முஸ்லிம்கள் சட்டத்தை மதிப்பவர்கள், அதற்குக் கட்டுப்பட்டவர்கள்.
- பின்னர் ஏன் CAA வுக்கு எதிராக போராடுகிறார்கள்?
- CAA எனப் பொதுவாகச் சொல்வதைவிட CAA2019 எனத் தெளிவாகச் சொல்வோம். ஏனெனில், நாட்டில் மொத்தம் 5 CAA க்கள் இதுவரை வந்துள்ளன. அதில், 2019 ல் இயற்றப்பட்ட தற்போதைய CAA வுக்கு எதிராக மட்டுமே போராடுகிறார்கள். மற்றவைகளுக்கு எதிராக அல்ல.
தற்போதைய CAA 2019, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிராக உள்ளது; மனிதாபிமானம், சர்வதேச மனித உரிமை சட்டங்கள் முதலானவற்றுக்கும் எதிராக உள்ளது. இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு கவுரவம் உள்ளது. அது, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழனின் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் மனிதாபிமானமிக்க நாடு. இந்தக் கவுரவத்தை இழக்க வைக்கும் விதமாகவும் CAA2019 உள்ளது. எனவேதான் முஸ்லிம்கள் இதற்கு எதிராகப் போராடுகிறார்கள்.
தம் உயிர், உடைமை, அடையாளம் என எவற்றையும் நாட்டுக்காகவும் நாட்டு ஒற்றுமைக்காகவும் தியாகம் செய்வதற்குத் தயங்காதவர்கள் முஸ்லிம்கள். சுதந்திர வரலாற்றிலிருந்து இன்றைய பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு வரை இதனைப் பறைசாற்றும். அப்படிப்பட்டவர்கள், நாட்டின் ஒரு சட்டத்துக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்றால் அது நாட்டின் நலனுக்காகவே இருக்கும் என்ற அடிப்படை புரிதல்தான் முக்கியம்.
CAA2019 மதத்தின் அடிப்படையில் அகதிகளுக்குக் குடியுரிமை கொடுப்பதைக் குறித்துப் பேசுகிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதே அரசியலமைபின் அடிப்படை. அதனை இச்சட்டம் தகர்க்கக்கூடியதாக உள்ளது. இந்தியாவின் இறையாண்மையையே தகர்க்கக்கூடிய இந்தப் பாசிச அஜண்டாவை முஸ்லிம்கள் அல்ல, இந்தியர் அனைவருமே இணைந்து எதிர்த்தாக வேண்டும். தற்போதும் அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.
- அப்படியெனில் ஆளும் பாஜக அரசு இந்தியாவைத் தகர்க்க முனைகிறது; அது சட்டத்துக்கு எதிராக ஆட்சி செய்கிறது என்கிறீர்களா?
- ஆம், அதிலென்ன சந்தேகம்? நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு இப்போது அச்சந்தேகம் மனத்தில் முழுமையாக ஆக்ரமித்துவிட்டதாலேயே சுதந்திர இந்தியாவில் இதுவரை கண்டிராத மக்கள் போராட்டம் தற்போது நடந்து வருகிறது.
- சரி, அப்படியெனில் 1955 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தின் அடிப்படையிலான NRC யையும் அந்தத் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான NPR கணக்கெடுப்பையும்கூட இப்போராட்டத்தில் எதிர்க்கிறார்களே. அது ஏன்? இது தவறுதானே? யார் இந்தியர், யார் இந்தியர் அல்லாதார் என்பதைத் தெளிவாக அடையாளம் காண இது அத்தியாவசியமானது தானே?
- இது நியாயமான கேள்வி. நேரடியாக பார்த்தால், NRC, NPR ஐ எதிர்ப்பது தவறு போலத்தான் தெரியும். அது 1955 சட்டத்தின் அடிப்படையிலானது என்பதை மறுப்பதற்கில்லை. 2003 ஆம் ஆண்டு கொண்டுவந்த CAA வில்தான் NRC வேண்டுமென சட்டமியற்றப்பட்டது. அச்சட்டத்தை மக்கள் எதிர்க்கவும் இல்லை. யார் இந்தியர், யார் இந்தியர் இல்லை என்பதை வேறுபடுத்தி அறிய வேண்டிய தேவை அரசுக்குக் கட்டாயம் வேண்டும்தான். எனில், NRC மற்றும் NPR ஐ எதிர்ப்பதும் தவறுதான்.
ஆனால், இதனை மக்கள் எதிர்ப்பது சட்டத்துக்கு எதிரான மன நிலையில் இல்லை. அதனை எதிர்ப்பதற்கு இரு காரணங்கள் உண்டு.
- யார் இந்தியர், யார் இந்தியர் இல்லை என்பதை அடையாளம் காண்பதற்காக வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டல் ஆவணம் விசயத்தில் மக்களுக்கு இருக்கும் பயத்தின் காரணமாக. அரசு கேட்கும் குறிப்பிட்ட ஆவணம் இல்லாதோர் நாட்டில் ஏராளமானோர் உண்டு. அவர்களெல்லாம் இந்தியர் அல்ல என்று பட்டியலிடப்படும் அபாயமுண்டு என்று பயப்படுகின்றனர்.
