அன்புள்ள நண்பர்களே, தினமும் கொரோனாவினால் எற்படும் இறப்பு மற்றும் அவஸ்தைகளைக் கண்டும் கேட்டும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பீர்கள். என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது போன்ற எண்ணங்களில் உழன்றுகொண்டிருப்பீர்கள்?
இந்த வேளையில் நம் மனதை ஆரோக்கியத்துடன் வைப்பது நம் கட்டாய கடமையாகும். இல்லையெனில் மன நோயாளியாக 21 நாட்களுக்குப்பின் வீட்டிலிருந்து வெளியேறவேண்டிய அவல நிலை நம்மில் பலருக்கும் வரலாம். சீனாவில் கொரோனாவை வென்றவர்கள் நேர்மறை எண்ணங்களைக் கொண்டே போராடியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நம்முடைய மனதை நலமுடன் வைக்க சில வழிகாட்டுதல்கள்:
- ஒழுங்கமைந்த தினங்கள்:
21 நாட்கள் விடுமுறை என்பதால் தினமும் காலை, மதியம் உணவு சாப்பிடும் நேரம் முதல் எல்லாம் வரைமுறை இல்லாமல் இருக்கக்கூடாது. எப்பொழுதும் தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் தொலைப்பபேசி என்றும் இல்லாமல், கால அட்டவணை தயாரியுங்கள். இவ்வளவு நாள் இருந்த அட்டவணை வாழ்க்கை தற்பொழுது தகரும் போது, உங்கள் மனதும் தகர்ந்துவிடும். மிகவும் சோம்பேறிகளாக ஆகிடுவீர்கள். - தேவையற்ற விவாதங்களைத் தவிர்த்தல்.
குடும்பங்களிடமும் சரி, வாட்ஸ்அப் குரூப்பிலும் சரி, மற்றவருக்கு நன்மை பயக்கும் நேர்மறையான மறறும் தேவையான விசயங்களை மட்டும் பகிருங்கள். உதாரணமாக கொரோனா மூலம் 20 பேர் இறந்தார்கள் என்பதைவிட 75 பேர் காப்பாற்றப்பட்டனர்; என்பதுதான் பகிரப்பட வேண்டிய செய்தி. - வதந்திகளை பரப்பாமல் இருப்பது:
ஒரு செய்தி வதந்தியா என்பது தெரியவில்லை என்றால் அமைதியாக இருந்துவிடுங்கள். வணக்க வழிபாட்டு தலங்களெல்லாம் அடைக்கப்படுகின்றன, உலகம் அழியப்போகிறது எனவும், கொரானாவைத் தொடர்ந்து சீனாவின் வைரஸ் ஹான்டா (அது மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்குப் பரவாது) பரவி வருகிறது போன்ற செய்திகளை ஒரு மனிதனை மீண்டும் தளர்வடையவே செய்யும். சரியான தகவல்களுக்கு அரசு தரவுகளை மட்டுமே பார்க்கவும். - சும்மாவே இருக்க கூடாது:
வீட்டில் அதிக நேரம் இருக்கும் ஆண்கள் வீட்டுவேலைகளில் அனைவரோடும் ஒத்துழைக்கலாம். சமையல் மட்டுமல்ல வீட்டுவேலை என்பது. பொருட்களை ஒழுங்குபடுத்துதல் துவங்கி, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி சரிசெய்வதும் நம் வேலைதான். அனைத்து உறவினர்களையும் வீடியோ கால்களில் ஒன்றிணைக்கலாம். எந்த வேலை எப்போது செய்ய வேண்டும் என்கிற திட்டம் கண்டிப்பாக வேண்டும். இல்லையெனில் மனம் சோர்வு உடல் சோர்வில் கொண்டுசேர்க்கும். ஒரு நிமிடம்கூட சும்மா இருக்க கூடாது. - தேவையற்ற பயம் களைவோம்:
சிறிய தலைவலி, சளி, காய்ச்சல் ஏற்படும்போல் இருந்தாலே கொரானா வந்துவிட்டது எனும் எண்ணத்தைக் களையுங்கள். இத்தாலி, ஈரான், ஸ்பெயின் போன்ற வல்லரசுகளையே ஆட்டம் காட்டிய கொரானாவிலிருந்து நம்நாடு பெரும் உயிரிழப்பை சந்திக்கும் எனும் எண்ணத்தைக் களையுங்கள். 14 நாட்களுக்குப் பின்னர்தான் அறிகுறிகளே தெரியும். நம்மை பிறரிடமிருந்து தவிர்ந்து இருக்கச் சொல்லும் அரசின் அறிவுரையைக் கேட்டு நடப்போம். - நம்பிக்கை வளர்ப்போம்:
மனதிற்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இதுவும் கடந்துபோகும் என்கிற நம்பிக்கை ஊட்டும் கதைகள் செய்திகளை அனைவருக்கும் சொல்லுங்கள்.
முனைவர் சலாஹுதீன், ஜமால் முகமது கல்லூரி,திருச்சி