வினிதா என்ற 43 வயதுடைய பழங்குடியின பெண்ணின் மகன் 21 வயதான அஜய். அவர் 19 வயதுடைய பாயல் (அடையாளப் பெயர்) என்ற பழங்குடியின பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார். இதனை பாயலின் குடும்பத்தாரால் ஏற்க முடியவில்லை. கோபமடைந்த அவர்கள் அஜயின் தாயார் வினிதாவை வன்மமாக பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தாக்கியுள்ளனர்.
கடந்த ஜூன் 12ம் தேதி தனது மகன் திருமணம் செய்ததாக கூறும் வினிதா பின் நடந்தவற்றை விளக்குகிறார். ‘திருமணம் முடிந்த நான்கு நாட்களுக்கு பிறகு அவர்கள் எனது குடிசைக்குள் தடாலடியாக நுழைந்தார்கள். பாயலின் தந்தை ராஜுபாய் பல்சந்தா தலைமையில் ராஜு ரத்தோட், விபுல் ரத்தோட், கது ரத்தோட் உட்பட 11 பேர் கும்பல் வந்தனர். அப்போது எனது கணவர் வீட்டிலில்லை. பாயல் எங்கே என்று கேட்டு மிரட்டினார். திருமணமானபிறகு இருவரும் வீட்டிற்க்கே வராததால் எங்கிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. அவர்கள் திருமணம் செய்துகொண்டது கூட எனக்கு தெரிந்திருக்கவிக்கவில்லை’ என்றார்.
பின் நடந்தவற்றை ஊடகங்களுக்கு விளக்கினார் வினிதாவின் மகள். ‘என் அம்மா தன்னை விடுக்குமாறு அவர்களிடம் கூறினார். ஆனால், அம்மாவின் தலைமுடியை பிடித்து இழுத்து அடித்தனர். கையில் உருட்டுக்கட்டையுடன் வந்த அவர்கள் 30 நிமிடம் பயங்கரமாக தாக்கினர். அம்மா குடிக்க தண்ணீர் கேட்டு அவர்களிடம் மன்றாடியுள்ளார். ஆனால், சிறுநீர் கழித்த அவர்கள் அதனை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். உட்சபட்சமாக, பாயலின் தந்தை உட்பட சிலர் அம்மாவை பாலியல் ரீதியாக சீண்டியது மட்டுமல்லாமல் தகாத முறையில் வலுக்காட்டாய அத்துமீறலை நிகழ்த்தியுள்ளனர்.
போலீஸ் சம்பவ இடத்தை நெருங்கும் முன்னரே கும்பல் தப்பியோடிவிட்டது. தேஜ்கர் மருத்துவமனையில் வினிதா அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து குணமடைந்த வினிதா சில பாதுகாப்பு காரணங்களுக்காக மறைமுக இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார். திருமணமான தம்பதிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் விளிம்புநிலையினரான வினிதா குடும்பத்திற்கு கொலை அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டது. தங்கள் தரப்பு தகவல்களை விவரமாக சோட்டா உதைப்பூர் எஸ்பி தர்மேந்திர சர்மாவிடம் கூறினர். பாதிக்கப்பட்டவரின் மகனும், அவர் காதலித்த பெண்ணும் 18 வயதை கடந்தவர்கள். ஆதலால், அவர்கள் திருமணம் சட்டப்படியானது என்றார் எஸ்பி. மேலும் கொடூரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. பொதுவாக, பழங்குடியின சமூகத்துக்கு இடையேயான பிரச்சனை காப் பஞ்சாயத்தில்தான தீர்த்துவைக்கப்படும். ஆனால், இந்த வன்முறையின் வீரியம் நேரடியான போலீஸ் தலையீட்டை நிகழ்த்தியுள்ளது.
குஜராத்தின் கிராமங்களில் இதுபோன்ற கொடூர வன்முறை சம்பவங்கள் வாடிக்கையாகி வருகிறது. 2018ம் ஆண்டு தன் மகனின் காதலுக்காக இதேபோன்ற தாக்குதலுக்கு ஆளானார் 38 வயதான புச்சிபன் வசவா. மார்ச் 2020ல் 16 வயதான மைனர் பெண்ணுக்கும் இந்த நிலைதான் ஏற்பட்டது. 2013 லிருந்து 17 வரை குஜராத்தின் பட்டியலின மக்களுக்கு எதிரான வன்முறை 32% அதிகரித்துள்ளது. பழங்குடியினருக்கு எதிராக 55% அதிகரித்தது. இந்த தகவலை படிக்கும் நேரத்தில் ஏதோவொரு இந்திய கிராமத்தின் விளிம்புநிலை மனிதர் இதற்கு சாட்சியாகிறார்கள்.
Wibes of India தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது.
தமிழில் – அஜ்மி