சில நாட்களுக்கு முன்பாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கேடி ராகவன் தொடர்பான ஒரு காணொளி வெளியானது. அதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளுக்குப் பின்னால் கே.டி. இராகவன் தன் பொறுப்பை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக சில முற்போக்கு எழுத்தாளர்கள்,
இது ஒரு தனிநபர் தொடர்பான விஷயம் என்றும் பாலியல் உறவுகளில் ஈடுபடுவது சம்பந்தப்பட்ட இருவரது தனிப்பட்ட உரிமை என்றும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.
பொதுவாக இன்றைக்கு தனிநபர் ஒழுக்கம் என்பது ஒரு
கவனத்திற்குரிய பெரிய விஷயம் இல்லை என்பதுதான்
நவீனத்துவ பின்னணியிலிருந்து பேசுபவர்கள் கருதுகிறார்கள்.
கேடி ராகவன் விஷயத்தில் காணொளி ஒன்று வெளியானது காரணத்தினால் அவருடைய ஒழுக்கம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இன்றைய நவீனத்துவ உலகில் பலரது மறைவு வாழ்க்கையில் ஒளிப்படக் கருவிகள்
வைக்கப்படுமானால் பல அரசியல் தலைவர்களது வாழ்க்கையும் இதிலிருந்து விதிவிலக்கான ஒன்றாக இருக்காது.
தன்னொழுக்கமில்லாத தலைவர்களைக் கொண்ட நாடாகத்தான் இந்தியா இருந்து கொண்டிருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதிலும் குறிப்பாக சங்பரிவார் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் படுமோசமாகவே உள்ளார்கள் என்பது வெட்ட வெளிச்சமான ஒன்று. ஓரினச்சேர்க்கை தவறில்லை என்று சொன்ன ஆர்.எஸ்.எஸ்ஸின் பொதுச்செயலாளர் வார்த்தைகளே அதற்குச் சான்று.
குஜராத் பாலைவனப் பகுதியில் பெண்களூரைச் சேர்ந்த பொறியியல் மாணவியுடன் கூடாரத்தில் திருவாளர் மோடி ஒன்றாக இருந்தார். ஒட்டகத்தில் ஒன்றாக பயணித்தார் என்ற உண்மையைச் சொன்னதற்காகத்தான் சஞ்சீவ் பட் சிறையில் உள்ளார் என கூறப்படுகிறது.
மேகாலயா ஆளுநர் மாளிகையை விபச்சார விடுதியாக மாற்றிய சண்முகநாதன், நிர்மலா தேவி விஷயத்தில் தொடர்புடையவர்கள்…. என்று சங்பரிவார் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள்தான்.
அவர்கள் மட்டுமல்ல, திராவிட, நாத்திக கருத்தியல் பின்புலம் கொண்ட பலரது தனிப்பட்ட வாழ்க்கையும் இதில் விதிவிலக்கான ஒன்றல்ல. பல ஆன்மீகவாதிகளும் இதில் உண்டு. நித்தியானந்தாவும் பிரேமானந்தாவும் ஆசிபாபவும் பி. ஜைனுல் ஆபிதீனும் கன்னியாஸ்திரிகளை கர்ப்பிணிகளாக்கும் பாதிரியார்களும் உட்பட பலரது கதைகளும் நாம் அறிந்ததுதானே. பலரது படுக்கையறைக்குள்ளும் இரகசிய கேமராக்கள் இல்லாததால் தப்பிப் பிழைத்து வருகின்றனர் என்பதே உண்மை.
இவற்றை தனிநபர் உரிமை ஒழுக்கம் சார்ந்தது என்று நம்மால்
ஒதுக்கி செல்ல முடியுமா என்பதுதான் இங்கே முதன்மையான கேள்வியாக நம் முன்னால் இருக்கிறது.
