மலையாளப் புனைவிலக்கிய உலகின் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைகம் முகம்மது பஷீர் எழுதிய மனதை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சரித்திரமே “மதில்கள்”.
பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக தமிழாக்கம் செய்துள்ளார் சுகுமாரன்.
பஷீரின் தனி அடையாளம் தன்னுடைய வாழ்க்கையையே இலக்கியத்துக்கான மூலப் பொருளாகவும் படைப்பாகவும்
கருதி செயல் பட்டார் என்பது தான்.
தனக்கு சொந்தமல்லாத ஓர் அனுபவத்தையோ ஒரு வரியையோ அவர் எழுதவில்லை.
இலக்கியத்தின் இந்த எளிய அடிப்படை தான் பஷீரை இவ்வளவு காலத்துக்குப் பின்னர் வாசக அங்கீகாரமுள்ள எழுத்தாளராக நிலை நிறுத்தி இருக்கிறது எனலாம்.
“நானே பூங்காவனமும் பூவும்”
என்று மதில்கள் நாவலின் மையப்பாத்திரத்தின் கூற்றாக ஒரு வாக்கியம் இடம் பெறுகிறது.
பஷீரின் படைப்புலகின் அடித்தளம் இது தான்.
தனிமைச் சிறையில் தவிக்கும் பஷீருக்கு நாரயணியின் குரல் கொடுக்கும் நெருக்கம் சிறை வாழ்க்கையில் ஆறுதல் தருகின்றது.
அவளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவிருக்கும் தருணத்தில் விடுதலை செய்யப் படுகின்றார்.
“உங்களை விடுதலை செய்யும் படி உத்தரவு வந்திருக்கிறது. இந்த நிமிடம் முதல் நீங்கள் சுதந்திரமானவர் . சுதந்திர உலகிற்கு நீங்கள் போகலாம் என்று கூறப் பட்ட போது
எது சுதந்திர உலகம்? பெரும் சிறைக்கல்லவா போக வேண்டும்
யாருக்கு வேண்டும் சுதந்திரம் ??
நாவலுக்குள் எழுப்பப் படுகின்ற இந்த கேள்விகள் தான் மதில்களைப் பொருட்படுத்தக் கூடிய படைப்பாக ஆக்குகிறது.
மிஸ்ரா ஜப்பார்