நம் நிலையெல்லாம் இப்படியாக இருக்க, கொரானா கால கல்விச்சூழலை நெளிவுசுளிவோடு அணுகிய நாடுகள் செய்ததென்ன? தைவான், நிகராகுவா, ஸ்வீடன் உள்ளிட்ட சில நாடுகள் பள்ளிகளை மூடுவது குறித்து சிந்திக்கவே இல்லை. பள்ளிகளை விடுத்து. பிற இடங்களில் குழந்தைகளுக்கு உள்ள ஆபத்தை விட, கல்வி கொடுக்க முடியாத நிலையில் வரும் இன்னல்கள் அதிகம் என்பதால், பள்ளிகளைத் திறப்பதால் பெரும் பிரச்சினைகள் தோன்ற வாய்ப்பில்லை என்று தெளிவாக முடிவெடுத்தனர். குறிப்பாக ஸ்வீடனின் இந்த அணுகுமுறையை நார்வே, டென்மார்க் உள்ளிட்ட அருகாமை நாடுகள் சரியான முடிவு என்று தற்போது ஏற்றுக்கொண்டுள்ளன.
இதில் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் எல்லைகளை மூடுவதற்கும் ஒப்புக்கொள்ளாமல் உள்நாட்டு ஒழுங்கு மற்றும் தொடர் கண்காணிப்பின் மூலமாகவே நல்ல பலன்களைக் கண்டுள்ளது அந்தநாடு. இதே போல் ஜப்பானில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகள் சுழற்சி முறையில் நடத்தப்படுகின்றன. 1000 குழந்தைகள் உள்ள பள்ளியில் 10 நுழைவாயில்கள் வைத்து உடல் வெப்பநிலை உள்ளிட்ட பரிசோதனைகளுக்குட் படுத்தப்பட்டு குழந்தைகள் அனுமதிக்கப்படுகின்றனர்..
இது போன்ற முன்னோடி நாடுகளைப் பின்பற்றி டென்மார்க், நார்வே, பின்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஜுன் மாத ஆரம்பத்திற்குள் பள்ளிகளைத் திறந்துவிட்டுள்ளன.
பள்ளிகளை மூடிவைத்து கல்வியைத் தடுத்துக் கதைவிட்டுக் கொண்டிருக்காமல், இந்த நாடுகள் தங்களின் தெளிவான முடிவுகளின் மூலம் கொரானாவை விட கல்வி மறுப்பு தேசத்தின் சமூக, பொருளாதார ஆரோக்கியத்திற்கு அதிக ஊறு விளைவிக்கும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளன. ஆனால் நாம் தீர்வற்ற தீவுகளில் நின்றுகொண்டு சரியான பாதை ஏதும் தென்படாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம்.
எல்லா பேரிடர்களையும் போல கொரானா காலம், கல்வி விசயத்தில் எங்கே தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் ஏற்படுத்தி, இணைய வழியில் கல்வி என்ற ஏதோவொன்று நடப்பதைப் போல் ஒரு மாயத் தோற்றத்தையும் காட்டி பந்தை பொதுமக்களின் பக்கமாக தள்ளிவிட்டுள்ளது. இதில் பெற்றோர்களும் தனியார் பள்ளி நிறுவனங்களும் பிழை மற்றும் திருத்த சுழற்சியின் (trial and error) முறையிலான அனுபவ மாதிரிகளை உருவாக்கித் தந்துவிடுவார்கள் என்று எப்போதும் போல் அரசு மக்களின் இருத்தலியல் போராட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து நகர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதைவிட கல்வி கற்க அரசு சார்ந்த நிறுவனங்களையே எதிர்பார்த்து நிற்கும் பல கோடி குழந்தைகளின் நம்பிக்கையையும் தகர்த்தெறிந்து விட்டது.
(தொடரும்)
-லியாக்கத் அலி கலிமுல்லாஹ்