வட இந்திய, இந்துத்வ வன்முறையைக் காட்சிப்படுத்தி வந்திருக்கும் ஜிப்சிக்கு நன்றி.
நாடோடி ஒருவனின் கதையாக வந்திருக்கவேண்டிய இந்தப்படம், இஸ்லாமியர் வாழ்வியல் மீது துணிந்து தவறான சித்திரத்தைத் தருவதோடு, இந்துப் பெரும்பான்மைவாதத்துக்குத் துணைபோகிறது. இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் படமெடுக்கும் முன், அது பற்றிய குறைந்தபட்ச ஆய்வைச் செய்யவேண்டும். அப்படி எதுவுமில்லாமல், இப்படம் இஸ்லாமியர்களின் வாழ்வியல் முறையை மிகவும் கொச்சையாக முன்வைக்கிறது.
பிதாமகன் படத்தில் வெட்டியானாக வரும் நாயகனை எங்கிருந்தோ வந்த பெண் பிரசவித்துப்போவாள். அதுபோல இப்படத்தில், “சிவாயநம” சொல்லும் இந்து அப்பாவுக்கும், “தொழுகையைக் கைவிடாத” இஸ்லாமியப் பெண்ணுக்கும் கஷ்மீரில் பிறக்கிறான் நாயகன் ஜிப்சி. குண்டுவெடிப்பில் பெற்றோரை இழந்து, ஜிப்சி ஒருவரால் ஜிப்சியாக வளர்க்கப்படுகிறான். குண்டு வெடிப்பை இஸ்லாமியர்கள் நடத்தியாகப் பின்பாதியில் நாயகன் சொல்கிறார். அதாவது “சிவாயநம” சொல்லும் இந்து, தன் இஸ்லாமிய மனைவியின் சமய உரிமைகளில் தலையிடவில்லை. கஷ்மீரிகளின் குண்டை, இஸ்லாமியர்களின் குண்டாகப் பொதுப்புத்திக்கு ஏற்றவகையில் நாயகன் சொல்வதாகப் படம் சொல்கிறது. தாய்தந்தையரைப் பறிகொடுத்த, ஒருவரின் வலியாகக் கூட இதனைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் நாயகனுக்குக் கொடுக்கிற இந்த நியாயத்தை, கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரச ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இஸ்லாமியர்களுக்கு வழங்காமல், இஸ்லாமியர்கள் பற்றிய தவறான பண்பாட்டுச் சித்திரத்தைத் தருகிறது இச்சினிமா.
காவிரிப் போராட்டங்களைக் கடந்துவரும் நாயகனின் சமயோசிதங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் மனிதமாண்பை முன்வைப்பதாக இருக்கலாம். தண்ணீர் தர மறுக்கிறவனையும், கேட்டுக் கலகம் செய்பவனையும் சமாளித்துக் கடக்கும் நாயகன் படம் முழுவதும் உலகஞானத்தில் பேசுகிறான். ஆனால் காவிரி பற்றி வாய்திறக்கவில்லை. இது இயக்குனரின் அரசியல் பார்வை அன்றி வேறென்ன! காவிரிப் போராட்டத்தில், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, தமிழகத்தில், “இருதரப்பும் அமைதிகாப்போம்” என்று சொன்ன அரசியலின் பிரதியாகவே இக்காட்சி தெரிகிறது. கஷ்மீர் போராட்டத்தை, இஸ்லாமியர்கள் போராட்டமாகப் பார்ப்பதையும் இதனையும் இணைத்தால், “தேசிய இன அரசியலை” இப்படம் எவ்வாறு அணுகுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
தமிழ் முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாகூருக்கு வரும் நாயகன், தனக்குரிய ஒரு முகத்தைப் பர்தா அணிந்த உருவத்தில் கண்டடைகிறான். காதலை நேரடியாகச் சொல்லாமலேயே காதலிக்கிறார்கள். அருமையான வசனங்களோடு. தான் பள்ளிவாசலுக்குத் தொழுகப்போகாமல், தன் மகள்களின் தொழுகையை அருகிலிருந்து கண்காணிக்கும் ஓர் இஸ்லாமியத் தந்தையை, ராஜூமுருகன் எங்கு பார்த்தார் எனத் தெரியவில்லை. கண்டிப்பான என்று கூடச் சொல்லமுடியாத, முரட்டு இறுகிய முகபாவனையுடன் ஓர் உருது முஸ்லீமை, மலையாள வாடையுடன் தமிழ்ப்பேச வைத்து, இஸ்லாமிய அடிப்படைவாதச் சித்திரத்திற்குக் கூடுதல் செறிவூட்டி இருக்கிறார் இயக்குனர். அந்தப் பாசம் மிகுந்த அப்பாவின் இயல்பைத் தனியாக எழுதவேண்டும்.
