பழத்தில் பட்டாசை வைத்து யானையையும் கருவில் இருக்கும் குட்டியையும் கேரள மாநிலம் மலபுரத்தை சேர்ந்த மக்கள் கொன்று விட்டனர் என்கிற செய்தி ஊடகங்களில் அனைவரின் இதயங்களையும் அடைந்திருக்கும். பாலக்காடு ஜில்லாவை மலப்புரம் என்று தவறுதலாக ஊடகங்கள் பதிந்தாலும் நிலைமையின் உண்மை தன்மையை ஆராய்வது நம் கடைமை அல்லவா.
யானைகள் ஊருக்குள் வருவது இன்று நேற்று துவங்கியது அல்ல. இதனை மனித-விலங்கு மோதல் (Human Animal Conflict) என்று அறிவியலில் சொல்லப்படும்.அதாவது மனிதனுடைய செயல் பாடுகளின் (Anthropogenic activities) மூலம் ஏற்படுகின்ற விளைவுகள் பெரும்பாலும் வன உயிரினங்களை வருத்துகிறது. பொதுவாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா இடங்களுக்கு செல்லும் நாம் வழியில் குரங்குகளுக்கு உணவை வழங்கி பிச்சைக்காரர்களாய் மாற்றி விட்டோம். அதை சாப்பிட்டு குரங்குகள் தன்னுடைய இயற்கையான பழக்கங்களையே மாற்றிக் கொண்டுள்ளது மட்டும் அல்லாமல் சாலை ஓர உயிரிழப்புகளும் இடம் பெறுகின்றன. இப்படிப்பட்ட உயிரின இழப்புகளை குறித்த ஒரு பிரிவே (Road Killed Animals) உயிரியலில் உள்ளது. இவை போன்ற உயிரின இழப்புகள் அனைத்திற்குமே காரணம் மனிதன் மட்டுமே. நம்மால் விளைவிக்கப்பட்ட பருவ கால மாற்றங்களுமே.
சரி. யானைக்கு வருவோம். பொதுவாக கூட்டமாக (Hurd) வாழும் இவைகள் உணவைத்தேடி தினமும் இடம் பெயர்ந்து கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் இருந்தால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு விடுமே.இப்படி நமது ஊர் வழியே சென்ற யானை திரும்பி வரும் நேரத்தில் அங்கே பெரிய கேளிக்கை நிறுவனமோ கல்வி நிறுவனமோ அல்லது தோட்டத்தையோ அமைத்து விடுகிறோம். தன்னுடைய பாதை தடைப்பட்டதை உணராது தவிக்கும் யானை கண்டிப்பாக ஊருக்குள் வரும், தானே வழியை தேடி!!! இதனையே ஹியூமன் அனிமல் கான்பிளிக்ட் என்கிறோம். அண்மையில் கேரளாவில் நடைபெற்ற யானை இறப்பையும் இதே கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்.
இப்படி யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கவே விவசாயிகள் பட்டாசு வைத்தும், சத்தம் எழுப்பியும், வேலி மற்றும் குழி (Elephant proof trench) அமைத்தும் வருகின்றனர். எனினும் தற்போது கேரளாவில் ஏற்பட்ட யானை இறப்பும் யானையை அன்னாசி பழத்தைக் கொண்டு கொலை செய்வது விவசாயிகளின் நோக்கம் அல்ல. யானையின் வாயில் சில காயங்கள் இருந்தது எனவும், யானை இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகியிருக்கும் என்பதும் வன விலங்கு மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. மேலும் மரு.ஈஸ்வரன் பேசும்போது அன்னாசி பழம் தான் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உடற்கூறு பரிசோதனையில் தெரியவில்லை என்றுதான் கூறி உள்ளார். என்னவாக இருந்தாலும் யானை இறப்பு நம் அனைவரையும் கவலை கொள்ள செய்திருக்கிறது. இங்கே விவசாயியின் நிலத்தில் யானை வருவதற்கு காரணமாக இருக்கும் பிரச்சனைகளை யார் தீர்ப்பது? முன்னுரிமை என்பதை விட, நம் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். யானையின் வழித்தடங்களை நாம் மறிக்கும் காலம் வரை, வன விலங்குகள் ஊருக்குள் வந்து கொண்டு தான் இருக்கும். மனிதனுக்கும் வன உயிரினங்களுக்கும் இடையேயான போராட்டம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.
நாம் அன்றாடம் செல்லும் பாதை மூடப்பட்டு விட்டால் நமக்கு எவ்வளவு கோபம் வரும். அதே கோபம் தானே யானை போன்ற உயிரினங்களுக்கும் இருக்கும் என்பதை நம் மனங்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறது? கேளிக்கைக்காக மற்றும் மனித தேவைக்காக காட்டை அழிப்பதை இன்றாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். யானைகள் இல்லா உலகில் மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று கனவிலும் நினைத்து விடாதீர்கள்.
கேரளாவில் நடைப்பெற்ற சம்பவங்கள் இப்படி இருக்க, இதற்கு குளிர் அறையில் நாற்காலியின் மேல் அமர்ந்து கொண்டு மத சாயம் பூசும் அரசியல்வாதிகள், அடிப்படை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஊரையே அதனை சார்ந்த மக்களையோ குறை கூறி சாயம் பூசுவதை விடுத்து, வன உயிரின பிரச்சனைக்கு தீர்வைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். மனிதனும் ஓர் உயிரினம். உலகை மற்ற உயிரினங்களுடன் பகிர்ந்து நாம் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
முனைவர். மு.சலாஹுதீன்
விலங்கியல் பேராசிரியர். திருச்சி.