இந்தியாவில் பழங்காலந்தொட்டு கல்வியறிவு பெறுவது வசதிபடைத்தவர்களுக்கும் அரசகுடும்பத்தினருக்குமானது என்கிற நிலையே இருந்து வந்தது, அதுபோல வடநாட்டு குருகுலங்களில் குழந்தைகள் படிக்க குருதட்சணையாக பெறப்படும் தொகை, சாமான்ய மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாக வழிவகுத்தது. பிராமணீய கோட்பாடுகளின்படி சமஸ்கிருத மொழி அவர்களுக்கானது மட்டுமே, அதனை அடுத்த சாதியினர் கேட்பின் கேட்டவர் காதில் எண்ணெயை காய்ச்சி ஊற்றி தண்டனை நிறைவேற்ற வேண்டும் என கடுமையான சட்டதிட்டங்கள் நிலவிய காலத்தில் தான் இந்தியாவில் அரபுகளின் பிரவேசம் நிகழ்ந்தது. அரபுகளின் ஆட்சியில் மதரஸாக்கள் வழியாக அனைவருக்கும் உணவுடன் கூடிய இலவசக்கல்வி கொடுக்கப்பட்டது என்கிற உண்மை நம்மில் பலருக்கும் கூட அறிவிக்கப்படுவதில்லை. குருகுலத்தை போல குருக்களுக்கு தட்சணையோ அல்லது அவரது குடும்பத்திற்கு எடுபிடி வேலையோ கூட செய்யத்தேவையில்லை.
இந்தியாவில் மதரஸாக்களின் தொடக்கம்:-
இந்தியாவில் எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே அரபு அரசர்களின் (உமைய்யத் கலிபாக்கள்) எல்லைதாண்டிய விரிவாக்கத்திற்கு இலக்காகிய பிராந்தியம் என்றால் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தை கூறலாம். கிபி.712 – 740 வரையிலான ஆண்டுகளில் சாளுக்கிய மற்றும் குஜராத்தின் பிரதிஹர ஆட்சியாளர்களிடமிருந்த நிலப்பகுதிகள் உமைய்யத்துகளின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டுக்கொண்டிருந்தது. கடல்வழியாகவும் தங்களது ஆதிக்கத்தை செலுத்திய சில அராபியக் கிளை அரசுகள் (சூம்ராக்கள் மற்றும் சம்மாஸ்கள்) முஸ்லிம் ரஜபுதன ஆட்சியையும் நிறுவியிருந்தார்கள்.இப்போதும் கூட குஜ்ஜார்களிலும் , ராஜ்புத்களிலும் முஸ்லிம் பழங்குடிகள் நீடிப்பது இவர்களால் தான்.
கிபி.1206 ல் டெல்லி சுல்தானியம் உருவாகி பிறகு இந்தியாவின் வடக்கத்திய பகுதி முழுவதுமே இஸ்லாமிய ஆட்சி நிறுவப்பட்டிருந்தது. இந்தியா எனும் போது அதன் எல்லை ஆப்கான் முதல் பர்மாவின் அரக்கைன் மலை வரையிலுமாகவும், ஒட்டுமொத்த இஸ்லாமிய கலிபாக்கள் என்பது ஸ்பெயினின் அனடோலியா முதல் வடக்கில் சீன உய்குர் தொட்டு, இந்துகுஷ் மலை தழுவிய மங்கோலிய ஆட்சியுடன் கிழக்கில் பர்மாவின் அரக்கைன் மலைத்தொடர் முழுவதுமாக இஸ்லாமிய ஆட்சி பல துருக்கிய,அரபிய,மங்கோலிய மற்றும் ஹபஷியர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. ஆங்காங்கு சன்னி,ஷியா,சூபி மற்றும் நிறைய ஹனஃபியாக்களின் தரீக்கத்துக்கள் தத்தமது இமாம் வழியில் பள்ளிவாசல்களும் மதரஸாக்களும் நிர்வகிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால் டெல்லி சுல்தானியத்திற்கு பிறகான முகலாய ஆட்சிக்காலத்தில் ஆப்கான்,பாகிஸ்தான், இந்தியா மற்றும் பெங்கால் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நிலையான இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில் நிறுவப்பட்டது. ஆனாலும் பெங்கால் சுல்தானேட் என்பது ஆப்கானிகளின் சூபிய ஆட்சியில் தனது தனித்தன்மையை நிரூபித்துக்கொண்டிருந்தது. முகலாய மன்னர் பாபரால் பெங்கால் முஸ்லிம் சுல்தானேட்டை நெருங்க கூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெங்கால் முஸ்லிம் சுல்தானேட் என்பது தற்போதைய பிகார், ஒரிஸா,மேற்கு வங்கம், அஸ்ஸாம் முதலான பர்மாவின் அரக்கைன் மலை வரை இருந்த ஒரு வலுவான ஆப்கானிய வம்சத்தினரின் ராஜ்ஜியம். கிபி 1204 – 1757 வரையிலும் பெங்கால் முஸ்லிம் ராஜ்ஜியத்தில் அங்கமாக இருந்த பல முஸ்லிம் ராஜாக்களும் அங்கிருந்த சிற்சிறிய மதரஸாக்களை தரம் உயர்த்தி வந்தனர்.
