இந்திய முஸ்லீம் சமூகம் வரலாற்றில் மிக உச்சத்தை தொடக்கூடிய வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய மாணவர் போராட்டம் இந்தியா முழுவதும் மாணவர் போராட்டமாக பிறகு மக்கள் போராட்டமாக மாறியது. பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கங்களும் போராட்டம் நடத்தினாலும் முஸ்லீம்களின் தன்னெழுச்சியான போராட்டம் ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.அந்த போராட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு ஒடுக்க அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து அனைத்திலும் தோல்வியையே தழுவியது. அதற்கு காரணம் முஸ்லீம்களின் உறுதியான போராட்டமே ஆகும்.
இந்த போராட்டங்கள் இந்திய வரலாற்றில் ஒரு மைல் கல்லை அடைய இருந்த நேரத்தில் மத்திய அரசின் கவனமின்மையாலும் மேம்போக்கு தனத்தாலும் முன்னெச்சரிக்கையின்மையாலும் கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் புகுந்தது.கொரோனா இந்தியாவிற்குள் புகுந்தாலும் அது ஒன்றும் செய்யாது யாரும் கவலைப்பட தேவையில்லை என வாய்ச்சவடால் மட்டுமே மோடி அரசு விட்டுக்கொண்டிருந்த நேரத்தில் மிக வேகமாக வைரஸ் நாடு முழுவதும் பரவ தொடங்கியது.நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்த முஸ்லீம்கள் தீர்க்கமுடன் நடத்தி வந்த தங்களின் மக்கள் நல போராட்டத்தை ஒட்டு மொத்த மக்களின் நலனை கருதி ஒத்தி வைத்தனர்.மத்திய அரசோ தங்களின் இயலாமையை வெளியே காட்டிக்கொள்ளாமல் நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேறு வழி தெரியவில்லை என சொல்லாமல் சொல்லியது.மக்களும் அதனை ஏற்றுக்கொண்டு அரசுக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வந்தனர்.ஆனால் அரசோ இந்த ஊரடங்கு காலத்திலும் அவர்களுக்கு தெரிந்த ஒன்றே ஒன்றை மட்டும் மிக வீரியமாக மேற்க்கொண்டனர் இஸ்லாமிய வெறுப்பு பரப்புரை தான் அது.டெல்லியில் நடந்த தப்லீக் மாநாட்டால் தான் இந்தியா முழுவதும் கொரோனா பரவியது என ஆரம்பத்தில் தங்களின் விஷம பிரச்சாரத்தை மேற்க்கொண்டனர்.அவர்களின் பிரச்சாரம் சாதாரண பொதுமக்கள் வரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.அத்தோடு அவர்கள் விடவில்லை இந்த கொரோனா காலத்தில் பழிவாங்கம் நடவடிக்கைகளில் இறங்கினர் இந்த ஃபாசிச ஆட்சியாளர்கள்.டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை தேடி தேடி கைது செய்து வருகிறது டெல்லி காவல் துறை. பலரை இனி போராட்டத்தில் பங்கேற்க கூடாது என மிரட்டும் வகையிலும் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.எல்லாவற்றிற்கும் மேலாக போர்காலங்களில் கூட நடக்காத அபத்தங்களை இந்த பேரிடர் காலங்களில் நடத்துகிறது மோடி அரசு,
போராட்டங்களில் முன்னின்று போராடியவரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவியுமான சஃபூரா UAPA சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் மூன்று மாத கர்ப்பிணி.
போர்காலங்களில் கர்ப்பிணி பெண்கள் கைது செய்யப்படுவதில்லை ஆனால் எந்த அடிப்படை அறங்களுக்கும் மதிப்பளிக்காத மத்திய அரசு இதிலும் அறத்தை கடைப்பிடிக்கவில்லை.அதே போல டெல்லி சிறுபான்மை ஆணைய குழு தலைவர் ஜஃபரூல் இஸ்லாம் கான் மோடி அரசின் வெறுப்பு அரசியல் குறித்து தன்னுடைய கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.அவர் மீது இந்த அரசு தேச துரோக வழக்கை பதிவு செய்துள்ளது.மேலும் அவர் வீட்டில் சோதனை செய்துள்ளது இந்த அதிகார அரசின் அடிமை வர்க்கம்.
இது ஒரு புறம் இருக்க காஷ்மீரில் அரசின் அராஜகத்தை வெளி கொண்டு வந்த மஷ்ரத் ஜஹ்ரா என்கிற பத்திரிக்கையாளர் உள்ளிட்ட மூன்று பத்திரிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.2014 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பின்பு மோடியிடமிருந்து வந்த அறிவிப்புகளில் பிரதமர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கமாட்டார் என்கிற அறிவிப்பும் இருந்தது.அன்றே தெரிந்து விட்டது தன்னை ஒருவர் கேள்வி கேட்பதை மோடி விரும்பவில்லை அவ்வாறு கேள்வி கேட்பவர்கள் இருக்க கூடாது என முடிவெடுத்தது.இந்த அரசு கருத்து சொல்லும் உரிமையை ஒரு போதும் தந்ததில்லை.இந்த கொரோனா காலத்திலும் அதே நடைமுறையை பின்பற்றி பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.அவர்கள் மூவருமே முஸ்லிம்கள்.எந்த சூழலிலும் தங்களின் தவறை வெளியே கொண்டுவந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.அதிலும் அவர்கள் முஸ்லீம்களாக இருந்தால் கேள்வியே கிடையாது என்பது தான் பா.ஜ.க வின் வழக்கம்.
