பறவைகளை வீழ்த்தும் வல்லூறுகள் கத்தார்
நாட்டிலிருந்து இயங்கும் அல்ஜஸீரா தொலைக்காட்சி, மறைந்த பாலஸ்தீன அதிபர் யாசர் அரஃபாத்தைப் பற்றிய ஓர் ஆவணப் படத்தை 2012ஆம் ஆண்டு வெளியிட்டது. 2004ஆம் ஆண்டு அவர் மரணமடைந்து ரமல்லாவில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரின் மரணம் இயற்கையானது அல்ல, அது சந்தேக மரணம் என்ற செய்தியை மக்களுக்குச் சொன்னது அந்த ஆவணப்படம். பாலஸ்தீனத்திலிருந்து பிரான்ஸுக்கு யாசர் அரஃபாத் மேல் சிகிச்சைக்காக விமானம் ஏறும்போதுகூட மக்களைப் பார்த்து கை அசைத்துக் கொண்டுதான் சென்றார்.
அவருக்கான நோயின் தன்மை என்ன, மரணமடைந்ததும் அவரின் உடல் ஏன் உடல் கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை, என எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய மரணத்தின் சர்ச்சை யைக் கொளுத்திப் போட்டது அல்-ஜஸீரா. யாசர் அரஃபாத்தின் உடைகளில் போரியம்-210 என்ற வேதிப் பொருள்களின் துகள் படிந்திருப்பதாகவும், அதை நுகர்வதன் மூலம் அவரின் உடல்நிலை பாதிப்படைந்ததாகவும், அவர் பயன்படுத்தும் பல்வேறு உபகரணங்களிலும் அந்தத் துகள்களின் தாக்கம் இருந்திருக்கக் கூடும் என்ற கூடுதல் தகவலையும் ஆவணப்படத்தில் பதிவு செய்திருந்தனர்.
பாரீஸில் இராணுவ மருத்துவமனையில் யாசர் அரஃபாத்துடன் கூடவே இருந்தவர் அவரின் மனைவி சுஹா அரஃபாத். அவருக்கு இதைப் பற்றிய எந்தத் தெளிவும் இல்லை. அல்ஜஸீரா இரண்டு மருத்துவர்களின் மேல் குற்றம் சாட்டியது. இரண்டு பேருமே யாசர் அரஃபாத்தின் குடும்ப மருத்துவர்கள். ஒருவர் எகிப்தையும், இன்னொருவர் துனீசியாவையும் சார்ந்தவர். சுவிட்சர்லாந்தில் இயங்கும் அறிவியல் ஆய்வுக்கூடம் அளித்த தகவலில் யாசர் அரஃபாத்தின் தலைமுடி, அவர் பயன்படுத்திய டூத் பிரஷ் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் மிக அதிக கதிரியக்கம் கொண்ட வேதிப் பொருள்களின் துகள்கள் படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆக இது ஒரு திட்டமி-ட்ட செயல்தான். ஒரு வகையான ஸ்லோ பாய்சன் முறையில் யாசர் அரஃபாத் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதுதான் அல்ஜஸீராவின் தீர்க்கமான கருத்து. சுஹா அரஃபாத், பாரீஸ் நீதிமன்றத்தில் இது குறித்து பிரான்ஸ் அரசு முழு விசாரணை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். 2012 ஆகஸ்ட் 28 அன்று சுஹாவின் வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. சுஹா அரஃபாத் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவராக இருந்தார். தம் மகளுடன் அப்போது மால்டாவில் வசித்து வந்தார்.
பாலஸ்தீன அதிபராக இருந்த அப்பாசும் பிரான்ஸ் அரசு இந்த விசாரணையை நேர்மையாக நடத்தித் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். தனிப்பட்ட முறையில் அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹோலன்டேயை தொடர்பு கொண்டும் வேண்டுகோள் விடுத்தார். சுவிஸ் நாட்டில் உள்ள ஒரு பரி சோதனை நிலையம் அரஃபாத்தின் உடைகள் சிலவற்றில் எடுக்கப்பட்ட அரஃபாத்தின் தலை முடிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அவர்களின் ஆய்வு முடிவும் அவரின் முடியில் போரியம்-210 என்ற வேதிப் பொருளின் படிவங்கள் இருப்பதை உறுதி செய்தது.
