நெடுந்துயர சித்திரவதை – நொறுங்கிப்போன மானுடம்
உடம்பு முழுவதும் காயங்கள். கண்களில் படர்ந்திருக்கும் பயம். முகம் கொடுத்து பேச மறுக்கும் தவிப்பு. உணர்வு மறுத்துப்போய் அவமானத்தால் கூனிக்குருகியிக்கும் ராகுலை புரிந்து கொள்ள முடிந்தது. என்ன ராகுல் நடந்தது? பதிலுக்கு முன்பு கண்ணீர் தான் எட்டிப் பார்த்தது.
பத்துக்கும் மேற்பட்ட வன்கொடுமை கும்பல் 21 வயது ராகுல் என்கிற இளைஞரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்க, அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி அழுகின்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். என்ன நடந்தது? சம்பந்தப்பட்ட இடத்திற்கு எவிடன்ஸ் குழுவினருடன் களஆய்வில் ஈடுபட்டேன்.
தஞ்சாவூர் – அம்மாபேட்டை அருகில் உள்ள கிராமம் பூண்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ராகுல். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார். அவரது அப்பாவி தனத்தை பயன்படுத்திக் கொண்டு மது வாங்கி கொடுத்து பலரும் பல்வேறு வேலையில் ஈடுபடுத்தினர்.
இதுபோன்ற மனரீதியாக பாதிக்கப்பட்டோருக்கு கொடுக்க வேண்டிய எந்த ஆற்றுப்படுத்தல் சிகிச்சையும் அவருக்கு கொடுக்கப்படவில்லை. கால்போன போக்கில் அலைந்து திரிகிற ஒரு இளைஞராகவே இருந்திருக்கிறார்.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு பூண்டியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கோனூர் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கேயே தங்கியும் இருக்கிறார்.
கோனூர் கிராமத்தில் விக்கி என்கிற 27 வயது இளைஞர் ஆற்றுமணலை அள்ளுகிற பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரிடத்தில் ராகுல் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் ராகுல் மீது இக்கொடிய தாக்குதல் நடந்திருக்கிறது. ராகுல் தரப்பில் தனது கூலிப்பணத்தை கேட்டதற்காக இந்த தாக்குதல் நடந்தது என்றும், குற்றவாளி தரப்பில் ராகுல் பணத்தை திருடிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
கடந்த 01.02.2021 அன்று காலை 7.30 மணி முதல மாலை 3.00 மணிவரை 10க்கும் மேற்பட்ட வன்கொடுமை கும்பல் ராகுலை கடுமையாக அடித்து சித்திரவதை செய்துள்ளனர். ஆற்றங்கரை, விக்கியின் வீடு, சுடுகாடு, செங்கல் சூளை, தோப்பு பகுதி, தலித் குடியிருப்பு, பள்ளிக்கூடம் ஆகிய 8 இடங்களில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது.
விக்கியின் வீட்டில் மண்டி போட வைத்து உருட்டுக்கட்டையால் அடித்துள்ளனர். நிர்வாணமாக்கி கட்டையாலும் செருப்புக் காலால் எட்டி உதைத்தும் அவமானப்படுத்தியுள்ளனர். கத்தியைக் கொண்டு உடம்பில் கீரியிருக்கின்றனர். ஒவ்வொரு இடத்திலும் காலில் விழுந்து கெஞ்சி அழுதிருக்கிறார் ராகுல். அண்ணா என்னை விட்டுவிடுங்கள் என்று கதறியிருக்கிறார். ஆனால் வன்கொடுமை கும்பல் மிகவும் தரங்கெட்ட அளவில் ஆபாசமாக இழிவாகப்பேசி இக்கொடிய தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டி வைத்து, காரில் கடத்திச் சென்று ஒவ்வொரு பகுதிக்கும் இழுத்துச் சென்று இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கும்பலின் சைக்கோ தனமான தாக்குதல் போன்று இருக்கிறது. ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு ஒரு அப்பாவி இளைஞனை கடத்திச் சென்று ஒவ்வொரு இடத்திலும் வைத்து அடித்து சித்திரவதை செய்து கொண்டே கிண்டலடித்து பலமாக சிரித்து அதை செல்போனில் பதிவு செய்து கொண்டே இருந்திருக்கின்றனர்.
