மோடி தலைமையிலான அரசு பதவியேற்றது முதலே தன் சகாக்களுக்கும், தன் அரசுக்கும் - தனது சித்தாந்த கட்டமைப்புக்கு எதிராக பேசுபவர்களைத் தேச துரோகிகள், வந்தேறிகள், நக்சல்கள், இந்தியர்களே இல்லை என்கிற அளவுக்கு அவர்கள் மீது வெறுப்புக் கருத்துருவாக்கத்தை முன்மொழிந்து வருகிறது. இப்படியிருக்க, தான் பிறந்த, தனக்கு உணவூட்டித் தாங்கும் இந்திய மண்ணின் மீது எந்த அக்கறையுமில்லாமல், நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளைவிக்கும் வண்ணம் மோடி அரசால் தீட்டப்படும் திட்டங்கள் அனைத்தும், அவர் இந்தியாவின் மகன் தானா என்கிற மிகப்பெரிய சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வனிதாவின் வாழ்க்கை என்னவாகப் போகிறது, என்று கவலை கொள்ளும் நாம், ஏன்? நம் எதிர்கால வாழ்க்கையைக் குறித்து சிந்திப்பதில்லை. இயற்கையோடு ஒன்றி வாழக்கூடிய சூழலில், இயற்கை என்னும் மாபெரும் இறையருளையே அழித்துப் பொருளீட்ட நினைக்கும் அரக்கர்களுக்கு எதிராகப் பேச நம்மை தடுப்பது எது?
கடந்த சில தினங்களுக்கு முன் அவசர அவசரமாக இந்திய அரசால் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட சூழலியல் தாக்க மதிப்பீடு-2020, இன்று சிலரிடம் மட்டுமே பேசுபொருளாக மாறியிருப்பது மிகக் கவலை அளிக்கிறது. அதற்கு காரணம், மார்ச் 23ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு அறிக்கை குறித்து மக்கள் மத்தியில் எந்த அறிமுகமும் செய்யாமல் மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறது அரசு. போபால் விஷவாயு தாக்கத்திற்கு பிற்பாடாக இந்தியாவின் இயற்கை வளங்களையும், மக்கள் நலனையும் காக்க பல்வேறு பாதுகாப்பு சட்ட நுணுக்கங்களோடு ஏற்படுத்தப்பட்டதுதான் "சூழலியல் தாக்க மதிப்பீடு". ஆனால் அந்த பாதுகாப்பிற்கு உலைவைக்கும் வண்ணம் ஏற்படுத்தப்பட்டதுதான் EIA-2020.
சூழலியல் தாக்க மதிப்பீடு-2020 EIA:
இந்திய நாட்டு எல்லைக்குள் எந்த இடத்திலாவது தனியார் அல்லது அரசு நிறுவனம் கனிமவள சுரங்கம் தோண்டுதல், கட்டுமானம், மின்சார உற்பத்தி, தொழிற்சாலை போன்ற இதர தொழில்களை தொடங்க நினைத்தால் அரசிடம் தக்க அனுமதி வாங்கியாக வேண்டும். தொழில் குறித்த நல்லது, கெட்டது முதலான அனைத்து சாராம்சங்கள் குறித்த அறிக்கைதான் EIA என்று சொல்லப்படுவது. இந்த அறிக்கை Environmental Clearance EC க்கு அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அவை மக்களின் கருத்துக் கேட்பிற்குப்பின் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் இதில் தொழிலாளர் பாதுகாப்பு, இயற்கை வள பாதுகாப்பு என பல மதிப்பீடுகள் செய்யப்படுவதுண்டு.
ஆனால்,
இப்பொழுது ஏற்படுத்தப்பட்டு இருக்கும் EIA-2020 வரைவு அறிக்கை முற்றிலும் அதற்கு மாற்றாக இருப்பதைக் காணலாம் குறிப்பாக ஆட்சிக்கு வந்தது முதலே தன்னை ஆதரித்து வளர்த்திவிட்ட கார்ப்பரேட் பண முதலைகளை வளர்த்து விடுவதையும், நாட்டை அவர்களுக்குத் தாரைவார்ப்பதையும் தனது முக்கியக் கொள்கையாக வைத்துள்ள மோடி அரசு, இந்த சட்ட திருத்தத்திலும் அதையே நிறுவியுள்ளது.