அவர் பயன்படுத்திய உடைகளை சுஹா அரஃபாத் ஒரு பெட்டியில் அப்படியே போட்டு வைத்திருந்தார். அல் ஜஸீராவின் நிர்வாகமே அந்த உடைகளில் சிலவற்றை சுஹா மூலமாகப் பெற்று ஆய்வுக்கு உட்படுத்தியி-ருந்தனர்.இதே முறையில் தான் ரஷ்யாவின் உளவாளி அலெக்ஸாண்டர் 2006ஆம் ஆண்டில் கொல்லப்பட்டிருந்தார். அவர் இஸ்ரேலில் பணியாற்றியவர். சொந்தமாக ஒரு நிறுவனத்தை நடத்தியவர். உடல் பலவீனப்பட்டு ரஷ்யா திரும்பிய அவர் சில நாள்களில் மரணமடைந்தார்
. உடல்கூறு ஆய்வறிக்கையில் அவரின் தலைமுடி, தாடி போன்றவற்றில் போரியம்-210 படிந்திருப்பதை ரஷ்ய அரசாங்கம் கண்டுபிடித்தது. ஆனால், இஸ்ரேல் அரசாங்கத்திடம் நேரடியாகக் கேட்க முடியவில்லை. அவர் உளவாளி என்பதை இஸ்ரேலின் மொசாத் கண்டுபிடித்து விட்டதை மட்டும் ரஷ்ய அதிகாரிகள் உறுதி செய்து கொண்டனர்.
யாசர் அரஃபாத்தும் இதே போன்று கொல்லப்பட்டிருக்கலாம் என்று அல் ஜஸீராவின் ஆவணப்படம் அடித்துச் சொன்னது. சந்தேகத்தின் பார்வை இஸ்ரேலை நோக்கித் திரும்பிய நிலையில், உடனடியாக ஓர் அறிக்கை வெளியிட்டது இஸ்ரேலிய அரசாங்கம். யாசர் அரஃபாத்தின் மரணத்திற்கு நாங்கள் எந்த விதத்திலும் காரணமில்லை. எங்களுக்கு அவரின் மேல் கோபம் இருக்கலாம் ஆனால் நாங்கள் இதைச் செய்யவில்லை. இதை எவருமே நம்பத் தயாராக இல்லை.
கோல்டா மெய்ரின் ஹிட் லிஸ்டில் ஹமாஸ் தலைவர் அஹமது யாஸீன் பெயருடன், யாசர் அரஃபாத் பெயரும் இருந்திருக்கக் கூடும் என்கிறார்கள். லிஸ்ட்டில் இருந்த 11 பேர்களை போட்டுத் தாக்குவதற்கு மொசாத் 20 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. 2004ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் நாள் அஹமது யாஸீன் இல்ரேலிய இராணுவத்தால் நேரடியாகக் குண்டு வீசி கொல்லப்பட்டார். அதிகாலை தொழுகைக்குச் சென்றவரை குறிவைத்துத் தாக்கிக் கொன்றார்கள் மொசாத் அதிரடிப் படையினர்.
அவருடன் இருந்த 22 பேர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் யாசர் அரஃபாத் விசயத்தில் இஸ்ரேல் இதுபோன்று நேரடித் தாக்குதல் செய்வதற்குத் தயங்கியது என்றே சொல்லலாம். காரணம் யாசர் அரஃபாத் ஒரு போராளி என்பதைத் தாண்டி மக்கள் தலைவராகப் பரிணாமம் அடைந்தவராக இருந்தார். உலக நாடுகளுடன் நட்போடு இருந்தார். உலகத் தலைவர்களுடன் நெருக்கமான உறவில் இருந்தார். 2003ஆம் ஆண்டில் ஹமாஸ் தலைவர் ஷேக் அஹமது யாஸீனைச் சந்தித்த யாசர் அரஃபாத் அவரின் கன்னத்தில் கன்னம் வைத்து அன்பை வெளிப்படுத்திவிட்டு ‘எங்களின் அமைப்புகள் வேறாக இருந்தாலும் ஒரு பறவையின் இரு சிறகுகள்’என சிலாகித்துச் சொன்னார். அந்த இரண்டு சிறகுகளும் 2004-ஆம் ஆண்டில் இஸ்ரேலிய அரசால் வீழ்த்தப்பட்டன.
யாசர் அரஃபாத்தின் மரணம் பாலஸ்தீன அரசியல் களத்தில் மிகப் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அவரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு அங்கு தலைவர்கள் இல்லை என்பது தான் உண்மை. பாலஸ்தீனத்தில் அரசியல் கட்சிகளாக இருப்பவை ஹமாசும், ஃபத்தாவும். ஃபத்தா 1959இல் யாசர் அரஃபாத்தால் தோற்றுவிக்கப்பட்ட இளைஞர் அமைப்பு. பின்னாளில் 1965இல் அரசியல் கட்சியாக மாறியது. இப்போது ஃபத்தா பெரும் அரசியல் கட்சியாக வளர்ந்து நிற்கிறது.
