‘ஆசாதி என்று நாங்கள் கூறுவதன் பொருள், காஷ்மீர் நிலத்தின் மீதான அந்நிய ஆக்கிரமிப்பை நீக்குவது மட்டுமல்ல; காஷ்மீரிகளை வறுமை, பிற்போக்குத்தனம், அறியாமை, நோய், அநீதி, சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு முதலானவற்றில் இருந்து விடுதலையளிப்பது. அத்தகைய விடுதலையை நாங்கள் ஒரு நாள் அடைந்தே தீர்வோம்’
- மக்பூல் பட் (1938 – 1984)
‘ஆசாதி காஷ்மீரின் தந்தை’ என்றழைக்கப்படும் மக்பூல் பட், 1984ஆம் ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தான் சிறையில் சில காலம், இந்தியாவின் ஏஜென்ட் எனவும், இந்திய அரசின் சிறையில் சில காலமும், தூக்குத் தண்டனையும் பெற்றவர் மக்பூல் பட். இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீரை ஆக்கிரமித்திருக்கின்றன என்பதையும், காஷ்மீர் தனி நாடாக சுதந்திரம் பெற வேண்டும் என்பதையும் முன்வைத்து, தொடர்ந்து மக்களை அமைப்பாகத் திரட்டியவர் மக்பூல் பட். அவரது இறுதி ஆசையான, காஷ்மீரில் தன் உடலை அடக்கம் செய்வதைக் கூட, தற்போது வரை இந்திய அரசு நிறைவேற்றவில்லை. திகார் சிறையில் புதைக்கப்பட்ட மக்பூல் பட்டின் உடலை அடக்கம் செய்வதற்கென காஷ்மீரின் தனி இடம் இன்றும் காத்துக் கொண்டிருக்கிறது.
மக்பூல் பட்டின் நினைவு நாள் அன்று, அதனைக் காஷ்மீரிகள் யாரும் அனுசரிக்கக் கூடாது என்பதால், இணையச் சேவையை (2G சேவை தான்) அன்று ஒரு நாள் துண்டித்திருக்கிறது இந்திய அரசு. வழக்கம்போல், ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
- இலியாஸ் முஹம்மது ரஃபியூதீன்