மீடியா ஒன் ஏசியாநெட் செய்தித் தொலைக்காட்சிகளின் மீதான தடை பாதியிலேயே விலக்கிக் கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட 14 மணி நேரத்திற்குப் பிறகு அவை தங்களது ஒளிபரப்பை மீண்டும் துவக்கி உள்ளன.
நேற்று ஆங்கில இணையதளமான நியூஸ் மினிட்டில் இந்த தடைக்கான காரணங்கள் குறித்து தகவல் ஒளிபரப்புத் துறையின் நோட்டீசில் இடம்பெற்றிருக்கும் காரணங்கள் பற்றிய கட்டுரை படித்தேன்.
மீடியாஒன் தொலைக்காட்சிக்கு ஆர்எஸ்எஸ் பற்றி அதிகமான கேள்விகளையும், இந்த கலவரத்திற்கு ஆர்எஸ்எஸ்தான் காரணம் என்பது போன்ற செய்திகளை ஒளிபரப்பு செய்ததுதான் தடைக்கு காரணம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதோடு கலவரத்தின்போது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் காட்சிகளை ஒளிபரப்பியதும் தடைக்கான காரணமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏசியாநெட் தொலைக்காட்சி, காவல்துறை இந்த கலவரத்தை கண்டும் காணாமல் இருந்து விட்டதாகவும், கலவரக்காரர்களுக்கு துணை போனதாகவும், இந்த செய்தியை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த அவர்களது நிருபர் கலவரக்காரர்களால் தடுக்கப்பட்டு அவரது மதத்தை பற்றி விசாரித்ததாகவும் செய்தி ஒளிபரப்பியதே தடைக்குக் காரணமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த இரண்டு தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்ட இந்த செய்திகளில் எந்த விதமான பொய்யும் புரட்டும், வன்முறையைத் தூண்டும் விதமான செய்திகளும் இல்லாதபொழுது இவற்றை தடைக்கு காரணமாக ஒரு மத்திய அமைச்சகம் சொல்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்எஸ்எஸ் அமைப்பை கேள்வி கேட்டால் தடை, செயல்படாமல் இருந்த காவல்துறையைப் பற்றிய உண்மையை ஒளிபரப்பினால் தடை என்றால் இந்த அரசாங்கத்தில் கருத்து சுதந்திரம் எங்கே இருக்கிறது என்ற கேள்வி நமக்குள் எழுகிறது.
அதிகாரத்தின் உச்சத்தில், சர்வாதிகாரத்தின் போதையில் இந்த அரசு செயல்படுவதையே நமக்கு இந்த தடை எடுத்துக்காட்டுகிறது. கலவரத்திற்கு காரணமாக இருந்த குண்டர்கள்மீது, அந்த கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசிய பாஜகவின் தலைவர்கள்மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது; மாறாக கலவரத்திற்கு காரணமான பாஜக தலைவர்கள்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யச் சொன்ன நீதிபதி இரவோடிரவாக இடமாற்றம் செய்யப்படுகிறார், கலவர செய்திகளை ஒளிபரப்பிய செய்தித் தொலைக்காட்சிகள் தடை செய்யப்படுகின்றன என்றால் இந்த பாசிச அரசு நமக்கு சொல்ல வருவது இதுதான்:
நீங்கள் போராடினால் எங்கள் குண்டர்களை வைத்து அதனை ஒடுக்குவோம்;
அதிகாரம் எங்கள் கைகளில் இருக்கிறது, நீங்கள் காவல்துறையை உதவிக்கு அழைத்தால் அந்த காவல்துறை எங்களுக்காகத்தான் வேலை செய்யும்; நீங்கள் நீதிமன்றப் படிகளில் ஏறினால் எங்களுக்கு சாதகமாக செயல்படாத நீதிபதிகளை நாங்கள் செயல்பட விடமாட்டோம்; நீங்கள் ஊடகங்களை நம்பியிருந்தால் உங்களுக்காக செயல்படும் ஊடகங்களையும் முடக்குவோம்.
அரசுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான இந்தப் போரில் யாருடைய கை ஓங்கப் போகிறது என்பதைப் பொறுத்துதான் நமது எதிர்காலம் கட்டமைக்கப்படவிருக்கிறது. முஸ்லிம்களின் கை ஓங்கினால் இந்த நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, அரசமைப்புச் சட்டம், பன்மைத்துவம் இவற்றின் கை ஓங்குகிறது என்று அர்த்தம்; மாறாக அரசின் கை ஓங்கினால் பாசிசம், சர்வாதிகாரம், கொடுங்கோன்மை, அரசு எதேச்சதிகாரம் இவற்றின் கை ஓங்குகிறது என்று அர்த்தம்; யார் வெல்லப் போகிறார் என்பதை காலம் முடிவு செய்யட்டும்.
-அபுல் ஹசன்