‘காற்று மலையை அசைக்கவே முடியாது’ என்ற சூளுரையோடு இடதுசாரி தேசிய இயக்கமாக பாலஸ்தீனத்தில் களம் காண்கிறது. நண்பர்களாக இருந்த ஹமாசும், ஃபத்தா-வும் எதிர் அணியில் பயணப்பட்டாலும் அவர்களின் நோக்கம் பாலஸ்தீன விடுதலை என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்று சேருகிறது என்பதை மறுக்க முடியாது.
1998ஆம் ஆண்டில் ரமல்லா நகரில் யாசர் அரஃபாத் பாலஸ்தீனியர்களின் முன்னிலையில் ஓர் உணர்வுப்பூர்வமான உரை நிகழ்த்தினார். அந்த உரையின் நடுவில் சுதந்திர பாலஸ்தீனத்தை அறிவித்தார். ராபினுடன் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாலஸ்தீனியர்களின் மத்தியில் பெரும் தொய்வைச் சந்தித்த யாசர் அரஃபாத் சுதந்திர பாலஸ்தீனத்தை அறிவித்த நிமிடம் முதல் பாலஸ்தீனியர்களின் மனதில் மீண்டும் கம்பீரமாகக் குடியேறினார்.
சுதந்திர பாலஸ்தீனத்தை இந்தியா, ரஷ்யா மற்றும் அரபு நாடுகள் வரவேற்றன. இட்சாக் ராபினுடன் போடப்பட்ட அமைதி ஒப்பந்தம் தூக்கி எறியப்பட்டது. அது ஒரு ஏமாற்று ஒப்பந்தம். பாலஸ்தீனிய போராளிக் குழுக்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த போடப்பட்ட நாடக ஒப்பந்தம் என அரஃபாத் உணர்ந்து கொண்டார். இஸ்ரேலும், அமெரிக்காவும், பிரிட்டனும் யாசர் அரஃபாத்தின் பிரகடனத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
1996இல் ஒரு பொதுத் தேர்தலையும் யாசர் அரஃபாத் நடத்திக் காட்டினார். பாலஸ்தீன மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீன அதிபரும் அவர்தான். ஓர் அதிபராக அவர் இருக்கும்போதே இஸ்ரேலிய அரசு ரமல்லா நகரில் அவரை வீட்டுக் காவலில் வைத்தது.ஒரு நாட்டின் அதிபரை வீட்டுக் காவலில் வைக்க முடியும் என்றால் அது பாலஸதீனத்தில் மட்டுமே சாத்தியமானதாக இருக்க முடியும். உலக நாடுகள் மிகப்பெரும் கண்டனத்தைத் தெரிவித்தன. பாலஸ்தீனத்தில் இயங்கும் அனைத்துப் போராளிக் குழுக் களும் யாசர் அரஃபாத்துக்கு ஆதரவாக நின்றன. ஆனாலும் அவர் வீட்டுக் காவலில் இருந்து கொண்டே அதிபர் பணியையும் செய்தார்.
தான் சிறை வைக்கப்பட்டதை தனக்கே உரிய சிரிப்போடு ‘பாலஸ்தீனத்தின் அதிபருக்கு இஸ்ரேலிய இராணுவம் பாதுகாப்பு கொடுக்கிறது’ என்றார். அப்போதே இஸ்ரேலிய இராணுவம் நினைத்திருந்தால் யாசர் அரஃபாத்தைக் கொலை செய்திருக்கலாம். ஆனால் இஸ்ரேலுக்கு அந்தத் துணிவு ஏனோ ஏற்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் தான் போரியம்-210 அவரின் உடைகளில் படிய ஆரம்பித்திருக்கலாம் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.
பிரான்ஸ் அரசாங்கத்தின் விசாரணை முடிவும் சுவிஸ் பரிசோதனை மையத்தின் முடிவையே ஒத்திருந்தது. ஆம் அவர் போரியம்-210ஐப் பயன்படுத்தி கொல்லப்பட்டிருக்கலாம், அதைச் செய்தவர்கள் யார் என்பதைத் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றது பிரான்ஸ். போரியம்-210த்தை வெளியில் சந்தையில் வாங்க முடியாது. அணு உலைகளில் தான் பிரித்தெடுக்க முடியும். ஓர் அரசாங்கம் தலையிடாமல் இதைச் செய்திருக்க முடியாது என்பதை பாலஸ்தீன ஆதரவு நாடுகள் ஒப்புக் கொள்கின்றன. இஸ்ரேலிய பூமியில் அமைதி உடன்படிக்கை என்பது சாத்தியமற்றது என்பதற்குச் சிறந்த உதாரணம் ராபின், யாசர் அரஃபாத்தின் மரணங்கள்.
நன்றி சமரசம்