ஒவ்வொரு பள்ளிவாசலும் குழந்தைகளுக்கான ஆரம்பக்கல்வி போதிக்கும் மக்தபுகளை உள்ளடக்கியதாகவே இருக்கும். ஆனாலும் உயர்கல்வி மற்றும் ஃபிக் – ஷரியா படிக்க இராக்கின் பக்தாதில் உள்ள அந்நிஸாமியா பல்கலைக்கழகத்திற்கு செல்ல வேண்டும். நிஸாமியா பல்கலை என்பது கிபி.1065ல் செலுக்கிய ராஜ்ஜியத்தில் அமைக்கப்பட்ட ஒரு மாபெரும் பல்கலைக்கழகம் ஆகும். இதனை உருவாக்கியவர் நிஸாம் அல்’முல்க் எனும் ஓகூஸ் அரசின் அமைச்சராவார். ஓகூஸ் வம்சத்தினர் வசம் இருந்த மத்திய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளின் பகுதி செலுக்கிய அரசு எனப்பட்டது. இவரும் இவரது சகாவான மற்றொரு அமைச்சரான தாஜ் அல்’முல்க் என்பவருமாக இணைந்து இந்த இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை நிறுவினர். இவர்கள் இருவரும் முதலாம் மாலிக்ஷா எனும் செலுக்கிய அரசரின் அந்தரங்க ஆலோசகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களாக இருந்து சிறப்புடன் செயலாற்றியவர்கள். இஸ்லாமிய பொற்கால விஞ்ஞானிகளில் ஒருவரும் தத்துவஞானியுமான அல்’கஸாலி அவர்களின் தலைமையில் சுமார் 3,000 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மாணவர்களை கொண்டு அந்நிஸாமியா பல்கலையை நிறுவினர். அந்நிஸாமியா பல்கலைக்கழக தலைமைப்பொறுப்பேற்கும் போது அவருக்கு வயது 33 மட்டுமே.
ஏழாம் நூற்றாண்டில் உருவான பைத்துல் ஹிக்மா பல தடவையும் மங்கோலிய படையெடுப்புகளால் சீரிழந்து போய், அரும்பாடுபட்டு சேகரிக்கப்பட்ட கண்டுபிடிப்ப நூல்களை கிளர்ச்சியாளர்களிடம் பறிகொடுத்தும் தனது அடையாளத்தை கொஞ்சம் இழந்திருந்த நேரமது. நிஸாம் அல்முல்க் அவர்களின் சீரிய முயற்சியில் மீண்டும் அதேபோலொரு சர்வதேச பல்கலைக்கழகம் உருவானது. அங்கு படித்த மாணவர்களில் பலர் பின்னாளில் ராஜ்ஜியங்களை ஆளும் ராஜாக்களாகவும், சட்டமியற்றும் மேதைகளாகவும் மாறினர் என்பது வரலாறு.அங்கு பயின்ற மாணவர்களில் வசதி படைத்தோர் தத்தமது நாடுகளுக்கு திரும்பிய நிலையில் அங்கே மதரஸாக்களை தோற்றுவித்து அவர்களது சொந்த செலவில் மாணவர்களுக்கு இலவச கல்வி கொடுக்க தொடங்கினர். அவ்வாறு உலகம் முழுக்கவும் உருவான மதரஸாக்களை இன்றளவும் அந்’நிஸாமியா மதரஸா என்று பொதுப்பெயர் கொண்டே அழைக்கின்றனர். நிஸாமியா பல்கலையில் பயின்ற அனைத்து மாணவர்களுக்கும் அவர் தேர்ந்த விதத்தை வைத்து ஒரேயொரு பட்டம் மட்டுமே வழங்கப்படும் அதற்கு பெயர் “இஜாஸத்” அதாவது அனுமதி. இந்த பல்கலையில் கற்றுத்தேர்ந்த இவர் மற்ற மாணவருக்கு கல்வி படிப்பிக்க தகுதி பெற்று நிஸாமியா பல்கலையால் அனுமதிக்கப்பட்டவர் என்ற பொருள்படும்படியான ஒரேயொரு சான்றிதழ் மட்டுமே அப்போது வழங்கப்பட்டது.
