பன்மைத்துவ இன, மொழி, கலாச்சார இந்தியாவில் சினிமாவிற்கென தனித்த பண்புகள் உண்டு. அது, இந்திய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் பெரிது. காரணம், இங்கு மதத்திற்கு நிகரான வழிபாடாக சினிமா உருவாகியிருக்கிறது. காலனிய காலத்திலிருந்தே சினிமா கலை வடிவம் மட்டுமின்றி எதிர்ப்பு இயக்க பிரச்சாரமாகச் செயல்பட்டு வந்துள்ளது. சிறந்த உதாரணம் என்றால் தமிழில் திராவிட இயக்க சினிமாக்கள். அந்தவகையில், சினிமாவுக்கும் இந்திய அரசியலுக்கும் இணைபிரியா தொடர்புள்ளது.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய சினிமாவின் போக்கு மாறியது. ஒவ்வொரு நடிகருக்கும் ஓர் அரசியல் உள்ளது. அதை அவர்கள் தேவையான இடங்களில் வெளிப்படுத்தலாம். ஆனால், சினிமா பிரபலங்களின் செல்வாக்கை உணர்ந்த பாஜக அரசு தனது நிலைப்பாட்டிற்குச் சாதகமாக சினிமாவை ஒற்றை திசை போக்கில் நகர்த்தியது. அரசின் கொள்கைகள் சினிமா திரைகளிலும், அரசியல் அழுத்தங்கள் சினிமா பிரபலங்கள் மீதும் திணிக்கப்பட்டன. அதில், முதல் ஆளாக பாஜக அரசின் ஆதரவாளரானார் அமிதாப் பச்சன். இந்திய அரசின் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் தூதுவராகவும் மாறினார். தன் மீதுள்ள பனாமா ஊழல் வழக்குகளுக்கு நடுவே பிரதமரிடம் இரவு விருந்தை பகிர்ந்துகொண்டார். மேலும், அக்ஷய் குமார், கங்கனா ரநாவத் போன்றோர் தங்கள் தனிப்பட்ட ஆதாயத்திற்காக மோடி பக்தராகவே மாறினர்.
மற்றொருபுறம், ‘நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது. தேசியவாதி வேடத்திற்காக மதச்சார்பின்மையைக் கைவிடாதீர்கள்’ என்று அரசை விமர்சித்த ஷாருக் கான் தேச விரோதி என்று புகழப்பட்டார். ‘அவர் உடல் மட்டும்தான் இங்குள்ளது, உள்ளமெல்லாம் பாகிஸ்தானில் உள்ளது’ என்று தனிப்பட்ட அடையாளத் தாக்குதல்களைச் சந்தித்தார். அமீர் கானுக்கும் இதே நிலைதான். இன்றும் பாஜக அரசை விமர்சிக்கும் அனுராக் காஷ்யப், தாப்ஸி பன்னு போன்றவர்கள் தனிப்பட்ட தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். இதற்கு சக கலைஞர்களிடமிருந்தும் பெரிதும் எதிர்வினை இருக்காது. இதுதான், சினிமா பிரபலங்களின் ஒருமித்த அரசு ஆதரவிற்குக் காரணமாக இருக்கலாம். இவை வட இந்தியாவின் அரசியல் விளைவு என்றும் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், தமிழில் இதுபோன்ற எந்த நெருக்கடியுமில்லை. மொத்த பாலிவுட்டும் கொண்டாடிய பண மதிப்பிழப்பு நீக்கத்தையும், ஜிஎஸ்டியையும் எதிர்த்து இங்கே ஒரு படத்தில் வசனம் வைக்க முடியும். அதை ‘திருட்டுத்தனமாகப் பார்த்து’ எதிர்க்கவும் செய்யலாம். இப்படியான சூழலில் தமிழின் முன்னணி நடிகர், நடிகைகளின் அரசியல் நிலைப்பாடு நமக்கு ஏமாற்றத்தையே கொடுக்கும். பெரும்பாலானவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாஜக ஆதரவாளர்கள். ஆன்மீகத்தை எலைட் மனநிலையில் காணும்போதோ அல்லது தேசிய வெறியின் உச்சபட்ச நிலையிலோ அவர்கள் பாஜக ஆதரவாளராக உருவாகிறார்கள். இது தமிழ் பிரபலங்கள் மத்தியில் ஒருவித மைய நீரோட்ட பண்பாக உள்ளது. இதையொட்டி, சில துணை நடிகர்களை தம் பக்கம் இழுக்க முடிந்த பாஜகவிற்கு ஸ்டார் நடிகர்கள் என்பது கனவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் தன் கட்சியின் செய்தித்தொடர்பாளர் போல் செயல்பட்ட ரஜினிகாந்த்தைக் கூடப் பெற முடியவில்லை என்பதுதான் சோகம்.