உலகமே கொரோனா பேரிடருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது இந்தியாவின் ஆட்சியாளர்களோ தங்களுக்கு எதிரான கருத்துடையவர்களை கருவறுக்கும் வேலையை பார்த்து வருகின்றனர்.உலகம் நோய்க்கு எதிராக போராடிய ஆரம்ப கட்ட நேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸை சீன வைரஸ் என்றும் சீனா திட்டமிட்டு இந்த வைரஸை பரப்பியது என்றும் விஷம கருத்துக்களை மட்டுமே பரப்பினார் விளைவு கட்டுப்படுத்த முடியாத இழப்புகளை அந்த நாடு சந்தித்து வருகிறது. உலகின் வல்லரசு நாங்கள் தான் என கொக்கரித்து கொண்டு இருந்த அவர்கள் தங்கள் மக்களை காக்க திண்டாடி வருகிறார்கள்.அதே போல இந்திய பிரதமர் மோடியை கண்டு உலகமே பயப்படுகிறது என கூறி இந்த வைரஸின் பெயரை கொரோனா ஜிஹாத் என மாற்றிய இந்திய வலதுசாரிகள் இந்தியாவின் கையாளாகாத தனத்திற்கு வேறு வழியில்லாமல் தற்போது முட்டுக்கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
ஊரடங்கு நேரத்தில் எதிர் கருத்துடையோரை வேட்டையாடி வரும் இந்திய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என பார்த்தால் ஊரடங்கை அறிவித்ததை தவிர சிறு துரும்பை கூட நகர்த்தவில்லை என்பது தெளிவாகிறது.நோய் பரவலை ஆரம்பத்தில் கட்டுப்படுத்த தவறிய அரசு ஊரடங்கு அறிவித்தது மக்களுக்கு மிகப்பெரிய துன்பத்தை ஏற்படுத்துவதாக இருந்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்.ஆனால் மக்களுக்கு தேவையானவற்றை இந்த அரசு செய்யவில்லை. ஊரடங்கிற்கு பிறகு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க வேண்டி இருக்கும் அதற்கு முறையான திட்டமிடல் மேற்கொள்ள வேண்டும் என பொருளாதார அறிஞர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் அதை குறித்து மோடி அரசு கவலைப்படுவதில்லை.
ஆனால் இவர்களின் கவலை எல்லாம் ஒரு போதும் தங்களை விமர்சிப்பவர்கள் இருக்கவே கூடாது என்பதாக தான் உள்ளது.மக்களுக்கு நாங்களும் எதுவும் செய்ய மாட்டோம் நாடு எக்கேடு கெட்டுப்போனாலும் எங்களுக்கு கவலை எங்களின் நோக்கமெல்லாம் பார்ப்பன சித்தாந்தத்தை இந்திய மண்ணில் நிலைபெற செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் அதற்கு எத்தனை மனிதர்களின் உயிர்போனாலும் கவலை இல்லை என்பதாகவே உள்ளது.
எதற்கெடுத்தாலும் மோடி அரசை விமர்சிக்கின்றீர்கள் என நடுநிலை போர்வையில் வலம் வருபவர்கள் அவ்வப்போது கருத்து தெரிவிப்பார்கள்.பேரிடர் காலத்திலும் கூட மக்களுக்கு நன்மை செய்யாமல் இஸ்லாமிய வெறுப்பை கக்கி வரும் இவர்களை விமர்சனம் செய்யாமல் வேறு என்ன செய்ய முடியும்.
மிகப்பெரிய ஆபத்தை நோக்கி இந்திய தேசம் சென்று கொண்டிருக்கிறது.அது கொரோனாவல் அல்ல.எப்போது இந்திய நாடு பாசிச ஆட்சியாளர்களின் கையில் சென்றதோ அன்றிலிருந்து அது ஆபத்தை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறது.இந்த சூழலில் தான் கொரோனா என்கிற பேரிடர் உலகத்தின் பல நாடுகளை தாக்கியது போலவே இந்தியாவையும் தாக்கி நாட்டை ஆபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்திய மக்களுக்கு கொரோனா குறித்தான அச்சம் ஒரு புறம் இருக்க மறு புறம் ஊரடங்கால் இழந்துள்ள தங்களின் வாழ்வாதரத்தை மீட்டெடுக்க என்னசெய்வது என்கிற அச்சமும் பீடித்துள்ளது.மக்களின் அச்சத்தை போக்கி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசு என்ன செய்யப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விகுறியாக உள்ளது.அரசின் தற்போதைய நடவடிக்கைகளை பார்க்கும் போது கேள்விகுறியாக மட்டுமே இந்த அச்சம் இருந்து விடுமோ என்கிற கவலையும் மக்களிம் தொற்றிக்கொள்கிறது.
இந்த நேரத்திலாவது மோடி எல்லோருக்குமான பிரதமராக நடந்து கொண்டு நாட்டையும் மக்களையும் காப்பாற்ற தாமாக எதாவது செய்ய வேண்டும் அல்லது அறிவுடையோரின் அறிவுரையாவது கேட்டு செயல்பட வேண்டும்.
- முஜாஹித்