இரண்டொரு நாட்களிலேயே, (அ)வாரங்களிலேயே, நிச்சயிக்கப்பட்டத் திருமணத்திற்கு முந்தைய இரவில், நாயகனுடன் உடன்போக்குப் போகிறாள் நாயகி. வட இந்தியாவில் ஓர் இஸ்லாமிய ஜமாத்தில் நிக்காஹ் நடக்கிறது. ஜமாத் நடைமுறைகளான, மணப்பெண் மணமகள் NOC பற்றி காட்சியில் எதுவும் இல்லை. ஏன் என்பதைக் கீழே பார்க்கலாம். இஸ்லாமியத் திருமணம் குறித்த அடிப்படை அறிவே இல்லாமல், மணமகளுக்குக் கருகமணியை மணமகனே அணிவிக்கிறார். இது இஸ்லாமியர்களின் வழக்கமே இல்லை. இந்தச் சிறு விசயம்கூட தெரியாமல், இஸ்லாமிய வாழ்வியலைத் துணிந்து, தன் புரிதலில் சித்தரிக்கிறார் இயக்குனர்.
நாடோடியான நாயகன் குடும்பவாழ்க்கைக்கு உட்படுகிறான். நாயகன் வட இந்தியாவில் வசிக்கும் இடங்களில் எல்லாம், அனைவரும் தமிழ்ப் பேசுகிறார்கள். ஆனால் நாகூரில் நாயகன் நாயகியிடம் தன் உருது பேசும் திறனைக் காட்டுகிறான். தமிழ்ப் பேசும் நாகூர் இஸ்லாமியர்களின் மத்தியில் உருது குடும்பத்தை இறக்கிவிடும் அரசியல் நமக்கு இப்போது புரிகிறது.
சிறையில் இருந்து வெளிவரும் நாயகன், இசைவழி உலகஅமைதி பேசும் பெண் ஒருவரின் மூலம், மனைவியின் இருப்பைத் தெரிந்துகொண்டு கோழிக்கோடு விரைகிறான். கேரளத்துச் சகாவுகளோடு இணைந்து தன் மனைவியைத் திரும்பப்பெற முயற்சிக்கிறான். நாடோடி ஒருவருடன் சென்று வாழ்க்கை நடத்தி, குழந்தையுடன் திரும்பிவரும் பெண்ணை அரவணைக்கும் அந்த முரட்டு அடிப்படைவாத(? ) தகப்பன், பெண்ணைக் “குலா” கொடுக்கச் சொல்கிறார். ஆனால் நாயகன் “தலாக்கிற்குச்” சம்மதிக்கிறான். “தலாக்கிற்குச் சீரான இடைவெளி இருக்கிறது; அதற்குள் தன் மனைவியின் பிளவுண்ட மனதை வென்றுவிடலாம்”, எனக் கச்சிதமாக நகரும் நாயகனுக்கு, தங்களது நிக்காஹ் நடந்த, ஜமாத்தில் இருந்து ஒரு சான்றிதழைப் பெற்றுவந்து, உள்ளூர் ஜமாத்தில் காட்டிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரியவில்லை. ஏனென்றால் இயக்குனருக்கு இவ்விசயங்களைப் பற்றித் தெரிந்திருக்கத் தேவையே இருக்கவில்லை.