எம்ஜிஆரின் செல்வாக்கிற்குப் பிறகு ஓரளவு பிரபலமான நடிகர்களுக்குக் கூட தமிழகத்தில் முதல்வர் ஆசை வந்துவிடும். ஊடகங்களும் அனைத்து நடிகர்களிடமும் அரசியலுக்கு வருவீர்களா? என்ற மலினமான கேள்வியை வாடிக்கையாக்கினர். அப்படியிருக்கையில் 90களுக்கு பிறகு ரஜினியின் மீது அரசியல் பரபரப்பு சூழ்ந்தது. 1996 தேர்தலில் வெளிப்படையாக ஜெயலலிதாவை எதிர்த்து திமுக கூட்டணியை ஆதரித்தார் ரஜினி. அதேபோல், 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை எதிர்த்து அதிமுகவிற்கு வாக்களிக்கப் பகிரங்க அறைகூவல் விடுத்தார்.
வெளிப்படையான பார்வைக்கே இவற்றில் எந்த கொள்கை நிலைப்பாடும் இல்லை. ஆனால் முக்கியமாக இந்த இரண்டு முடிவையும் தம் சொந்த ஆதாயத்தின் பொருட்டே எடுத்தார் ரஜினி. தன் பாட்சா பட தயாரிப்பாளர் ஆர்எம் வீரப்பன் அமைச்சரவை பதவியை ஜெயலலிதா பறித்ததால் 96ல் ஜெயலலிதா மீது எதிர்ப்பும், 2001ம் ஆண்டு திமுக கூட்டணியிலிருந்த பாமக ரஜினியின் பாபா படத்தைத் தடை செய்யக் கோரியது. அதில் புகைப்பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருப்பதால் அப்படத்தை எதிர்த்து போராட்டம் செய்தது. பாபா இதனால்தான் தோல்வியுற்றது என ரஜினிக்கும் நல்ல காரணம் கிடைத்தது. ஆதலால், பாமகவைக் கூட்டணியிலிருந்து நீக்க வேண்டும் என திமுகவிடம் கோரினார். திமுக ஒப்புக்கொள்ளாததால் 2004ல் அதிமுக-பாஜக கூட்டணியை ஆதரித்தார். இதைத்தான் இன்று விஜயும் செய்துகொண்டிருக்கிறார்.