ஒவ்வொரு இடத்திற்கும் அடித்து இழுத்து செல்கிற போது சில புதிய இளைஞர்களும் சேர்ந்து கொண்டு அடித்திருக்கின்றனர். சமூக வலைத்தளத்தில் சில காட்சிகள் தான் வெளியிடப்பட்டுள்ளன. பல பதிவுகளை களத்தில் சேகரித்தோம். பார்ப்பதற்கே கொடூரமாக இருக்கிறது. ராகுலை நிர்வாணமாக்கி அடித்த வீடியோவை பார்த்த போது மனசு கனமாகி போனது.
சுமார் 8 மணி நேரம் ஒரு இளைஞரை 25 – 30 கி.மீ.க்கு வெவ்வேறு பகுதிக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். சில இடங்களில் மக்கள் பார்க்கின்றபோது உருட்டுக்கட்டையை வைத்துக் கொண்டு மக்களை அந்த கும்பல் அச்சுறுத்தியும் இருக்கிறது.
பிற்பகல் 3.00 மணி வரை ராகுலை தாக்கிய கும்பல் 3.00 மணிக்கு ஒரு செங்கல் சூளைக்கு அழைத்து சென்று படுக்க வைத்துள்ளனர். இரண்டு பேரை காவலுக்கு வைத்துவிட்டு மற்றவர்கள் சாப்பிட சென்றிருக்கின்றனர். தன் மகன் தாக்கப்படுவதை அறிந்த ராகுலின் தந்தை குணசேகரன் காவல்நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையில் இரண்டு போலீசார் 3.30 மணியளவில் செங்கல் சூளைக்கு சென்று ராகுலை விடுவித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
இதில் கொடுமை என்னவென்றால் ராகுலின் தந்தை குணசேகரனிடம் எழுதி வாங்கிவிட்டு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். உடல் முழுவதும் காயத்துடன் இருக்கக்கூடிய ராகுலை மருத்துவமனைக்கு அழைத்து வரவில்லை. ராகுலை தாக்கிய கும்பல் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. ஆனால் எப்போது அழைத்தாலும் நீங்கள் விசாரணைக்கு வரவேண்டும் என்று போலீசார் மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.
மணல் அள்ளுகிற லாரி டிரைவர்களுக்கு என்று ஒரு வாட்ஸ்அப் குரூப் இருக்கிறது. அந்த குரூப்பில் ராகுல் தாக்கப்படும் காட்சியை பகிர்ந்துள்ளனர். இதை அறிந்த ராகுல் அவமானமடைந்து 02.02.2021 அன்று எலிபேஸ்ட் நச்சு மருத்தினை உட்கொண்டுள்ளார். ஆபத்தான நிலையில் அன்று மாலை 4.45 மணியளவில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடி வருகிறோம் என்று போலீசார் கூறுகின்றனர். இந்த பகுதியில் ஆற்றுமணலை சட்ட விரோதமாக கடத்துகிற வேலை நடந்து வருகிறது. இதுபோன்ற பணிக்கு ராகுல் போன்ற அப்பாவி இளைஞர்களை அங்கிருக்கக்கூடிய மணல் மாபியா பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிய வருகிறது.