வட இந்தியாவில் அரசியல்வாதிகளால் பெரும்வன்முறை இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படுகிறது. மும்பையும், கோத்ராவும், முசாஃபர் நகரமும், இரத்தமும் சதையுமாகக் கண்முன்னே விரிகின்றன. பாதிக்கப்பட்ட நாயகன் சிறைக்குப் போகிறான். பாதிப்புக்குள்ளான நாயகி ஓர் ஆட்டோக்காரரால் காப்பாற்றப்பட்டு, பிறகு தந்தையிடம் ஒப்படைக்கப்படுகிறார். அந்த ஆட்டோக்காரர், நள்ளிரவில் வீடுதிரும்பி ஸ்ரீராமனை வணங்கும் இந்து. “இஸ்லாமிய மனைவியின் வழிபாட்டு உரிமையைத் தடுக்காத, “சிவாயநம” சொல்லும் இந்து, ஸ்ரீராமனை வணங்கி இஸ்லாமியப் பெண்ணுக்கு அடைக்கலம் தரும் இந்து” போன்றோரைக் காட்டத்தெரிந்த இயக்குனருக்கு, இஸ்லாமியத் தகப்பனின் நல்ல குணாம்சத்தைக் காட்ட இறுதிவரை முடியவில்லை. இதன்மூலம் எதைக் கடத்துகிறார் இயக்குனர் என்பது நாம் விளங்கிக்கொள்ள முடியாததா?
வீடற்ற நாடோடி ஒருவனோடு சில நாட்களில் வாழச்செல்லும் செல்லமகளை, இழந்து நிற்கும் ஒரு தகப்பனை, அடிப்படைவாதியாகச் சித்தரிக்கும் இயக்குனரின் அரசியல் என்ன அரசியல்?
“ஆசை முகம் மறந்துபோச்சே” எனும் பாரதியின் கண்ணன்பாட்டு பின்னணியில் ஒலிக்க, மனைவியைத் தேடும் நாயகன், பிறகு, இசைவேள்வி நடத்தி, அந்த அடிப்படைவாதத் தகப்பனிடமிருந்து தன் மனைவியை மீட்கிறார். அந்த இசைமேடையில், தன் மனைவி உள்பட பலரைத் தாக்கிய ஒரு பட்டியலின முன்னாள் இந்துத்வ அடியாளையும், மனைவியையும் ஒருசேர ஏற்றி, சமாதானத்தை வெண்புறாவாகக் கூவி அழைக்கிறார். திருந்திய முன்னாள் அடியாள் மேடையில் வருந்துகிறார். தன் பெண்ணின் மறுவாழ்வுக்காக, வடஇந்தியா வரை வந்த, அந்தத் தகப்பன், தன் கணவனுடன் இணைந்த மகளைப் பார்த்தவாறே, இசைநிகழ்வில் இருந்து வெளியேறுகிறார்.
“சிவாயநம” சொல்லும் நல்ல இந்து, “ஸ்ரீராமனை வணங்கும்” நல்ல இந்து, “முன்னாள் அடியாளான” திருந்திவிட்ட இந்துக்களின் நடுவே, மாறவே மாறாத ஓர் இஸ்லாமியத் தகப்பனாக அவரை இரக்கமின்றிச் சித்தரிக்கிறார் இயக்குனர்.
படம் பேசும் அரசியலுக்கு வருவோம்.
*படத்தின் மையம் நாடோடியின் வாழ்க்கை.
*இஸ்லாமியத் தகப்பனிடமிருந்து, தன் மனைவியை அவன் மீட்பதே கதை.
*இயல்பில் நல்லநோக்கமும், இடதுசாரிச் சாயலும் உடைய இயக்குனர், வட இந்திய இஸ்லாமியர்கள் மீதான வன்முறைகளைக் காட்சிப்படுத்தி, தன் இந்துத்வ எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கிறார்.