- அவ்வாறு பட்டியலிடப்படும் மக்களில் முஸ்லிம் அல்லாதோருக்கு CAA2019 படி இந்தியக் குடியுரிமை கிடைத்துவிடும்; ஆனால் முஸ்லிம்களுக்குக் கிடைக்காது. எனவே, முஸ்லிம்களைத் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி அவர்களைத் தனிமைபடுத்தும் துர்நோக்கத்தில் பாஜக செயல்படுவதாக சந்தேகிக்கின்றனர். இச்சந்தேகத்தினைப் புறம்தள்ள முடியாது. ஏனெனில், பாஜக ஆர்.எஸ்.எஸ் வகுத்துள்ள செயல்திட்டத்தின் அடிப்படையில் செயல்படும் பாசிச கட்சி என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆகவே, NRC, NPR ஐ எதிர்ப்பது சட்டத்தை எதிர்ப்பதாகாது. அது, பாசிசம் விதைத்துள்ள அச்சத்தால் விளைந்த மக்களின் பதைபதைப்பு. சரியான அரசு, மக்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த அரசிடம் அதனை எதிர்பார்க்க முடியாதே!
- நீங்கள் கூறிய பதிலில் திருப்தி இல்லை. NRC க்காக அரசு வெளியிட்டுள்ள 14 வகை ஆவணங்களில் எதுவுமே கைவசம் இல்லாத ஏழை, பாமர மக்களுக்கு அவர்களின் பகுதிகளிலுள்ள சமூகத் தலைமைகள் கொடுக்கும் சான்று, கிராம அலுவலர்கள் கொடுக்கும் சாட்சி போன்றவையே போதுமானது என அரசு அறிவித்துள்ளதே. அதே போன்று, CAA2019 ன் படி முஸ்லிம் அல்லாத அனைவருக்கும் குடியுரிமை கிடைத்துவிடும் என்பது தவறான வாதமில்லையா?
- உங்கள் கேள்வியில் நியாயமுண்டு. ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முதல் விசயம், ஆவணம் தொடர்பானது. நீங்கள் கூறியது போல் அவ்வாறு ஒரு அறிவிப்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் அறிவிக்கப்பட்டது என்றதொரு செய்தி வந்தது உண்மைதான். ஆனால், மோடி மற்றும் அமித்ஷாவின் பேச்சுகளில் இப்போது மக்கள் முழுமையாக நம்பிக்கை இழந்துள்ளனர். நாட்டின் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகிய இரு முதல் முக்கியத் தலைமைகளின் பேச்சின் மீதே மக்கள் நம்பிக்கை இழந்துள்ளது துரதிஷ்டவசமானது.
15 லட்சம் விஷயத்திலிருந்து பண மதிப்பிழப்பு விஷயம் வரை, ஓட்டு வாங்குவதற்காக மக்களை ஏமாற்றவே அப்படி கூறினோம் என எவ்விதக் கூச்சமும் இல்லாமல் தொலைகாட்சியில் அமித்ஷா பேட்டி கொடுத்ததை நாம் காணவில்லையா? இவ்வாறான இவர்களின் பேச்சை எப்படி நம்ப முடியும்? எனவே, அவர் கூறிய ஆவணம் தொடர்பான அந்த வாக்குறுதியை அரசு அறிவிப்பாக வெளியிட்டு, NRC ஆவணம் பட்டியலில் அதிகாரப்பூர்வமாக அதனைச் சேர்த்து வெளியிட வேண்டும். என்றாலே மக்கள் நம்புவர். அதுவரை NRC, NPR ஐயும் மக்கள் சந்தேகக் கண்ணோடே பார்ப்பர். அதை தவறு என கூறமுடியாது. இதற்குக் காரணமே இந்தக் கையாலாகாத, கோயபல்ஸ் நபர்கள் ஆளும் இடத்தில் இருப்பதுதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இரண்டாவது விசயம், CAA2019 ன் படி முஸ்லிம்கள் மட்டும்தான் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவர் என்பது சற்று அதீத பயம்தான். அச்சட்டத்தின்படி முஸ்லிம் அல்லாதோர் அனைவருக்கும் குடியுரிமை கிடைக்க வேண்டுமெனில்,
அவர்கள் பங்களாதேஷ், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானிலிருந்து வந்ததற்கான ஆதாரத்தைச் சமர்பிக்க வேண்டும். அங்கிருந்து வந்த 6 மதத்தைச் சேர்ந்த அகதிகளை மட்டுமே CAA2019 குடிமக்களாக சேர்த்து கொள்ளும். முஸ்லிம் அல்லாத எல்லோராலுமே இதற்கான சான்றைக் கொடுத்துவிட முடியுமா என்றால் முடியாதுதான். ஆனால், பாசிசம் நினைத்தால் இதற்கும் ஏதேனும் குறுக்குவழி ஏற்பாடு செய்து முஸ்லிமல்லாத அனைவருக்குமே குடியுரிமை கொடுக்கச் செய்துவிட முடியுமே. இவ்வாறான சந்தேகங்கள் எல்லாம் எழுந்ததன் அடிப்படையே சட்ட விரோதமான CAA2019 தான். அதில் முஸ்லிம்களை மட்டும் விட்டுவிட்ட பாசிச கேவல புத்திதான் மக்களின் இவ்வாறான சந்தேகங்களுக்கெல்லாம் அடிப்படை காரணம்.
ஆக,
இப்போதைய மக்களின் இப்போராட்டங்களுக்கெல்லாம் அடிப்படை காரணமே CAA2019 ல் பாசிச அரசு செய்துள்ள சட்ட விரோத மாற்றம்தான். அதனை நீக்கிவிட்டால், மக்களின் பெரும்பாலான சந்தேகமும் அச்சமும் நீங்கிவிடும். அதனைச் செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. பாசிசம் அதனைக் காதுகொடுத்துக் கேட்குமென்ற நம்பிக்கை இல்லை. இருப்பினும் நாட்டை நேசிக்கும் மக்கள், நாட்டுக்கு எதிராக அரசே இருந்தாலும் கிளர்ந்தெழுவர். அதுதான் தற்போது நடக்கிறது. இது CAA2019 நீக்கப்படும் வரை ஓயாது!
-அப்துர் ரஹ்மான் ஜமாலுதீன்