ராகுல் கூலிப்பணம் கேட்டதற்காகத்தான் சண்டை நடந்தது என்று கூறுகிறார். குற்றவாளி தரப்பில் ராகுல் திருடியதாக கூறுகிறார்கள். அப்படி ராகுல் திருடியிருந்தால் ஏன் குற்றவாளி தரப்பினர் காவல்நிலையம் சென்று ராகுல் மீது புகார் கொடுக்கவில்லை.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராகுல், காலை 7.30 மணியிலிருந்து அடித்து சித்திரவதை செய்தார்கள். முதலில் என்னை தாக்குகிற போது விக்கியிடம் எங்களை அடிமை போல வேலை வாங்கிவிட்டு நீங்கள் செய்கிற அட்டுழியம் தெரியாதா என்று கூறினேன். என்னையையே எதிர்த்து பேசுகிறாயா என்று கோபமடைந்த விக்கி என்னை ஆபாசமாகவும் சாதி ரீதியாகவும் இழிவாகப்பேசினார். அவரது ஆட்களும் அடிக்கத் தொடங்கினர். தெருவில் அழைத்து வருகிற போது தான் திடீரென்று என்னை சுட்டிக்காட்டி இவன் ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிவிட்டான் அதனால் தான் அடிக்கிறோம் என்று கூற பொதுமக்களும் நான் திருடிவிட்டதாக நினைத்துக் கொண்டு என்னை அடிப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். உயிர்போவது போன்று இருந்தது ஆனாலும் நான் திருடவில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். தோப்பில் வைத்து நீ, திருடிவிட்டேன் மன்னித்துவிடு என்று சொல் உன்னை விட்டுவிடுகிறோம் என்று சொன்னார்கள். உயிருக்கு பயந்து தான் பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று கூறினேன். இப்போது தான் புரிகிறது என் மீது திருட்டுப்பட்டம் கட்டுவதற்காகவே என்னை பேச வைத்து அதை பதிவு செய்திருக்கின்றனர் என்று கூறினார்.
தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்கள் பண்ணையார்தனம் கூறிப்போன மாவட்டங்களாலும். சாதிய கொடூரமும் வேரூன்றி இருக்கக்கூடிய பகுதிகள். கட்டி வைத்து அடிப்பது, பண்மை அடிமையாக வைத்திருப்பது போன்ற வன்கொடுமைகள் இப்பகுதிகளில் மிகுதியாக நடந்து வருகின்றன. அண்மையில் சிவக்குமார் என்கிற இளைஞர் கட்டி வைத்து அடித்து கொல்லப்பட்டார்.
தண்டனையை தாங்களே கொடுக்கக்கூடிய சாதிய பஞ்சாயத்து குழுக்களாக இப்பகுதி இருக்கிறது. டெல்டா மாவட்டங்கள் கும்பல் வன்முறை நடக்கக்கூடிய பகுதிகளாக இருந்தும் அவற்றிற்கு எதிராக அரசு இதுவரை கடும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தென்மாவட்டங்களில் சாதிய வன்முறை என்பது தீண்டாமையாகவும் வன்கொடுமைகளாகவும் இருக்கும். மேற்கு மாவட்டங்களில் அதே போன்று நிலை உள்ளது. ஆனால் கிழக்கு மாவட்டங்களான டெல்டா பகுதிகளில் கும்பல் வன்முறையும் கட்டப்பஞ்சாயத்து தண்டனை நிறைவேற்றலும் அடிமைத்தனமும் போன்ற கட்டமைக்கப்பட்ட தீண்டமை நிறுவனங்களாக உள்ளன.
டெல்டா மாவட்டங்கள் வன்கொடுமை தலைநகரமாக மாறி வருகிறது. ஆகவே இப்பகுதியில் இதுபோன்ற வன்கொடுமைகளை ஒழிக்க சிறப்பு நடவடிக்கைகள் கொண்டு வர வேண்டும். அதுமட்டுமல்ல தமிழகத்தில் கும்பல் வன்முறையை ஒழிப்பதற்கு தனிசிறப்பு சட்டம் உருவாக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் கொல்லிமலை என்கிற இளைஞரின் வாயில் சாதி வெறியர்கள் மலத்தையும் சிறுநீரையும் திணித்தனர்.
ராகுலுக்கான நம்பிக்கையை கண்டிப்பாக நீதி கொடுத்துவிடாது. சமூகம் தான் கொடுக்க வேண்டும். அது எளிதாக கிடைத்தும் விடாது. என்ன செய்யப் போகிறோம்?
-எவிடன்ஸ் கதிர்