ரஜினி தன்னை ஆன்மீகவாதியாக அறிவித்துக்கொண்டாலும் அவருக்கென தனி கொள்கையோ அரசியல் சார்போ இருந்ததில்லை என்பதை இதன் மூலம் அறியலாம். தனக்கு ஆதாயம் எங்குள்ளதோ அங்குதான் அவரின் கூட்டணி. இதுவும் வெற்று தேர்தல் அரசியலில் மட்டும்தான். அரசின் கொள்கைகளிலோ, சமூக பிரச்சனைகளிலோ அவர் என்றும் தலையிட்டதில்லை. ஆனால், அவரை ஒரு முழுநேர அரசியல்வாதியாகச் சித்தரித்த பெருமை தமிழக ஊடகங்களையே சாரும். 2004ல் ரஜினி ஆதரித்த அதிமுக கூட்டணி அமோகமாக அனைத்து தொகுதிகளிலும் தோற்றது. ரஜினியின் குரல் தமிழக அரசியலில் எடுபடவில்லை. இதை உணர்ந்து மெல்லப் பின்வாங்கத் தொடங்கினார். அவ்வப்பொழுது, ஒவ்வொரு படமும் வெளியாகும் ஒரு மாதத்திற்கு முன்பு ஊடகங்களைக் கூப்பிட்டுப் பரபரப்பை ஏற்படுத்துவதோடு நிறுத்திக்கொண்டார். ஜெயலலிதா இறக்கும் வரை இதுதான் நிலை.
ரஜினியின் ஆன்மீக நிலைப்பாடு இந்துத்துவ அரசியலோடு தொடர்புபட்டது. மராட்டிய மன்னன் சிவாஜியும் பால் தாக்கரேவும் அவருக்கு ஆதர்சமானவர்கள். 2016ம் ஆண்டுக்குப் பிறகு, தன் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் கையாளத் தொடங்கினார் ரஜினி. மோடியின் பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை, புதிய இந்தியா விளம்பரங்கள் போன்றவற்றின் முழு ஆதரவாளரானார். மோடியை வீரன் என்றும் வலிமையான மனிதர் என்றும் போற்றினார். பாஜக அரசின் செயல்பாடுகளைத் துளியும் விமர்சிக்கவில்லை. அதேநேரத்தில் தூத்துக்குடி போராட்ட மக்களை சமூக விரோதிகள் என்பது, பெரியார் மீது அர்த்தமற்ற அவதூறுகளைப் பரப்புவது என்று இந்துத்துவ அரசியலின் குரலாக ஒலித்தார்.
அப்படிப்பட்ட ரஜினியை தமிழகத்தில் தன்னை நிலைநாட்டப் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது பாஜக. தம் சொந்த ஆதாயத்திற்காக அரசியலில் தலையிட்டு வந்த ரஜினிக்கு அரசியல் ஆதாயம் பெறும் எண்ணம் உண்டா என்ற கேள்விக்கு இன்று ஓரளவு விடை கிடைத்துள்ளது. அரசியல் தேர்வு என்பது ரஜினிக்குத் தனிப்பட்ட விருப்பம் என்பதைவிடப் புறக்காரணி ஒன்றின் அழுத்தம் என்று உறுதிப்படுகிறது.
ஆதலால், பாஜகவின் சிறப்புக் கனிவிற்குள் இருந்தார் ரஜினி. அமிதாப் பச்சனுக்கு கொடுக்கப்பட்ட முழு மரியாதையும் ரஜினிக்கும் கொடுக்கப்பட்டது. அமிதாப் பச்சன் என்றாலும், அவர் திரையில் பாஜகவிற்கு எதிராகத் துளியும் செயற்படவில்லை. ஆனால், ரஜினியோ இந்துத்துவ எதிர்ப்பு படங்களான காலா, பேட்ட போன்ற படங்களில் நடித்து வந்தார். சில படங்களின் போஸ்டர், ட்ரெய்லர், பெயர் கூட தமக்கு எதிராக இருக்கிறது என்று கலவரம் செய்து அந்த படங்களையே முடக்கிய பாஜக, ரஜினியின் முழு இந்துத்துவ எதிர்ப்பு சினிமாவுக்கோ முற்றிலும் அமைதி காத்தது. எல்லாவற்றிக்கும் மேலாகக் கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவான இந்திய பனோராமாவின் பொன் விழா ஆண்டின் ‘இந்திய சினிமாவின் அடையாளம்’ என்ற விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது. ரஜினியை விட மூத்த நடிகர், இந்தியாவெங்கும் செல்வாக்குப் பெற்ற நடிகர் அமிதாப் பச்சன்னுக்குத்தான் அந்த விருது வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தமிழகச் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்ட பாஜக அரசு ரஜினிக்கு ஆகப்பெரிய மரியாதை செலுத்தியது. அப்படிப்பட்ட பாஜகவின் கனவைத்தான் இன்று களைத்துள்ளார் ரஜினி.
