ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது பல துறைகளிலும் நாடு வளர்ச்சியடைந்துள்ளதை குறிப்பிடும். பெண்களின் கல்வி நிலையை கொண்டும் நாட்டின் வளர்ச்சி விகிதம் குறிப்பிடப்படுகிறது. 2014-2019ம் ஆண்டு வரையிலான கர்நாடகா, அசாம், பீஹார், அருணாசலப்பிரதேசம், திரிபுரா போன்ற மாநிலங்களில் பள்ளி செல்லும் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் உயர்நிலை கல்வியை முடிப்பதற்கு முன்பாக பள்ளி படிப்பை நிறுத்தி விடும் சூழல் நீடிக்கிறது.
இடைநிற்றல் விகிதம்:
2014-2015ம் ஆண்டில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய பெண்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்த இந்திய அளவில் 17.79% ஆக இருந்தது. 2015-16-ம் ஆண்டுகளில் இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் 16.88% , தொடக்க கல்வி இடைநிற்றல் விகிதம் 4.09% ஆகவும் இருந்திருக்கிறது. 2016-17-ம் ஆண்டில் இந்த சதவீதம் உயர்ந்திருக்கிறது. அந்த கல்வி ஆண்டில் இடை நிலை கல்வி மட்டத்தில் இடைநிற்றல் சதவீதம் 19.81%, தொடக்க கல்வி இடைநிற்றல் 6.34 % ஆக பதிவாகி இருக்கிறது.
2017-18ம் ஆண்டில் இடைநிலைக்கல்வி 18.39%, தொடக்க கல்வி 4.1% ஆகவும் இருந்திருக்கிறது. 2018-19ம் ஆண்டில் இடைநிலை கல்வியை பாதியிலேயே முடித்துக் கொண்டவர்களின் விகிதம் 17.3% ஆகவும், தொடக்க கல்வியை கைவிட்டவர்களின் விகிதம் 4.74 % ஆகவும் உள்ளது.
பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகள்:
பெரும்பாலான குழந்தைகள் தொடக்க கல்வியை சிரமமின்றி படித்து விடுகிறார்கள். பெண் குழந்தைகள் உயர்நிலை கல்வியை தொடர்வதில் தான் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். மேலும், பருவம் அடைதல், குழந்தை திருமணம் போன்ற காரணங்கள் பெண் குழந்தைகளின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 2020ம் ஆண்டில் மட்டும் தேசிய உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் குழந்தை திருமணத்துக்கு எதிராக 111 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால் இவை இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இல்லை என்பதே நமக்கு ஆறுதலான விஷயமாக உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பெண் கல்வி என்பது கடந்த ஐம்பதாண்டு காலமாகவே ஆண்களுக்கு நிகராக உயர்ந்துவந்துள்ளதை நம்மால் கண்கூடாக காணமுடியும். இருக்கும் எல்லா துறைகளிலும் தமிழகத்தில் பெண்கள் தான் ஆண்களைவிட அதிக சதவிகித்தத்தில் சாதித்து வருகின்றனர் என்பதும் அதற்கு பின்புலமாக ஆளும் திராவிட கட்சிகளின் கடும் முயற்சிகளும் என்பது நாம் அறிந்து வந்தவையே.
தமிழகத்தில் கடந்த காலங்களில் சாதி வாரியாக அல்லது மத வாரியாக பட்டியல் எடுத்த பார்த்தால் கூட எல்லா தரப்பு மக்களிடையேயும் மகளிருக்கான கல்வி உரிமை என்பது மேம்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். பின்தங்கிய வகுப்பிலிருந்தும் , போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளில் இருந்தும் கூட பல கஷ்டங்களுக்கிடையில் பெண்கள் கல்வி பயில வருகின்றனர். இஸ்லாமிய சமுதாய மக்களிடையே புரயோடிப்போயிருந்த பிற்போக்குத்தனங்கள் கூட கைவிடப்பட்டு இப்போது அவர்களும் ஆண்களுக்கு இணையாக கல்விச்சாலைகளுக்கு அதிகம் வருகிறார்கள், மேலும் கல்லூரி படிப்பு மட்டுமல்லாது பணியிடங்களிலும் அவர்களது பங்களிப்பினை மேலதிகமாகவே காணமுடிகிறது.
தற்போது நிலவும் சமூக பொருளாதார சிக்கல்களுக்கிடையில் பெண் கல்வி மேம்பட்டிருப்பதனை பெண்களுக்கான தனித்துவ பள்ளிக்கூடங்களும் கல்லூரிசாலைகளும் அதிகரித்திருப்பதனை வைத்து அறிந்து கொள்ள முடியும், பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்த அரசுகளும் படித்த மகளிருக்கான தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்கும் விதமாக வங்கிகள் மூலமும் மகளிர் மற்றும் குழந்தைகள் நல வாரியம் மூலமும் அவர்களுக்கு பல சலுகைகளை வழங்கி ஊக்கிவித்து வருகிறது.
இந்தியாவில் வடமாநிலங்களை விட தென்மாநிலங்களில் தான் கல்வித்தரம் உயர்ந்த ஒன்றாக வளர்ந்து வந்துள்ளது, அதிலும் பெண்கல்வி தனக்கேயுரிய வெற்றிடத்தை முழுமையாக நிரப்பி நிற்கிறது. மேலும் இந்த சமூக புரட்சி பல இடங்களுக்கும் பரவ தென்மாநிலங்களுக்கு தமிழகமே பெரும் உந்து சக்தியாக இருந்து வருகிறது என்றால் அது மிகையில்லை.
எழுத்த்தாளர்
ரோசி எஸ் நஸ்ரத்