கள் என்ற சட்டகத்திற்குள்ளும் பார்க்கவில்லை.
பணியிடங்களில் மட்டும் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு நிகழவில்லை. பல்வேறு சூழல்களிலும் அப்படித்தான் உள்ளது என்பதை அமெரிக்க நீதித்துறை உறுதிப்படுத்துகிறது. முஸ்லீம் சிறைவாசிகளுக்கு ஹலால் உணவு மறுக்கப்படுவது, வழிபாட்டிடங்களில் தனியுரிமை மறுப்பு, அண்டை பகுதிகளின் ‘வரலாற்று நிலை’ பாதிக்கப்படும் என மசூதி கட்ட அனுமதிமறுப்பு போன்றவற்றை எதிர்கொள்கிறார்கள். அப்துல் ரஹ்மான் வழக்கில் தன் நம்பிக்கை சார்ந்து கொச்சைப்படுத்திய FBI எதிர்த்து முறையிடையில், நீங்கள் காயப்படும் அளவிற்கு அவர்கள் நடந்துகொள்ளவில்லை. அப்படி அமெரிக்க அரசு அதிகம் காயப்படுத்தியிருந்தால் நீங்கள் மதநம்பிக்கையைத்தான் கைவிட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அனைவரும் தங்கள் மதசுதந்திரத்துடன் இருப்பதில் அரசியலமைப்பில் தடை ஏதுமில்லை. தான் அமெரிக்கன் என்பதற்கு மதநம்பிக்கையைக் கைவிடும் அவசியமில்லை என்றார் அப்துல் ரஹ்மான்.
இங்குப் பிரச்சனை என்பது சட்டத்தில் இல்லை. மாறாக, அமெரிக்கக் கலாச்சாரம் மற்றும் ஊடகங்களால் பாதிக்கப்பட்ட நீதிபதிகளால் இஸ்லாமியர்களின் துயரை புரிந்துகொள்ள முடியவில்லை. அமெரிக்கத் தேசியத்தின் கட்டமைக்கப்பட்ட இனவெறுப்பால் துன்புறும் சிறுபான்மையினரின் மனநிலையை புரிந்துகொள்ள முடியவில்லை. செப்டம்பர் தாக்குதலின் இருபதாம் ஆண்டு நினைவிலும், அதனால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் சட்ட போராட்டங்களுக்குக் காதுகொடுக்காமல் உள்ளது அமெரிக்க ஜனநாயகம்.
சஹர் அஜீஜ் – ப்ராக்ஸ்டன் ஹேக்.
அல்ஜசீரா கட்டுரையின் மொழிபெயர்ப்பு.
தமிழில்; அப்துல்லா அஜ்மி.