இந்தியாவில் எத்தனையோ நடிகர்கள் இருக்கையில், ஏன் பாஜக ரஜினியின் பின் திரிய வேண்டும் என்ற கேள்வி முக்கியமானது. பாஜக ரஜினியைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அவருடைய இந்துத்துவ நிலைப்பாடு மட்டுமல்ல, தமிழ் நிலத்தில் அவர் பெற்றிருந்த செல்வாக்கு. எட்டா கனியாக இருக்கும் தமிழ்நாட்டை அடைய ரஜினி மட்டுமே இன்றைய ஒரே வழி என்ற நிர்ப்பந்தம்.
மோடியை விட, அவரை தேர்தலில் நிற்கவைத்தாலே சுலபமாகப் பிரதமர் ஆவார் என்று சொல்லப்படும் நபர் அமிதாப் பச்சன். அப்பேர்பட்ட செல்வாக்குடைய அமிதாப் பச்சனை தேர்தல் அரசியலில் நிற்க வைக்க வேண்டும் என்ற தேவை பாஜகவிற்கு இல்லை. அவர் இல்லாமலேயே வட இந்தியாவில் சுலபமாக வெல்ல முடியும். சொல்லப்போனால், வட இந்தியத் தேர்தலில் வெல்வதற்கு பாஜகவிற்கு ஒரு மூன்றாம் தர நடிகர் போதும். கட்சியில் இணைந்த அடுத்த சில நாட்களிலேயே சன்னி டியோலும், கௌதம் கம்பீரும் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று வெற்றிபெறலாம். ஆனால், தமிழ்நாட்டில் அவை நடக்காத காரியம். அதனால்தான், அமிதாப் பச்சனிடம் பாஜகவிற்கு இல்லாத நிர்ப்பந்தம் ரஜினியிடம் உள்ளது.
தமிழக அரசியலை சினிமாதான் ஆள்கிறது என்பது அர்த்தமற்ற சொல். சினிமாவைக் கடந்த அரசியல் பின்புலம் தமிழக அரசியலில் உள்ளது. சினிமாதான் ஆள்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கும் பாஜகவே சினிமா நடிகரை முன்னிறுத்தும் தேவைதான் உள்ளது. ஆனால், ரஜினி தமிழ் நிலத்தின் தன்மையினை வெகுவாகவே உணர்ந்திருக்கிறார். தனிப்பட்ட மனரீதியில் தான் இந்துத்துவவாதி என்றாலும், தன் அரசியலைத் தமிழக மக்கள் ஏற்பார்களா என்ற அச்சம் அவரை துரத்தியிருக்கிறது. இறுதியாக, அனைத்திலிருந்தும் விலகிக்கொண்டார். தனிப்பட்ட ரீதியில் ரஜினிக்கு அரசியல் உவப்பானதாக இருக்கலாம். ஆனால், மத்திய அரசதிகாரத்தின் வலுமிக்க வற்புறுத்தலையும் கடந்து அவர் விலகியிருப்பது பன்முக தமிழ் நிலத்தின் நிர்ப்பந்தமாகவே இருக்க முடியும். அதை உணர்ந்த ரஜினி வழக்கம்போல் ஆன்மீகத்தையும் இந்துத்துவ நிலைப்பாட்டையும் தன்னோடு முடித்துக்கொள்ளச் சென்றுவிட்டார். ஒருவிதத்தில் இந்த நிலைப்பாடு தமிழ்நாட்டில் முயலும் ஒற்றைமைய சிந்தனைக்கு எச்சரிக்கையினையும் விட்டுச்செல்கிறது.
அப்துல்லா.மு