இணையவழிக் கல்வியை முன்னெடுப்பது குறித்து புதிய கல்விக்கொள்கையில் எந்த வரைவுத் திட்டமும் இன்றியே தெரிவிக்கப் பட்டிருந்ததை நாம் இந்த இடத்தில் நினைவுகூர கடமைப் பட்டுள்ளோம். அதை ஒரு கட்டாயத்தின் பேரில் பரிட்சித்து பார்ப்பதற்கான ஒரு அரிய வாய்ப்பு கொரானா காலத்தில் கைகூடி வந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்கள் கல்விச் சூழலைவிட்டு அதிகமதிகமான குழந்தைகளை புறந்தள்ளும் நுட்பங்களைக் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த நோக்கில் கல்வி பொதுமைப்படுத்தல் (Universalisation of education) என்பதில் முக்கியப்பங்கு வகித்த கல்விக்கூடங்களை சத்தமில்லாமல் இரண்டாம் பட்சமாக ஆக்குவதற்கு இணையம் உதவும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஒரு ஏழை கிராமப்புற, உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மாணவனுக்கு கல்லாலான பள்ளிக்கட்டிடமே கல்வியையும் உணவையும் உத்திரவாதப்படுத்தும் அடையாள வில்லையாக (token) இருக்கும் நிலையில், இந்த கதவடைப்புச் சிக்கலை அவனால் எப்படி வாய்ப்பாக பார்க்க முடியும்? மத்திய பள்ளி கல்வி வாரியம் அப்படியான நல்வாய்ப்பாக இதை பார்க்க சொல்கிறது.
இந்தியப் பன்மைச் சூழலில் சமத்துவம் என்பதை பெருமளவு சாத்தியப் படுத்தியவை கல்விக்கூடங்கள் என்றால் அது மிகையாகாது. வேறுபட்ட பழக்கங்கள், பழகுமுறை பண்பாடுகள், பேச்சு வழக்குகள், சாதி – மத பிளவுகள், சமூக சடங்காச்சாரங்கள் ஆகியவற்றிற்கு இடையே கல்வி கற்க ஓரிடத்தில் வந்து குழுமிய மாணவர்கள் தங்கள் வேற்றுமைகளை மறந்தனர். உரிமைகளைப் பேசினர். சமூகத் தளைகளை அகற்றி சிந்திக்கத் தலைபட்டனர். ஆசிரியர் – மாணவர் உறவு கற்பித்தலுக்கான கருவியாக மட்டும் அமையாமல், மனித மனங்களைக் கட்டிப்போடும் நுட்பமான உளவியல் சங்கிலியாகவும் உருவெடுத்தது. அந்த சங்கிலித் தொடர்பைத் துண்டிப்பதற்கு பல்வேறு முயற்சிகள் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அதில் முக்கியக் கண்ணியாக இணையவழிக் கல்வியைக் கையில் எடுத்துள்ளது சிபிஎஸ்இ.
கல்விச் சூழலில் கூடுதல் ஏற்றத்தாழ்வைப் புகுத்தும் இணையக்கல்வி, பள்ளிக்கூடங்களின் பின்னணியில் செயலாற்றும் சமூகப் பொறுப்பை அரித்துத்தின்கிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படியே இன்னும் 8.5 கோடி குழந்தைகள் பள்ளியையே எட்டிப் பார்க்காத நிலையில் குறைந்தபட்சம் 3-10 வயது பிரிவினருக்காவது கல்விக் கூடங்கள் இன்றியமையாத் தேவையாக இருக்கின்றன. கல்விச் சூழலை விட்டு அதிகம் பேரை வெளிதள்ளும் போக்கையே அவ்வப்போது வெளிப்படுத்தி வரும் கொள்கை முடிவுகள் இவை எவற்றையும் சீர்தூக்கிப் பார்க்கத் தயாராயில்லை.
(தொடரும்)
-லியாக்கத் அலி கலிமுல்லாஹ்