இந்தியாவில் இருக்கும் மதரஸாக்களில் மிகவும் புராதானமானது என்றால் 1761ல் தென்னத்தின் முதல் மதரஸா என பெயர்பெற்ற சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளிவாசல் வளாகத்திற்குள் நடைபெற்ற சிறிய மதரஸா தான் பிறகு மதரஸா இ ஆஸமாக ஆற்காடு நவாப்களின் பேருதவியால் கட்டிட வடிவம் எடுத்தது. ஆனால் மதரஸாவிற்கென தனிக்கட்டிடம், மாணவர் விடுதி, இமாம்கள் குடியிருப்பு, போன்ற நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பெங்கால் சுல்தானேட்டால் வழிவழியாக நடத்திவரப்பட்ட ஆலியா மதரஸா தான் இந்தியாவின் முதல் மதரஸா என்கிற பெருமையை பெறுகிறது. இந்தியாவின் மிகப்பழமையான 230 வருட பாரம்பரியத்தை உடைய மதரஸாவான கல்கத்தா மதரஸா அல்லது ஆலியா மதரஸா எனப்படும் அது கட்டப்பட்டது 1781ல் ஆகும். அப்போது அது ஆசியாவிலேயே முதல் மதரஸா என்கிற சிறப்பு பெயரையும் பெற்றிருந்தது.
1857ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி படைகளிடம் இந்திய ராஜாக்கள் தோற்றிருந்த காலகட்டத்தில் அவர்கள் நிறைய ஆங்கில பாடசாலைகளை நிறுவத்தொடங்கியிருந்தனர். ஆனால் இஸ்லாமிய மக்களால் மதரஸாக்களை விட்டு வெளியேறி ஆங்கில வழிக்கல்வியை கற்க கூடாது என்கிற தீவிர நிலை பரவி இருந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நினைத்த பிரிட்டிஷ் அரசின் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட லார்ட் வாரன் ஹேஸ்டிங்ஸ். அவர் எழுப்பிய ஆங்கில வழி கல்விக்கூடங்களில் இஸ்லாமிய மார்க்க பாடங்களையும் ஒரு சிலபஸாக சேர்த்தார். கிபி.1870ல் மே.வங்கத்தில் அரசு சார் கல்வி நிலையங்களில் மதரஸா கல்வி கொடுக்கும் திட்டம் அமலானது. இந்நிலையில் தான் பிரிட்டிஷாருக்கு மிக நெருக்கமாக இருந்த சர்.சையது முஹம்மது கான் அவர்களும் 1875ல் ஆங்கிலவழி பாடங்களை உள்ளடக்கிய சிலபஸோடு செயல்படும் Muhammadan anglo oriental collegeஐ நிறுவினார்.
