மாணவர் சந்திக்கும் பிரச்சினைகள் :
தொழில் நுட்பவசதிகள் அனைத்து பகுதிகளையும் இதுவரை சென்றடையாமல் இருப்பதும், தொடர்பு சமிக்ஞைகள் சரியாக கிடைக்காத பகுதிகளில் செல்பேசியைத் தூக்கிக்கொண்டு வீதிக்கும், தோட்டத்துக்கும், மேற்கூரைக்கும் அலையும் அவலத்திற்கு மாணவர்களை ஆளாக்குவது, இலகுவான கற்றல் சூழலுக்கு வழிவகுக்காது.
அப்படியே வசதிகள் வாய்க்கப் பெற்றாலும் அதனை சரியாகப் பயன்படுத்தும் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் பெருந்துயரங்களை விளைவிக்கிறது.
இப்படிப்பட்ட தவறான பயன்பாட்டால் உயிர் மற்றும் உடமைகளை மாணவர்கள் இழந்து தவிக்கிறார்கள்.
தொழில் நுட்பக்கருவிகள் ஏற்கனவே மனிதர்களைத் தனித்தீவுகளாக மாற்றி வைத்துள்ள நெருக்கடி ஒருபுறம் இருக்க, இப்போது செயலிகள் மாணவர்களின் சிந்தனைத் திறனை மழுங்கடிக்கத் தயாராகி வருகின்றன.
இணைய வழிக்கல்வியில் எந்த வரைமுறையும் காலக்கோடும் இல்லாமல் மாணவர்கள் இஷ்டத்துக்கு சுரண்டப்படுவதும், நேரங்காலம் என்று எந்த கட்டுப்பாடும் இன்றி மாணவர்கள் அலைக்கழிக்கப்படுவதும் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும்.
பள்ளிகள் மூடப்படுவது கற்றலை தாமதப்படுத்துகிறது. அமெரிக்காவின் மழலையர்் பள்ளிகளிலேயே கல்வி வளாக சூழல் இல்லாதது குழந்தைகளின் எழுத்தறியும் திறனில் 67% பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள், மாற்று திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு குழந்தைகளின் கல்வி குறித்த சலனமே யாரிடமும் எங்கும் இல்லை.
கல்வியாளர்களின் நெருக்கடிகள் :
தனியார் பள்ளிகள் பரிட்சித்து பார்க்கும் பலவகையான கற்பித்தல் முறைகளை தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் அரசு எந்த தீர்வுகளையும் தராமல் விட்டேத்தியாக நடக்கிறது.
இணையவழிக் கல்வி என்பதே கல்வி கட்டணத்தை வசூலிப்பதற்கான கண்துடைப்பு நாடகமாகவே நடத்தப்படுகிறது எனும் குற்றச்சாட்டு தொடர்கிறது.
பெரும்பாலான பெற்றோர்கள், ஆசிரியர்கள் எனப் பலருக்கும் இந்த தொழில் நுட்பங்கள் குறித்த போதாமை இருப்பதும், கொட்டிக் கிடக்கும் குப்பைகளிலிருந்து தமக்கான நிறைவான மாற்றை தேடிக் கண்டடைவதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் களையும் எந்த பயிற்சியும் இங்கில்லை.
பள்ளி நிர்வாகங்கள் இணையவழிக் கல்வியை விரும்பி முன்னெடுக்கவில்லை.. அவர்களுக்கு வேறுவழி தெரியவில்லை என்பதால் தங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை ஏதாகிலும் ஒருவழியில் கல்விச் சூழலோடு பொருத்தி வைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
பள்ளிகளின் எதிர்கால செயல்பாடுகளுக்கு உகந்த திசை வழிகளை அரசு காட்டுவதற்கு முயற்சிக்கவில்லை.
ஒரு அறிவார்ந்த சமூகத்தின் தலையாகவும் இதயமாகவும் ஆசிரியர்களே இருக்கிறார்கள். தனியார் பள்ளி ஆசிரியர்களின் வேலை மற்றும் சம்பள இழப்பு உருவாக்கியுள்ள பணி பாதுகாப்பற்ற சூழலையும் நிச்சயமற்ற தன்மையையும் குடிமைச் சமூகம், பின் விளைவுகளைக் கருதாமல் புறக்கணித்து வருகிறது.
மேற்படி அசாதாரண சூழல் தொடரும் பட்சத்தில், நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் உட்பட பெரும் கல்வி நிறுவனங்கள் ஒப்பந்த ஊதிய அடிப்படையில் இணையவழி கற்பித்தல் பணிக்கான பேராசிரியர்களை – ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கக் கூடும். இது கற்பித்தல் தரத்தைக் கீழறுப்பு செய்யும். நிரந்தரமற்ற தன்மையின் விளைவுகள் ஆக்கத்திறனில் பிரதிபலிக்கும்.
குறைந்த வருமானம் – வசதிகள் கொண்ட சிறுநகரங்களில் உள்ள தனியார் கல்விக் கூடங்கள் வரவு – செலவு சமபாட்டு புள்ளியை (Break Even Point) எட்ட முடியாமல் மூடப்படும்.
இணைய வழிக்கல்வி என்பதற்கான எந்த வகை மாதிரியும் இல்லாமல், ஒரு பேரிடர் சூழலின் இக்கட்டைப் பயன்படுத்தி, எல்லோரையும் அதற்குள் இழுத்துவிட்டு ஆழம் பார்க்கிறார்கள்.
கல்வி பெறுவதில் தனி மனிதனுக்குள்ள தாகமும், பதட்டமும் கால ஓட்டத்தில் இந்த புதிய முயற்சிகளை பழக்கமாக ஆக்கிவிடும். வேறு வழியின்றி மக்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்று திட்டமாக நம்புகிறார்கள்.
உழைப்புச் சூழலுக்குள் தள்ளப்படும் அடித்தட்டு குழந்தைகளை மீண்டும் கல்வி வளாகத்திற்குள் கொண்டு வருவது இயலாமல் போய்விடும்..
அரசு கல்வித்துறை முடிவுகள் மக்கள் நலனுக்கு உகந்ததாக இல்லை. வழக்கமான அறிவிப்புகளில்கூட குழப்பங்களை ஏற்படுத்துகிறது அரசு. பொதுத் தேர்வுகள் குறித்த முடிவுகளைக் கூட தெளிவாக எடுக்க முடியாமல் தானும் திணறி மக்களையும் மாணவர்களையும் உளவியல் அழுத்தங்களுக்கு ஆளாக்குகிறது.
ஆசிரியர் கண்காணிப்பின்றி வழங்கப்படும் தொலைநிலைக் கல்வியில் உயிர்ப்பு இல்லை. அதை உயிரோட்டமுள்ளதாக மாற்றுவதற்கான வேறு வழிமுறைகள் ஏதும் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
இணைய வழி பாதுகாப்பை உறுதிபடுத்தி தகவல் திருட்டு போன்ற அந்தரங்க உரிமைகள் பறிபோவதையும் அந்த இடையீடுகளில் தாங்களும் தங்களைச் சார்ந்தவர்களும் பலியாவதையும் தடுக்கும் எந்த உபாயமும் இல்லாமல் போனது நிச்சயயமாக நல்லதல்ல.
(தொடரும்)
-லியாக்கத் அலி கலிமுல்லாஹ்