கே.டி. ராகவனால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்ட பெண்மணி, கே.டி.இராகவன் எந்தவித அதிகாரமும் இல்லாத நபராக இருந்திருப்பாரானால் இராகவனின் கோரிக்கைக்கு இந்தப் பெண்மணி இணங்கி இருப்பாரா என்பது சந்தேகம் தானே?
ஆகவே இன்றைக்கு அதிகார மட்டத்தில் இருப்பவர்களால்
பெண்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
தன்னளவில் ஒழுக்கங்களை கடைபிடிக்க முடியாதவர்கள்
எவ்வாறு சமூக ஒழுக்கங்களை கடைபிடிக்க முடியும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
தங்களை நம்பி கட்சிக்குள் சமூக அமைப்புகளுக்குள் பணியாற்ற வரும் பெண்களை சுரண்டும் அவர்கள் இந்த சமூகத்தையும் சுரண்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை நம்மால் தந்துவிட முடியும்?
ஏதாவது ஒரு இடத்தில் சாதாரண மனிதன் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கின்றனர் எனில் அவற்றைத் தவறு என்கின்றோம். ஆனால் அதுவே அதிகாரங்களை பயன்படுத்தி பெண்கள் சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்ற அவற்றைத் தனிநபர் உரிமையாக, பரஸ்பரம் புரிதல் அடிப்படையில் செய்யப்படுவதால் அவற்றை தவறு இல்லை என்று உரிமை முழக்கம் பேசுகின்றோம். இது எவ்வளவு முரண்பாடான ஒன்று.
அவ்வாறானால் புரிந்துணர்வின் அடிப்படையில், பரஸ்பரம் சம்மதத்துடன் செய்யப்படும் இலஞ்சங்களும் ஊழல்களும் குற்றமற்றதாகத்தானே பார்க்க வேண்டும்.
தன்னுடைய இருப்பை தக்க வைப்பதற்காக அல்லது தனது வாழ்வியல் சூழலில் நெருக்கடி காரணமாகவே அந்தப் பெண்கள்
தங்களை இழக்கத் துணிக்கிறார்கள் என்பதுதானே இதற்கு பின்னால் இருக்கக்கூடிய உண்மை. அந்தப் பெண்களின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை, ஆசைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் சுரண்டல்களை எந்த அடிப்படையில் நியாயப்படுத்த முடியும்? என்பதை நவீனத்துவ தனிமனித உரிமையாளர்கள் விளக்க வேண்டும்.
திருமண ஆசைகளைக் காட்டி பெண்களைச் சுரண்டுகின்ற பொழுதும் அங்கே இருவருடைய ஒத்துழைப்போடுதான்
பாலியல் உறவுகள் மேற்கொள்ளப்படுகிறது. அங்கே ஏமாந்து போவதும் பெண்கள் தானே?
ஆகவே பெண்களின் மீதான சுரண்டல் போக்கை தனிநபர் உரிமைகள், ஒழுக்கம் தொடர்பானது என்று ஒதுக்கிவிட்டு பயணிக்க முடியாது. காலா காலங்களில் சமூக மாற்றங்களுக்கான பணிகளில் பெண்கள் ஈடுபட முனைகின்ற பொழுது இதுபோன்ற நிகழ்வுகள் அவர்களின் வருகையை தடுத்து நிறுத்தவே செய்யும். இவ்வாறான போக்குகள் களத்துக்குள் இருக்கும் பெண்கள் மீதான தவறான எண்ணங்களை உருவாக்குவதற்கு துணைபோகும்.
அதிகாரங்களைப் பயன்படுத்தி பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாகதான் சமூகக் களத்தில் இருக்கும் பெண்களுக்கும் அவர்களது வீட்டாருக்கும் நம்பிக்கை ஏற்படும்.
தனிநபர் ஒழுக்கம் உள்ளவர்களால் மட்டும் தான் சமூக ஒழுங்கையும் காப்பாற்ற முடியும். கட்டமைக்க முடியும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.