ஏகாதிபத்திய ஏவல் படைகளும் காந்தியின் அகிம்சையும்
தப்பும் தவறுமாக கணக்கு சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரிடம் பயிலும் மாணவன் கணக்குப் பாடத்தை குத்திக் குதறாமல் என்ன செய்வான்? ஆயுதங்களைக் கொடுத்து ஊக்கவிக்கப்பட்ட கும்பல் எந்த பகுதியில் சமாதானம் பேச வந்திருக்கிறது? இந்திய சுதந்திரப் போரில் கூட ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்கள் வலுவிழந்தது காந்தியின் கொள்கைப் பிடிப்பாலும் அவருக்கிருந்த மக்கள் செல்வாக்கால் மட்டுமே. காந்தியின் அகிம்சை என்பது வெற்று போதனையல்ல. களத்தில் நிற்பதை தனது கடமையாக அவர் கருதினார். அதனால் அவரது அகிம்சை எல்லோருக்கும் பாடமானது. கலவரங்களுக்காக பணத்தாசை காட்டி ஏதிலிகளை, அடிதட்டு மக்களைக் காலாட் படைகளாக பாவித்துவிட்டு அரசியல் ஆதாயத்தை அடைபவர்களை முற்றிலும் விடுவித்து விட்டு காலாட்படைகளுக்கு சமத்துவ – சகோதரத்துவ காலட்சேபம் நடத்துவதால் ஏதாவது பயனிருக்க முடியுமா? உரிமைகளுக்கு போராடுகிறவர்களை மட்டும் குறிவைத்து “ஆயுதமில்லாத உலகம்” என்ற பாடத்தை நடத்துபவர்களைப் பார்க்கும்போது காந்தியின் அகிம்சை பரிதவித்துப் போகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியில் முஸப்பர்நகரில் நடந்த கலவரத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டபோது, காந்தி சொன்ன அறிவுரை: “போங்கள்.. கலவரக்காரர்கள் மத்தியில் போய் நில்லுங்கள். முடிந்தால் அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்.. தப்பித் தவறி கூட எங்கள் முயற்சியில் தோற்றுவிட்டோம் என்று சொல்ல உயிரோடு திரும்பாதீர்கள். இந்த சூழல் சமுதாயத்தின் மேல்மட்டத்தில் – உயர்பதவியில் இருப்பவர்களிடம் உயிர்த்தியாகத்தை எதிர்பார்க்கிறது“ என்பதே. உலகை நல்வழிபடுத்தும் கடமையும் பொறுப்பும் ஆற்றலும் அதிகாரமும் பெற்றவனிடம் தான் அதிகமாக இருக்கிறது. அப்படிபட்ட வல்லாண்மைமிக்க அமெரிக்கா உலகெங்கும் நாச வேலைகளில் ஈடுபடுகிறது. அவர்கள் உருவாக்கும் காலாட்படைகள் உலகில் அகிம்சையைக் கடைபிடிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அவர்களை மட்டுமே குறிவைத்து நாம் அரசியல் பேச தலைப்படுகிறோம். எப்பேர்ப்பட்ட நகைச்சுவை இது?