ஆனால் அதற்கு முன்பிருந்து கிபி.1866ல் இருந்து ஹனபியா வழியில் , உபி மாநிலம் தியோபந்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டிருந்த தாரூல் உலூம் மதரஸா இமாம்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு ஆங்கிலேயரின் இச்செயலில் திருப்தியில்லை. எனவே இதற்கு முன்பிருந்த வகையிலிருந்து மிக தீவிரமாக பல மதரஸாக்களை உருவாக்கி முஸ்லிம் மாணவர்களை குர்ஆன் கல்வியை விட்டு விளக்கி வைத்துவிடக்கூடாது என ஆர்வமாக செயல்பட்டனர். இன்றும் கூட பல புராதான மற்றும் அதிக மதரஸாக்கள் செயல்படக்கூடிய இந்திய மாநிலமாக உத்திரபிரதேசம் உள்ளது. அதற்கடுத்த நிலையில் பிஹார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் அதிகளவு மதரஸாக்களை காணலாம். புகழ்பெற்ற மதரஸாக்களும், பெயர் பெற்ற மதரஸாக்களும் நிறைந்தது இம்மூன்று மாநிலங்களும் தான். அதற்கடுத்த நிலையில் டில்லி,குஜராத் மற்றும் தக்கானத்தில் கர்நாடகா மற்றும் கேரளாவில் அதிக மதரஸாக்களை காண முடியும்.
1866ல் தியோபந்தில் தாருல் உலூம் சார்பாக ஒரேயொரு மதரஸா உருவான பிறகு
1876ல் நிஸாமியா , ஐதராபாத் நிஸாம்களின் சார்பாகவும்,
1898ல் முபாரக்பூரில் அல்’ஜாமியத்துல் அஷ்ராபியா மதரஸாவும் உருவாயின. இந்த மூன்று மதரஸாக்களை, பல்கலைக்கழகத்தின் தகுதியுடையதாக எடுத்துக்கொண்டு இவற்றிற்கு கீழ் இந்தியா முழுக்க பல மதரஸாக்களை தோற்றுவித்தனர். இந்த பெருமை ஹனபியாக்களையும், தியோபந்திகளையும், சலபுகளையும், பரலேவிகளையுமே சேரும். வடக்கில் தாருல் உலூம் மற்றும் நத்வியா மதரஸாக்கள் தான் இந்தியாவிலேயே தலைசிறந்தவை என்கிற பெயரினை பெற்றிருப்பது பேல கேரளாவின் மஞ்சேரியில் உள்ள நுஸ்ரத்துல் இஸ்லாம் எனும் மதரஸா தென்னிந்தியாவில் தலைசிறந்த மதரஸா என்கிற பெருமையை பெற்றுள்ளது.
1947ல் இந்தியா முழுக்க வெறும் 88 மதரஸாக்கள் மட்டுமே இருந்தன. ஆனால்
2003ல் அவை 5 லட்சம் மதரஸாக்களாக எண்ணிக்கையில் உயர்ந்துள்ளன. Farangi Mahal (Lucknow), Dar-al-Ulum (Deoband) and Nadwat-al-Ulama ( Lucknow)
மூன்று தலைசிறந்த மதரஸாக்களும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டவை.
இந்தியர்களில் சராசரியாக முஸ்லிம் பெற்றோர்களில் சரிபாதி பேர் இன்னும் மதரஸாக்களில் தான் தங்களது குழந்தையை சேர்க்கின்றனர். இதில் ஏழை, இலவச உணவு இதற்காக தான் மதரஸாவில் சேருகிறார் என்பதல்லாம் குருட்டு நம்பிக்கை. பல பணக்கார வீட்டு பிள்ளைகளும் , வெளிநாட்டு வாழ் வசதிபடைத்த இந்தியர்கள் வீட்டு குழந்தைகளும் கூட கர்நாடக மற்றும் கேரளாவிலுள்ள பாரம்பரிய மதரஸாக்களில் வந்து ஆரம்பக்கல்வி தொடங்கி பத்தாவது வரை படித்துவிட்டு செல்கின்றனர். ஆங்கில வழி கல்விக்கு அடிமைப்பட்டு, வெளிநாட்டு மோகத்தால் தங்களது பிள்ளைகளை இஸ்லாமிய கல்வி நிறுவனமல்லாது வேறு உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளில் சேர்ப்போரை இஸ்லாமிய உலக தனவந்தர்கள் பலர் , மார்க்க கல்வி மீது அவர்களுக்கு இருக்கும் குறைமதிப்பீட்டை நினைத்து கவலையுறுகிறார்கள்.