இந்த வரைவின் B2 நெடுவரிசையில் இருக்குக் தொழில்களை துவங்க மக்களின் கருத்துக்களை கேட்காமலேயே அந்நிறுவனம் தன் பணிகளை துவங்கிக் கொள்ளலாம் என்பதுதான் இங்கே மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அந்நிறுவனத்தை குறித்த ஏதேனும் குறைபாடுகளை மக்கள் நீதிமன்றம் சென்று நேரடியாக பதிவு செய்திட முடியாது. அரசு அதிகாரிகள் மட்டுமே அதிகாரம் படைத்தவர்களாக இருப்பார்கள். நாட்டின் தேவை, பாதுகாப்பு கருதி அரசால் துவங்கப்படும் எந்த திட்டத்திற்கும் Environmental Clearance EC , மக்களையோ, அவர்களின் கருத்துக்களையோ கேட்க தேவையில்லை என்பதுதான் இதன் சாராம்சம். மேலும் தொழிற்சாலைகளுக்கான ஆறுமாத கால பாதுகாப்பு மதிப்பீடு வருடம் ஒருமுறை எனவும், நிறுவனம் துவங்கிய பிறகு Environmental Clearance பெற்றுக்கொள்ளலாம் என்கிற முட்டாள்தனமான முயற்சி என பல்வேறு குளறுபடிகளுடைய அம்சமாகத்தான் EIA-2020 உள்ளது.
இதனால் விளைவது என்ன:
ஒருவேளை இந்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலை, மீத்தேன் வாயு போன்றவற்றை தேவையென கருதி டெல்டா மாவட்டங்களில் திட்டங்கள் துவங்கினால், விவசாய நிலங்களை எந்த ஆட்சேபணையுமின்றி கொடுத்துவிட வேண்டும். இதனால் என்ன நடக்கும் என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியது இல்லை. இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பே நில அபகரிப்பு நடவடிக்கை நடந்து வரும் நிலையில், இது அமல்படுத்தப்பட்டால் சட்டரீதியாக எல்லாக் கொடுமைகளையும் நாம் அனுபவிக்க நேரிடும். பலவற்றில் சிலதை மட்டுமே இங்கே பதிவு செய்கிறேன். சட்டம் இல்லாத பொழுதே தூத்துக்குடியில் சுட்டுத்தள்ள தயங்காதவர்கள், சட்டத்தை தங்களுக்கு சாதகமாக மாற்ற முற்படுகிறார்கள்.
இயற்கை, தேச நலன் கருதி 2038-ற்குள் நாட்டின் எல்லா அணுவுலைகளையும் மூடிவிடுவேன் என சபதமேற்கும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு மத்தியில், இன்னமும் 49 அணுவுலைகளைக் கட்டுவேன் என்கிற நம் நாட்டின் சிந்தனை எவ்வளவு மூடத்தனம். காலநிலை மாற்றத்தால் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் வளர்ச்சி என்ற பெயரில் துவங்கப்படும் நில அழிப்பு நடவடிக்கையை அரசு கண்டிப்பாக கைவிட வேண்டும். மாற்றாக, இயற்கை சார்ந்து திட்டங்களை வகுக்க வேண்டும்.
அதனால்தான் சொல்கிறோம் சூழலியல் தாக்க மதிப்பீடு-2020 EIA வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
மருத்துவ படிப்பில் OBC இடஒதுக்கீடு குறைப்பு, மின்சார கட்டண திருத்த சட்டம், CAA சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவ தலைவர்களை கைது செய்தல் என கொரோனா காலத்தில்கூட மோடி அரசு மக்களை வஞ்சிக்கும் திட்டங்களை, செயல்பாடுகளை அமல்படுத்த தயங்காத பொழுது, அடக்குமுறைகளை எதிர்த்து பேச நாம் ஏன் தயங்கவேண்டும்? பொதுநிறுவனங்களை எல்லாம் தனியார்மயமாக்கியதோடு மட்டும் நின்றுவிடாமல், நாட்டு மக்களின் பொதுச் சொத்தாக இருக்கக்கூடிய இயற்கை ஆதாயங்களை அழிக்க நினைக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாம் நிச்சயம் குரல் எழுப்ப வேண்டும்.
நாட்டின் இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிராக செயல்படும் மோடி (தலைமையிலான அரசு) தன் ஆவணங்களை காட்டி இந்தியாவின் மகன் என நிரூபிக்கலாம். ஆனால் இந்தியாவுக்கான மகனாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்.
ஒருவேளை, அரசு பின்வாங்கவில்லை என்று சொன்னால் மீண்டும் ஓர் ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு, ஷாஹீன் பாக் போன்ற போராட்ட வழிமுறையை முன்னெடுப்பதே அறமாக அமையும்.
-முஹம்மது சர்ஜீன்