காந்தியின் உயிர்த் தியாகம் அவரது அகிம்சை கொள்கையை இந்திய மண்ணில் உயிரோட்டமாக நிலைபெறச் செய்தது. அதை அவர் உலகுக்கு பெருங்கொடையாக அளித்தார். இன்றைக்கு பெருலாப நோக்கம் கொண்ட வல்லரசுகள் உலகிற்கு வன்முறையை – இரத்தத்தை – உயிர்வாதையை தொடர்ந்து பரிசாக வழங்குகிறார்கள். காந்தியின் உயிர்த் துடிப்பை மன்டேலா, மார்ட்டின் லூதர் போன்றோர்கள் உள்வாங்கி பெரும் வெற்றி பெற்றார்கள். புஷ்ஷின் நரபலி படையலுக்கு முல்லா உமர்கள் புரோகிதர்களாக மாறி பெருந் தோல்வியைத் தழுவுகிறார்கள். கொள்கைக்கான காந்தியின் அர்ப்பணிப்பு அவரிடம் இல்லாமல் போயிருந்தால் அந்த கொள்கையே வாழ்ந்திருக்காது. ‘காந்தி என்ன சொன்னார்’ என்ற நூலை எழுதிய நார்மன் ஃபிங்கல்ஸ்டீன், “.அண்ணலின் அகிம்சை மீது நாம் ஒரு விமர்சனத்தை வைக்க முடியும் என்றால் அவர் அகிம்சைவழி போராட்டத்திற்கான வீரத்தின் அளவுகோலை சாமான்ய மனிதர்கள் எட்ட முடியாத உயரத்தில் வைத்திருந்தார் என்பதே. அந்த உயரத்துக்கு மனிதர்களைக் கொண்டு செல்ல அவர் தொடர்ந்து பாடுபட்டார் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இன்றைக்குள்ள தலைவர்கள் உலக வளங்களைச் சுரண்டுகிறார்கள். கொள்கைவாதிகள் வெறுமனே உபதேசிக்கிறார்கள். அடக்குமுறைக்கு எதிராக மக்களை நிறுத்திவிட்டு – ஒரு வேளை வெற்றி வந்தால் ஓரத்தில் நின்று அகிம்சை வென்று விட்டது என்று ஆரத்தி எடுக்கிறார்கள். காந்தியின் அகிம்சை என்பது வீரம் செறிந்த போராட்டம். ஆதிக்க சக்திகளை கிடுகிடுத்த வைத்த யுத்தம். விதியை எதிர்நோக்கும் நொந்தவனின் கையாலாகாத எதிர்பார்ப்பல்ல அது. அதனால்தான் “அகிம்சை வழியை நீங்கள் கோழைத்தனமாக எண்ணி வரும் முடிவை நோக்கி சரணடைந்தால், அதைவிட நான் வன்முறையை கையில் எடுப்பதையே விரும்புவேன்” என்றார் அந்த மகாத்மா..
இன்றிருக்கும் வன்முறை அமைப்பில் ஒரு வேளை அகிம்சையின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் கூட எதிர்தரப்பு அகிம்சை போராளிகள் மீது பிரயோகித்த ஆயுத வன்முறையினால் எழும் சர்வதேச எதிர்வினையை சமாளிக்கும் ஆறுதல் பரிசாகத்தான் நடந்தேறும் வாய்ப்புள்ளது. சனநாயகத்தைக் காப்பாற்ற உலகெங்கும் புறப்படும் அமெரிக்கா ஒன்றுக்கு நூறு மடங்கு ஆயுதங்களைத் தூக்கிப் போட்டுக் கொண்டு தான் தோள்தட்டி புறப்படுகிறது. உரிமைக்காக போராடுபவர்களை வன்முறையாளர்கள் என்றும் அதை கொடுமையாக நசுக்குபவர்களை அரசியல் ஞானி (statesman) என்றும் பார்க்க நாம் பயிற்றுவிக்கப் பட்டுள்ளோம். அமைதி, அகிம்சை, ஒத்துழையாமை எல்லாவற்றையும் நாம் ஆயுதங்களுக்கு மத்தியில் தான் பேச வேண்டியதாக இருக்கிறது.. எல்லாம் சாந்தி – சமாதானமாகவே கிடைக்கப் பெற்றதாக நம்புவதும் அதையே பரப்புவதும் ஆதிக்க நலன்களுக்கான பாவனையாகவே அமைந்து விடுகிறது. வலுத்தவன் எதையும் இலகுவாக தந்ததில்லை; இளைத்தவன் எதையும் இழக்காமல் பெற்றதில்லை என்பதே நமது அரசியல் பாலபாடம். இறுதியாக தாலிபான்களின் ஒடுக்குமுறை எந்த நன்மையையும் விளைவிக்கப் போவதில்லை. அதிலும் தனது குடிமக்களுக்கே பாதுகாப்பு வழங்காத ஆட்சியை சித்தாந்த வழிபட்ட ஆட்சி என்று எந்த கிறுக்கனும் ஒத்துக்கொள்ளமாட்டான். அந்த விதத்தில் தாலிபான்கள் அமெரிக்கர்களை விட கொடூரர்கள். அமெரிக்கர்களாவது தங்கள் சுயநலத்திற்காக மற்ற மக்களைத்தான் வேட்டையாடுகிறார்கள். அமெரிக்கர்களின் ஏவல் படையான தாலிபான்களிடம் அகிம்சை என்பது காளை மாட்டில் பால் சுரப்பதாகும். எனவே தாலிபான்கள் அமைதி வழிக்குத் திரும்புவதெல்லாம் அதீத எதிர்பார்ப்பு. அமெரிக்க கொடூரத்தை பழிதீர்க்க தாலிபான் எனும் இன்னொரு கொடூரத்தை கண்டிப்பாக நாம் ஆதரிக்க முடியாது.. அப்படி கண்ணுக்குக் கண் என்று கிளம்பினால் நாடே குருடாகிவிடும் என்று சொன்ன காந்தியின் கட்சிதான் நாமும். ஆனால் இங்கே கொடூரர்களை நிர்மூலமாக்க புறப்பட்டவன் அப்படியே அவனை விட்டுவிட்டு கொடூரம் போகவில்லை என்று அங்கலாய்க்கிறான்.. உலகத்தின் வல்லரசுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்தும் தான் உருவாக்கிய ஆயுதப்படையை அழிக்க வழியின்றி நாட்டை அவர்கள் (வன்முறைக் கும்பல்) வசமே ஒப்படைத்துவிட்டு வேதாந்தம் பேசுகிறான். அந்த யதார்த்த்த்தை உள்வாங்கியே ஒரு முஸ்லிம் தாலிபான் பிரச்சினையை அணுகுகிறான்.