இதுவரை பாபர் மசூதி இடிப்பைப் பற்றிய IN THE NAME OF GOD, குஜராத் படுகொலைகள் பற்றிய FINAL SOLUTION, முசாஃபர் நகர் வெறியாட்டம் பற்றிய MUZAFFARNAGAR BAAQI HAI போன்ற குறும்படங்களை, ஆவணப்படங்களைத் தவிர்த்து, பாபர் மசூதி இடிப்பு, குஜராத், முசாஃபர் நகர வன்முறைகளைக் குறித்து ஒரு வெகுசனப்படம் கூட வரவில்லை எனும் போது, இக்கலவரங்களைக் காட்சிப்படுத்தி இருக்கிறது ஜிப்சி. ஆனால், இந்துத்வ அரசியலை எதிர்க்கும் இயக்குனர், இந்துப் பெரும்பான்மைவாதத்துக்குப் பலியாகி, பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் வாழ்வியலை எந்தப் புரிதலுமற்றுத் தவறாகச் சித்தரித்திருக்கிறார். இஸ்லாமியர்களின் நம்பிக்கைகளை, வாழ்வியலை, அடிப்படைவாதச் சிக்கலாக்கி அதனையே முதன்மை முரண்பாடாக முன்வைக்கிறார்.
கேரளாவில் NIA வால் அலைக்கழிக்கப்பட்ட ஹாதியா பற்றி படம் எடுக்க வேண்டிய தேவை இருக்கும் இந்தியாவில், “இஸ்லாமிய அடிப்படைவாதமே மிகமுக்கியப் பிரச்சனை” என தன் இந்துப்பெரும்பான்மைவாதத்தை அறிவிக்கிறார் இயக்குனர்.
பெரும்பான்மைவாதத்தை ஏற்கும் அரசியலை, “பாதிக்கப்பட்டோரையும், பாதிக்கச்செய்தோரையும் சமப்படுத்துவது, பாதிக்கப்பட்டோரின் வலியை நேரடியாகச் சொல்வதில் இருந்து விலகுவது, பாதிப்புக்குள்ளானோரின் பண்பாட்டு முரணை முதன்மைப் பேசுபொருளாக்குவது, ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் சமூகத்தினைத் தொடர்ந்து நிர்பந்திப்பது, அரசியல் ரீதியில் ஒடுக்கப்பட்டோரை, அவர்களது அடையாளத்தோடு சுருக்குவது, பாதிக்கச்செய்தோரை பரிவோடு காட்டி, பாதிப்புக்குள்ளானோரைக் கைகுலுக்கச் செய்ய நிர்பந்திப்பது” போன்றவற்றிலிருந்து புரிந்துகொள்ளலாம். “ஜிப்சி” இவை அத்தனையையும் ஒருசேரக் காட்டியிருக்கிறது.
தாராளவாதத்தை, என்ஜிஓ அரசியலை, இந்திய தேசியவாதத்தின்வழி இந்துப்பெரும்பான்மைவாதத்தை முன்வைத்து வந்திருக்கும் இப்படம் தேசிய இன அரசியலுக்கு எதிரான படம்.
இந்துப்பெரும்பான்மைவாதத்தை முறியடிக்க எதை முன்னிறுத்த வேண்டும்? இது வெறும் பாஜக எதிர்ப்பரசியல் என்றால், பாஜக ஒருநாள் வீழ்த்தப்பட்டே தீரும். ஆனால் இந்துப்பெரும்பான்மைவாதம் என்பது பாஜகவோடு முடியப்போவதல்ல.
கஷ்மீரை இஸ்லாமியச்சிக்கலாகக் காட்டி, காவிரியை இருதரப்பின் நியாயமாகக்காட்டி, இந்திய தேசியத்தின் குரலை அப்பட்டமாகப் பேசுகிறது இப்படம்.
அன்பான தகப்பனின் வலியை மத அடிப்படைவாதமாகச் சுருக்கி, உருதுபேசுபவர்கள் என்பதை வலிந்து திணித்து இஸ்லாமிய வாழ்வியலை உண்மைக்கு மாறாகச் சித்தரித்து, இந்துப்பெரும்பான்மை வாதத்துக்குத் துணைபோகிறது இப்படம்.
ஜிப்சிகளின் வாழ்வியலில், இசையை மட்டும் எடுத்துக்கொண்டு, பிறவற்றைச் சித்தரிப்பதிலும் இப்படம் முனைப்புக்காட்டவில்லை. “தன் பாடல்வழி , தன்வலியோடு பிறர் வலிபேசுபவனின் வலியை இப்படம் பேசவில்லை” என அழுகிறான், அந்த ஜிப்சி.
- ரபீக் ராஜா