ஆயிரக்கணக்கான இந்திய மக்கள் கொரோனா தொற்றால் மருத்துவமனை கட்டணம், மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் இறந்தவர்களுக்கான சுடுகாட்டிற்குப் போராடி வரும் வேளையில், உலகப் புகழ்பெற்ற இந்நாட்டின் பணக்காரர்கள் எங்குச் சென்றார்கள்? என்று தேடிப்பாருங்கள். அவர்கள் மொத்தமாக மாயமாகிவிட்டார்கள் அல்லது பெயரளவிற்கு உதவி செய்து கொண்டு ஒதுங்கிக்கொண்டார்கள். சாமானியர்களின் சுரண்டலினால் மட்டுமே இயங்கும் அவர்களிடம் இரக்கம், உதவிப் போன்றவற்றையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்றாலும், அவர்களின் நிலையை வெளிப்படுத்தவே இப்பதிவு.
ஒரு நாளைக்கு தற்போது 4 லட்சம் புதிய தொற்றுகள் பதிவாகிறது. ஏப்ரல் மாதம் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000. இந்நிலையில், இந்நாட்டையே உரிமை கொண்டாடத் துடிக்கும் பெரும் பணக்காரர்கள் எவ்வித உதவும் நடவடிக்கைக்கும் முன்வரவில்லை. ஒரு சிலர் உதவி செய்திருந்தாலும் அது அவர்கள் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்விற்கான பங்கை வழங்கினார்களே ஒழியச் சொந்த நிதியைத் தரவில்லை. சராசரி வருவாயிலிருந்து 2% சதவீத சமூக பொறுப்புணர்வு உதவியை (Corporate social responsibility) இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டாயமாக்கியிருக்கிறது.
உலகிலேயே மூன்றாவது அதிக பில்லியனர்களை (140 பேர்) கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இவர்கள் கொரோனா நெருக்கடிக்கு எதிராக எந்த பங்களிப்பும் செய்யவில்லை. இந்த பெருந்தொற்று காலம் பல சிறு குறு தொழில்களை அழித்துவிட்டது. ஆனால், பெரும் பணக்காரர்கள் மட்டும் மேலும் பணக்காரர்கள் ஆகிக்கொண்டே செல்கிறார்கள். 2020ம் ஆண்டு 40 புதிய பில்லியனர்கள் உருவாகியிருக்கிறார்கள். நாட்டின் முதல் பணக்காரரான அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு 24% அதிகரித்துள்ளது. இரண்டாம் பணக்காரரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 174% அதிகரித்துள்ளது.
அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடும் நடுத்தர மற்றும் விளிம்புநிலை மக்களின் மருத்துவ தேவைகளுக்கு இதில் சிறு துரும்பு கூட ஈடாகாது. ஆனால், இதற்கிடையில் இந்தியாவிலிருந்து பயணத் தடை அறிவிக்கும் 24 மணி நேரத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து எட்டு தனியார் ஜெட்களில் பல லட்சங்களுடன் லண்டன் புறப்பட்டுவிட்டார்கள் சில பில்லியனர்கள்.
இவர்கள் இதுவரை செய்ததுதான் என்ன?
குஜராத்தின் ஜாம்நகரில் ஒரே இடத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஆக்சிஜன் நிலையம் அமைத்துள்ளதாகவும், அங்கு நாட்டிற்குத் தேவையான 11% ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுவதாகவும் ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. சவூதி அரேபியா, ஜெர்மனி, பெல்ஜியம் போன்ற நாடுகளில் ஆக்சிஜன் இறக்குமதி செய்வதாகவும், 15 லட்சம் நோயாளிகளுக்கு 15 ஆயிரம் மில்லியன் டன் ஆக்சிஜன் இலவசமாக வழங்கியதாகவும் ரிலையன்ஸ் கூறுகிறது. ஆனால், மணிக்கு 90 கோடிக்கு மேல் லாபமீட்டும் அம்பானியின் வருவாயில் சொற்ப பங்கு கூட இது வராது. மாறாக, நாட்டின் 15வது பணக்காரரான விப்ரோவின் அஸிம் பிரேம்ஜி கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது அம்பானி அளித்த உதவியை விட 10 மடங்கு அதிகமாக வழங்கியுள்ளார். அதானியின் நிலை அம்பானியை விட மோசமாக உள்ளது.
உதவி செய்வதை விட நாட்டை விட்டு ஓடுவதில்தான் அனைத்து பணக்காரர்களும் குறியாக இருக்கிறார்கள். இந்தியாவில் நோய்ப் பரவல் அதிகரித்த உடனேயே தனியார் ஜெட்களுக்கான முன்பதிவு குவிவதாக டெல்லியைச் சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவிற்கு அதிக அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவாலாவே லண்டன் சென்றுவிட்டார். இந்த தேசத்தை முன்னேற்றுகிறோம் எனும் முதலாளிகளின் லட்சணம் இதுதான். மாறாக இத்தேசத்திற்காகப் போராடுவதும், இத்தேசத்தால் வீழ்வதும் சாமானியர்களாகவே இருக்கிறார்கள்.
Quartz தளத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது..
தமிழில் : அப்துல்லா மு