இஸ்லாமிய ஆட்சி எனும் கற்பிதம்
இன்றைக்கு உலகிலுள்ள 45 முஸ்லிம் நாடுகளில் எந்தவொரு தேசத்திலும் இஸ்லாமிய ஆட்சி நடைபெறவில்லை. ஒரு சில நாடுகளில் அரை இஸ்லாமிய ஆட்சி நடைபெறுகிறது. பெரும்பான்மை நாடுகள் “மேற்கிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குடிமக்களின் முதுகில் சவுக்கால் அடித்துக் கொள்ளையடிக்கும் ஆட்சியாளர்களை; மேற்கின் தேசிய-அரசு வடிவத்தைப் பிரதியெடுக்கும் அரசமைப்புகளை; மேற்கத்திய முதலீட்டியத்தை அப்படியே பின்பற்றும் சந்தைகளை கொண்டிருக்கின்றன. ஆனால் மேற்கின் வளர்ச்சி இல்லை, மேற்கின் ஜனநாயகம் இல்லை, மேற்கு முன்னிறுத்தும் கண்ணியம் இல்லை” என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் ஐயாத் அல் பக்தாதி. நிலைமை இப்படியிருக்க பழமைவாத சுயநல ஆட்சியைக் கட்டமைக்கும் ஒரு குறுங்குழு சர்வாதிகாரத்தை இஸ்லாமிய குடியரசாக கட்டமைப்பதின் மூலம் ஒட்டுமொத்த முஸ்லிம் உலகை உடந்தை சாட்சியாக (Approver) மாற்றத் துடிக்கிறார்கள். காப்பாற்றப்பட வேண்டிய தூய்மைவாத இஸ்லாம் என்ற ஒற்றை கருத்தியல் மற்ற இனக்குழுக்களைக் காட்டிலும் தாலிபான்களை தீவிர போராட்ட சக்தியாக மாற்றுகிறது. ருஷ்ய நாத்திகர்களுக்கு எதிராக அமெரிக்காவால் மதபோதை ஊட்டப்பட்டு நிறுத்தப்பட்ட அவர்களை அமெரிக்கா கச்சிதமாக பயன்படுத்தியது. தீவிர வாகாபியிசம் தான் அவர்களுக்கு மத்தியில் புழக்கத்தில் இருந்த இஸ்லாமியம். அதிலும் வகாபியிசம் போலவே ஆட்சிக்கு வந்தவுடன் தங்கள் எதிரிகளிடம் மட்டுமே அதிகமாக இஸ்லாம் பேசினார்கள். இஸ்லாமிய தண்டனைகளை நடைமுறைப் படுத்தினார்கள். தங்களுக்கான ஆதரவு – அநுகூலம் என்று வரும் இடங்களில் இஸ்லாத்தை ஓரங்கட்டினார்கள். தாலிபான் அரசின் பொருளாதாரம் ஹெராயின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் தான் வீற்றிருந்தது. அனைத்து முஜாஹிதீன் குழுக்களும் ஏதாவது ஒரு விதத்தில் இதில் தொழில் பட்டிருந்தனர். இது எந்த அடிப்படையில் இஸ்லாமிய ஆட்சியாக அமைய முடியும். (இப்போது இந்த போதை மருந்து தொழில் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்). நம் பார்வையில் இஸ்லாமிய ஆட்சி என்பது தமக்கும் தன் எதிர்தரப்புக்கும் நீதமாக நடந்து கொள்வதைத் தவிர வேறொன்றில்லை.. அத்தகைய ஆட்சிகளை வரலாறு கண்டிருக்கிறது. அப்படி அல்லாமல் கட்டமைக்கப்படும் சுயநல ஆட்சிபீடங்களில் இஸ்லாமிய ஆட்சி என்ற தரப்பெயரை ஒட்டிவிடுவதால் முஸ்லிம்கள் முகங்கொடுக்க நிர்பந்திக்கப் படுகிறார்கள். இந்தியாவில் நடைபெற்ற மொகலாய ஆட்சியையே முஸ்லிம்கள் இஸ்லாமிய ஆட்சியாக ஏற்பதில்லை. அந்த தெளிவு அவர்களிடம் இருக்கிறது. ஓர் ஈராக்கிய எழுத்தாளர் ஒருமுறை சொன்னார்: “உங்களுக்கு என்ன மாதிரி அரசியல் அமைப்பு வேண்டும் என்று முஸ்லிம்களிடம் வாக்கு நடத்தினால், அவர்கள் இஸ்லாமிய அமைப்புக்கு வாக்கு செலுத்திவிட்டு ஏதோ ஒரு மேற்கத்திய நாட்டில் வாழச் சென்றுவிடுவார்கள்”. எங்கள் மக்களுக்கு இரண்டுமே வேண்டும். அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தவும், வளமாகவும் கண்ணியமாகவும் வாழ்வதற்கும் அவர்களுக்கு இரண்டுமே வேண்டும் என்பதே நிதர்சனம். இந்த அடையாள நெருக்கடியில் தான் அவர்கள் தவறிழைக்கும் ஆட்சிக்கு மட்டும் பொறுப்பேற்கும் அவலநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். எங்காவது ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் ஏதாவது முன்னேற்றம் நடந்துவிட்டால் “இதோ பாருங்கள் இஸ்லாமிய ஆட்சியின் சாதனை” என்று யாரும் சொல்வதில்லை.
உள்ளும் புறமுமாக ஒரு முஸ்லிமை பாதிக்கும் எத்தனையோ விஷயங்களில் தாலிபானும் ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. தாலிபான்களின் வளர்ச்சி, செல்வாக்கில் ஊடாடிய பல்வேறு கரங்களை – சர்வதேச தாக்கங்களைப் பேசுவதற்கு ஒரு முஸ்லிமல்லாதவனுக்கு என்ன வகையான உரிமை – கருத்து சுதந்திரம் உள்ளதோ இவை ஒரு முஸ்லிமுக்கு உள்ளதை யாரும் தடுத்துவிட முடியாது. முஸ்லிம் உலகம் தொடர்ந்து எதிர்அரசியல் பிம்பமாக சித்தரிக்கப்பட்டு வஞ்சிக்கப்படும் – உயிர்பலியாக்கப்படும் கொடுமையை கவனப்படுத்துவது தாலிபான்களின் பக்கம் நின்று பேசுவதாகாது. அப்படி பார்த்தால் 9/11 முன்பாக எந்த வல்லரசும் தாலிபான்கள் நிகழ்த்திய பெண்களுக்கு எதிரான கொடுமைகளைப் பற்றி பெரிய அளவில் கவனங் கொள்ளவில்லை. அப்படியென்றால் அவர்கள் யார் பக்கம் நின்றார்கள்? பேரதிகாரத்தின் கரங்களில் உள்ள வகைவகையான ஆயுதங்களைப் பற்றியோ – அவை கட்டவிழ்த்துவிடும் அரசவன்முறை குறித்தோ – அவை விளைவிக்கும் நாசங்கள், காவு வாங்கும் உயிர்கள் குறித்தோ பேசுவதும் காலாட்படைகளின் அட்டூழியங்களை கண்டிப்பதேயாகும். “இஸ்லாத்தை மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம்” என்று சொல்லும் முஸ்லிம் உண்மையில் அவனது தொலைந்து போன சுயத்தை அடைய பிரயாசைப் படுகிறான். அவனை பேசவிடாமல் அணைகட்டுவது – அல்லது உங்கள் குரலில் பேசாது போனால் எதிரிகளோடு இருப்பதாக முத்திரை குத்துவது போன்றவற்றால் அவன் மேலும் அவமானப் படுத்தப்பட்டது போலவே உணர்கிறான்.
கோட்டை கலீம் – எழுத்தாளர்